மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்
மார்க்ஸியச் சிந்தனை மையம்

அண்மைய பதிவுகள்

விரைவில்...

“கூலி, விலை, லாபம்”
– கார்ல் மார்க்ஸ்

கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை
(கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)

தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

அத்தியாயம்-2
பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்

ஒட்டுமொத்தப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ள உறவு எத்தகையது?

கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாக அமையவில்லை.

கம்யூனிஸ்டுகளுக்கு ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது.

பாட்டாளி வர்க்க இயக்கத்தை வடிவமைக்கவும் வார்த்தெடுக்கவும் அவர்கள் தமது சொந்தக் குறுங்குழுவாதக் கோட்பாடுகள் எவற்றையும் வகுத்துக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்டுகளை ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை பின்வருவன மட்டும்தாம்: (1) வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் பாட்டாளிகளின் தேசியப் போராட்டங்களில், கம்யூனிஸ்டுகள் எந்தவொரு தேசிய இனத்தையும் சாராமல், பாட்டாளி வர்க்கம் முழுமைக்கும் உரிய பொதுவான நலன்களைச் சுட்டிக்காட்டி, முன்னணிக்குக் கொண்டு வருகின்றனர். (2) முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கப் போராட்டம் கடந்து செல்ல வேண்டிய பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும், எங்கும் எப்போதும் கம்யூனிஸ்டுகள் ஒட்டுமொத்த இயக்கத்தின் நலன்களையே முன்வைக்கின்றனர்.

எனவே, கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் நடைமுறை ரீதியில், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளில், மிகவும் முன்னேறிய, மிகவும் உறுதி வாய்ந்த பிரிவாக, மற்றவர்கள் அனைவரையும் முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற பிரிவாக உள்ளனர். மறுபுறம் தத்துவ ரீதியில், கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத ஓர் அனுகூலத்தை, அதாவது, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப் பெற்றுள்ளனர்.

கம்யூனிஸ்டுகளுடைய உடனடி நோக்கம், மற்றெல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் உடனடி நோக்கம் எதுவோ அதுவேதான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கட்டியமைத்தல், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் ஆகியவைதாம்.

கம்யூனிஸ்டுகளின் தத்துவ முடிவுகள், யாரோ ஒரு வருங்கால உலகளாவிய சீர்திருத்தவாதி தோற்றுவித்த அல்லது கண்டுபிடித்த கருத்துகளையோ கோட்பாடுகளையோ எந்த வகையிலும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.

நடந்துவரும் வர்க்கப் போராட்டத்திலிருந்தும், நம் கண்ணெதிரிலேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று இயக்கத்திலிருந்தும், கிளர்ந்தெழும் மெய்யான உறவுகளையே இந்தத் தத்துவ முடிவுகள் பொதுப்படையான வாசகங்களில் எடுத்துரைக்கின்றன. நிலவிவரும் சொத்துடைமை உறவுகளை ஒழிப்பதென்பது கம்யூனிசத்தின் தனித்துநிற்கும் ஒரு கூறே அல்ல.

வரலாற்று நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக, கடந்த காலத்தில் சொத்துடைமை உறவுகள் யாவும், தொடர்ந்தாற்போல் வரலாற்று ரீதியான மாற்றத்துக்கு உட்பட்டே வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஃபிரெஞ்சுப் புரட்சி நிலப்பிரபுத்துவச் சொத்துடைமையை ஒழித்துக் கட்டி, முதலாளித்துவச் சொத்துடைமைக்கு வழிவகுத்தது.

கம்யூனிசத்தின் தனித்து விளங்கும் சிறப்புக்கூறு, பொதுப்படையாகச் சொத்துடைமையை ஒழிப்பதன்று, முதலாளித்துவச் சொத்துடைமையை ஒழிப்பதே ஆகும். ஆனால், நவீன முதலாளித்துவத் தனியார் சொத்துடைமை என்பது, வர்க்கப் பகைமைகளையும், சிலர் பலரைச் சுரண்டுவதையும் அடிப்படையாகக் கொண்டு, பொருள்களை உற்பத்தி செய்து, கையகப்படுத்திக் கொள்ளும் அமைப்புமுறையின் முடிவான, மிகவும் முழுமையான வெளிப்பாடாகும்.

இந்தப் பொருளில், கம்யூனிஸ்டுகளின் கொள்கையைத் ’தனியார் சொத்துடைமை ஒழிப்பு’ என்னும் ஒரே வாக்கியத்தில் சுருக்கிக் கூறிவிடலாம்.

ஒரு மனிதன் தன் சொந்த உழைப்பின் பலனை அவனுடைய தனிப்பட்ட சொத்தாக்கிக் கொள்ளும் உரிமையைக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் ஒழிக்க விரும்புவதாகப் பழித்துரைக்கப்படுகிறோம். இந்தத் தனிப்பட்ட சொத்துதான் தனிநபர் சுதந்திரம், செயல்பாடு, தற்சார்பு ஆகியவை அனைத்துக்கும் அடிப்படை என்றும் சொல்லப்படுகிறது.

பாடுபட்டுப் பெற்ற, சுயமாகச் சேர்த்த, சுயமாகச் சம்பாதித்த சொத்து! முதலாளித்துவச் சொத்து வடிவத்துக்கு முன்பிருந்த சொத்து வடிவமான சிறு கைவினைஞர், சிறு விவசாயி ஆகியோரின் சொத்தினையா குறிப்பிடுகிறீர்கள்? அதை ஒழிக்க வேண்டிய தேவை இல்லை. தொழில்துறை வளர்ச்சியானது அதைப் பெருமளவுக்கு ஏற்கெனவே அழித்து விட்டது, இன்றுவரை நாள்தோறும் தொடர்ந்து அழித்துக் கொண்டிருக்கிறது.

அல்லது, நவீன கால முதலாளித்துவத் தனியார் சொத்தினைக் குறிப்பிடுகிறீர்களா?

ஆனால், கூலியுழைப்பு தொழிலாளிக்கு ஏதேனும் சொத்தினை உருவாக்கியுள்ளதா? துளியும் கிடையாது. கூலியுழைப்பு மூலதனத்தைப் படைக்கிறது. மூலதனம் என்பது ஒருவகையான சொத்துடைமை ஆகும். அதாவது, இந்தவகைச் சொத்துடைமை கூலியுழைப்பைச் சுரண்டுகிறது. மேலும், அதற்கு, மறுபடியும் சுரண்டப் புதிதாகக் கூலியுழைப்பு கிடைக்கின்ற நிலைமை நிலவ வேண்டும், இல்லையேல் அது தன்னைப் பெருக்கிக் கொள்ள முடியாது. சொத்துடைமை அதன் இன்றைய வடிவில், மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்கும் இடையேயான பகைமையை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தப் பகைமையின் இரண்டு பக்கங்களையும் பரிசீலிப்போம்.

முதலாளியாக இருப்பதற்கு உற்பத்தியில் தனக்கே உரிய சொந்த அந்தஸ்தை மட்டுமின்றி, ஒரு சமூக அந்தஸ்தையும் பெற்றிருக்க வேண்டும். மூலதனம் என்பது கூட்டுச் செயல்பாட்டின் விளைவுப் பொருள். சமுதாயத்தின் பல உறுப்பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே, இன்னும் சொல்லப் போனால், சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே மூலதனத்தை இயங்க வைக்க முடியும்.

ஆக, மூலதனம் என்பது ஒருவரின் தனிப்பட்ட சக்தியல்ல; அது ஒரு சமூக சக்தியாகும்.

எனவே, மூலதனம் பொதுச் சொத்தாக, சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் சொத்தாக மாற்றப்படும்போது, அதன்மூலம் தனிநபர் சொத்து சமூகச் சொத்தாக மாற்றப்படவில்லை. சொத்துடைமையின் சமூகத் தன்மை மட்டுமே மாற்றப்படுகிறது. அது தன் வர்க்கத் தன்மையை இழந்து விடுகிறது.

இனி கூலியுழைப்பை எடுத்துக் கொள்வோம்.

கூலியுழைப்பின் சராசரி விலைதான் குறைந்தபட்சக் கூலியாகும். அதாவது, தொழிலாளியைத் தொழிலாளியாகக் குறைந்தபட்ச வாழ்க்கை நிலைமையில் தொடர்ந்து வாழவைக்க அத்தியாவசியமாகத் தேவைப்படும் பிழைப்புச் சாதனங்களின் அந்த அளவே குறைந்தபட்சக் கூலியாகும். ஆக, கூலித் தொழிலாளி தன் உழைப்பின் மூலம் ஈட்டுவது, தொடர்ந்து உயிர்வாழவும், குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை மறுஉற்பத்தி செய்வதற்கும் மட்டுமே போதுமானது. இவ்வாறு உழைப்பின் உற்பத்திப் பொருள்களைத் தனிநபர் கையகப்படுத்திக் கொள்ளும் இந்த முறையானது, மனித வாழ்வின் பராமரிப்புக்காகவும் மறுஉற்பத்திக்காகவும் வேண்டியதை மட்டுமே அளிக்கிறது; உபரி எதையும் விட்டுவைப்பதில்லை; அதனால் பிறர் உழைப்பின்மீது அதிகாரம் செலுத்திட முடிகிறது. இந்தத் தனிநபர் கையகப்படுத்தல் முறையை ஒழிக்க நாங்கள் ஒருக்காலும் விரும்பவில்லை. நாங்கள் ஒழிக்க விரும்புவதெல்லாம் இந்தக் கையகப்படுத்தல் முறையிலுள்ள இழிவான தன்மையைத்தான். இந்த முறையின்கீழ், மூலதனத்தைப் பெருக்குவதற்காக மட்டுமே தொழிலாளி வாழ்கிறான். ஆளும் வர்க்கத்தின் நலனுக்குத் தேவைப்படும்வரை மட்டுமே தொழிலாளி வாழ அனுமதிக்கப்படுகிறான்.

முதலாளித்துவ சமுதாயத்தில், உயிருள்ள உழைப்பு என்பது [அதாவது வாழுகின்ற தொழிலாளி என்பவன்] திரட்டி வைக்கப்பட்டுள்ள உழைப்பைப் பெருக்குவதற்கான ஒரு சாதனம் மட்டுமே. கம்யூனிச சமுதாயத்தில், திரட்டி வைக்கப்பட்டுள்ள உழைப்பு என்பது தொழிலாளியின் வாழ்க்கையை விரிவாக்கவும், வளமாக்கவும், மேம்படுத்துவுமான ஒரு சாதனம் மட்டுமே.

ஆக, முதலாளித்துவ சமுதாயத்தில் கடந்த காலம் நிகழ்காலத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. கம்யூனிச சமுதாயத்தில் நிகழ்காலம் கடந்த காலத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும். முதலாளித்துவ சமுதாயத்தில் மூலதனம் சுயேச்சையானதாக, தனித்தன்மை கொண்டதாக விளங்குகிறது. அதே வேளையில், உயிருள்ள மனிதன் சுயேச்சையற்றவனாக, தனித்தன்மை இல்லாதவனாக இருக்கிறான். மேலும், இந்த நிலைமையை ஒழிப்பதைத்தான் தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் ஒழிப்பதாக முதலாளித்துவவாதிகள் கூறுகின்றனர்! அதுவும் சரியே. முதலாளித்துவத் தனித்தன்மையையும், முதலாளித்துவ சுயேச்சை நிலையையும், முதலாளித்துவ சுதந்திரத்தையும் ஒழிப்பதுதான் [கம்யூனிஸ்டுகளின்] குறிக்கோள் என்பதில் ஐயமில்லை.

தற்போதுள்ள முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின்கீழ், சுதந்திரம் என்பதற்கு சுதந்திரமான வணிகம், சுதந்திரமான விற்பனையும் வாங்குதலும் என்றே பொருளாகும்.

ஆனால், விற்பனையும் வாங்குதலும் மறையுமாயின் சுதந்திரமான விற்பனையும் வாங்குதலும்கூட மறைந்து போகும். சுதந்திரமான விற்பனை, வாங்குதல் பற்றிய இந்தப் பேச்சுக்கும், பொதுவாகச் சுதந்திரம் குறித்து நமது முதலாளித்துவ வர்க்கத்தினர் பேசும் ஏனைய ”சவடால் வசனங்களுக்கும்” ஏதேனும் பொருள் இருக்குமாயின், அது மத்திய காலத்துக் கட்டுப்படுத்தப்பட்ட விற்பனை, வாங்குதலுடனும், கட்டுண்ட வணிகர்களுடனும் வேறுபடுத்திப் பார்க்கும்போது மட்டும்தான். ஆனால், விற்பனையையும் வாங்குதலையும், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளையும், முதலாளித்துவ வர்க்கத்தையுமே கம்யூனிச வழியில் ஒழிப்பதற்கு எதிராக வைத்துப் பேசப்படும்போது இந்தப் பேச்சுகளுக்கு பொருளேதும் கிடையாது.

தனியார் சொத்துடைமையை ஒழித்துக்கட்டும் எங்கள் நோக்கம் கண்டு நீங்கள் திகிலடைந்துள்ளீர்கள். ஆனால், இப்போதைய உங்கள் சமுதாயத்தில், மக்கள் தொகையில் பத்தில் ஒன்பது பங்கினரின் தனிச் சொத்துடைமை ஏற்கெனவே ஒழிக்கப்பட்டு விட்டது. ஒருசிலரிடம் தனிச்சொத்து இருப்பதற்கு ஒரே காரணம் இந்தப் பத்தில் ஒன்பது பங்கினரின் கைகளில் அது இல்லாமல் ஒழிந்ததுதான். ஆக, சமுதாயத்தின் மிகப் பெரும்பான்மையினருக்கு எந்தச் சொத்தும் இல்லாத நிலையைத் தான் நிலவுதற்குரிய அவசிய நிபந்தனையாகக் கொண்ட ஒரு சொத்துடைமை வடிவத்தை ஒழிக்க எண்ணியுள்ளோம் என்று எங்களைப் பழித்துரைக்கிறீர்கள்.

சுருங்கக் கூறின், உங்களுடைய சொத்துடைமையை ஒழிக்க விரும்புகிறோம் என்று பழித்துரைக்கிறீர்கள். ஆம், அது மிகச் சரியே. உண்மையில் அதுவேதான் நாங்கள் எண்ணியுள்ளது.

உழைப்பை மூலதனம், பணம் அல்லது வாடகையாகவோ, ஏகபோகமாக்கிக் கொள்வதற்குத் தகுதியுடைய ஒரு சமூக சக்தியாகவோ இனி மாற்ற முடியாமல் போகின்ற கணம் முதற்கொண்டு, அதாவது, தனிநபரின் சொத்தினை முதலாளித்துவச் சொத்தாக, மூலதனமாக, இனி மாற்ற முடியாமல் போகின்ற கணம் முதற்கொண்டே [ஒரு தனிநபரின்] தனித்தன்மை மறைந்துவிடுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். எனவே, ”தனிநபர்” என்று நீங்கள் குறிப்பிடும்போது, முதலாளியைத் தவிர, நடுத்தர வர்க்கச் சொத்துடைமையாளரைத் தவிர, வேறெவரையும் குறிப்பிடவில்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். உண்மையில் இந்தத் தனிநபர் துடைதெறியப்படத்தான் வேண்டும்; இத்தகைய தனிநபர் உருவாக முடியாதபடி செய்யத்தான் வேண்டும்.

கம்யூனிசம் எந்த மனிதனிடமிருந்தும் சமுதாயத்தின் உற்பத்திப் பொருள்களைத் கையகப்படுத்திக் கொள்ளும் அதிகாரத்தைப் பறிக்கவில்லை. கம்யூனிசம் செய்வதெல்லாம், அந்தக் கையகப்படுத்தல் மூலமாக மற்றவரின் உழைப்பை அடிமைப்படுத்தும் அதிகாரத்தைத்தான் அவனிடமிருந்து பறிக்கிறது.

தனியார் சொத்துடைமையை ஒழித்தவுடன் அனைத்து வேலைகளும் நின்றுவிடும் என்றும், உலகளாவிய ஒரு சோம்பல்தனம் நம்மைப் பீடித்துவிடும் என்றும் ஆட்சேபணை எழுப்பப்படுகிறது. இக்கூற்று உண்மையெனில், முதலாளித்துவ சமுதாயம் நெடுநாட்களுக்கு முன்பே முழுச் சோம்பேறித்தனத்தில் மூழ்கி மடிந்திருக்க வேண்டும். ஏனெனில், முதலாளித்துவ சமுதாயத்தின் உறுப்பினர்களில், உழைப்பவர்கள் சொத்து எதுவும் சேர்ப்பதில்லை, சொத்துகளைச் சேர்ப்பவர்கள் உழைப்பதில்லை. இந்த ஆட்சேபணை முழுவதுமே, ‘எப்போது எந்த மூலதனமும் இனி இல்லை என்று ஆகிறதோ, அப்போது எந்தக் கூலியுழைப்பும் இருக்க முடியாது’ என்கிற ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு சொற்களில் கூறுவதன் இன்னொரு வடிவமே ஆகும்.

வாழ்வாதாரப் பொருள்களில் கம்யூனிச முறையிலான உற்பத்திக்கும், ஒதுக்கீட்டுக்கும் எதிராக வலியுறுத்தப்படும் அனைத்து ஆட்சேபணைகளும், அவ்வாறே, அறிவுசார் படைப்புகளில் கம்யூனிச முறையிலான உற்பத்திக்கும், ஒதுக்கீட்டுக்கும் எதிராகவும் எழுப்பப்படுகின்றன. முதலாளித்துவவாதிக்கு வர்க்கச் சொத்துடைமை மறைந்துபோவது உற்பத்தியே மறைந்துபோவதாக ஆகிறது; அதைப்போலவே வர்க்கக் கலாசாரம் மறைந்துபோவது அவருக்கு அனைத்துக் கலாசாரமும் மறைந்துபோவதற்கு ஒப்பாகின்றது.

எந்தக் கலாச்சாரத்தின் இழப்புக்காக அவர் அழுது புலம்புகிறாரோ, அந்தக் கலாசாரம், மிகப் பெரும்பான்மையினருக்கு, வெறுமனே ஓர் எந்திரம்போல் செயல்படுவதற்கான பயிற்சியாகவே இருக்கிறது. ஆனால், சுதந்திரம், கலாச்சாரம், சட்டம் போன்றவை பற்றியெல்லாம் நீங்கள் கொண்டுள்ள முதலாளித்துவக் கருதுகோள்களின் அளவீடுகளைக் கொண்டு, நாங்கள் கருதியுள்ள முதலாளித்துவச் சொத்துடைமை ஒழிப்பினை நீங்கள் மதிப்பீடு செய்யும்வரை எங்களுடன் சர்ச்சைக்கு வர வேண்டாம். உங்கள் வர்க்கத்தின் எண்ணத்தை அனைவருக்குமான சட்டமாக ஆக்கி இருப்பதே உங்களுடைய சட்டநெறியாக உள்ளது. . அந்த எண்ணத்தின் சாரமான பண்பும் திசைவழியும் உங்கள் வர்க்கம் நிலவுதற்குரிய பொருளாதார உறவுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. அதுபோன்றே, உங்களுடைய கருத்துகள் எல்லாமே உங்களுடைய முதலாளித்துவ உற்பத்தி உறவுகளிலிருந்தும், முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளிலிருந்தும் கிளைத்தெழுகின்றவைதாம்.

உங்களுடைய இன்றைய உற்பத்தி முறையிலிருந்தும், சொத்துடைமை வடிவிலிருந்தும் உதித்தெழும் சமூக அமைப்பு வடிவங்கள், உற்பத்தியின் முன்னேற்றப் பாதையில் தோன்றி மறையும் வரலாற்று ரீதியான உறவுகளாகும். இவற்றை, என்றும் நிரந்தரமான இயற்கை விதிகளாகவும் பகுத்தறிவு விதிகளாகவும் மாற்றும்படி, உங்களின் தன்னலம் சார்ந்த தவறான கருத்தோட்டம் உங்களைத் தூண்டுகிறது. உங்களுக்கு முன்பிருந்த ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் கொண்டிருந்த அதே தவறான கருத்தோட்டத்தையே நீங்களும் கொண்டுள்ளீர்கள். பண்டைக்காலச் சொத்துடைமை விஷயத்தில் நீங்கள் தெளிவாகக் காண்பதை, நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை விஷயத்தில் நீங்கள் ஒப்புக்கொள்வதை, உங்களின் சொந்த முதலாளித்துவ வடிவச் சொத்துடைமை விஷயத்தில் ஒப்புக்கொள்ள முடியாதபடி தடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பது உண்மையே.

குடும்ப ஒழிப்பு! கம்யூனிஸ்டுகளுடைய இந்த இகழ்மிக்க முன்மொழிவு குறித்து, அதிதீவிரக் கொள்கையினரும்கூடக் கொதித்தெழுகின்றனர்.

முதலாளித்துவக் குடும்பமாகிய இன்றைய குடும்பம், எந்த அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது? மூலதனத்தின் மீது, தனியார் இலாபத்தின் மீது [எழுப்பப்பட்டுள்ளது]. இந்தக் குடும்பம், முழுதும் வளர்ச்சி பெற்ற வடிவில், முதலாளித்துவ வர்க்கத்தார் இடையில் மட்டுமே நிலவுகிறது. ஆனால் இந்த நிலைமையின் நிரப்புக் கூறாக (complement) பாட்டாளிகள் இடையில் அனேகமாகக் குடும்ப அமைப்பு இல்லாதிருப்பதையும், [சமுதாயத்தில்] வெளிப்படையான விபச்சாரத்தையுமே காண முடிகிறது.

முதலாளித்துவக் குடும்பத்தின் நிரப்புக் கூறு மறையும்போது, முதலாளித்துவக் குடும்பமும் இயல்பாகவே மறைந்து போகும். மூலதனம் மறையும்போது இரண்டுமே மறைந்து போகும்.

குழந்தைகளை அவர்களின் பெற்றோர் சுரண்டுவதைத் தடுத்து நிறுத்த விரும்புகிறோம் என்றா எங்கள்மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? [அவ்வாறெனில்] இந்தக் குற்றத்தை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், நாங்கள் வீட்டுக் கல்விக்குப் பதிலாகச் சமூகக் கல்வியைப் புகுத்தும்போது, [மனித] உறவுகளிலேயே மிகவும் புனிதமானவற்றை நாங்கள் அழிப்பதாகக் கூறுவீர்கள்.

உங்களுடைய கல்வி மட்டும் என்னவாம்? அதுவும் சமூகக் கல்விதானே? எந்தச் சமூக நிலைமைகளின்கீழ் நீங்கள் கல்வி போதிக்கிறீர்களோ அந்த நிலைமைகளாலும், பள்ளிக்கூடங்கள் மற்றும் இன்னபிறவற்றின் வழியாக சமுதாயம் மேற்கொள்ளும் நேரடி அல்லது மறைமுகத் தலையீட்டாலும் அக்கல்வி தீர்மானிக்கப்பட வில்லையா? கல்வியில் சமுதாயத்தின் தலையீடு என்பதைக் கம்யூனிஸ்டுகள் புதிதாகக் கண்டுபிடித்துவிடவில்லை. அந்தத் தலையீட்டின் தன்மையை மாற்றவும், ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்து கல்வியை மீட்கவுமே கம்யூனிஸ்டுகள் முயல்கின்றனர்.

நவீனத் தொழில்துறையின் செயல்பாட்டால் பாட்டாளிகளிடையே குடும்பப் பிணைப்புகள் அனைத்தும் அறுத்தெறியப்படுகின்றன; பாட்டாளிகளின் குழந்தைகள் சாதாரண வணிகப் பொருள்களாகவும், உழைப்புக் கருவிகளாகவும் மாற்றப்படுகின்றனர். இந்தப் போக்கு எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு, குடும்பம், கல்வி பற்றியும், பெற்றோர், குழந்தை இடையிலான புனித உறவு பற்றியும் முதலாளித்துவவாதிகள் பேசும் பகட்டான பேச்சுகள் அதிகமாக அருவருப்பூட்டுகின்றன.

ஆனால், கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் பெண்களைப் பொதுவாக்கி விடுவீர்கள் என்று ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கமும் ஒரே குரலில் கூக்குரலிடுகிறது.

முதலாளித்துவவாதி தன் மனைவியை வெறும் உற்பத்திக் கருவியாகவே பார்க்கிறான். உற்பத்திக் கருவிகள் அனைவருக்கும் பொதுவாகப் பயன்படப் போகின்றன என்று கேள்விப்படுகிறான். அனைவருக்கும் பொதுவாகிப் போகும் அதே கதி, பெண்களுக்கும் நேரும் என்கிற முடிவுக்கு வருகிறான். இயல்பாகவே, இந்த முடிவைத் தவிர வேறெந்த முடிவுக்கும் அவனால் வர இயாலாது.

பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளாக இருக்கும் நிலையை ஒழித்துக் கட்டுவதுதான் உண்மையான நோக்கமாக இருக்கும் என்று ஓர் ஐயமாகக்கூட அவனுக்கு எழவில்லை.

மற்றபடி, கம்யூனிஸ்டுகள் பகிரங்கமாகவும் அதிகாரபூர்வமாகவும் பெண்களைப் பொதுவாக்கப் போகிறார்கள் எனப் பாசாங்கு செய்து, நமது முதலாளித்துவவாதிகள் தார்மீகச் சீற்றம் கொள்வதைக் காட்டிலும் நகைக்கத் தக்கது வேறொன்றும் இல்லை. கம்யூனிஸ்டுகள் பெண்களைப் பொதுவாக்கத் தேவையில்லை. அனேகமாக நீண்ட நெடுங்காலந்தொட்டே அது நிலவி வந்துள்ளது.

நமது முதலாளித்துவவாதிகள் சாதாரண விபசாரிகளிடம் போவதைச் சொல்லவே வேண்டாம். அவர்கள் தமது பிடியிலுள்ள பாட்டாளிகளின் மனைவிகள், மகள்கள் ஆகியோருடன் திருப்தி அடையாமல், தமக்குள் ஒருவர் மனைவியை ஒருவர் பெண்டாளுவதில் ஆகப்பெரும் இன்பம் காண்கிறார்கள்.

முதலாளித்துவத் திருமணம் என்பது நடைமுறையில் மனைவியரைப் பொதுவாக்கிக்கொள்ளும் ஒரு முறையே ஆகும். எனவே, மிஞ்சிப் போனால், கள்ளத்தனமாக திரைமறைவில் பெண்களைப் பொதுவாக்கும் நடைமுறைக்குப் பதிலாக, வெளிப்படையான சட்டபூர்வமான முறையை அறிமுகப்படுத்த விரும்புகிறார்கள் எனக் கம்யூனிஸ்டுகள் மீது பழிசுமத்துவது சாத்தியம். மற்றபடி, இன்றைய உற்பத்தி அமைப்புமுறை ஒழிக்கப்படும்போது, அந்த அமைப்பிலிருந்து உதித்தெழுந்த, பெண்களைப் பொதுவாக்கும் முறையும், அதாவது பொதுவான விபசாரம், தனிப்பட்ட விபசாரம் இரண்டும், கூடவே ஒழிந்தாக வேண்டும் என்பது கண்கூடு.

அடுத்தபடியாக, நாடுகளையும் தேசிய இனங்களையும் ஒழிக்க விரும்புவதாகக் கம்யூனிஸ்டுகள் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

தொழிலாளர்களுக்கு நாடு கிடையாது. அவர்கள் பெற்றிருக்காத ஒன்றை அவர்களிடமிருந்து நாங்கள் பறித்துக்கொள்ள முடியாது. பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் முன்னதாக, அரசியல் மேலாதிக்கம் பெற்றாக வேண்டும். தேசத்தின் தலைமை வர்க்கமாக உயர்ந்தாக வேண்டும், தன்னையே தேசமாக அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்கம் தேசியத் தன்மை கொண்டதாகவே இருக்கிறது, இந்தச் சொல்லுக்கான முதலாளித்துவப் பொருளில் இல்லாவிடினும்.

முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சி, வணிகச் சுதந்திரம், உலகச் சந்தை, [மற்றும்] உற்பத்தி முறையிலும் அம்முறைக்கே உரிய வாழ்க்கை நிலைமைகளிலும் ஒருசீரான தன்மை ஆகியவற்றின் காரணமாக, மக்கள் இனங்களிடையே நிலவும் தேசிய வேறுபாடுகளும் பகைமைகளும் நாள்தோறும் மேலும் மேலும் மறைந்து வருகின்றன.

பாட்டாளி வர்க்க மேலாதிக்கம் இவற்றை இன்னும் வேகமாக மறையச் செய்யும். குறைந்தபட்சம் தலைமைசான்ற நாகரிக நாடுகளின் ஒன்றுபட்ட நடவடிக்கை, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான தலையாய நிபந்தனைகளுள் ஒன்றாகும்.

ஒரு தனிநபர் இன்னொரு தனிநபரைச் சுரண்டுவதற்கு எந்த அளவுக்கு முடிவுகட்டப்படுகிறதோ, அந்த அளவுக்கு ஒரு தேசம் இன்னொரு தேசத்தைச் சுரண்டுவதற்கும் முடிவு கட்டப்படும். ஒரு தேசத்தினுள் வர்க்கங்களுக்கு இடையிலான பகைமை எந்த அளவுக்கு மறைகிறதோ, அந்த அளவுக்கு ஒரு தேசம் இன்னொரு தேசத்துடன் கொண்டுள்ள பகைமையும் முடிவுக்கு வரும்.

மத ரீதியான, தத்துவ ரீதியான, பொதுவாகச் சித்தாந்த ரீதியான நோக்குநிலையிலிருந்து, கம்யூனிசத்துக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தீவிரமாகப் பரிசீலிக்கத் தகுதியற்றவை.

மனிதனினுடைய பொருளாயத வாழ்வின் நிலைமைகளிலும், அவனுடைய சமூக உறவுகளிலும், அவனுடைய சமூக வாழ்விலும் ஒவ்வொரு மாற்றம் ஏற்படும்போதும், மனிதனுடைய எண்ணங்களும், கண்ணோட்டங்களும், கருத்துருவாக்கங்களும், சுருங்கக் கூறின், மனிதனுடைய உணர்வும் மாற்றம் அடைகிறது என்பதைப். புரிந்து கொள்ள ஆழ்ந்த ஞானம் தேவையா, என்ன?

பொருள் உற்பத்தியில் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுகிறதோ அந்த அளவுக்கு அறிவுத்துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது என்பதைத் தவிர கருத்துகளின் வரலாறு வேறு எதை நிரூபிக்கிறது? ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்திய கருத்துகள், அந்தந்தச் சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்துரிய கருத்துக்களாகவே எப்போதும் இருந்துள்ளன.

சமுதாயத்தைப் புரட்சிகரமாக்கும் கருத்துகள் பற்றி மனிதர்கள் பேசும்போது, பழைய சமுதாயத்துக்குள்ளேயே புதியதொரு சமுதாயத்தின் கூறுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்கிற உண்மையையும், பழைய வாழ்க்கை நிலைமைகள் கரைந்தழியும் அதே வேகத்தில் பழைய கருத்துகளும் கூடவே கரைந்தழிகின்றன என்கிற உண்மையையுந்தான் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

பண்டைய உலகம் அதன் மரணகால வேதனையில் உழன்றபோது, பண்டைய மதங்களைக் கிறித்துவ மதம் வெற்றிகொண்டது. 18-ஆம் நூற்றாண்டில் கிறித்துவமதக் கருத்துகள் பகுத்தறிவுவாதக் கருத்துகளுக்கு அடிபணிந்து அடங்கியபோது, நிலப்பிரபுத்துவ சமுதாயம் அப்போதைய புரட்சிகர முதலாளித்துவ வர்க்கத்துடன் தன் மரணப் போராட்டத்தை நடத்தியது. மத விடுதலை, மனசாட்சி சுதந்திரம் பற்றிய கருத்துகள் யாவும் வெறுமனே, அறிவுக் களத்தினுள்ளே கட்டற்ற போட்டியினுடைய ஆதிக்கத்தின் வெளிப்பாடாகவே அமைந்தன.

”வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில், மதம், ஒழுக்கநெறி, தத்துவம், சட்டநெறி சார்பான கருத்துகள் ஐயத்துக்கு இடமின்றி மாற்றம் அடைந்துள்ளன. ஆனால் மதம், ஒழுக்கநெறி, தத்துவம், அரசியில் விஞ்ஞானம், சட்டம் ஆகியவை இந்த மாற்றத்தினால் பாதிக்கப்படாமல் தொடர்ந்து நிலைபெற்றுள்ளன” என்று கூறப்படுவதுண்டு.

”இவைதவிர, சுதந்திரம், நீதி என்பன போன்ற நிரந்தர உண்மைகள் இருக்கின்றன. அவை சமுதாயத்தின் அனைத்துக் கட்டங்களுக்கும் பொதுவானவை. ஆனால் கம்யூனிசம் நிரந்தர உண்மைகளை ஒழித்துவிடுகிறது. மதம் அனைத்தையும், ஒழுக்கநெறி அனைத்தையும் புதிய அடிப்படையில் கட்டமைப்பதற்குப் பதிலாக அவற்றை ஒழித்துக்கட்டுகிறது. ஆக, கம்யூனிசம், கடந்த காலத்தின் வரலாற்று ரீதியான அனுபவம் அனைத்துக்கும் முரணாகச் செயல்படுகிறது.”

இந்தக் குற்றச்சாட்டின் சாரமாக மிஞ்சுவது என்ன? வெவ்வேறு சகாப்தங்களில் வெவ்வேறு வடிவங்களை மேற்கொண்ட வர்க்கப் பகைமைகளின் வளர்ச்சியில்தான் கடந்தகால சமுதாயம் அனைத்தின் வரலாறும் அடங்கியுள்ளது என்பதே.

ஆனால், இந்த வர்க்கப் பகைமைகள் எந்த வடிவத்தை ஏற்றிருந்தாலும், சமுதாயத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சுரண்டியது என்பது, கடந்தகாலச் சகாப்தங்கள் அனைத்துக்கும் பொதுவான உண்மையாகும். எனவே கடந்தகாலச் சகாப்தங்களின் சமூக உணர்வு பல்வேறுபட்டதாகவும், பல்வகைப்பட்டதாகவும் காட்சியளித்த போதிலும், குறிப்பிட்ட சில பொது வடிவங்கள் அல்லது பொதுவான கருத்துகளுக்கு உள்ளேதான் இயங்கி வந்துள்ளது என்பதில் வியப்பேதும் இல்லை. வர்க்கப் பகைமைகள் முழுமையாக மறைந்தாலொழிய அவ்வடிவங்களும் கருத்துகளும் முற்றிலுமாக மறைந்துபோக முடியாது.

பாரம்பரியச் சொத்துடைமை உறவுகளிலிருந்து மிகவும் தீவிரமாக முறித்துக் கொள்வதே கம்யூனிசப் புரட்சியாகும். எனவே, அதன் வளர்ச்சியின்போது பாரம்பரியக் கருத்துக்களிலிருந்து மிகவும் தீவிரமாக முறித்துக் கொள்ள நேர்வதில் வியப்பேதும் இல்லை.

போதும், கம்யூனிசத்துக்கு எதிரான முதலாளித்துவ ஆட்சேபணைகளை இத்துடன் முடித்துக் கொள்வோம்.

பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்க நிலைக்கு உயர்த்துவதும், ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி ஈட்டுவதும், தொழிலாளி வர்க்கம் நடத்தும் புரட்சியில் முதல் படியாகும் என்பதை மேலே கண்டோம்.

முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து படிப்படியாக மூலதனம் முழுவதையும் கைப்பற்றவும், உற்பத்திக் கருவிகள் அனைத்தையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்க்கமாக ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தவும், உற்பத்தி சக்திகளின் மொத்த அளவை முடிந்தவரை அதிவேகத்தில் பெருக்கவும், பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாதிக்கத்தைப் பயன்படுத்தும்.

தொடக்கத்தில் இந்தப் பணியை, சொத்துடைமை உரிமைகளிலும், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளிலும் சர்வாதிகார முறையில் தலையிடுவது தவிர வேறுவிதமாக நிறைவேற்ற இயலாது என்பது உண்மையே. இதற்கான நடவடிக்கைகள் பொருளாதார ரீதியாகப் போதாதவையாகவும், ஏற்றுக் கொள்ளத் தகாதவையாகவும் தோன்றும். ஆனால், அவை இயக்கத்தின் போக்கில் தம்மைத் தாமே மிஞ்சக் கூடியவையாக இருக்கும். பழைய சமூக அமைப்பின்மீது மேலும் தலையிடுவதை அவசியமாக்கும். உற்பத்தி முறையை முற்றிலும் புரட்சிகரமாக்கும் வழிமுறைகள் என்ற வகையில் இந்த நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை.

இந்த நடவடிக்கைகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறாக இருக்கும் என்பது உண்மையே.

என்ற போதிலும், மிகவும் முன்னேறிய நாடுகளில் பொதுவாகப் பெருமளவு நடைமுறைப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் பின்வருமாறு:

1. நிலத்தில் சொத்துடைமையை ஒழித்தல். நிலவாடகைகள் அனைத்தையும் பொது நோக்கங்களுக்குப் பயன்படுத்தல்.

2. [அதிக வருமானத்துக்கு அதிக வரிவிகிதம் என்ற வகையில்] கடுமையான வளர்வீத அல்லது படிநிலையான வருமான வரிவிதிப்பு.

3. பரம்பரை வாரிசு வழியான உரிமை அனைத்தையும் ஒழித்தல்.

4. [நாட்டைவிட்டுக்] குடிபெயர்ந்தவர்கள், [நாட்டுக்கு எதிரான] கலகக்காரர்கள் ஆகியோர் அனைவரின் சொத்துகளையும் பறிமுதல் செய்தல்.

5. அரசு மூலதனத்துடன் கூடிய, தனியுரிமை ஏகபோகம் கொண்ட தேசிய வங்கியின் மூலம், கடன் செலாவணியை அரசின் கைகளில் ஒருசேர மையப்படுத்தல்.

6. தகவல் தொடர்பு, போக்குவரத்துச் சாதனங்களை அரசின் கைகளில் ஒருசேர மையப்படுத்தல்.

7. அரசுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளையும், உற்பத்திக் கருவிகளையும் விரிவுபடுத்தல்; ஒரு பொதுவான திட்டத்தின்படித் தரிசு நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டுவருதல், பொதுவாக மண்வளத்தை மேம்படுத்தல்.

8. உழைப்பை அனைவருக்கும் உரிய சமமான கடமையாக்குதல். தொழிலகப் பாதுகாப்புப் படைகளைக் குறிப்பாக விவசாயத்துக்கென நிறுவுதல்.

9. விவசாயத்தைத் தொழில்துறையுடன் இணைத்தல்; மக்கள் தொகையை மேலும் சீரான முறையில் நாடெங்கும் பரவலாகக் குடியமர்த்துவதன் மூலம், நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான பாகுபாட்டைப் படிப்படியாக அகற்றுதல்.

10. அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுப் பள்ளிக்கூடங்களில் இலவசக் கல்வி அளித்தல். ஆலைகளில் குழந்தைகள் உழைப்பின் இன்றைய முறையை ஒழித்தல். கல்வியைத் தொழில்துறை உற்பத்தியுடன் இணைத்தல். இன்ன பிற, இன்னபிற.

வளர்ச்சியின் போக்கில், வர்க்க வேறுபாடுகள் மறைந்தவுடன், ஒட்டுமொத்தத் தேசத்தின் ஒரு பரந்த கூட்டமைப்பின் கைகளில் உற்பத்தி அனைத்தும் ஒருசேர மையப்படுத்தப்பட்டவுடன், பொது ஆட்சியதிகாரம் அதன் அரசியல் தன்மையை இழந்துவிடும். அரசியல் ஆட்சியதிகாரம் என்பது அதன் சரியான பொருளில், ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான ஒழுங்கமைந்த அதிகாரத்தையே குறிக்கிறது. முதலாளித்துவ வர்க்கத்துடனான அதன் போராட்டத்தின்போது, பாட்டாளி வர்க்கம் சூழ்நிலைமைகளின் சக்தியால், தன்னைத்தானே ஒரு வர்க்கமாக ஒழுங்கமைத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுமாயின், ஒரு புரட்சியின்மூலம் தன்னைத்தானே ஆளும் வர்க்கமாக ஆக்கிக்கொண்டு, அந்தத் தகுதியில், பழைய உற்பத்தி உறவுகளைப் பலவந்தமாகத் துடைத்தெறியுமாயின், அந்த உற்பத்தி உறவுகளுடன்கூடவே, வர்க்கப் பகைமைகள் நிலவுதற்குரிய, பொதுவில் வர்க்கங்கள் நிலவுதற்குரிய நிலைமைகளையும் துடைத்தெறிந்ததாகிறது. அதன்மூலம் ஒரு வர்க்கம் என்ற முறையில் தன் சொந்த மேலாதிக்கத்தையும் ஒழித்திடுவதாகிறது.

வர்க்கங்களையும் வர்க்கப் பகைமைகளையும் கொண்ட பழைய முதலாளித்துவ சமுதாயத்துக்குப் பதிலாக, ஒவ்வொருவரின் சுதந்திரமான வளர்ச்சியையே அனைவரின் சுதந்திரமான வளர்ச்சிக்கு நிபந்தனையாகக் கொண்ட ஒரு கூட்டமைப்பை நாம் நிச்சயம் பெறுவோம்.

(அத்தியாயம்-2 முற்றும்)


இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
பதிப்புரிமை © 2009 மார்க்ஸியச் சிந்தனை மையம்