மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்
மார்க்ஸியச் சிந்தனை மையம்

அண்மைய பதிவுகள்

விரைவில்...

“கூலி, விலை, லாபம்”
– கார்ல் மார்க்ஸ்

லுத்விக் ஃபாயர்பாக்கும்
மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்

(ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)

தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

அத்தியாயம்-2
[பொருள்முதல்வாதக் கோட்பாடு பற்றிய விளக்கம்]

அனைத்துத் தத்துவங்களின், குறிப்பாக மிகவும் அண்மைக் காலத்தைய தத்துவத்தின், மிகப்பெரும் அடிப்படைக் கேள்வி, சிந்தனைக்கும் இருத்தலுக்கும் இடையே உள்ள உறவு பற்றியதாகும். மிகப் பழங்காலம் தொட்டே, மனிதர்கள் தங்கள் சொந்த உடல்களின் கட்டமைப்பைப் பற்றி இன்னும் எதுவுமே அறிந்திராத நிலையில், கனவுத் தோற்றங்களின் காரணங்கள் புரியாத காரணத்தால், தங்களின் சிந்தனையும் புலனுணர்வும் தங்கள் உடம்பின் செயல்பாடுகள் அல்ல என்றும் உடம்பில் தங்கியிருந்து மரணத்தின்போது உடம்பைவிட்டு வெளியேறுகிற ஒரு தனிவேறான ஆன்மாவின் செயல்கள் என்றும் நம்பத் தொடங்கினர். அன்றுதொட்டு, மனிதர்கள் இந்த ஆன்மாவுக்கும் வெளியுலகுக்கும் இடையே உள்ள உறவு பற்றிச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். மரணத்தின்போது உடம்பைவிட்டு வெளியேறி ஆன்மா தொடர்ந்து வாழ்கிறது எனில் அதற்கென ஒரு தனிவேறான மரணத்தைக் கண்டறிய வேண்டிய அவசியம் நேரவில்லை. இவ்வாறாக ஆன்மாவின் அழியாத் தன்மை குறித்த கருத்து உருவாயிற்று. வளர்ச்சியின் அன்றைய கட்டத்தில் இக்கருத்து ஓர் ஆறுதலாக உருவாகவில்லை, எதிர்த்துப் போராடுவதால் பயனில்லை என்று அமைந்த தலைவிதியாகவே உருவாகியது. பெரும்பாலும், கிரேக்கர்கள் மத்தியில் நிலவியதைப் போல, ஒரு சாதகமான துரதிர்ஷ்ட மாகவே தோன்றியது எனலாம். ஆன்மா நிலவுகிறது என்பதை ஒப்புக் கொள்வது, தனிநபரின் அழியாநிலை என்ற சலிப்பூட்டும் கருத்துக்கு இட்டுச் செல்கிறது. உடல் மரணித்தபின் இந்த ஆன்மாவை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று விளங்காத, எங்கும் நிலவிய சாதாரண அறியாமையிலிருந்து தோன்றிய தடுமாற்றமே இவ்வாறு இட்டுச் சென்றது; மன ஆறுதலுக்கான மத விருப்பம் அன்று. மிகச் சரியாக, இதே போன்ற முறையில், இயற்கை சக்திகளை உருவகப்படுத்துவதன் மூலமாக முதற் கடவுள்கள் உருவாயின. மதங்கள் மேலும் வளர்ச்சியடைந்த பொழுது இந்தச் கடவுள்கள் மேலும் மேலும் எதார்த்தத்துக்குப் புறம்பான வடிவத்தைப் பெறத் தொடங்கின. இறுதியாக, ஏறத்தாழ வரம்புக்குட்பட்ட, பரஸ்பரம் வரம்பிட்டுக் கொள்ளும் பல கடவுள்களிலிருந்து, ஒருமைவாத மதங்களின் தனிப்பட்ட ஒரே கடவுள் என்னும் கருத்து மனிதர்களின் மனங்களில் உதித்தது. மனிதனுடைய நுண்ணறிவின் வளர்ச்சிப்போக்கில் இயற்கையாக நிகழ்கின்ற, அருவமாக்கும் ஒரு நிகழ்வுப்போக்கு (a process of abstraction) மூலமாக இது நிகழ்ந்தது.அதனை வடிகட்டி இறக்கிய நிகழ்வுப்போக்கு என்றுகூடச் சொல்வேன்.

இவ்வாறாக, அனைத்துத் தத்துவங்களின் தலையாய பிரச்சினையான, இருத்தலுடன் சிந்தனைக்குள்ள உறவு, இயற்கையுடன் ஆன்மாவுக்குள்ள உறவு பற்றிய பிரச்சினை, அனைத்து மதங்களுக்கும் சளைக்காத வகையிலே, காட்டுமிராண்டி நிலையின் குறுகிய மனப்போக்கு கொண்ட, மூடத்தனமான எண்ணப் போக்குகளில் வேர் கொண்டுள்ளது. ஆனால், ஐரோப்பாவிலுள்ள மக்கள் சமூகம் கிறித்தவ மத்திய காலங்களின் நீண்ட உறக்க நிலையிலிருந்து விழித்துக் கொண்ட பிறகே, இந்தப் பிரச்சினையை முதல் தடவையாக முழுத் துல்லியமாக முன்வைக்க முடிந்தது; அதன் முழு முக்கியத்துவத்தையும் பெற முடிந்தது. இருத்தலுடன் உறவுபடுத்திப் பார்க்கும்போது சிந்தனை வகிக்கும் நிலைபற்றிய பிரச்சினை, மத்திய கால ஏட்டறிவுவாதத்தில் மாபெரும் பாத்திரம் வகித்த அதே பிரச்சினை, எது முதன்மையானது, ஆன்மாவா இயற்கையா என்னும் பிரச்சினை – அப்பிரச்சினை கிறிஸ்துவத் திருச்சபையைப் பொறுத்தவரை இப்படியொரு கேள்வியாய் கூர்மையாக்கி முன்வைக்கப்பட்டது: கடவுள் உலகத்தைப் படைத்தாரா அல்லது உலகம் எப்போதுமே நிரந்தரமாக இருந்து வருகிறதா?

இந்தக் கேள்விக்குத் தத்துவவாதிகள் அளித்த பதில்கள் அவர்களை இரண்டு மாபெரும் முகாம்களாகப் பிரித்தன. இவர்களுள் இயற்கையைவிட ஆன்மாவின் முதன்மையை வலியுறுத்தி, அதன்காரணமாக, இறுதி நிலையில், ஏதோ ஒரு விதத்தில் உலகம் படைக்கப்பட்டது என்று அனுமானித்துக் கொண்டவர்கள் கருத்துமுதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். இந்த முகாமைச் சேர்ந்த தத்துவவாதிகளிடயே, எடுத்துக்காட்டாக ஹெகல் போன்றவர்களிடையே, உலகத்தின் உருவாக்கம் பற்றிய கருத்து கிறிஸ்துவ மதத்தில் இருப்பதைக் காட்டிலும் மேலும் சிக்கலானதாகவும் அபத்தமானதாகவும் இருக்கிறது. இயற்கையை முதன்மையாகக் கருதிய மற்றவர்கள் பொருள்முதல்வாத முகாமின் பல்வேறு கருத்துப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.

கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்னும் இவ்விரண்டு கூற்றுகளும் தொடக்கத்தில் இதைத் தவிர வேறு எதையும் குறிக்கவில்லை. இந்த நூலிலும் வேறு எந்தப் பொருளிலும் அவை பயன்படுத்தப்படவில்லை. அவற்றுக்கு வேறு ஏதாவது பொருள் தரும்பொழுது, என்ன குழப்பம் ஏற்படுகிறது என்பதைக் கீழே காண்போம்.

ஆனால், சிந்தனைக்கும் இருத்தலுக்கும் உள்ள உறவைப் பற்றிய பிரச்சினைக்கு மற்றொரு பக்கமும் உண்டு: நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய நமது சிந்தனைகள் இந்த உலகத்தோடு எத்தகைய உறவைக் கொண்டுள்ளன? நமது சிந்தனை எதார்த்த உலகை அறிந்துணரும் திறன் கொண்டதா? எதார்த்தமான உலகத்தைப் பற்றிய நமது கருத்துக்களிலும் எண்ணங்களிலும் எதார்த்தத்தைச் சரியாகப் பிரதிபலிக்க நம்மால் முடிகிறதா? தத்துவவியல் மொழியில் இந்தப் பிரச்சினையானது, சிந்தனை, இருத்தல் ஆகிய இரண்டின் முற்றொருமை பற்றிய பிரச்சினை என்று அழைக்கப்படுகிறது. தத்துவவாதிகளில் மிக அதிகப் பெரும்பான்மையினர் இந்தப் பிரச்சனைக்கு உடன்பாடான பதிலையே தருகின்றனர். எடுத்துக்காட்டாக, ஹெகலைப் பொறுத்தவரை இந்த உடன்பாடான கருத்து மிகவும் வெளிப்படை. ஏனெனில் எதார்த்த உலகில் நாம் அறிந்துணர்வது, துல்லியமாக அதன் எண்ண உள்ளடக்கத்தைத்தான்; அந்த எண்ண உள்ளடக்கமே உலகத்தை நிரந்தரக் கருத்தின் (absolute idea) படிப்படியான மெய்யுருக்காட்சியாக ஆக்குகின்றது. இந்த நிரந்தரக் கருத்து அனாதி காலம் தொட்டு எங்கேயோ, இந்த உலகத்துக்குச் சார்பின்றி, உலகத்துக்கு முன்பாகவே இருந்து வந்திருக்கிறதாம். தன்னளவில் எண்ணத்தின் உள்ளடக்கமாகவே இருக்கின்ற ஒன்றை, சிந்தனையால் அறிந்துணர முடியும் என்பது மேற்கொண்டு நிரூபணம் எதுவும் தேவையின்றி வெளிப்படையாக விளங்கக் கூடியது. இங்கே எது நிரூபிக்கப்பட வேண்டுமோ அது ஏற்கெனவே முன்நிபந்தனைகளில் பூடகமாய் உள்ளடங்கியுள்ளது என்பதும் அதே அளவுக்கு வெளிப்படையாகும். ஆனால், சிந்தனை, இருத்தல் ஆகியவற்றின் முற்றொருமை பற்றிய தன்னுடைய நிரூபணத்திலிருந்து, ஹெகல் மேலும் ஒரு முடிவுக்கு வருவதை அது எவ்விதத்திலும் தடுக்கவில்லை. அதாவது, அவருடைய தத்துவம் அவருடைய சிந்தனைக்குச் சரியாக இருக்கின்ற காரணத்தால் அது ஒன்று மட்டுமே சரியானது. மனிதகுலம் அவருடைய தத்துவத்தை உடனடியாகக் கருத்துநிலையிலிருந்து செயல்முறைக்குக் கொண்டுவந்து, உலகம் முழுவதையும் ஹெகலியக் கோட்பாடுகளின்படி மாற்றியமைப்பதன் மூலம், சிந்தனை, இருத்தல் ஆகிய இரண்டின் முற்றொருமை தன்னுடைய சரித்தன்மையை (validity) நிரூபித்துக் கொள்ள வேண்டும். அவருக்கு இருந்த இந்தப் பிரமை அநேகமாக எல்லாத் தத்துவவாதிகளுக்கும் இருந்தது எனலாம்.

இதோடுகூட வெவ்வேறு தத்துவவாதிகளைக் கொண்ட மற்றொரு கூட்டமும் உண்டு. இவர்கள் இந்த உலகத்தை எவ்வகையிலாவது அறிந்துணர்வது அல்லது குறைந்தது உலகம் பற்றிய ஒரு முழுமையயான அறிந்துணர்தல் சாத்தியம்தானா என்று கேள்வி எழுப்புபவர்கள். மிகவும் நவீன காலத் தத்துவவாதிகளுள் ஹியூம் (Hume), கான்ட் (Kant) இருவரும் அந்த வகையைச் சேர்ந்தவர்கள். தத்துவவியல் வளர்ச்சியில் அவர்கள் இருவரும் மிகவும் முக்கியமான பாத்திரம் வகித்துள்ளனர். இவர்களின் கண்ணோட்டத்தை மறுப்பதற்குரிய தீர்மானகரமான கருத்து, கருத்துமுதல்வாத நிலையிலிருந்து அறிந்துணர்தல் சாத்தியம் என்ற அளவுக்கு, ஹெகல் அவர்களால் ஏற்கெனவே கூறப்பட்டுவிட்டது. பொருள்முதல்வாத நிலையிலிருந்து ஃபாயர்பாக் கூடுதலாகச் சொன்னவற்றில் ஆழத்தைவிடச் சாமர்த்தியமே அதிகம். இக்கருத்துக்கும் இதுபோன்ற மற்றெல்லாத் தத்துவப் பிதற்றல்களுக்கும் நெற்றியடி மறுப்பாக விளங்குவது நடைமுறையே ஆகும். அதாவது, பரிசோதனையிலும், தொழில்துறையிலும் மெய்ப்பிக்கப்படும் நடைமுறை ஆகும். இயற்கையின் நிகழ்வுப்போக்கு ஒன்றை நாமே உருவாக்கி, அதன் இயல்பான சூழல்நிலைகளிலிருந்து அதனை வெளிக்கொணந்து, நமது சொந்த நோக்கங்களுக்குப் பயன்படச் செய்வதன் மூலம், அந்த நிகழ்வுப்போக்கு குறித்த நமது கருத்துரு சரியானதே என்று நம்மால் நிரூபிக்க முடிந்தால், கான்டியவாதிகளின் புரிந்து கொள்ள முடியாத ”தானேயான பொருள்” (thing-in-itself) ஒரு முடிவுக்கு வந்துவிடும். தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடல்களில் உற்பத்தியாகும் இரசாயனப் பொருள்கள், அங்கக இரசாயனம் (Organic Chemistry) அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக உற்பத்தி செய்யத் தொடங்கும்வரை, இத்தகைய ”தானேயான பொருள்களாகவே” இருந்து வந்தன. அவ்வாறு நாமே உற்பத்தி செய்த பிறகு, “தானேயான பொருள்” நமக்கான பொருளாய் ஆனது. எடுத்துக்காட்டாக, மாஞ்சிட்டிச் செடியிலிருந்து கிடைக்கும் சாயப் பொருள் அலிஸரின் (alizarin). இந்தச் சாயப் பொருளுக்காக இனிமேல் நாம் மாஞ்சிட்டிச் செடியை வயலில் பயிரிட்டுச் சிரமப்பட வேண்டியதில்லை. அதைவிட மலிவாகவும் எளிதாகவும் நிலக்கரித் தாரிலிருந்து அலிஸரினைத் தயார் செய்து கொள்கிறோம். கோப்பர்நிக்கஸின் சூரிய மண்டல அமைப்புமுறை முன்னூறு ஆண்டுகளாக ஒரு கருதுகோளாகவே இருந்து வந்தது. இந்தக் கருதுகோள் உண்மையாவதற்கு நூறு, ஆயிரம், பத்தாயிரத்தில் ஒரு வாய்ப்பு இருந்த போதிலும், அது இன்னும் கருதுகோளாகவே இருந்து வந்தது. ஆனால் லெவெரியே (Leverrier) அவர்கள் சூரிய மண்டல அமைப்பிலிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் இதுவரை அறியாத கிரகம் ஒன்று இருப்பதன் அவசியத்தைத் தருவித்தது மட்டுமின்றி, வானத்தில் இந்தக் கிரகம் கட்டாயமாக இருக்க வேண்டிய இடத்தையும் கணக்கிட்டுக் கூறினார். கால்லே (Galle) அவர்கள் உண்மையாகவே இந்த கிரகத்தைக் கண்டுபிடித்தபொழுது, கோப்பர்நிக்கஸின் அமைப்புமுறை நிரூபிக்கப்பட்டது. [பெர்லின் விண்ணாய்வுக் கூடத்தின் வானியல் அறிஞரான ஜோகன் கால்லே 1846-இல் கண்டுபிடித்த நெப்டியூன் கிரகம் இங்கு குறிப்பிடப்படுகிறது]. அப்படியிருந்தும், நவீன கான்ட்டியவாதிகள் ஜெர்மனியில் கான்ட்டியக் கருத்துருவுக்கும் (Kantian Concept), இங்கிலாந்தில் அறியொணாவாதிகள் (agnostics) ஹியூமின் கருத்துருவுக்கும் (அங்கே உண்மையில் அது ஒருபோதும் மறைந்துபோய்விடவில்லை) புத்துயிரூட்ட முயன்று வருகிறார்கள். கோட்பாட்டு ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் இத்தகைய கருத்துருக்கள் நீண்ட காலத்துக்கு முன்னரே மறுக்கப்பட்டு விட்டவை என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இவர்களின் [கான்ட்டியவாதிகள் மற்றும் அறியொணாமைவாதிகளின்] முயற்சி விஞ்ஞானரீதியில் ஒரு பின்னடைவாகும். மேலும், நடைமுறையில் பொருள்முதல் வாதத்தை உலகத்துக்கு முன்னால் மறுத்துவிட்டுத் திருட்டுத்தனமாக அதனை ஏற்பதற்குரிய வெட்கக்கேடான வழிமுறையே தவிர வேறில்லை.

ஆனால் டெக்கார்ட்டே (Descartes) முதல் ஹெகல் வரை, ஹாப்ஸ் (Hobbes) முதல் ஃபாயர்பாக் வரையான நீண்ட காலப் பகுதியில் தத்துவவாதிகள், அவர்கள் நினைப்பதைப் போல, தூய பகுத்தறிவின் சக்தியினால் மட்டுமே ஒருபோதும் உந்தப்படவில்லை. அதற்கு மாறாக, உண்மையிலேயே அவர்களை அதிகமாக முன்னோக்கித் தள்ளியது எதுவென்றால், இயற்கை விஞ்ஞானம், தொழில்துறை ஆகியவற்றின் சக்தி வாய்ந்த, எப்போதையும்விட அதிவேகமாகப் பாய்ந்துவந்த முன்னேற்றமே ஆகும். பொருள்முதல்வாதிகளிடையே இது வெளிப்படையாகத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் கருத்துமுதல்வாத அமைப்புமுறைகளும்கூட மேலும் மேலும் பொருள்முதல்வாத உள்ளடக்கத்தைத் தமக்குள் நிரப்பிக் கொண்டு, இயற்கையே கடவுள் எனச் சொல்லி, மனத்துக்கும் பருப்பொருளுக்குமிடையே உள்ள எதிர்நிலையைச் (antithesis between mind and matter) சமரசப்படுத்த முயன்றன. இவ்வாறாக, இறுதியிலே, ஹெகலிய அமைப்புமுறை வழிமுறையிலும் உள்ளடக்கத்திலும் கருத்துமுதல்வாதரீதியில் தலைகீழாக மாற்றி வைக்கப்பட்ட பொருள்முதல்வாதமாகவே தோற்றமளிக்கிறது.

ஆகவே, ஃபாயர்பாக் பற்றிய தன்னுடைய பண்பு விளக்கத்தில் ஸ்டார்க்கே, சிந்தனைக்கும் இருத்தலுக்கும் இடையே உள்ள உறவு பற்றிய இந்த அடிப்படைப் பிரச்சினை தொடர்பாக ஃபாயர்பாக் வகிக்கும் நிலைபற்றி எல்லாவற்றுக்கும் முன்னதாக ஆய்வு செய்கிறார். சுருக்கமான முன்னுரையில், முந்தைய தத்துவவாதிகளின், குறிப்பாகக் கான்ட்டுக்குப் பின்வந்தவர்களின் கண்ணோட்டங்களைக் கனமான தத்துவ மொழியிலே தேவையற்ற முறையில் விளக்குகிறார். ஹெகலின் நூல்களிலுள்ள சில பகுதிகளை மிகவும் சம்பிரதாய முறையிலே எடுத்தாள்வதன் மூலம், ஹெகலுக்குத் தரவேண்டியதைக் காட்டிலும் மிகவும் குறைவான சிறப்பையே தருகிறார். இத்தகைய முன்னுரைக்குப்பின், ஃபாயர்பாக்குடைய இயக்க மறுப்பியலின் (metaphysics) வளர்ச்சிப் போக்கு பற்றியே ஒரு விரிவான விளக்கவுரை தொடர்கிறது. இந்த வளர்ச்சிப் போக்கு இந்தத் தத்துவவாதியின் எழுத்துகளில் தொடர்ச்சியாகப் பிரதிபலித்திருக்கும் பாங்கினை அடியொற்றியே இந்த விளக்கவுரை அமைந்துள்ளது. இந்த விளக்கவுரை மிகுந்த கவனத்துடனும் தெளிவுடனும் விரித்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் நூல் முழுவதிலும் காணப்படுவது போலவே இந்த விளக்கவுரையிலும் தத்துவவாதச் சொற்றொடர் அமைப்பின் சுமை ஏற்றப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலுமே இவை தவிர்க்க இயலாதவை என்று எவ்வகையிலும் கூற முடியாது. இந்நூலாசிரியர் [ஸ்டார்க்கே] தாம் சார்ந்த அதே கருத்துப்பிரிவின் கூற்று முறையை (manner of expression) அல்லது ஃபாயர்பாக்கின் கூற்று முறையையேகூட எந்த அளவுக்குக் குறைவாகவும், மிகவும் வேறுபட்ட கருத்துப்போக்குகளின், குறிப்பாக தற்போது பரவலாகப் பேசப்படுகின்ற, தத்துவஞானம் என்று தம்மைப் பறைசாற்றிக் கொள்ளும் போக்குகளின் சொற்பிரயோகங்களை எந்த அளவுக்கு அதிகமாகவும் அள்ளி வீசுகிறாரோ அந்த அளவுக்கு இவரது விளக்கவுரை மிகவும் கவலை தரும் விளைவை ஏற்படுத்துகிறது.

ஃபாயர்பாக்கின் பரிணாம வளர்ச்சிப் போக்கு, ஒரு ஹெகலியவாதி பொருள்முதல் வாதியாகப் பரிணமித்ததைப் போன்றதே. ஒரு முழுமையான தொல்மரபு ஹெகலிய வாதியாக (Orthodox Hegelian) அவர் ஒருபோதும் இருந்ததில்லை என்பது உண்மையே. அவருடைய இந்தப் பரிணாம வளர்ச்சியில் ஒரு திட்டவட்டமான கட்டத்தில் தனக்கு முந்தியவரின் [ஹெகலின்] கருத்துமுதல்வாத அமைப்புமுறையிலிருந்து முழுமையாக முறித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உலகம் தோன்றுவதற்கு முன்பே நிரந்தரக் கருத்து (absolute idea) நிலவியது என்கிற ஹெகலியக் கொள்கையும், உலகம் நிலவுவதற்கு முன்பே தர்க்கவியல் வகையினங்கள் (logical categories) நிலவின என்கிற கருத்தும், நடப்புலகுக்கு அப்பால் ஒரு படைப்பாளி இருக்கிறார் என்ற நம்பிக்கையின் நம்பமுடியா மிச்சசொச்சமே அன்றி வேறில்லை; பொருளியல் அடிப்படையிலான, நம் புலன்களால் உணரத்தக்க, நாமெல்லாம் வாழுகின்ற இவ்வுலகம் ஒன்றே எதார்த்தமானது; நமது உள்ளுணர்வும் சிந்தனையும் எவ்வளவுதான் புலனுணர்வுக்கு அப்பாற்பட்டவையாகத் தோன்றினாலும் அவை ஒரு பொருளின், மூளை என்ற உடல் உறுப்பின் உற்பத்திப் பொருள்களே என்று புரிந்து கொள்ளுமாறு தடுக்கவியலாச் சக்தியுடன் இறுதியில் ஃபாயர்பாக் தள்ளப்படுகிறார். பருப்பொருள் மனதின் உற்பத்திப் பொருள் அன்று. ஆனால் மனம் என்பது பருப்பொருளின் உன்னதமான விளைபொருளே ஆகும். இது தூய பொருள்முதல்வாதம் என்பது உண்மையே. ஆனால், இவ்வளவு தொலைவு வந்த ஃபாயர்பாக் அத்துடன் நின்று விடுகிறார். பொருள்முதல்வாதத்தின் மீதுள்ள வழக்கமான தத்துவ ரீதியான வெறுப்பை – பொருள்முதல்வாதக் கருத்தின் மீதல்ல பொருள்முதல்வாதம் என்னும் பெயர் மீதுள்ள வெறுப்பை – அவரால் வெற்றி கொண்டு மீள முடியவில்லை. அவர் சொல்கிறார்:

“என்னைப் பொறுத்தவரை, பொருள்முதல்வாதம் என்பது மானிட சாராம்சம் மற்றும் அறிவு என்னும் மாளிகையின் அடித்தளம் மட்டுமே ஆகும். பொருள்முதல்வாதம் என்பதையே ஒரு மாளிகையாக நான் கருதவில்லை. ஆனால் உடலியல் நிபுணருக்கு, அதன் குறுகிய பொருளில் இயற்கை விஞ்ஞானிக்கு, எடுத்துக்காட்டாக, மொலிஷோட்டுக்குப் (Moleschott) பொருள்முதல்வாதம் என்பது ஒரு மாளிகையாகவேதான் தோன்றுகிறது. இது கட்டாயமாக, அவர்களுடைய கண்ணோட்டத்திலிருந்தும் தொழில்முறையிலிருந்தும் எழும் கருத்தாகும். பின்னோக்கில் நான் பொருள்முதல்வாதிகளோடு முழுமையாக உடன்படுகிறேன், ஆனால் முன்னோக்கியல்ல”.

பருப்பொருளுக்கும் மனதுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றிய திட்டவட்டமான கருத்துருவை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான உலகக் கண்ணோட்டமாய் விளங்கும் பொருள்முதல்வாதத்தையும், ஒரு திட்டவட்டமான வரலாற்றுக் கட்டத்தில், அதாவது, பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த உலகக் கண்ணோட்டம் எடுத்துரைக்கப் பட்ட ஒரு தனிச்சிறப்பான வடிவத்தையும் இங்கே ஃபாயர்பாக் ஒன்றாகச் சேர்த்துக் குழப்புகிறார். அதற்கும் மேலாக, இயற்கை விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் மூளைகளில் பதினெட்டாம் நூற்றாண்டுப் பொருள்முதல்வாதம் இன்றைக்கும் தொடர்ந்து நிலவிவரும் ஆழமற்ற, கொச்சையான வடிவத்தை, 1850-களில் பியூஹ்னர் (Buchner), ஃபோக்ட் (Vogt), மொலிஷோட் (Moleschott) ஆகியோர் தமது சுற்றுப்பயணங்களில் போதித்த வடிவத்தை, பொருள்முதல்வாதத் தத்துவத்தோடு போட்டுக் குழப்புகிறார். ஆனால் கருத்துமுதல்வாதம் தொடர்ச்சியான பல வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து வந்ததைப் போலவே, பொருள்முதல்வாதமும் பல வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. ஒவ்வொரு சகாப்தகரமான கண்டுபிடிப்புக்குப் பிறகும் – அக்கண்டுபிடிப்பு இயற்கை விஞ்ஞானத்துறையில் நிகழ்ந்தபோதும்கூட – பொருள்முதல்வாதம் தன்னுடைய வடிவத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. வரலாறும்கூடப் பொருள்முதல்வாத அணுகுமுறைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அதிலும் பொருள்முதல்வாத வளர்ச்சியின் ஒரு புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது.

சென்ற நூற்றாண்டின் [18-ஆம் நூற்றாண்டின்] பொருள்முதல்வாதம் பெருமளவுக்கு எந்திர வகைப்பட்டதாய் இருந்தது. ஏனென்றால் அந்தக் காலத்தில் எல்லா இயற்கை விஞ்ஞானங்களுள் எந்திரவியல் (Mechanics) மட்டுமே, சொல்லப் போனால் வான்மண்டல, பூமண்டல சடப்பொருள்களின் எந்திரவியல் மட்டுமே, சுருங்கச் சொன்னால், ஈர்ப்புச் சக்தியின் (gravity) எந்திரவியல் மட்டுமே, ஏதோவொரு திட்டவட்டமான முடிவுக்கு வந்திருந்தது. அக்காலத்திய இரசாயனவியல் அதன் குழந்தைப் பருவத்தில், ஃபுளோஜிஸ்தான் (phlogistic) வடிவத்தில் மட்டுமே இருந்தது. [பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இரசாயனவியலில் நிலவிவந்த ஃபுளோஜிஸ்தான் கோட்பாடு. சில பொருள்களில் ஃபுளோஜிஸ்தான் என்னும் ஒரு பொருள் இருப்பதாலேயே அவை எரிகின்றன என்று கூறியது]. உயிரியல் இன்னும் தாலாட்டுப் பருவத்தில் இருந்தது. தாவர வகைகளும் விலங்கு உயிரினங்களும் மேலெழுந்த வாரியாக மட்டுமே ஆராயப்பட்டிருந்தன. அவை முற்றிலும் எந்திரவியல் காரணங்களாலேயே விளக்கப்பட்டன. டெக்கார்ட்டேவுக்கு விலங்கு ஓர் எந்திரம்; அதைப்போலவே பதினெட்டாம் நூற்றாண்டுப் பொருள்முதல்வாதிகளுக்கு மனிதன் ஓர் எந்திரம். இரசாயனவியல் மற்றும் அங்கக இயற்கையின் (organic nature) நிகழ்வுப்போக்குகளுக்கு எந்திரவியலின் விதிகளும் பொருந்துவனவே என்றாலும், அவ்விதிகள் மேலும் உயர்நிலையான இதர விதிகளால் பின்னணிக்குத் தள்ளப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொள்ளாமல் அத்தகைய வளர்ச்சிப் போக்குகளுக்கு எந்திரவியலின் அளவுகோல்களை மட்டுமே பொருத்திப் பார்த்தது, பாரம்பரிய ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்தின் குறிப்பான முதலாவது குறைபாடாகும். அந்தக் காலகட்டத்தில் இது தவிர்க்க முடியாத குறைபாடே.

இந்தப் பொருள்முதல்வாதத்தின் குறிப்பான இரண்டாவது குறைபாடு, பிரபஞ்சத்தை ஒரு நிகழ்வுப்போக்காகவும் இடையறாத, வரலாற்று ரீதியான, வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கும் பருப்பொருளாகவும் புரிந்துகொள்ள முடியாத அதன் இயலாமை ஆகும். இது அக்கால கட்டத்திய இயற்கை விஞ்ஞானத்தின் தரத்துக்கும், அதனோடு தொடர்புடைய இயக்க மறுப்பியலுக்கும் அதாவது இயக்கவியலுக்கு எதிரான தத்துவப்படுத்தலுக்கும் ஏற்றவாறே இருந்தது எனலாம். இயற்கையானது நிரந்தரமான இயக்கத்தில் இருக்கிறது என்ற அளவுக்கு அறியப்பட்டிருந்தது. ஆனால் அக்காலத்தில் நிலவிய கருத்துகளின் அடிப்படையில், இந்த இயக்கமும்கூட நிரந்தரமாகவே ஒரு வட்டத்தில் சுற்றி வந்தது. ஆகவே, அந்த இடத்தைவிட்டு ஒருபோதும் நகரவில்லை. திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான விளைவுகளையே உருவாக்கியது. அந்தக் காலகட்டத்தில் இத்தகைய கருத்துரு தவிர்க்க முடியாதது. சூரிய மண்டலத்தின் தோற்றத்தைப் பற்றிய கான்ட்டின் தத்துவம் அண்மைக் காலத்தில்தான் முன்வைக்கப்பட்டிருந்தது. [சுழலும் பிரகாசமான முகிற்படலத் திரளிலிருந்து சூரியனும் கிரகங்களும் தோன்றின எனக் கூறும் தத்துவம்]. ஆனால் அது இன்னமும் வெறுமனே ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விஷயமாகவே கருதப்பட்டது. பூமியின் வளர்ச்சி குறித்த வரலாறு, புவியியல் இவைபற்றி எதுவுமே அறிந்திருக்கவில்லை. எளிமையானதிலிருந்து சிக்கலானதுக்கு மாறிய வளர்ச்சிப்போக்கின் ஒரு நீண்ட தொடர்வரிசையின் விளைவுதான் இன்றைய இயற்கை உயிரினங்கள் என்னும் கருத்துருவை அந்தக் காலகட்டத்தில் விஞ்ஞான ரீதியாக அறவே முன்வைக்க முடியவில்லை. எனவே இயற்கையைப் பற்றிய வரலாற்றுப் புறம்பான ஒரு கண்ணோட்டம் தவிர்க்க முடியாதது. இதனடிப்படையில் நாம் பதினெட்டாம் நூற்றாண்டுத் தத்துவவாதிகளைக் குறை கூற அதிகமான காரணமில்லை. ஏனெனில், இதே குறை ஹெகலிடமும் காணப்படுகிறது. ஹெகலின் கருத்துப்படி, இயற்கையானது, வெறுமனே கருத்தின் ”அந்நியம்” (alienation of idea) ஆகும்.எனவே அது. காலத்தோடு இயைந்து வளர்ச்சிபெற இயலாதது. அது தன்னுள் அடங்கியிருக்கும் அனைத்து வளர்ச்சிக் கட்டங்களையும் ஒரே சமயத்திலும், ஒன்றுக்குப் பக்கத்தில் மற்றொன்றையும் வெளிக்காட்டும்படியாக, அதன் பன்முகத் தன்மையை விண்வெளியில் விரித்துப் பரப்ப மட்டுமே திறன் கொண்டது; திரும்பத் திரும்ப அதே நிகழ்வுப் போக்குகளை நிரந்தரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும்படி விதிக்கப்பட்டுள்ளது என்று ஹெகல் கருதுகிறார். அனைத்து வளர்ச்சிக்கும் அடிப்படை நிபந்தனையான காலப் பரப்புக்கு வெளியே, விண்வெளியில் வளர்ச்சி என்னும் அபத்தத்தை ஹெகல் இயற்கையின் மீது சுமத்துகிறார். புவியியல், கருவியல், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடலியல், அங்கக இரசாயனவியல் ஆகியவை வளர்ச்சியடைந்து கொண்டிருந்த அதே காலத்தில், பின்னர் தோன்றிய பரிணாமத் தத்துவத்தின் ஒளிமயமான முன்னறிகுறிகள் இந்தப் புதிய விஞ்ஞானங்களின் அடிப்படையில் எங்கெங்கும் தோன்றிக் கொண்டிருந்தபோது (எடுத்துக்காட்டாக, கோதே மற்றும் லாமார்க் ஆகியோர்) ஹெகல் இவ்வாறு செய்கிறார். ஆனால் ஹெகலின் அமைப்புமுறைக்கு அது தேவையாயிருந்தது. எனவே அமைப்புமுறையின் பொருட்டு, வழிமுறை தனக்குத் தானே பொய்யாக மாற வேண்டியிருந்தது.

வரலாற்றுக்குப் புறம்பான இதே கருத்துரு வரலாற்றுத் துறையிலும் நிலவியது. இங்கே மத்திய காலங்களின் மிச்ச மீதங்களுக்கு எதிரான போராட்டம் பார்வையை மறைத்தது. மத்திய காலங்கள் என்கிற வரலாற்றுக் கட்டம் ஆயிரம் ஆண்டுகால உலகளாவிய காட்டுமிராண்டித்தன வரலாற்றில் ஏற்பட்ட ஒரு குறுக்கீடாகவே கருதப்பட்டது. மத்திய காலங்களில் ஏற்பட்ட மாபெரும் முன்னேற்றம் – ஐரோப்பியக் கலாசாரப் பரப்பின் விரிவாக்கம், அங்கே அக்கம் பக்கமாக உருவெடுத்த நிலைபெறத் தக்க மாபெரும் நாடுகள், இறுதியாக, பதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரும் தொழில்நுட்ப முன்னேற்றம் – இவையனைத்தும் பார்க்கப்படவில்லை. இவ்வாறாக, மாபெரும் வரலாற்று இடைத்தொடர்புகளைப் பற்றிப் பகுத்தறிவு பூர்வமான ஆழமான பார்வை இயலாமற் போனது. வரலாறு என்பது அதிகமாகப் போனால் தத்துவவாதிகள் பயன்படுத்திக் கொள்வதற்கான எடுத்துக்காட்டுகள், விளக்கப்படங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகவே விளங்கியது.

ஜெர்மனியில் 1850-களில் பொருள்முதல்வாதத்தில் பரிசோதனை நிகழ்த்திக் கொண்டிருந்த, கொச்சைப்படுத்தும் சில்லரைப் பிரச்சாரகர்கள் தங்களுடைய ஆசிரியர்களின் இக்குறைபாட்டிலிருந்து எவ்வகையிலும் மீளவே இல்லை. இதற்கிடையில் ஏற்பட்ட, இயற்கை விஞ்ஞானத்தின் அனைத்து முன்னேற்றங்களும் உலகத்தைப் படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு எதிரான புதிய சான்றுகளாக மட்டுமே அவர்களுக்கு உதவின. உண்மையில், அவர்களின் தத்துவத்தை மேலும் வளர்த்தெடுக்கும் பணியில் அவர்கள் சிறிதும் ஈடுபடவில்லை. கருத்துமுதல்வாதம் தனது கடைசிக் கட்டத்தில் இருந்த போதிலும், 1848 புரட்சி அதற்கு மரண அடி கொடுத்திருந்த போதிலும், அந்தத் தருணத்தில் பொருள்முதல்வாதம் இன்னும் கீழே வீழ்ந்துவிட்டதைக் காணும் திருப்தி அதற்குக் கிடைத்தது. ஃபாயர்பாக் இத்தகைய பொருள்முதல் வாதத்துக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள மறுத்தது கேள்விக்கிடமின்றி மிகச் சரியே. ஆனால் இந்த ஊர்சுற்றிப் போதகர்களின் கோட்பாடுகளைப் பொதுவான பொருள்முதல்வாதத்துடன் போட்டுக் குழப்பியிருக்கக் கூடாது.

எனினும் இங்கே இரண்டு விஷயங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும். முதலாவதாக, ஃபாயர்பாக்கின் வாழ்நாளின்போதே இயற்கை விஞ்ஞானம், தீவிரமாக நொதித்துப் பொங்கும் நிகழ்வுப் போக்கில்தான் இன்னும் இருந்தது. கடந்த பதினைந்து ஆண்டுகளில்தான் அது தெளிவுகொடுக்கும் ஒரு சார்புநிலை முடிவை எட்டியுள்ளது. இதுகாறும் கேள்விப்பட்டிராத அளவுக்குப் புதிய விஞ்ஞான விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கு இடையேயான உறவுநிலைகளை நிலைநாட்டுவதும், அதன்மூலமாக, ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கமாய்த் தொடர்ந்துவந்த கண்டுபிடிப்புகளின் குழப்பத்துக்கு நடுவே ஒழுங்கை ஏற்படுத்துவதும் மிகவும் அண்மைக் காலத்தில்தான் சாத்தியமாகியுள்ளது. தீர்மானகரமான கண்டுபிடிப்புகளுள், உயிரணு, ஆற்றலின் உருமாற்றம், டார்வினுடைய பெயர் சூட்டப்பட்ட பரிணாமத் தத்துவம் ஆகிய மூன்று கண்டுபிடிப்புகளையும் காண்கின்ற வரை ஃபாயர்பாக் உயிரோடிருந்தார் என்பது உண்மையே. ஆனால், அந்தக் காலகட்டத்தில் இயற்கை விஞ்ஞானிகளே இன்னும் கேள்விக்குள்ளாக்கிய அல்லது போதிய அளவுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்று அறிந்திராத கண்டுபிடிப்புகளை, அவற்றின் முழு மதிப்பையும் அறிந்து பாராட்டும் வகையில், கிராமப்புறத் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்தத் தன்னந்தனியான தத்துவவாதியால், விஞ்ஞான முன்னேற்றங்களைப் போதிய அளவுக்கு எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? இதற்கு, ஜெர்மனியில் நிலவிய படுகேவலமான நிலைமைகளை மட்டுமே குற்றம் சொல்ல வேண்டும். அவற்றின் விளைவாக, மணலில் கயிறு திரிக்கும், கதம்பவாதக் கொசுவேட்டைக்காரர்கள் தத்துவவியல் துறையின் தலைமைப் பதவிகளைக் கைப்பற்றியிருக்க, அவர்கள் அனைவருக்கும் மேலான சிறப்புக் கொண்ட ஃபாயர்பாக், ஒரு சிறு கிராமத்தில் மனம் துருப்பிடித்துப் புழுங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. எனவே இப்பொழுது சாத்தியமாகிவிட்டதும், பிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்தின் ஒருதலைச் சார்பானவை அனைத்தையும் அகற்றியதுமான, இயற்கையைப் பற்றிய வரலாற்று ரீதியான கருத்துரு (historical conception of nature) ஃபாயர்பாக்குக்குக் கைவரப் பெறாமலே போனதற்கு அவரைக் குற்றம் சொல்ல முடியாது.

இரண்டாவதாக, இயற்கை–விஞ்ஞானப் பொருள்முதல்வாதம் (natural-scientific materialism) உண்மையில் “மானுட அறிவு என்ற மாளிகையின் அடித்தளம், ஆனால் அதுவே மாளிகை ஆகிவிடாது” என்று ஃபாயர்பாக் மிகச் சரியாகவே வலியுறுத்தினார். ஏனெனில், நாம் இயற்கையில் மட்டுமின்றி, மனித சமுதாயத்திலும் வாழ்கிறோம். இயற்கைக்குச் சற்றும் குறையாத அளவிலே, மனித சமுதாயமும் தனக்கென வளர்ச்சியின் வரலாற்றையும் தனக்கான விஞ்ஞானத்தையும் கொண்டிருக்கிறது. ஆகவே, சமுதாயம் பற்றிய விஞ்ஞானத்தை அதாவது, வரலாற்றியல், தத்துவவியல் விஞ்ஞானங்கள் என்று சொல்லப்படுவனவற்றின் மொத்தத் தொகையைப் பொருள்முதல்வாத அடித்தளத்துடன் இசைவுபடுத்துவதையும், இந்த அடித்தளத்துக்கு ஏற்ப அவற்றை மறுநிர்மாணம் செய்வதையும் பற்றிய பிரச்சனையாக அது இருந்தது. ஆனால் இதை நிறைவேற்றும் பேறு ஃபாயர்பாக்குக்குக் கிட்டவில்லை. அந்த “அடித்தளம்” இருந்தும்கூட, அவர் மரபுவழிப்பட்ட கருத்துமுதல்வாதத் தளைகளினால் கட்டுண்டு கிடந்தார். இந்த உண்மையை அவரே பின்வரும் சொற்களில் ஒத்துக் கொள்கிறார்: “பின்னோக்கில் நான் பொருள்முதல்வாதிகளோடு உடன்படுகிறேன். ஆனால் முன்னோக்கியல்ல”. ஆனால் இங்கே, சமுதாயத் துறையில் “முன்னோக்கிச்” செல்லாததும், 1840 அல்லது 1844-ஆம் ஆண்டின் தன்னுடைய கருத்துநிலைக்கு அப்பால் போகாததும் ஃபாயர்பாக்குதான். இதற்கும் அவருடைய தனித்தொதுங்கிய வாழ்க்கையே தலையாய காரணம். எல்லாத் தத்துவவாதிகளையும்விட அவர்தான் சமுதாயத்தில் ஒன்றுகலந்து உறவாடுவதில் மேலான விருப்பம் கொண்டிருந்தார். ஆனாலும், தன்னையொத்த தகுதியுடைய பிறருடன் சுமூகமான மற்றும் எதிரான வாதப் பிரதிவாதங்களின் மூலமாகச் சிந்தனைகளை உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாகத் தன் ஒற்றைத் தலையிலிருந்தே சிந்தனைகளை உற்பத்தி செய்யும் நிலைக்கு, அவரது தனித்தொதுங்கிய வாழ்க்கை அவரைக் கட்டாயப்படுத்தியது. இந்தத் துறையில் அவர் எந்த அளவுக்குக் கருத்துமுதல்வாதியாகவே இருந்துவிட்டார் என்பதை நாம் பின்னர் விரிவாகக் காண்போம்.

ஃபாயர்பாக்கின் கருத்துமுதல்வாதத்தை ஸ்டார்க்கே தவறான இடத்தில் தேடுகிறார் என்பதை மட்டும் இங்கே குறிப்பிடுவது போதுமானது: “ஃபாயர்பாக் ஒரு கருத்துமுதல்வாதி; அவர் மனிதகுலத்தின் முன்னேற்றத்தில் நம்பிக்கை உள்ளவர்” (பக்கம்.19). “ஆயினும் அடித்தளம், மொத்தத்தின் அடிக்கட்டமைப்பு கருத்துமுதல்வாதமாகவே உள்ளது. எங்களைப் பொறுத்தவரை எதார்த்தவாதம் என்பது, நாங்கள் எங்களின் இலட்சியப் போக்குகளைக் பின்பற்றிச் செல்கையில், வழிதவறிவிடாமல் இருப்பதற்கான ஒரு பாதுகாப்புதானே அன்றி வேறில்லை. இரக்கம், அன்பு, உண்மைக்கும் நீதிக்குமான ஆர்வம் ஆகியவை இலட்சியச் சக்திகள் அல்லவா?” (பக்கம் VIII).

முதலாவதாக, இங்கே கருத்துமுதல்வாதம் என்பது இலட்சியக் குறிக்கோள்களைப் பின்பற்றுவது என்பதைத் தவிர வேறு எதையும் குறிக்கவில்லை. ஆனால் இவை கட்டாயமாகவே கான்ட்டிய கருத்துமுதல்வாதத்தோடும் அதன் “ஆணித்தரமான கட்டளையோடும் (categorical imperative)" பெரும்பாலும் தொடர்பு கொண்டவையே. என்றாலும், கான்ட் அவர்களே தன்னுடைய தத்துவத்தை “அறிவெல்லை கடந்த கருத்துமுதல்வாதம் (transcendental idealism)" என்றே அழைத்தார். காரணம், அதில் அவர் ஒழுக்கநெறி இலட்சியங்களைப் பற்றியும் எழுதியுள்ளார் என்பதால் அல்ல, முற்றிலும் வேறு காரணங்களுக்காகவே என்பது ஸ்டார்க்கேயுக்கு நினைவிருக்கும். தத்துவவியல் கருத்துமுதல்வாதம் ஒழுக்கநெறி, அதாவது சமூக இலட்சியங்களின் மீதான நம்பிக்கையை அச்சாணியாகக் கொண்டது என்னும் மூட நம்பிக்கை ஜெர்மன் போலிப் பண்பாளர்களிடையே (philistines) தத்துவத்துக்குத் தொடர்பின்றித் தோன்றியது. அவர்கள், தத்துவக் கலாசாரம் (philosophical culture) பற்றிய தங்களுக்குத் தேவையான ஒருசில துணுக்குகளை ஷில்லரின் (Schiller) கவிதைகளிலிருந்து மனப்பாடம் செய்து கொண்டனர். கான்ட்டின் “ஆணித்தரமான கட்டளை” ஆற்றல் அற்றது, காரணம் அது சாத்தியமற்றதைக் கோருகிறது. ஆகவே அது எந்த எதார்த்தத்தையும் எப்போதும் எட்டப்போவதில்லை. அதனைத் துல்லியமாக முழுக் கருத்துமுதல்வாதியான ஹெகலைவிட வேறு யாரும் மிகக் கடுமையாகக் குறை கூறவில்லை. ஷில்லர் முன்வைத்த நடைமுறைப்படுத்த முடியாத இலட்சியங்களின்பால் ஏற்பட்ட, போலிப் பண்புவாத உணர்ச்சிப் பசப்பான உற்சாகத்தை, ஹெகலைவிட வேறு யாரும் மிகவும் ஈவிரக்கமில்லாமல் கேலி செய்யவில்லை (எடுத்துக்காட்டாக, அவருடைய தோற்றவியல் – Phenomenology – என்னும் நூலைப் பார்க்க).

இரண்டாவதாக, மனிதர்களைச் செயலில் ஈடுபடுத்துகின்ற ஒவ்வொன்றுமே அவர்களுடைய மூளையின் வழியாகவே வெளிப்படவேண்டும் என்ற உண்மையிலிருந்து நாம் எளிதாகத் தப்பிவிட முடியாது. உண்பதும் பருகுவதும்கூட இப்படிப்பட்டதே. மூளையிலிருந்து அறிவிக்கப்படும் பசி அல்லது தாக உணர்ச்சியின் விளைவாக அவை தொடங்குகின்றன. அதேபோல் மூளையின் வழியாக அறிவிக்கப்படும் திருப்தி என்னும் உணர்ச்சியின் விளைவாக அவை முடிகின்றன. மனிதன் மீது ஏற்படும் புற உலகின் தாக்கங்கள் அவனுடைய மூளையின் வழியே தம்மை வெளிப்படுத்துகின்றன. அங்கே உணர்வுகளாக, சிந்தனைகளாக, தூண்டல்களாக, விருப்பங்களாக, சுருக்கமாகக் கூறுவதெனில், “இலட்சியப் போக்குகளாகப்” (ideal tendencies) பிரதிபலிக்கப்படுகின்றன. இந்த வடிவத்தில் அவை “இலட்சியச் சக்திகளாக” (ideal powers) மாறுகின்றன. ஆக, ஒரு மனிதன் “இலட்சியப் போக்குகளைப்” பின்பற்றுவதாலும், “இலட்சியச் சக்திகள்” தன் மீது செல்வாக்குச் செலுத்துவதாக ஒப்புக் கொள்வதாலும் அவர் கருத்துமுதல்வாதி என்று கருதப்படலாம் என்றால் இயல்பாக வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நபரும் பிறவிக் கருத்துமுதல்வாதி ஆகிறான். அப்படியானால் பொருள்முதல்வாதிகள் என்று யார்தான் இருக்க முடியும்?

மூன்றாவதாக, குறைந்தபட்சம் இந்தத் தருணத்திலாவது மனிதகுலம், மொத்தத்தில் ஒரு முற்போக்குத் திசைவழியில் செல்கிறது என்ற நம்பிக்கைக்கும், பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் இரண்டுக்கும் இடையே உள்ள எதிர்நிலைக்கும் (antagonism) முற்றிலுமாக எவ்விதத் தொடர்பும் கிடையாது. பிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகள், இறையுண்மைவாதிகளான (deists) வால்ட்டேர் (Voltaire), ரூஸோ (Rousseau) ஆகியோருக்குச் சற்றும் குறையாத அளவில், அனேகமாக வெறித்தனம் என்ற அளவுக்கு இந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். அதற்காக அவர்கள் அடிக்கடி போதுமான மாபெரும் சொந்தத் தியாகங்களையும் செய்தார்கள். எடுத்துக்காட்டாக, “உண்மைக்கும் நீதிக்கும் பாடுபடுவதில் – இந்தச் சொற்றொடரை அதன் நல்ல பொருளில் பயன்படுத்துகிறோம் – யாராவது ஒருவர் தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார் என்றால், அவர் டைடிரோதான் (Didero). ஆகவே, இவையெல்லாம் கருத்துமுதல்வாதம் என்று ஸ்டார்க்கே அறிவிப்பாரானால், அவரைப் பொறுத்தவரை பொருள்முதல்வாதம் என்னும் சொல்லும் இரு போக்குகளுக்கும் இடையே உள்ள எதிர்நிலை யாவும் அர்த்தம் அனைத்தையும் இழந்து விட்டன என்பதே நிரூபணம் ஆகிறது.

உண்மை என்னவென்றால், பொருள்முதல்வாதம் என்ற சொல்லுக்கு, மதகுருக்கள் நெடுங்காலமாகத் தொடர்ந்து அவப்பெயர் ஏற்படுத்தியிருப்பதன் விளைவாக ஏற்பட்டுள்ள, மரபுவழிப்பட்ட போலிப் பண்புவாதத் தப்பெண்ணத்துக்கு இந்நூலில் ஸ்டார்க்கே, ஒருவேளை தன்னையறியாமலேயே, மன்னிக்கவியலாத சலுகையை அளிக்கிறார். பொருள்முதல்வாதம் என்ற சொல்லுக்குப் பெருந்தீனி, குடிபோதை, காமப் பார்வை, காமவெறி, ஆணவம், சுயநலம், பேராசை, பிறர் பொருள் நயத்தல், இலாப வேட்டை, பங்குச் சந்தை மோசடி – சுருங்கச் சொன்னால், போலிப் பண்புவாதி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இரகசியமாக ஈடுபடுகின்ற இழிவான தீயொழுக்கம் அனைத்தையும் குறிக்கிறதென்று புரிந்து கொள்கிறான். கருத்துமுதல்வாதம் என்ற சொல்லை நற்குணம், மனிதகுலம் முழுவதின் மீதான கருணை, பொதுவாக ஒரு “மேம்பட்ட உலகம்” பற்றிய நம்பிக்கை என்ற பொருளில் புரிந்து கொள்கிறான். அதைப்பற்றி அவன் பிறர்முன்னால் பெருமையடித்துக் கொள்கிறான். ஆனால், அவன் தன்னைப் பொறுத்தவரை, மனக் கலக்கத்தில் இருக்கும் வரையில் அல்லது தன்னுடைய “பொருளாதய” அத்துமீறல்களின் பலனாகத் திவாலாகித் திரியும்போது மட்டும், அவற்றில் நம்பிக்கை கொள்கிறான். அந்த நேரத்தில்தான் அவன், மனிதன் என்பது யார்? மிருகம் பாதி, தெய்வம் பாதி என்று தனக்குப் பிரியமான பாட்டைப் பாடுகிறான்.

மற்றபடி, ஜெர்மனியில் இன்றைக்குத் தத்துவவாதிகள் என்று சொல்லப்படுகின்ற, உரத்துக் கூச்சலிடும் துணைப் பேராசிரியர்களின் தாக்குதல்களிலிருந்தும் போதனைகளிலிருந்தும் ஃபாயர்பாக்கைப் பாதுகாக்க ஸ்டார்க்கே பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறார். இந்தப் பாரம்பரிய ஜெர்மன் தத்துவத்தின் அடுத்த தலைமுறையில் அக்கறை கொண்டிருப்பவர்களுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பது உண்மையே. ஸ்டார்க்கேயுக்கும்கூட இது அவசியம் என்று தோன்றியிருக்கக் கூடும். எனினும் நாம் வாசகர்களை இதில் சிக்க வைக்காமல் விட்டுவிடுவோம்.

(அத்தியாயம்-2 முற்றும்)


இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
பதிப்புரிமை © 2009 மார்க்ஸியச் சிந்தனை மையம்