மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்
மார்க்ஸியச் சிந்தனை மையம்

அண்மைய பதிவுகள்

விரைவில்...

“கூலி, விலை, லாபம்”
– கார்ல் மார்க்ஸ்

லுத்விக் ஃபாயர்பாக்கும்
மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்

(ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)

தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

அத்தியாயம்-3
[ஃபாயர்பாக்கின் கோட்பாடுகள் பற்றிய விமர்சனம்]

மதம், நன்னெறி பற்றிய ஃபாயர்பாக்கின் தத்துவத்தை நோக்கியவுடனே அவருடைய உண்மையான கருத்துமுதல்வாதம் வெளிப்படையாகத் தெரிந்து விடுகிறது. அவர் நிச்சயமாக மதத்தை ஒழிக்க விரும்பவில்லை. அதை முழுநிறைவாக்கவே விழைகிறார். தத்துவமேகூட மதத்தோடு ஒன்று கலக்கப்பட வேண்டும் [என்பதே அவர் விருப்பம்].

”மத ரீதியான மாற்றங்கள் மூலமாக மட்டுமே மனிதகுலத்தின் காலகட்டங்கள் வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன. ஒரு வரலாற்று இயக்கம் மனிதர்களின் இதயத்தில் வேரூன்றி இருக்கிறபோதுதான் அது தன் அடித்தளத்தை எட்டுகிறது. இதயம் என்பது மதத்தின் ஒரு வடிவம் அல்ல. எனவே மதம் இதயத்திற்குள்ளும் இருக்க வேண்டும் என்று தேடக்கூடாது. இதயம் என்பது மதத்தின் சாரம் ஆகும்” (ஸ்டார்க்கே காட்டும் மேற்கோள், பக்கம் 168). [இந்த மேற்கோள் ஃபாயர்பாக் எழுதிய தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்: மாற்றத்தின் தவிர்க்கவியலாத் தன்மை என்னும் கட்டுரையிலிருந்து எடுத்தாளப்படுகிறது].

ஃபாயர்பாக்கின் கருத்துப்படி, மதம் என்பது மனிதர்களுக்கு இடையே உணர்ச்சிகளின் அடிப்படையில் அமைந்த, இதயத்தை ஆதாரமாகக் கொண்ட உறவாகும். இந்த உறவு இதுவரையில் தன் உண்மையை எதார்த்தத்தின் கற்பனைக் கண்ணாடிப் படிமத்தில் தேடிக் கொண்டிருந்தது. மனிதப் பண்புகளின் கற்பனைக் கண்ணாடிப் படிமங்களாக விளங்கும், ஒரு கடவுள் அல்லது பல கடவுள்களின் மூலமாகத் தேடிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போதோ, “நான்” என்பதற்கும் “நீ” என்பதற்கும் இடையேயுள்ள அன்பில் நேரடியாகவும் இடையீடு எதுவும் இன்றியும் மதம் தன் உண்மையைக் கண்டு கொள்கிறது. ஆக, முடிவாக, ஃபாயர்பாக்கைப் பொறுத்தவரை, பாலுறவுக் காதல் அவருடைய புதிய மதத்தினுடைய நடைமுறையின் உச்ச வடிவங்களுள் ஒன்றாக ஆகிறது – அது ஒன்றே உச்ச வடிவம் என்று இல்லாவிட்டாலும்கூட.

மனிதர்களிடையே குறிப்பாக ஆண் பெண் இடையே பாசத்தின் அடிப்படையில் நிலவும் உறவுகள் மனிதகுலம் தோன்றிய காலந்தொட்டு நிலவி வருவன ஆகும். குறிப்பாகப் பாலுறவுக் காதல் கடந்த எண்ணூறு ஆண்டுகளில் வளர்ச்சி கண்டு ஒரு சிறப்பிடத்தைப் பெற்றது. அது பெற்ற சிறப்பிடமே, அக்காலப் பகுதியில் எல்லாக் கவிதைகளும் சுற்றிச் சுழலும் கட்டாயமான மையப்புள்ளியாகக் காதலை மாற்றியது. நடப்பிலுள்ள நேருறுதியான மதங்கள், அரசால் நெறிப்படுத்தப்பட்ட பாலுறவுக் காதலின் மீது, அதாவது திருமணச் சட்டங்களின் மீது, மேலும் உயர்வான புனித தீட்சை அளிப்பதோடு நின்று விட்டன. காதல், நட்பு இவற்றின் நடைமுறையைச் சிறிதளவுகூட மாற்றாமல் நாளைக்கே அம்மதங்கள் அனைத்தும் மறைந்துவிட முடியும். மெய்யாகவே, இவ்வாறு 1793-98-ஆம் ஆண்டுகளில் ஃபிரான்சில் கிறிஸ்துவ மதம், நெப்போலியனால்கூட எதிர்ப்போ கஷ்டமோ இன்றி மீண்டும் புகுத்த முடியாதபடி, முற்றாக மறைந்தது. அதுவுங்கூட, ஃபாயர்பாக்கின் கருத்துப்படியான ஒரு மாற்று மதத்துக்கான தேவையின்றியே நடந்தேறியது என்பதை அந்த இடைக்காலத்தில் உணர்த்தி நின்றது.

ஃபாயர்பாக்கின் கருத்துமுதல்வாதம் இங்கே இதிலேதான் உள்ளது: பாலுறவுக் காதல், நட்பு, பரிவு, சுயத்தியாகம் மற்றும் இதுபோன்று மனிதர்களிடையே நிலவும், இருவர்க்கு இடையேயான ஈர்ப்பினை அடிப்படையாகக் கொண்ட பரஸ்பர உறவுகளை, கடந்த காலத்தைச் சேர்ந்ததென அவர் கருதுகின்ற ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைத்துப் பார்க்காமல், தம்மளவில் உள்ளபடியே அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, மதத்தின் பெயரால் புனித தீட்சை பெறும்போது மட்டுமே அவை தம் முழுமதிப்பை பெறும் என்று அடித்துக் கூறுகிறார். அவருக்கு முக்கியமான விஷயமாகப் படுவது. முற்றிலும் மானுட வகைப்பட்ட இந்த உறவுகள் நிலவுகின்றன என்பதல்ல, அவ்வுறவுகள் புதிய, உண்மையான மதமாகக் கருதப்படவேண்டும் என்பதே. ஒரு மதத்தின் முத்திரையைக் கொண்டு குறியிடப்பட்ட பிறகு மட்டுமே அவை முழு மதிப்பு பெற்றவையாக இருக்கும். மதத்தைக் குறிக்கும் religion என்ற சொல் ,religare என்னும் சொல்லிலிருந்து பிறந்தது. ஆதியில் அதன் பொருள் பிணைப்பு என்பதாகும். எனவே இரண்டு மனிதர்களிடையே நிலவும் ஒவ்வொரு பிணைப்பும் ஒரு மதமாகும். இத்தகைய சொல்லிலக்கணத் தந்திரங்கள் கருத்துமுதல்வாதத் தத்துவத்தின் கடைசிப் புகலிடமாகும். அன்றாட நடைமுறைப் புழக்கத்தில் வரலாற்று ரீதியான வளர்ச்சியின்படி அச்சொல் என்ன பொருளைக் குறிக்கிறது என்பதை முக்கியமாகக் கொள்ளாமல் வேர்ச்சொல்லின்படி அதன் பொருள் என்னவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமாகக் கொள்ளப்படுகிறது. எனவே வெறுமனே கருத்துமுதல்வாத நினைவுகளுக்கு மிகவும் பிரியமான மதம் என்னும் சொல் மொழியிலிருந்து மறைந்து போக வேண்டாம் என்பதற்காக, இரு பாலருக்கு இடையேயான பாலுறவுக் காதலும் புணர்ச்சியும் ஒரு மதமாகப் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. லுயீ பிளான் (Louis Blanc) கருத்துப்போக்கைச் சேர்ந்த பாரிஸ் நகரத்துச் சீர்திருத்தவாதிகள் நாற்பதுகளில் [1840-களில்] இதே பாணியில்தான் பேசி வந்தார்கள். மதத்தைச் சாராத மனிதனை ஓர் அரக்கப் பிறவி என்றுதான் அவர்களாலும் கருத முடிந்தது. நம்மைப் பார்த்து அவர்கள், “சரிதான், நாத்திகம் உங்கள் மதமாக்கும்!” என்று சொன்னதுண்டு. ஃபாயர்பாக், இயற்கையைப் பற்றிச் சாராம்சத்தில் ஒரு பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தின் அடிப்படையில் ஓர் உண்மையான மதத்தை நிலைநாட்ட விரும்புகிறார் எனில், அது, நவீன இரசாயனவியலை (chemistry) உண்மையான இரசவாதமாகக் (alchemy) கருதுவது போன்றதுதான். மதம் தனது கடவுள் இன்றி இருக்க முடியும் என்றால், இரசவாதமும் தனது சித்தர்மணிக்கல் இன்றி இருக்க முடியும். இடையே ஒன்று சொல்லி வைப்போம். இரசவாதத்துக்கும் மதத்துக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு உண்டு. சித்தர்மணிக்கல் பல தெய்வீகப் பண்புகளைக் கொண்டது. நம் சகாப்தத்தின் முதல் இரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்த எகிப்து – கிரேக்க இரசவாதிகளுக்குக் கிறிஸ்துவப் போதனைகளின் வளர்ச்சியில் பங்குண்டு என்பதைக் கோப் (Kopp), பெர்த்தலோ (Berthelot) ஆகியோர் கொடுத்துள்ள விவரங்கள் நிரூபித்துள்ளன.

“மனிதகுலத்தின் காலகட்டங்கள் மதத்துறை மாற்றங்கள் மூலமாக மட்டுமே வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன” என்று ஃபாயர்பாக் அடித்துக் கூறுவது திண்ணமான பிழையாகும். இன்றுவரை இருந்து வருகின்ற புத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று உலக மதங்களைப் பொறுத்தவரை மட்டுமே மாபெரும் வரலாற்றுத் திரும்பு முனைகளோடு மதத்துறை மாற்றங்களும் கூடவே ஏற்பட்டுள்ளன. தன்னியல்பாகத் தோன்றிய பழமையான பழங்குடி மற்றும் தேசிய மதங்கள் மாற்றங்கள் அடையவில்லை. பழங்குடியின் அல்லது மக்களினத்தின் சுதந்திரம் பறிபோனவுடன் அவை தம் எதிர்ப்புச் சக்தி அனைத்தையும் இழந்துவிட்டன. நலிந்துவந்த ரோமானிய உலகப் பேரரசுடனும், அதன் பொருளாதார, அரசியல், சித்தாந்த நிலைமைகளோடு பொருந்தியிருந்த, அதனால் புதிதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கிறிஸ்துவ உலகச் சமயத்துடனும் எளிய தொடர்பு கொண்டதே ஜெர்மானியர்களுக்குப் போதுமானதாய் இருந்தது. ஏறத்தாழ செயற்கையாகத் தோன்றிய இந்த உலக மதங்களின், குறிப்பாகக் கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் விஷயத்தில்தான் மிகவும் பொதுப்படையான வரலாற்று இயக்கங்கள் மத முத்திரை பெறுவதை நாம் காண்கிறோம். கிறிஸ்துவ மதத்தைப் பொறுத்தவரைகூட, உண்மையாகவே உலகளாவிய முக்கியத்துவம் கொண்ட புரட்சிகளில் மத முத்திரையைப் பதிப்பது, முதலாளி வர்க்கத்தினுடைய விடுதலைக்கான போராட்டத்தின் – பதின்மூன்று முதல் பதினேழாம் நூற்றாண்டு வரையிலான – முதல் கட்டங்களோடு முடிந்து விடுகிறது. ஃபாயர்பாக் நினைப்பதுபோல், மனிதர்களின் இதயங்கள், அவர்களின் மதத் தேவைகள் ஆகியவற்றின் மூலம் இதை விளக்க முடியாது. மதத்தையும் இறையியலையும் தவிர வேறெந்தச் சித்தாந்த வடிவத்தையும் அறிந்திராத மத்திய காலத்தின் முந்தைய வரலாறு முழுவதையும் கொண்டுதான் இதை விளக்க வேண்டும். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாளி வர்க்கம் அதேபோல் தன்னுடைய சொந்த வர்க்கக் கருத்துநிலைக்குப் பொருத்தமான, தனக்கே உரிய ஒரு சித்தாந்தத்தை வசமாக்கிக் கொள்கிற அளவுக்கு வலுப்பெற்றபோது, அதனுடைய மகத்தான, முடிவான புரட்சியாகிய பிரெஞ்சுப் புரட்சியைச் செய்து முடித்தது. முற்றிலும் சட்டவியல் மற்றும் அரசியல் கருத்துகளுக்கு மட்டுமே பிரெஞ்சு முதலாளி வர்க்கம் வேண்டுகோள் விடுத்தது. மதம் அதன் பாதையில் குறுக்கே வந்தபோது மட்டுமே அதில் அவ்வர்க்கம் அக்கறை காட்டியது. ஆனால் பழைய மதத்தின் இடத்தில் ஒரு புதிய மதத்தை வைப்போமே என்று அவ்வர்க்கத்துக்குத் தோன்றவே இல்லை. ரோபெஸ்பியேர் (Robespierre) இத்தகைய முயற்சியில் தோல்வி அடைந்ததை அனைவரும் அறிவர். [”உன்னத படைப்பின்” (Supreme Being) மதம் ஒன்றை உருவாக்க ரோபெஸ்பியேர் மேற்கொண்ட முயற்சியை ஏங்கெல்ஸ் இங்கு குறிப்பிடுகிறார்].

பிற மனிதர்களோடு நமக்குள்ள உறவுகளில் முற்றிலும் மானுட வகைப்பட்ட உணர்ச்சிகளுக்கான சாத்தியப்பாடு, நாம் வாழ்ந்து தீர வேண்டிய, வர்க்கப் பகைமையையும் வர்க்க ஆட்சியையும் அடிப்படையாகக் கொண்டுள்ள இச்சமுதாயத்தால் இக்காலத்தில் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இவ்வுணர்ச்சிகளை ஒரு மதமாக ஏற்றிப் போற்றுவதன் மூலம் அதை மேலும் குறைப்பதற்கு நமக்கு நியாயம் எதுவும் இல்லை. அதேபோல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் வர்க்கப் போராட்டங்களைப் புரிந்து கொள்வதை தற்கால வரலாற்றியல், குறிப்பாக ஜெர்மனியில், ஏற்கெனவே பெருமளவு கொச்சைப்படுத்தியுள்ளது. எனவே இப்போராட்டங்களின் வரலாற்றை கிறிஸ்துவ திருச்சபை வரலாற்றின் வெறும் பிற்சேர்க்கையாக மாற்றுவதின் மூலம், அப்படிப்பட்ட புரிதலை முற்றிலும் சாத்தியமற்றதாக்கிவிடும் தேவை நமக்கு இல்லை. இன்றைக்கு ஃபாயர்பாக்கைத் தாண்டி நாம் எவ்வளவு தூரம் வந்து விட்டோம் என்பது இங்கே ஏற்கெனவே தெளிவாகிறது. அன்பு வழிப்பட்ட, அவரது புதிய மதத்தைப் போற்றி அவர் எழுதிய “மிகச் சிறந்த நூற்பகுதிகள்” இன்றைக்கு முற்றிலும் படிக்க இயலாதவை ஆகிவிட்டன.

ஃபாயர்பாக் கருத்தூன்றி ஆராய்கிற ஒரே மதம், ஒரே கடவுளை அடிப்படையாகக் கொண்ட மேனாட்டு உலக மதமான கிறிஸ்துவ மதம் மட்டுமே. கிறிஸ்துவக் கடவுள் வெறுமனே கற்பனையின் பிரதிபலிப்பே, மனிதனின் கண்ணாடிப் படிமமே என்று அவர் நிரூபிக்கிறார். இந்தக் கடவுளேகூட ஒரு நீண்ட நெடிய அருவமாக்கும் நிகழ்வுப்போக்கின் (tedious process of abstraction) விளைவுதான். எண்ணற்ற முந்தைய பழங்குடி மற்றும் தேசியக் கடவுள்களின் கெட்டித்த சத்துச் சாறுதான். மனிதனின் பிரதி பிம்பமே கடவுள். எனவே இந்த மனிதனும் உண்மையான மனிதன் அல்ல. இவனும் கடவுளைப் போலவே எண்ணற்ற உண்மையான மனிதர்களின் சத்துச் சாறுதான், அருவ வடிவிலான மனிதன்தான். எனவே மனிதன் என்பவனும்கூட ஒரு மனப் படிமமே. உணர்ச்சியைப் பற்றியும் எதார்த்த உலகின் மீதான ஈடுபாடு பற்றியும் ஒவ்வொரு பக்கத்திலும் பிரச்சாரம் செய்யும் ஃபாயர்பாக், எதார்த்தத்தில், மனிதர்களிடையேயான வெறும் பாலுறவைத் தவிர்த்துப் பிறவற்றைப் பற்றிப் பேசத் தொடங்கும்போதெல்லாம் முற்றிலும் அருவமாகவே பேசுகிறார்.

இந்த உறவுகளில் ஒரேயொரு கூறு மட்டுமே அவருக்குப் பிடித்துப் போகிறது: அதுதான் அறநெறி. ஹெகலுடன் ஒப்பிடும்போது ஃபாயர்பாக்கிடம் காணப்படும் ஆச்சரியமான அறிவு வறட்சி இங்கே மீண்டும் நம்மைத் துணுக்குற வைக்கிறது. ஹெகலுடைய நன்னெறி அல்லது ஒழுக்க நடத்தை பற்றிய கோட்பாடு, உரிமை பற்றிய தத்துவம் ஆகும். அது (1) அருவமான உரிமை (abstract right), (2) அறநெறி (morality), (3) சமூக நன்னெறி (social ethics) ஆகியவற்றைத் தழுவிக் கொண்டிருக்கிறது. இவற்றுள் சமூக நன்னெறியானது குடும்பம், குடிமைச் சமுதாயம், அரசு ஆகியவற்றை உள்ளடக்கியது. இங்கே வடிவம் எந்த அளவுக்குக் கருத்துமுதல்வாத வழிப்பட்டதாக உள்ளதோ, அந்த அளவுக்கு உள்ளடக்கம் எதார்த்த வழிப்பட்டதாக உள்ளது. அறநெறியோடுகூட இங்கே சட்டம், பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகள் முழுமையும் அடங்கியுள்ளன. ஃபாயர்பாக்கைப் பொறுத்தவரை இது அப்படியே தலைகீழாக இருக்கிறது. வடிவத்தில் அவர் எதார்த்த வழிப்பட்டவராக இருக்கிறார். [உள்ளடக்கத்தில் கருத்துமுதல்வாதியாக உள்ளார்]. ஏனெனில் அவர் மனிதனிலிருந்து தொடங்குகிறார். ஆனால் இந்த மனிதன் வாழ்கிற உலகத்தைப் பற்றி அவர் முற்றிலுமாக எதுவுமே குறிப்பிடவில்லை. எனவே மதம் பற்றிய தத்துவத்தில் பிரதான இடம் பிடித்த அதே அருவமான மனிதனாகவே இந்த மனிதன் எப்போதும் இருந்து விடுகிறான். காரணம், இந்த மனிதன் பெண்ணின் கருவிலிருந்து பிறந்தவன்று. அவன் புழுக்கூட்டை விட்டு வெளிவருவது போல் ஒரே கடவுள் கொண்ட மதங்களின் கடவுளிடமிருந்து வெளிப்படுகிறான். எனவே வரலாற்று ரீதியாக அமைந்து வரலாற்று ரீதியாக தீர்மானிக்கப்பட்டுள்ள ஓர் எதார்த்தமான உலகத்தில் அவன் வாழ்வதில்லை. அவன் பிற மனிதர்களோடு உறவுப் பிணைப்புகள் கொண்டிருந்தான் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுள் ஒவ்வொருவரும் அவனைப் போலவே அதே அளவுக்கு அருவ மனிதரே. மதத்தைப் பற்றிய அவருடைய தத்துவத்தில் இன்னும் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவருடைய அறநெறியில் இந்தக் கடைசி வேறுபாடுகூட மறைந்து போகிறது. இதை உறுதிப்படுத்துவது போல, ஃபாயர்பாக், அவ்வப்போது நீண்ட இடைவெளிகளில், கீழ்க்காண்பது போன்ற கூற்றுகளை உதிர்க்கிறார்:

“மாளிகையில் உள்ள மனிதன் ஒருமாதிரிச் சிந்திக்கிறான்; குடிசையில் உள்ள மனிதன் வேறுமாதிரிச் சிந்திக்கிறான்” [ஃபாயர்பாக் எழுதிய உடலும் ஆன்மாவும், சதையும் மனமும் ஆகியவை பற்றிய இருபொருள்வாதத்துக்கு எதிராக என்ற நூலில் உள்ள வரி].

“பசி, வறுமை ஆகியவற்றின் காரணமாக உனக்கு உடம்பிலே சத்து இல்லையெனில், அதுபோலவே உன்னுடைய மண்டையிலோ, மனதிலோ, இதயத்திலோ அறநெறிக்கான சத்தும் இல்லைதான்” [ஃபாயர்பாக் எழுதிய வறுமை எல்லாச் சட்டங்களையும் வெற்றி கொண்டு அவற்றை அழித்தொழிக்கிறது என்னும் நூலில் காணும் வரிகள்].

“அரசியல் நம்முடைய மதமாக ஆக வேண்டும்” [ஃபாயர்பாக் எழுதிய தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்: மாற்றத்தின் தவிர்க்கவியலாத் தன்மை என்னும் கட்டுரையில் காணும் வரி]. இன்னும் இதுபோல.

ஆனால் இந்த மெய்யுரைகளைக் கொண்டு எதையும் சாதிக்கும் திறமை ஃபாயர்பாக்குக்கு அறவே கிடையாது. அவை வெறும் சொற்றொடர்களாகவே இருந்து விடுகின்றன. ஃபாயர்பாக்குக்கு அரசியல் ஒரு கடக்க முடியாத எல்லையாக இருந்தது என்பதை ஸ்டார்க்கேகூட ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது.

“சமுதாயத்தைப் பற்றிய விஞ்ஞானம், அதாவது சமூகவியல் என்பது அவருக்குப் புரியாத புதிராகவே இருந்தது” [ஸ்டார்க்கே எழுதிய "லுத்விக் ஃபாயர்பாக்" நூலிலுள்ள சொல்தொடர்].

நன்மை, தீமை ஆகியவற்றின் எதிராக்கத்தை (antithesis) விளக்கியுரைப்பதில், ஹெகலுடன் ஒப்புநோக்கும்போது, ஃபாயர்பாக் ஆழமற்றவராகத் தெரிகிறார்.

ஹெகல் கூறுகிறார். “ ’மனிதன் இயற்கையாகவே நல்லவன்’ என்று ஒருவர் கூறினால், அவர் மகத்தான ஒன்றைக் கூறிவிட்டதாகச் சிலர் நம்பகிறார்கள். ஆனால் ’மனிதன் இயற்கையாகவே கெட்டவன்’ என்று ஒருவர் கூறும்போது, அதைவிட மகத்தான ஒன்றை அவர் கூறியுள்ளார் என்பதை அந்தச் சிலர் மறந்து விடுகின்றனர்.”

ஹெகல் கருத்துப்படி, தீமையென்பது, வரலாற்று வளர்ச்சியின் உந்து சக்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வடிவமாகும். இதில் இருவகையான பொருள் அடங்கியுள்ளது. ஒருபுறம், ஒவ்வொரு புதிய முன்னேற்றமும் நிச்சயமாகவே புனிதமான விஷயங்களுக்கு எதிரான அபசாரமாகவும், பழையதாகி மறைந்துபோகும் நிலையில் இருந்தாலும் மரபு வழக்கினால் புனிதப்படுத்தப்பட்ட நிலைமைகளுக்கு எதிரான கலகமாகவும் தோற்றமளிக்கிறது. மறுபுறம், மனிதனின் தீய உணர்ச்சிகளான பேராசையும் அதிகாரத்துக்கான வேட்கையும்தாம், வர்க்கப் பகைமைகள் தோன்றிய காலத்திலிருந்து வரலாற்று வளர்ச்சிக்கான நெம்புகோல்களாகப் பயன்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் வரலாறு இந்த உண்மைக்குத் தொடர்ச்சியான ஒற்றைச் சான்றாக அமைந்துள்ளது. எனினும் அறநெறியோடு தொடர்புடைய தீமையின் வரலாற்றுப் பாத்திரத்தை ஆராய வேண்டும் என ஃபாயர்பாக்குக்குத் தோன்றவேயில்லை. அவருக்கு வரலாறு என்பது மொத்தத்தில் புதிரான, புரிந்து கொள்ள முடியாத ஒரு துறையாகவே இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை,

“ஆதியில் இயற்கையிலிருந்து தோன்றிய நிலையில் மனிதன் வெறுமனே இயற்கை படைத்த ஓர் உயிரினமாகவே இருந்தான், மனிதனாக இல்லை. மனிதன் என்பவன் மனிதர், பண்பாடு, வரலாறு ஆகியவற்றின் உற்பத்திப்பொருள் ஆவான்.”

என்னும் அவருடைய வாக்குகூட முற்றிலும் மலட்டுத்தனமான கருத்துரையாகவே இருந்து விடுகிறது.

எனவே, அறநெறிகள் பற்றி ஃபாயர்பாக் நமக்குச் சொல்லக் கூடியது மிகமிகச் சொற்பமாகவே இருக்க முடியும். மகிழ்ச்சிக்கான வேட்கை மனிதனுக்குள் இயல்பாகவே அமைந்துள்ளது. எனவே அது எல்லா அறநெறிக்கும் அடிப்படையாக அமைய வேண்டும். ஆனால் மகிழ்ச்சிக்கான வேட்கை இரட்டைத் திருத்தத்துக்கு உட்பட்டதாகும். முதலாவதாக, நம் செய்கைகளின் இயல்பான பின்விளைவுகளால் திருத்தப்படுகிறது: அதிகமாகக் குடித்த பின் தலைவலி ஏற்படுகிறது, வழக்கமான, அளவுக்கு மிஞ்சிய நுகர்வுக்குப்பின் நோய் தொடர்கிறது. இரண்டாவதாக, அவற்றின் சமுதாயப் பின்விளைவுகளால் திருத்தப்படுகிறது: மற்றவர்களின் இதேபோன்ற மகிழ்ச்சிக்கான வேட்கையை நாம் மதிக்காவிட்டால், அவர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு, மகிழ்ச்சிக்கான நமது வேட்கையிலேயே குறுக்கிடுவர். இதன் காரணமாய், நம் வேட்கையைத் திருப்திப்படுத்த நமது நடத்தையின் பின்விளைவுகளைச் சரியாக மதிப்பிடும் நிலையில் நாம் இருந்தாக வேண்டும். அதேபோல் மகிழ்ச்சியைத் தேடுவதில் மற்றவர்க்குள்ள சம உரிமையை அனுமதிக்க வேண்டும். நம்மைப் பொறுத்தவரை பகுத்தறிவு பூர்வமான தற்கட்டுப்பாடு, மற்றவர்களோடு நமது உறவுப் பிணைப்பைப் பொறுத்தவரை அன்பு – மீண்டும் மீண்டும் அதே அன்பு! – ஆகியவைதாம் ஃபாயர்பாக்கின் அறநெறி பற்றிய அடிப்படை விதிகள். அவற்றிலிருந்தே மற்றவை அனைத்தும் பெறப்படுகின்றன. ஃபாயர்பாக்கின் உணர்ச்சி மிக்க பிரகடனங்களோ, ஸ்டார்க்கேயின் வலிமை மிக்க புகழுரைகளோ இந்தச் சில வரையறுப்புகளின் பலவீனத்தையும் வெறுமையையும் மறைக்க முடியாது.

தனக்காகவே கவலைப்பட்டுக் கிடக்கும் ஒரு தனிநபர், மிக அரிதாக மட்டுமே மகிழ்ச்சிக்கான தன் வேட்கையைத் திருப்திப்படுத்த முடியும். அவனுக்கோ, மற்றவர்களுக்கோ எவ்வகையிலும் இலாபம் கிடையாது. அதைவிட அவனுக்குத் தேவைப்படுவதெல்லாம், வெளி உலகத் தொடர்பு, அவனுடைய தேவைகளை நிறைவு செய்யும் ஆதாரங்களான உணவு, மறு பாலரில் ஒருவர், புத்தகங்கள், உரையாடல், விவாதம், நடவடிக்கைகள், பயன்படுத்தவும் பணி செய்யவுமான பொருள்கள் போன்றவையே ஆகும். திருப்திக்கான இவ்வாதாரங்களும் பொருள்களும் ஒவ்வொரு தனி நபருக்கும் இயல்பான நடைமுறையிலேயே வழங்கப்பட்டிருப்பதாக ஃபாயர்பாக்கின் அறநெறி அனுமானித்துக் கொள்கிறது. அல்லது நடைமுறை சாத்தியமற்ற வெறும் அறிவுரையை மட்டுமே அது வழங்குகிறது. எனவே, இத்தகைய வசதிகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த அறநெறியால் எவ்விதப் பயனும் கிடையாது. ஃபாயர்பாக்குங்கூட இதை வெளிப்படையாகவே பின்வருமாறு கூறுகிறார்:

“மாளிகையில் உள்ள மனிதன் ஒருமாதிரிச் சிந்திக்கிறான்; குடிசையில் உள்ள மனிதன் வேறுமாதிரிச் சிந்திக்கிறான்”. “பசி, வறுமை ஆகியவற்றின் காரணமாக உனக்கு உடம்பிலே சத்து இல்லையெனில், அதுபோலவே உன்னுடைய மண்டையிலோ, மனதிலோ, இதயத்திலோ அறநெறிக்கான சத்தும் இல்லைதான்.”

மகிழ்ச்சிக்கான தங்களுடைய வேட்கையைத் திருப்திப்படுத்த மற்றவர்களுக்குரிய சமவுரிமை என்பதைப் பொறுத்தவரை விவகாரங்கள் இதைவிட மேலாகவா உள்ளன? ஃபாயர்பாக் இந்தச் சமவுரிமையைத் தனிமுதலானதென்றும், எல்லாக் காலங்களுக்கும் சூழ்நிலைமைகளுக்கும் பொருந்தக் கூடியது என்றும் சாதித்தார். இது எப்போதிருந்து சரியென ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது? பண்டைக் காலத்தில் அடிமைகளுக்கும் ஆண்டைகளுக்கும் இடையிலோ அல்லது மத்திய காலத்தில் பண்ணை அடிமைகளுக்கும் பிரபுக்களுக்கும் இடையிலோ என்றைக்காவது மகிழ்ச்சிக்கான வேட்கைக்குரிய சமவுரிமை பற்றிய பேச்சு இருந்ததுண்டா? ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் மகிழ்ச்சிக்கான வேட்கை “சட்ட பூர்வமான உரிமையின்படியே” ஆளும் வர்க்கத்தின் மகிழ்ச்சிக்கான வேட்கைக்கு ஈவிரக்கமின்றிப் பலியிடப்படவில்லையா? ஆம், உண்மையிலே அது நெறிகெட்டதுதான் என்றாலும், தற்காலத்தில் உரிமைகளைப் பொறுத்தவரை சமத்துவம் அங்கீகரிக்கப்படுகிறது. நிலவுடைமை மீதான சிறப்புரிமைகளை, அதாவது தனிநபர் சிறப்புரிமைகளை ஒழித்து விடும்படியும், முதலில் தனிநபர் சட்டத் துறையிலும் பிறகு படிப்படியாகப் பொதுநலச் சட்டத் துறையிலும்கூட, சட்டத்தின் முன்னால் எல்லா நபர்களும் சமம் என்னும் நிலையைப் புகுத்தும்படியும், எப்போதிருந்து, எந்த அளவுக்கு முதலாளித்துவ வர்க்கம் கட்டாயப்படுத்தப்பட்டதோ அப்போதிருந்து, அந்த அளவுக்கு, நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான அதனுடைய போராட்டத்திலும், முதலாளித்துவ உற்பத்தியின் வளர்ச்சியிலும் இந்தச் சமவுரிமை சொல்லளவிலே அங்கீகரிக்கப் பட்டுள்ளது. ஆனால் மகிழ்ச்சிக்கான வேட்கையானது, இலட்சிய உரிமைகளின் மீது அற்பமான அளவுக்கே செழிப்படைகிறது. அனைத்தையும்விடப் பொருளாயதச் சாதனங்களின் மீதே அது மாபெரும் அளவுக்கு செழித்தோங்குகிறது; சமவுரிமைகள் கொண்ட மிகப் பெரும்பான்மையோர் வெறும் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாதன வற்றை மட்டும் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ள முதலாளித்துவ உற்பத்திமுறை கவனம் எடுத்துக் கொள்கிறது. எனவே முதலாளித்துவ உற்பத்திமுறை, பெரும்பான்மையினரின் மகிழ்ச்சிக்கான வேட்கைக்குரிய சமவுரிமைக்கு, அடிமை முறையில் அல்லது பண்ணையடிமை முறையில் இருந்ததைவிட அதிகமான மரியாதை (அதாவது, அதிகமாக இருக்க முடியுமானால்தான்) எதையும் கொடுப்பது கிடையாது. மேலும், மனத்துக்கு மகிழ்ச்சி அளிக்கும் சாதானங்கள் விஷயத்தில், அதாவது கல்விச் சாதனங்களைப் பொறுத்தவரை நமது நிலைமை இதைவிட நன்றாக உள்ளதா? “ஸடோவா பள்ளியாசிரியர்” என்பவருங்கூட கற்பனை மனிதர்தானே?


[ஸடோவா பள்ளியாசிரியர்: ஸடோவா என்ற இடத்தில் 1866-இல் நடந்த ஆஸ்திரிய-பிரஷ்யப் போரில் பிரஷ்யர்கள் வெற்றி பெற்றதற்குக் காரணம் பிரஷ்ய நாட்டின் பொதுக்கல்வி அமைப்பு முறையின் உயர்வே என்னும் உட்கருத்தோடு ஜெர்மன் முதலாளித்துவப் பொதுவிவகார எழுத்தாளர்கள் தற்காலத்தில் பயன்படுத்திவரும் சொல்தொடர் இது].


இன்னும், அறநெறிகளைப் பற்றிய ஃபாயர்பாக்கின் கோட்பாட்டின்படி பார்த்தால், பங்குச் சந்தைதான் அறநெறி நடத்தைக்குரிய மிக உயர்வான கோயிலாகும் – ஒருவர் எப்போதும் சரியாக ஊகபேரம் நடத்தி வருகிறார் என்றால் மட்டுமே இது உண்மை. என்னுடைய மகிழ்ச்சிக்கான வேட்கை என்னைப் பங்குச் சந்தைக்குக் கொண்டுபோய் விடும் எனில், அப்படி விடும்போது பாதகமான விளைவுகள் ஏற்படாமல், சாதகமான விளைவுகள் மட்டுமே ஏற்படும்படியாக, என் செய்கைகளின் பின்விளைவுகளை அங்கே நான் சரியாகக் கணிக்கிறேன் எனில், அதாவது நான் எப்போதும் வெற்றி பெறுகிறேன் எனில், அப்போது நான் ஃபாயர்பாக்கின் போதனையை நிறைவேற்றி வருகிறவன் ஆகிறேன். மேலும், நான் இவ்வாறு செய்கையில், மற்றொரு நபர் தனது இன்பத்தை நாடிச் செல்வதற்கான சமவுரிமையில் நான் குறுக்கிடுவதில்லை; ஏனெனில் அந்த மற்றவர் என்னைப் போலவே சொந்த விருப்பப்படிதான் பங்குச் சந்தைக்குப் போனார். அவர் என்னுடன் நடத்திய ஊகபேரப் பரிமாற்றத்தை முடித்ததில், என் மகிழ்ச்சிக்கான வேட்கையை நான் பின்பற்றிச் சென்றது போலவே அவரும் தன் மகிழ்ச்சிக்கான வேட்கையைப் பின்பற்றிச் சென்றார். அவருடைய தவறான கணிப்புகளினால் அவர் தன் பணத்தை இழக்கிறார் என்றால், அதனாலேயே அவரின் செய்கை நெறிகெட்டது என நிரூபிக்கப்பட்டு விடுகிறது. மேலும், அவருடைய தகுதிக்கேற்ற தண்டனையை நான் அவருக்கு வழங்கியதால், நான் ஒரு நவீனகால ராடமந்தஸ் (Rhadamanthus) [கிரேக்க புராணத்தில் வரும் புத்திக் கூர்மையுள்ள நேர்மையான நீதிபதி] போலப் பெருமையோடு என் மார்பில் தட்டிக் கொள்ளவும் முடியும். வெறுமனே உணர்ச்சிவசப்பட்ட அலங்காரச் சொல்லாக இராத வரையில் அன்பு என்பதும்கூட பங்குச் சந்தையின் மீது ஆட்சி செலுத்துகிறது. எப்படியெனில், மகிழ்ச்சிக்கான தன்னுடைய சொந்த வேட்கை நிறைவு பெறுவதை ஒவ்வொருவரும் பிறரிடத்திலே காண்கின்றனர். சரியாக இதைத்தான் அன்பு சாதித்துத் தீர வேண்டியுள்ளது. நடைமுறையில் இவ்வாறுதான் அது செயலாற்றுகிறது. என் நடவடிக்கைகளின் பின்விளைவுகளைப் பற்றிய சரியான முன்கணிப்புடனும், அதன்காரணமாய் வெற்றிகரமாகவும் நான் சூதாடினால், ஃபாயர்பாக்கிய அறநெறியின் மிகவும் கண்டிப்பான அனைத்துக் கட்டளைகளையும் நான் நிறைவேற்றியவன் ஆகிறேன் – அத்துடன் வணிக பேரத்தில் பணக்காரனாகவும் ஆகிறேன். வேறு சொற்களில் கூறுவதெனில், ஃபாயர்பாக் தம்மளவில் அறநெறி பற்றி விரும்பியதும், கற்பனை செய்ததும் எப்படி இருந்த போதிலும், அவரின் அறநெறி நவீன முதலாளித்துவ சமுதாயத்தின் அமைப்புச் சட்டத்துக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.

ஆனால் அன்பு! – ஆம், ஃபாயர்பாக்கைப் பொறுத்தவரை, அன்புதான் எங்கெங்கும் எல்லாக் காலங்களிலும் அற்புதங்கள் நிகழ்த்தும் கடவுள். நடைமுறை வாழ்வின் இடர்கள் அனைத்தையும் வெற்றி கொள்ள அக்கடவுள்தான் உதவி புரிய வேண்டும் – அதுவும், நேரெதிரான நலன்களைக் கொண்ட வர்க்கங்களாய்ப் பிளவுபட்டுள்ள ஒரு சமுதாயத்திலே. இவ்வாறாக, அவருடைய தத்துவத்திலிருந்து அதன் புரட்சிகரத் தன்மையின் கடைசி மிச்சமும் மறைந்து விடுகிறது. [கீழ்க்காணும்] போலியான சொல் பந்தா மட்டுமே மிஞ்சுகிறது: ஒருவரையொருவர் நேசியுங்கள் – ஆண், பெண் என்று பால் வேறுபாடு பாராமல், பட்டம் பதவிகளைக் கருதாமல் ஒருவரையொருவர் தழுவிக் கொள்ளுங்கள் – உலகளாவிய சமரசப் போதையான அன்பில் திளையுங்கள்!

சுருக்கமாகச் சொன்னால், அறநெறிகளைப் பற்றிய ஃபாயர்பாக்கியக் கோட்பாடு அதற்கு முந்தைய கோட்பாடுகளின் கதியையே அடைகிறது. அது எல்லாக் கால கட்டங்களுக்கும், எல்லா மக்களினங்களுக்கும், எல்லா நிலைமைகளுக்கும் பொருந்தும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது; துல்லியமாக அந்தக் காரணத்தாலேயே அது என்றைக்கும், எங்கும் செயல்படுத்த முடியாததாக உள்ளது. எதார்த்த உலகத்தைப் பொறுத்தவரை, அது கான்ட்டின் ஆணித்தரமான கட்டளையைப் போலவே செல்வாக்கின்றி நிற்கிறது. எதார்த்தத்தில் ஒவ்வொரு வர்க்கமும், ஒவ்வொரு தொழிலும்கூட தனக்கே உரிய ஓர் அறநெறியைக் கொண்டுள்ளது. தண்டனைக்குச் சிக்காத வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இதையுங்கூட அது மீறுகின்றது. அனைவரையும் ஒன்றுபடுத்த வேண்டிய அன்பு, போர்களிலும், தகராறுகளிலும், சட்ட வழக்குகளிலும், குடும்பச் சண்டைகளிலும், விவாகரத்துகளிலும், சாத்தியமான அளவுக்கு ஒருவரை ஒருவர் சுரண்டுவதிலும்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

ஆனால் ஃபாயர்பாக் அளித்த சக்திமிக்க தூண்டுதல் அவருக்கேகூட இந்த அளவுக்குப் பயனற்றதாய் மாறிப்போனது எப்படிச் சாத்தியமாயிற்று? காரணம் சாதாரணமானதுதான். அவரே நஞ்சாக வெறுப்புக் கொண்டிருந்த அருவமான உலகத்திலிருந்து தப்பித்து, வாழ்கின்ற எதார்த்த உலகத்துக்கு வந்து சேர, ஃபாயர்பாக் ஒருபோதும் வழி தேடிக் கொள்ளவில்லை. அவர் இயற்கையோடும் மனிதனோடும் உடும்புப்பிடியாக ஒட்டிக் கொள்கிறார்; என்றாலும் அவருக்கு இயற்கையும் மனிதனும் வெறும் சொற்களாகவே இருந்து விடுகின்றன. எதார்த்தமான இயற்கையைப் பற்றியோ, எதார்த்தமான மனிதனைப் பற்றியோ திட்டவட்டமான எதையும் நமக்கு எடுத்துச் சொல்லும் திறனற்று இருக்கிறார். மனிதர்களை வரலாற்றில் பங்கெடுத்துக் கொள்கிறவர்களாகக் கருதும் போது மட்டும்தான் ஃபாயர்பாக்கின் அருவமான மனிதனிலிருந்து எதார்த்தமான உயிர்த்துடிப்புள்ள மனிதர்களிடம் வந்து சேருகிறோம். இதைத்தான் ஃபாயர்பாக் எதிர்த்து நிற்கிறார். எனவே, அவர் புரிந்து கொள்ளாத 1848-ஆம் ஆண்டு, அவருக்கு எதார்த்த உலகுடன் ஏற்பட்ட இறுதி முறிவாகவும், ஓய்வு பெற்றுத் தனிமையில் ஒதுங்கிய வாழ்க்கையாகவும் மட்டுமே அவருக்கு அர்த்தப்பட்டது. இதற்கான பழி பிரதானமாக ஜெர்மனியில் அன்று நிலவி வந்த நிலைமைகளின் மீதுதான் மீண்டும் விழுகிறது. அந்நிலைமைகள், துயரமான முறையிலே சிதைந்து போகும்படி அவரைத் தண்டித்து விட்டன.

ஆனால் ஃபாயர்பாக் எடுத்து வைக்காத அடியை எவ்வாறாயினும் எடுத்து வைக்க வேண்டியிருந்தது. ஃபாயர்பாக்கினுடைய புதிய சமயத்தின் உட்கருவாக அமைந்த அருவ மனிதனின் துதிபாடலுக்குப் பதிலாக அந்த இடத்தில் எதார்த்தமான மனிதர்கள் மற்றும் அவர்களின் வரலாற்று வளர்ச்சி பற்றிய விஞ்ஞானத்தை இருத்த வேண்டியதாயிற்று. ஃபாயர்பாக்கின் கருத்துநிலையை ஃபாயர்பாக்குக்கும் அப்பால் மேலும் வளர்த்தெடுக்கும் பணியை மார்க்ஸ் 1845-இல் புனிதக் குடும்பம் (The Holy Family) என்னும் நூலில் தொடங்கி வைத்தார்.

(அத்தியாயம்-3 முற்றும்)


இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
பதிப்புரிமை © 2009 மார்க்ஸியச் சிந்தனை மையம்