மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்
மார்க்ஸியச் சிந்தனை மையம்

அண்மைய பதிவுகள்

விரைவில்...

“கூலி, விலை, லாபம்”
– கார்ல் மார்க்ஸ்

லுத்விக் ஃபாயர்பாக்கும்
மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்

(ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)

தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

ஏங்கெல்ஸ் எழுதிய முன்னுரை

பெர்லின் நகரில் 1859-இல் வெளியிடப்பட்ட “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் கார்ல் மார்க்ஸ், புருஸ்ஸல்ஸ் நகரில் 1845-ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் இணைந்து, ஜெர்மன் தத்துவத்தின் சித்தாந்தப் பார்வைக்கு எதிரான எங்கள் கண்ணோட்டத்தை – முக்கியமாக, மார்க்ஸினால் விரித்துரைக்கப்பட்ட வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்துருவை – எவ்வாறு உருவாக்கத் தொடங்கினோம் என்பதை விவரித்துள்ளார். அதில் அவர் கூறுவதாவது: ”உண்மையில் எங்களின் முந்தைய தத்துவ மனச்சாட்சியுடன் கணக்குத் தீர்த்துக் கொள்வதே எங்கள் தீர்மானமாக இருந்தது. பின்-ஹெகலியத் (Post-Hegalian) தத்துவத்துக்கான ஒரு விமர்சனத்தின் வடிவத்தில் எங்கள் தீர்மானத்தைச் செயலாக்கினோம். அரைக்கால் தாள் அளவில் இரண்டு தொகுதிகளாக அமைந்த கையெழுத்துப் பிரதியை, வெஸ்ட்ஃபாலியாவிலுள்ள பதிப்பகத்துக்கு வெகுகாலத்துக்கு முன்பே அனுப்பியிருந்தோம். ஆனால் மாறிவிட்ட சூழ்நிலையில் அந்நூலை அச்சிட இயலாது என்னும் செய்தி எங்களுக்குக் கிடைத்தது. சுயத் தெளிவு பெறுவது என்கிற எங்களின் முதன்மையான நோக்கம் நிறைவேறிவிட்டது. எனவே, எலிகடித்து விமர்சிக்கட்டும் என்று மிகவும் மகிழ்ச்சியுடனே அந்தக் கையெழுத்துப் பிரதியைக் கைகழுவிவிட்டோம்”.

அதன்பின் நாற்பதாண்டுகளுக்கு மேல் உருண்டோடிவிட்டது. எங்கள் இருவரில் ஒருவர் மேற்கண்ட கருப்பொருளில் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்புக் கிடைக்காமலே மார்க்ஸ் காலமாகிவிட்டார். ஹெகலின் தத்துவத்தோடு எங்களுக்கு இருந்த உறவு பற்றிப் பல்வேறு இடங்களில் நாங்கள் வெளிப்படுத்தி இருக்கிறோம். என்றாலும் ஹெகலியத் தத்துவம் பற்றிய ஒரு முழுமையான மதிப்பீட்டை நாங்கள் வழங்கவே இல்லை. ஹெகலியன் தத்துவத்துக்கும் எங்கள் கருத்தோட்டத்துக்கும் இடையே பல்வேறு கூறுகளில் ஓர் இடைநிலைத் தொடுப்பாக விளங்கும் ஃபாயர்பாக்கை நாங்கள் கண்டு கொள்ளாமலே இருந்துவிட்டோம்.

இதற்கிடையே, ஜெர்மனி, ஐரோப்பா ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து வெகுதொலைவில் உள்ள பல நாடுகளிலும், உலகின் அனைத்து இலக்கிய மொழிகளிலும் மார்க்ஸிய உலகக் கண்ணோட்டத்தின் ஆதரவாளர்கள் தோன்றியுள்ளனர். மறுபுறம், பாரம்பரிய ஜெர்மன் தத்துவமோ வெளிநாடுகளிலே – குறிப்பாக இங்கிலாந்திலும், ஸ்காண்டிநேவியாவிலும் – ஒருவகையான மறுபிறவி எடுத்த நிலையை எய்தி வருகிறது. ஜெர்மனியிலேகூட, பல்கலைக் கழகங்களிலே தத்துவம் என்ற பெயரிலே கற்பிக்கப்படும் கதம்பவாதம் (eclecticism) என்னும் பிச்சைக்காரரின் பாத்திரக் கஞ்சி (pauper’s broth) மீது மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டதுபோல் தெரிகிறது.

    இத்தகைய சூழ்நிலைமையில், ஹெகலியத் தத்துவத்துடன் எங்களுக்கு இருந்த உறவு பற்றியும், அதிலிருந்து எப்படி எங்கள் பயணத்தைத் தொடங்கினோம், அதிலிருந்து எப்படி விலகினோம் என்பது பற்றியும் சுருக்கமாக, கோர்வைப்படுத்தி விளக்குவது அவசியம் என எனக்குள் தோன்றலாயிற்று. அதைப்போலவே, தாக்குதலும் எழுச்சியும் நிறைந்த எங்கள் காலகட்டத்தில்1 ஹெகலியத்தைத் தொடர்ந்துவந்த தத்துவவாதிகள் வேறெவரையும்விட ஃபாயர்பாக் எங்கள் மீது செல்வாக்குச் செலுத்தினார். அதனை முழுமையாக அங்கீகரிப்பது என்பது இதுவரையிலும் நிறைவேற்றப்படாமலே இருந்துவரும் ஒரு நன்றிக் கடனாகவே எனக்குப் பட்டது. எனவே, ஃபாயர்பாக் பற்றி ஸ்டார்க்கே (Starche) எழுதிய புத்தகத்துக்கு2 ஒரு விமர்சன மதிப்புரை எழுதித் தருமாறு “புதிய காலம்”3பத்திரிகையின் ஆசிரியர்கள் என்னைக் கேட்டுக் கொண்டபோது அதையொரு நல்வாய்ப்பாகவிருப்பத்துடன் பயன்படுத்திக் கொண்டேன். என் கட்டுரைகள் அந்த ஆய்விதழின் 1886-ஆண்டின் நான்காம், ஐந்தாம் இதழ்களில் வெளியிடப்பட்டன. இங்கே திருத்தப்பட்ட வடிவில் ஒரு தனிப் பிரசுரமாக வெளியிடப்படுகிறது.

    இதனை அச்சுக்கு அனுப்பும் முன்பாக, 1845-46 ஆம் ஆண்டுகளின் பழைய கையெழுத்துப் பிரதியை4 நான் மீண்டும் ஒருமுறை தேடியெடுத்துப் பார்வையிட்டேன். அதில் ஃபாயர்பாக் பற்றி எழுதியிருந்த பகுதி முற்றுப் பெறாமலே இருந்தது. வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தின் விளக்கமே அதில் முற்றுப்பெற்ற பகுதியாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பொருளாதார வரலாறு பற்றிய எங்கள் அறிவு எவ்வாறு முழுமையற்று இருந்தது என்பதையே இது நிரூபிக்கிறது. ஃபாயர்பாக்கின் கோட்பாடு பற்றிய விமர்சனம் எதுவும் அதில் இல்லை. எனவே இப்போதைய தேவைக்கு அது பயனற்றது. ஆனால் இன்னொரு புறம் மார்க்ஸின் பழைய குறிப்பேடு ஒன்றில் ஃபாயர்பாக் பற்றிய பதினொரு ஆய்வுக் குறிப்புகளை நான் கண்டேன். அவை இந்த நூலின் பின்னிணைப்பாக அச்சிடப்பட்டுள்ளன. நிச்சயமாக அவை வெளியிடுவதற்கான நோக்கத்துடன் எழுதப்பட்டவை அல்ல. பின்னாளில் விளக்கி எழுத வேண்டும் என்ற நோக்கில் அவசரமாகக் குறித்து வைக்கப்பட்டவை ஆகும். எனினும் ஒரு புதிய உலகப் பார்வையின் உன்னதமான ஒளிக்கீற்றை உள்ளடக்கிய முதல் ஆவணம் என்ற வகையிலே அது விலைமதிப்பற்றதாக விளங்குகிறது.

ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், பிப்ரவரி 21, 1888.

[1888-இல் ஸ்டட்கார்ட் நகரில் வெளியிடப்பட்ட Ludwig Feuerbach und der Ausgang der klassischen deutschen Philisophy என்னும் தமது நூலின் தனிப் பதிப்புக்காக ஏங்கெல்ஸ் எழுதியது]


1நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு எதிராக இளம் ஜெர்மன் எழுத்தாளர்களால் தொடங்கப்பட்டு 1770, 1780-களில் ஜெர்மன் பூர்ஷ்வாக்கள் நடத்திய இலக்கிய சமூக இயக்கத்தைக் குறிக்கிறது.

2சி.என்.ஸ்டார்க்கே, ‘லுத்விக் ஃபாயர்பாக்’, ஸ்டட்கர்ட், 1885.

3Die Neue Zeit (புதிய காலம்) என்பது 1883 முதல் 1923 வரை ஸ்டட்கர்ட்டிலிருந்து வெளிவந்த ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகளின் அரசியல் கோட்பாட்டுப் பத்திரிகை. 1885-1895 ஆண்டுகளில் ஏங்கெல்ஸின் சில கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

4மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து 1845-46 இல் எழுதிய ‘ஜெர்மன் தத்துவம்’ என்னும் நூலைக் குறிக்கிறது.

(ஏங்கெல்ஸ் எழுதிய முன்னுரை முற்றும்)


இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
பதிப்புரிமை © 2009 மார்க்ஸியச் சிந்தனை மையம்