மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்
மார்க்ஸியச் சிந்தனை மையம்

அண்மைய பதிவுகள்

விரைவில்...

“கூலி, விலை, லாபம்”
– கார்ல் மார்க்ஸ்

கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்
(ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)

தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

அத்தியாயம்-3
[விஞ்ஞான சோஷலிசம்]

மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின் உற்பத்தியும், உற்பத்திக்கு அடுத்தபடியாக, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் பரிவர்த்தனையுமே சமூகக் கட்டமைப்பு முழுமைக்குமான அடித்தளம் ஆகும்; வரலாற்றில் உருவாகி வந்த ஒவ்வொரு சமுதாயத்திலும், செல்வம் வினியோகிக்கப்படும் முறையும், சமுதாயம் வர்க்கங்கள் அல்லது படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் முறையும், [அந்தச் சமுதாயத்தில்] என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் எவ்வாறு பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பதைச் சார்ந்தே உள்ளது. வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்துரு, இந்த வரையறுப்பிலிருந்தே தொடங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தின்படி, அனைத்து சமூக மாற்றங்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான முடிவான காரணங்களை, உற்பத்தி, வினியோக முறைகளில் ஏற்படும் மாற்றங்களில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது, மனிதர்களின் சிந்தனைகளிலோ, நித்தியமான உண்மை, நித்தியமான நீதி குறித்த மனிதனுடைய முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வுகளிலோ அல்ல. அத்தகைய காரணங்களை அந்தந்தக் குறிப்பிட்ட சகாப்தத்தின் பொருளாதார அமைப்புமுறையில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது, தத்துவத்தில் அல்ல. தற்போது நிலவும் சமூக நிறுவனங்கள் நியாயமற்றவையாகவும், நேர்மையற்றவையாகவும் இருக்கின்றன, நியாயம் அநியாயமாகவும், தர்மம் அதர்மமாகவும் மாறி விட்டன [கதேயின் ஃபாஸ்ட் நாடகத்தில் மெபிஸ்டபிலிஸ் கூறுவது] என்கிற மன உணர்வு [நாளுக்குநாள்] வளர்ந்து வருவதானது, உற்பத்தி, வினியோக முறைகளில் ஓசைப்படாமல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, எனவே, முந்தைய பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்ட சமூக அமைப்புமுறை, இனிமேலும் தொடர்ந்து அவ்வாறு நிலவ முடியாது என்பதற்கான நிரூபணம் ஆகும். [அனைவரும் அறிய] வெளிக்கொணரப்பட்டுள்ள இந்தப் பொருத்தமின்மைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளும், மாறிவிட்ட இந்த உற்பத்தி முறைகளுக்குள்ளேதான், ஏறத்தாழ வளர்ச்சிபெற்ற நிலையில் இருந்தாக வேண்டும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது. இந்த வழிமுறைகள், அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து தருவிப்பதன் மூலம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டியவை அல்ல. தற்போது நிலவும் உற்பத்தி அமைப்புமுறையின் மறுக்க முடியாத உண்மைகளிலிருந்தே கண்டறியப்பட வேண்டியவை.

அப்படியெனில், இது தொடர்பாக நவீன சோஷலிசத்தின் நிலைபாடு என்ன?

தற்போதைய சமுதாய நிலைமை, இன்றைய ஆளும் வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கம் தோற்றுவித்ததாகும். தற்போது இது ஏறத்தாழப் பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. முதலாளித்துவ வர்க்கத்துக்கே உரிய தனிவகைப்பட்ட உற்பத்தி முறை, மார்க்ஸ் குறிப்பிட்டதைத் தொடர்ந்து முதலாளித்துவ உற்பத்தி முறை என்று அறியப்படுகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறை, நிலப்பிரபுத்துவ அமைப்புமுறைக்கும், தனிநபர்கள், அனைத்து சமூக மக்கள் குழுக்கள், வட்டார நகராண்மைக் கழகங்கள் ஆகியோர்க்கு, நிலப்பிரபுத்துவ அமைப்பு வழங்கியிருந்த சலுகைகளுக்கும், அதன் சமூக ஒழுங்கமைப்பின் கட்டுக்கோப்பை உருவமைக்கிற பரம்பரைப் பிணைப்புகளுக்கும் முரணானதாக இருந்தது. முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தகர்த்தெறிந்து, அதன் இடிபாடுகள் மீது முதலாளித்துவச் சமுதாய அமைப்பை நிறுவியது. கட்டற்ற [வணிகப்] போட்டி, தனிமனித சுதந்திரம், பண்ட உடைமையாளர்கள் அனைவருக்கும் சட்டத்தின் முன் சமத்துவம், ஏனைய மீதமுள்ள அனைத்து முதலாளித்துவ கொடுப்பினைகள் ஆகியவற்றுக்கான அதிகார ஆட்சியாக அது விளங்கியது. அதனைத் தொடர்ந்து, முதலாளித்துவ முறையிலான உற்பத்தி [தங்கு தடையின்றி] சுதந்திரமாக வளர முடிந்தது. நீராவியும், எந்திர சாதனங்களும், எந்திரங்களைக் கொண்டே எந்திரங்களைத் தயாரித்தலும், பழைமையான பட்டறைத் தொழிலை நவீனத் தொழில்துறையாக மாற்றியமைத்தன. அதன்பிறகு, முதலாளித்துவ வர்க்கத்தின் வழிகாட்டுதலில் பரிணமித்த உற்பத்தி சக்திகள், இதற்குமுன் கண்டு கேட்டிராத வேகத்திலும், அளவிலும் வளர்ச்சி பெற்றன. ஆனால், பழைமையான பட்டறைத் தொழிலும், அதன் செல்வாக்கின்கீழ் மிகுந்த வளர்ச்சி பெற்றுவந்த கைவினைத் தொழிலும், எவ்வாறு அவற்றின் காலத்தில் கைவினைக் குழுமங்களின் நிலப்பிரபுத்துவத் தடைமதில்கள் மீது முட்டி மோதினவோ, அதேபோல, இப்போது நவீனத் தொழில்துறையானது, அதன் முழுமையான வளர்ச்சி நிலையில், முதலாளித்துவ உற்பத்திமுறை தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் வரம்புகள் மீது முட்டி மோதுகிறது. புதிய உற்பத்தி சக்திகளோ அவற்றைப் பயன்படுத்திவரும் முதலாளித்துவ முறையை விஞ்சி ஏற்கெனவே வளர்ந்துவிட்டன. உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி முறைக்கும் இடையேயான இந்த மோதல், ஆதிப் பாவத்துக்கும் தெய்வ நீதிக்கும் இடையேயான மோதலைப் போன்று, மனிதனின் சிந்தனையில் உதித்தெழுந்தது அன்று. உண்மையில் இம்மோதல், நமக்குப் புறத்தே, இம்மோதலை உருவாக்கிய மனிதர்களின் எண்ணத்தையும் செயல்களையும்கூடச் சாராமல் தன்னியல்பாக நிலவுகிறது. நவீன சோஷலிசம் என்பது, எதார்த்தத்தில் நிலவும் இந்த மோதலினால் சிந்தனையில் ஏற்படும் எதிர்வினையே அன்றி வேறல்ல. முதற்கண், இந்த மோதலால் நேரடியாகப் பாதிக்கப்படும் வர்க்கமாகிய தொழிலாளி வர்க்கத்தின் மனங்களில் ஏற்படும் இயல்பான பிரதிபலிப்பே அன்றி வேறல்ல.

சரி, இந்த மோதல் எதில் அடங்கியிருக்கிறது?

முதலாளித்துவ உற்பத்திக்கு முன்பாக, அதாவது மத்திய காலத்தில், சிறுதொழில் அமைப்புமுறையே பொதுவாக நிலவி வந்தது. உழைப்பாளர்களின் உற்பத்திச் சாதனங்கள் அவர்களுடைய தனிப்பட்ட சொத்துடைமையாக இருந்தன. அதன் அடிப்படையிலேயே அவர்களின் உற்பத்தி முறை அமைந்திருந்தது. நாட்டுப் புறங்களில் சிறு விவசாயிகள், சுதந்திரக் குடியானவர்கள் அல்லது பண்ணையடிமைகளின் விவசாயம் [நடைபெற்று வந்தது]. நகரங்களில் கைவினைக் குழுமங்களாக ஒழுங்கமைந்திருந்த கைவினைத் தொழில்கள் [நடைபெற்று வந்தன]. நிலம், விவசாயக் கருவிகள், பட்டறை, அதற்கான வேலைக் கருவிகள் ஆகிய உழைப்புச் சாதனங்கள், ஒற்றைத் தனிநபரின் உழைப்புச் சாதனங்களாக இருந்தன. அவை ஒரு தொழிலாளியின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அமைந்திருந்தன. எனவே, தவிர்க்க முடியாதவாறு அவை சிறியனவாக, குறைந்த திறத்தனவாக, வரம்புக்குட்பட்ட பயன்பாடு கொண்டவையாக இருந்தன. இந்தவொரு காரணத்தாலேயே அவை பெரும்பாலும் உற்பத்தியாளருக்கே சொந்தமாக இருந்தன. சிதறிக் கிடந்த, குறைவான இந்த உற்பத்திச் சாதனங்களை ஒருசேரத் திரட்டுவது, அவற்றை விரிவுபடுத்துவது, இன்றைய காலகட்டத்தின் உற்பத்திக்கான சக்திமிக்க உந்துகோல்களாக அவற்றை மாற்றுவது – துல்லியமாக இதுதான், முதலாளித்துவ உற்பத்திக்கும், அதனைத் தூக்கிப் பிடிக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் உரிய வரலாற்றுப் பணியாக இருந்தது. 15-ஆம் நூற்றாண்டு முதலாக எவ்வாறு இப்பணி எளிய ஒத்துழைப்பு, பட்டறைத் தொழில், நவீனத் தொழில்துறை ஆகிய மூன்று கட்டங்களின் வழியாக, வரலாற்று ரீதியாக செய்து முடிக்கப்பட்டுள்ளது என்பதை மூலதனம் நூலின் நான்காம் பிரிவில் மார்க்ஸ் விவரமாக விளக்கியுள்ளார். ஆனால், நூலின் அதே பிரிவில் காட்டப்பட்டிருப்பது போல, முதலாளித்துவ வர்க்கம் இந்தத் திறன்குறைந்த உற்பத்திச் சாதனங்களை ஆற்றல்மிக்க உற்பத்திச் சக்திகளாக மாற்றியமைக்கும் அதேவேளையில், தனிநபரின் உற்பத்திச் சாதனங்களாக இருந்த அவற்றை, மனிதர்களுடைய ஒரு குழுவால் மட்டுமே பயன்படுத்த முடிகின்ற சமூக உற்பத்திச் சாதனங்களாக மாற்றியமைக்காமல், அப்பணியை நிறைவேற்ற இயலவில்லை. கைராட்டை, கைத்தறி, கொல்லரின் சம்மட்டி ஆகியவை [முறையே] நூற்பு-எந்திரம், விசைத்தறி, நீராவிச்-சம்மட்டி ஆகியவற்றால் மாற்றப்பட்டன. தனிநபரின் பட்டறை, ஆலையாக மாற்றப்பட்டது. அது, [உற்பத்தியில்] நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் ஒத்துழைப்புக்கு வழிவகுத்தது. அதே முறையில், உற்பத்தியேகூடத் தனிநபர்களுடைய செயல்பாடுகளின் தொடர்வரிசையிலிருந்து சமூகச் செயல்பாடுகளின் தொடர்வரிசையாக மாறியது. [உற்பத்திப் பொருள்களைப் பொறுத்தவரை] தனிநபர் உற்பத்திப் பொருள்களிருந்து சமூக உற்பத்திப் பொருள்களாக மாற்றம் பெற்றன. இப்போது ஆலையிலிருந்து வெளிவந்த நூல், துணி, உலோகப் பொருள்கள் ஆகியவை, பல தொழிலாளர்களின் கூட்டுத் தயாரிப்பாக இருந்தன. அப்பொருள்கள் தயாரித்து முடிக்கப்படும் முன்பு, அத்தனை தொழிலாளர்களின் கைகளையும் அடுத்தடுத்து வரிசையாகக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. எந்தவொரு தனிநபரும், “இது நான் செய்தது; இது என்னுடைய தயாரிப்பு” என்று அப்பொருள்கள் குறித்துச் சொல்ல முடியாது.

ஆனால், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில், முன்கூட்டி வகுக்கப்பட்ட திட்டப்படி அன்றிப் படிப்படியாகப் பற்றிப் படரும் அந்தத் தன்னியல்பான உழைப்புப் பிரிவினை, உற்பத்தியின் அடிப்படை வடிவமாக எங்கே இருக்கிறதோ, அங்கே உற்பத்திப் பொருள்கள் பண்டங்களின் (commodities) வடிவத்தைப் பெறுகின்றன. இப்பண்டங்களின் பரஸ்பரப் பரிவர்த்தனை, வாங்கல், விற்றல் ஆகியவையே தனிமனித உற்பத்தியாளர்கள் தங்களின் பன்முகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழிவகுக்கின்றன. மத்திய காலத்தில் இவ்வாறுதான் நிகழ்ந்தது. எடுத்துக்காட்டாக, விவசாயி, விவசாய விளைபொருள்களைக் கைவினைஞரிடம் விற்று, அவரிடமிருந்து கைவினைப் பொருள்களை வாங்கிக் கொண்டார். தனிமனித உற்பத்தியாளர்களின், பண்ட உற்பத்தியாளர்களின் இந்தச் சமுதாயத்தினுள், புதிய உற்பத்தி முறை தன்னைப் புகுத்திக் கொண்டது. வரையறுத்த திட்டம் எதுவுமின்றித் தன்னியல்பாக வளர்ந்து, ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் ஆளுகை புரிந்த பழைய உழைப்புப் பிரிவினையின் ஊடாக, ஆலையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது போன்ற, ஒரு வரையறுத்த திட்டத்தின்படி அமைந்த உழைப்புப் பிரிவினை இப்போது உதித்தெழுந்தது. தனிநபர் உற்பத்தியின் பக்கம் பக்கமாகவே சமூக உற்பத்தியும் தோன்றியது. இருவகை உற்பத்திப் பொருள்களும் ஒரே சந்தையில் விற்கப்பட்டன. எனவே, குறைந்தபட்சம் ஏறத்தாழ சமமான விலைகளில் அவை விற்கப்பட்டன. ஆனால், ஒரு வரையறுத்த திட்டத்தின்படி அமைந்த [உழைப்புப் பிரிவினையின்] ஒழுங்கமைப்பு, தன்னியல்பான உழைப்புப் பிரிவினையைவிட வலிமை வாய்ந்ததாக இருந்தது. தனிநபர்களின் குழுவாக அமைந்த, ஒன்றுபட்ட சமூக சக்திகளைக் கொண்டு செயல்படும் ஆலைகள், தனிப்பட்ட சிறு உற்பத்தியாளர்களைக் காட்டிலும் மிகமிக மலிவாக அவற்றின் பண்டங்களை உற்பத்தி செய்தன. தனிநபர் உற்பத்தி, அடுத்தடுத்து ஒவ்வொரு துறையிலும் [சமூக உற்பத்திக்கு] பலியானது. சமூகமயமான உற்பத்தி, பழைய உற்பத்தி முறைகள் அனைத்தையும் புரட்சிகரமாக்கியது. ஆனால், அதேவேளையில் அதன் புரட்சிகரத் தன்மை [அப்போது] உணரப்படவில்லை. அதற்கு மாறாக, பண்டங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாகவே அது புகுத்தப்பட்டது. சமூகமயமான உற்பத்தி முறை உதித்தெழுந்தபோது, உற்பத்திக்கும் பண்டங்களின் பரிவர்த்தனைக்கும் தேவைப்படும் குறிப்பிட்ட சில துணைக்கருவிகளான, வணிகர்களுடைய மூலதனம், கைவினைத் தொழில், கூலியுழைப்பு ஆகியவை தயார் நிலையில் இருக்கக் கண்டது. அவற்றை அது தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டது. சமூகமயமான உற்பத்தி முறை இவ்வாறு பண்டங்களின் உற்பத்திக்கான ஒரு புதிய வடிவமாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அதன்கீழ், இயல்பாகவே, கையகப்படுத்தலின் பழைய வடிவங்கள் அப்படியே மாற்றமின்றி முழு வீச்சுடன் செயல்பட்டு வந்தன. அதோடு அதன் உற்பத்திப் பொருள்களுக்கும் அவை பயன்படுத்தப்பட்டன.

பண்டங்கள் உற்பத்தியின் பரிணாம வளர்ச்சிப் போக்கில், மத்திய காலப் பகுதியில், உழைப்பின் உற்பத்திப் பொருளுடைய உடைமையாளர் பற்றிய பிரச்சினை எழுவதற்கு வாய்ப்பில்லை. தனிமனித உற்பத்தியாளர் பெரும்பாலும், தனக்கே சொந்தமான, பொதுவாகத் தானே தயாரித்த மூலப் பொருளைக் கொண்டு, தன் சொந்தக் கருவிகளைப் பயன்படுத்தி, தன் சொந்தக் கைகளின் உழைப்பாலோ, தன் குடும்பத்தாரின் உழைப்பாலோ அதை உற்பத்தி செய்தார். புதிய உற்பத்திப் பொருளை தனதாக்கிக் கொள்ள வேண்டிய தேவை அவருக்கில்லை. இயல்பாகவே அப்பொருள் முற்றிலும் அவருக்கே உரித்தாகிவிட்டது. எனவே, அந்தப் பொருளில் அவருக்கிருந்த உடைமை, அவருடைய சொந்த உழைப்பின் அடிப்படையில் அமைந்தது. வெளியார் உதவி பயன்பட்டிருந்த உற்பத்தியிலுங்கூட, பெரும்பாலும் அதற்கு அதிக முக்கியத்துவம் இல்லை. கூலி அல்லாத பிறவற்றால் அவ்வுதவி ஈடுகட்டப்படுவது மிகப் பொதுவான வழக்கமாக இருந்தது. கைவினைக் குழுமங்களில் பணிப் பயிற்சியாளரும் (apprentices), பணித் துணையாளரும், (journeymen) மிகுதியும் [பிற்காலத்தில்] தாங்களும் தலைமைக் கைவினைஞர் ஆகலாம் என்ற நோக்கில், வேலையைக் கற்றுக் கொள்வதற்காக வேலை செய்தனர். உணவுக்காகவும், கூலிக்காகவும் வேலை செய்தது குறைவு.

பிறகு, பெரிய தொழில்கூடங்களிலும் பட்டறைகளிலும், உற்பத்திச் சாதனங்களின் ஒன்றுகுவிப்பும், உற்பத்தியாளர்களின் ஒன்றுகுவிப்பும், அவை உண்மையான சமூகமயமான உற்பத்திச் சாதனங்களாகவும், சமூகமயமான உற்பத்தியாளர்களாகவும் ஆகிப்போன தன்மை மாற்றமும் நிகழ்ந்தன. ஆனால், சமூகமயமான இந்த உற்பத்தியாளர்களும், உற்பத்திச் சாதனங்களும், அவற்றின் உற்பத்திப் பொருள்களும் இந்த மாற்றத்துக்குப் பின்பும், அவை முன்பு பாவிக்கப்பட்டது போன்றே, அதாவது, தனிநபர்களுக்குச் சொந்தமான உற்பத்திச் சாதனங்களாகவும் உற்பத்திப் பொருள்களாகவுமே பாவிக்கப்பட்டன. இதுநாள்வரை, உழைப்புக் கருவிகளின் உடைமையாளர், உற்பத்திப் பொருள்களையும் தாமே கையகப்படுத்திக் கொண்டார். ஏனெனில், வழக்கப்படி, அது அவருக்கே சொந்தமான பொருளாக இருந்தது. பிறரின் பணியுதவி விதிவிலக்காகவே இருந்தது. இன்றைய நிலையில், உற்பத்திப் பொருளானது இனிமேலும் உழைப்புக் கருவி உடைமையாளரின் பொருளாக இல்லை. முற்றிலும் மற்றவர்களுடைய உழைப்பின் உற்பத்திப் பொருளாகவே இருக்கிறது. இருந்த போதிலும், உழைப்புக் கருவிகளின் உடைமையாளர் எப்போதுமே அப்பொருளை தனக்கே உரித்தாக்கிக் கொள்கிறார். இவ்வாறு, சமூக முறையில் இப்போது உற்பத்தி செய்யப்படும் பொருள்கள், உற்பத்திச் சாதனங்களை உண்மையாகவே இயக்கி, பண்டங்களை உண்மையாகவே உற்பத்தி செய்தவர்களால் அல்லாமல் முதலாளிகளால் கையகப்படுத்தப்பட்டன. உற்பத்திச் சாதனங்களும், மேலும், உற்பத்தியேகூட சாராம்சத்தில் சமூகமயம் ஆகிவிட்டன. ஆனால், தனிநபர்கள் தனிப்பட்ட முறையில் உற்பத்தி செய்து, எனவே அதன்படி ஒவ்வொருவரும் தன் சொந்தப் பொருளைத் தானே சொந்தமாக்கிக் கொண்டு, அப்பொருளைச் சந்தைக்குக் கொண்டு செல்லும் ஓர் அமைப்புமுறைக்குப் பொருந்துகின்ற, கையகப்படுத்தலின் ஒரு வடிவத்துக்கு, சமூகமயம் ஆகிவிட்ட உற்பத்திச் சாதனங்களும் உற்பத்தியும் உட்படுத்தப்பட்டன. [இன்றைய] உற்பத்தி முறை, கையகப்படுத்தலின் இந்த வடிவத்துக்கு ஆதாரமாக அமைந்த நிபந்தனைகளை ஒழித்துவிட்ட போதிலும், அந்த வடிவத்துக்கு இந்த உற்பத்தி முறை உட்படுத்தப்படுகிறது[42].

புதிய உற்பத்தி முறைக்கு அதன் முதலாளித்துவத் தன்மையை அளித்திடும் இந்த முரண்பாடு, இன்றைய சமூகப் பகைமைகள் அனைத்தின் கருவைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. புதிய உற்பத்தி முறையானது, அனைத்து முக்கிய உற்பத்தித் துறைகளிலும், அனைத்துத் தொழில் உற்பத்தி நாடுகளிலும், எவ்வளவு பெரிய அளவில் ஆதிக்கம் பெற்றதோ, அந்த அளவுக்குத் தனிநபர் உற்பத்தியை சுருங்கச் செய்து, அற்ப சொற்பமாய் ஆக்கியது. அந்த அளவுக்குத் தெளிவாக, சமூகமயமாகிவிட்ட உற்பத்திக்கும் முதலாளித்துவக் கையகப்படுத்தலுக்குமான ஒத்திசைவின்மையைப் புலப்படுத்திக் காட்டியது.

நாம் ஏற்கெனவே கூறியதுபோல, தொடக்ககால முதலாளிகள், சந்தையில் பிற உழைப்பு வடிவங்களுக்குப் பக்கத்திலேயே, கூலியுழைப்பும் அவர்களுக்காகத் தயார்நிலையில் இருக்கக் கண்டனர். ஆனால் அது [முதன்மையானதாக இல்லாமல்], விதிவிலக்காகவும், நிரப்புக் கூறாகவும், துணைக் கூறாகவும், நிலையற்றதாகவும் விளங்கிய கூலியுழைப்பாகவே இருந்தது. விவசாயத் தொழிலாளி சில வேளைகளில், நாள்கூலி வேலைக்கு வந்த போதிலும், அவர் சில ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்திருந்தார். அதை வைத்துக் கொண்டு அவர் எப்பாடு பட்டாவது மூச்சைப் பிடித்து வாழ முடிந்தது. இன்றுவரை பணித் துணையாளாய் இருப்பவர், நாளை தேர்ந்த கைவினைஞராய் ஆகுமளவுக்குக் கைவினைக் குழுமங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. ஆனால், உற்பத்திச் சாதனங்கள் சமூகமயமாகி, முதலாளிகளின் கைகளில் ஒன்றுகுவிக்கப்பட்டதுமே இவை அனைத்தும் மாறிவிட்டன. தனிநபரான உற்பத்தியாளரின் உற்பத்திச் சாதனங்களும், உற்பத்திப் பொருளும் மென்மேலும் மதிப்பிழந்து போயின. அந்த உற்பத்தியாளர், முதலாளியின் கீழ் [ஒரு] கூலித் தொழிலாளியாக மாறுவதைத் தவிர அவருக்கு வேறுவழி எதுவுமில்லை. முன்னாளில் விதிவிலக்காகவும், துணைக்கூறாகவும் இருந்த கூலியுழைப்பு, இந்நாளில் உற்பத்தி அனைத்தின் விதியாகவும் அடிப்படையாகவும் ஆகியது; முன்னாளில் நிரப்புக் கூறாக இருந்த கூலியுழைப்பு, இந்நாளில் தொழிலாளிக்கு எஞ்சியிருந்த ஒரே கடமையாக ஆகியது. சில நேரங்களில் மட்டும் கூலித் தொழிலாளராக இருந்தவர், வாழ்நாள் முழுமைக்கும் கூலித் தொழிலாளராக ஆனார். இதே காலத்தில் நிகழ்ந்த நிலப்பிரபுத்துவ அமைப்புமுறையின் சிதைவாலும், நிலவுடைமைப் பிரபுக்களின் பணியாள் குழுக்கள் கலைக்கப்பட்டதாலும், விவசாயிகள் அவர்களின் பண்ணைகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாலும், இன்னபிறவற்றாலும், இந்த நிரந்தரக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் ஏராளமாய் அதிகரித்தது. ஒருபுறம் முதலாளிகளின் கைகளில் ஒன்றுகுவிக்கப்பட்ட உற்பத்திச் சாதனங்களுக்கும், மறுபுறம் தங்களின் உழைப்புச் சக்தியைத் தவிர வேறு உடைமை ஏதுமற்ற உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான பிரிவினை முழுமையாக்கப்பட்டது. சமூகமயமாகிவிட்ட உற்பத்திக்கும் முதலாளித்துவக் கையகப்படுத்தலுக்கும் இடையேயான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான பகைமையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

தங்களுடைய உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையையே தங்களுக்கு இடையேயான சமூகப் பிணைப்பாகக் கொண்ட, பண்ட உற்பத்தியாளர்கள், தனிமனித உற்பத்தியாளர்கள், இவர்களின் சமுதாயத்தினுள் முதலாளித்துவ உற்பத்தி முறை வலிந்து புகுத்திக் கொண்டதை நாம் கண்டோம். ஆனால் பண்டங்களின் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட ஒவ்வொரு சமுதாயத்துக்கும் உள்ள தனித்தன்மை இதுதான்: உற்பத்தியாளர்கள் தங்களுடைய சமூக ரீதியான பரஸ்பர உறவுகளின் மீதே கட்டுப்பாடு இழந்துவிடுகின்றனர். ஒவ்வொரு மனிதரும், தான் வைத்திருக்க நேர்ந்த உற்பத்திச் சாதனங்களைக் கொண்டு தனக்காகவும், தன்னுடைய ஏனைய பிற தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வகைசெய்யும் பரிவர்த்தனைக்காகவும் உற்பத்தி செய்கிறார். தன்னுடைய குறிப்பிட்ட பண்டவகை எந்த அளவு சந்தைக்கு வரும், அந்தவகைப் பண்டத்துக்கு எந்த அளவு தேவை இருக்கும் என்றெல்லாம் எவருக்கும் தெரியாது. தன்னுடைய தனிப்பட்ட பண்டம் உள்ளபடியான தேவையைச் சரிக்கட்டுமா, தன்னுடைய உற்பத்திச் செலவை ஈடுகட்ட இயலுமா, தன் பண்டத்தை விற்க முடியுமா என்பதேகூட எவருக்கும் தெரியாது. சமூகமயமாகிவிட்ட உற்பத்தியில் அராஜகம் (anarchy) ஆட்சி புரிகிறது.

ஆனால், பண்டங்களின் உற்பத்தியானது, வேறெந்த உற்பத்தி வடிவத்தையும் போன்றே, அதற்கே உரிய தனித்தன்மை கொண்ட, அதிலிருந்து பிரிக்க முடியாத, உள்ளார்ந்த விதிகளைப் பெற்றுள்ளது. [உற்பத்தியில்] அராஜகம் நிலவிய போதிலும், அதையும் மீறி இந்த விதிகள் அராஜகத்தினுள்ளும், அதன் வாயிலாகவும் செயல்படுகின்றன. சமூக ரீதியான பரஸ்பர உறவுகளின் நிலைபெற்ற ஒரே வடிவத்தில், அதாவது பரிவர்த்தனையில், இவ்விதிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இங்கே, அவை போட்டியின் கட்டாய விதிகளாகத் தனிமனித உற்பத்தியாளர்களைப் பாதிக்கின்றன. தொடக்கத்தில் இந்த உற்பத்தியாளர்களுக்கே தெரியாத விதிகளாக அவை இருக்கின்றன. அவர்கள் இவ்விதிகளைப் படிப்படியாகவும், அனுபவத்தின் விளைவாகவும் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. எனவே இவ்விதிகள் உற்பத்தியாளர்களைச் சாராமல், அவர்களுக்கே விரோதமாக, அவர்களுடைய குறிப்பிட்ட உற்பத்தி வடிவத்தின் இரக்கமற்ற இயற்கை விதிகளாகத் தாமாகவே செயல்படுகின்றன. உற்பத்திப் பொருள் உற்பத்தியாளர்களை ஆட்சி புரிகிறது.

மத்திய காலச் சமுதாயத்தில், குறிப்பாகத் தொடக்க நூற்றாண்டுகளில், உற்பத்தியானது, சாராம்சத்தில், தனிமனிதனின் தேவைகளை நிறைவு செய்தலை நோக்கமாகக் கொண்டிருந்தது. பிரதானமாக உற்பத்தியாளரின் தேவைகளையும் அவருடைய குடும்பத்தின் தேவைகளையும் மட்டுமே அது நிறைவு செய்துவந்தது. நாட்டுப்புறங்களில் இருந்தது போன்று, தனிப்பட்ட முறையில் சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவிய இடங்களில், நிலவுடைமைப் பிரபுக்களின் தேவைகளையும் நிறைவு செய்ய அது உதவியது. எனவே, இவையனைத்திலும் பரிவர்த்தனைக்கு இடமில்லை. இதன்விளைவாக, உற்பத்திப் பொருள்கள் பண்டங்களின் பண்பியல்பைப் பெறவில்லை. விவசாயியின் குடும்பத்தினர் துணிமணி, வீட்டுவசதிப் பொருட்கள், அவற்றுடன் வாழ்வாதாரச் சாதனங்கள் உட்பட ஏறத்தாழத் தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தாங்களே உற்பத்தி செய்தனர். தங்கள் சொந்தத் தேவைகளை நிறைவேற்றுதற்கும், நிலவுடைமைப் பிரபுக்களுக்குப் பொருள்வடிவில் செலுத்த வேண்டியதற்கும் போதுமான அளவைவிட அதிகமாக அவர்கள் உற்பத்தி செய்யத் தொடங்கிய போதுதான், அவர்கள் [விற்பனைக்கான] பண்டங்களையும் உற்பத்தி செய்தனர். இந்த உபரிப் பொருள்கள் சமூகமயமான பரிவர்த்தனையில் தள்ளப்பட்டன. விற்பனைக்கு வைக்கப்பட்டுப் பண்டங்கள் ஆயின.

நகரங்களில் வாழ்ந்த கைவினைஞர்கள் தொடக்கத்திலிருந்தே பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்ய வேண்டியிருந்தது உண்மைதான். ஆனால் அவர்களுங்கூட, தங்களின் தனிப்பட்ட தேவைகளில் மிகப் பெரும்பகுதியைத் தாங்களே நிறைவேற்றிக் கொண்டனர். அவர்களுக்குத் தோட்டங்களும், துண்டு நிலங்களும் இருந்தன. அவர்கள் தங்களின் ஆடுமாடுகளைச் சமுதாயக் காடுகளில் மேய விட்டனர். இந்தக் காடுகளிலிருந்து மரமும் விறகும் அவர்களுக்குக் கிடைத்தன. பெண்கள் சணல், கம்பளி, இன்னபிற நூற்பு வேலையில் ஈடுபட்டனர். [இந்தக் காலகட்டத்தில்] பரிவர்த்தனை நோக்கத்துக்கான உற்பத்தி, அதாவது பண்ட உற்பத்தி, இன்னமும் அதன் மழலைப் பருவத்திலேதான் இருந்தது. எனவே, பரிவர்த்தனை வரம்புக்கு உட்பட்டதாக இருந்தது; சந்தை மிகவும் குறுகியதாக இருந்தது; உற்பத்தி முறைகள் மாற்றமின்றி நிலைத்ததாக இருந்தன. வெளி உலகிலிருந்து ஒதுங்கியே இருந்தனர்; உள்ளே ஐக்கியம் நிலவியது. நாட்டுப்புறத்தில் மார்க்கும் [பண்டைய ஜெர்மானிய கிராமச் சமுதாயம்], நகரத்தில் கைவினைக் குழுமமும் இருந்தன.

ஆனால், பண்டங்களின் உற்பத்தி விரிவடைந்ததைத் தொடர்ந்து, முக்கியமாக முதலாளித்துவ உற்பத்தி முறையின் அறிமுகத்தைத் தொடர்ந்து, இதுநாள்வரை உள்ளுறைந்து கிடந்த, பண்ட உற்பத்தியின் விதிகள், மிகவும் வெளிப்படையாகவும், அதிக வலிமையோடும் செயல்படத் தொடங்கின. பழைய பிணைப்புகள் தளர்ந்தன. ஒதுங்கிய நிலையின் பழைய வரம்புகள் நொறுங்கின. உற்பத்தியாளர்கள் மென்மேலும் சுயேச்சையான, தனித்தொதுங்கிய பண்ட உற்பத்தியாளர்களாக மாற்றப்பட்டடனர். மொத்தத்தில் சமுதாயத்தின் உற்பத்தி முழுமையும் திட்டமின்மையாலும், நோக்கமின்மையாலும், அராஜகத்தாலும் ஆளப்பட்டது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த அராஜகம் மென்மேலும் உச்ச நிலைக்கு வளர்ச்சி பெற்றது. ஆனால், சமூகமயமான உற்பத்தியின் இந்த அராஜகத்தைத் தீவிரப்படுத்த முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு உதவிய முதன்மையான சாதனம், அராஜகத்துக்கு நேர் எதிரான ஒன்றாகும். ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தி நிறுவனத்திலும் உற்பத்தியில் மேற்கொள்ளப்பட்ட, சமூக அடிப்படையில் அமைந்த கூடுதலான ஒழுங்கமைப்புதான் இந்த முதன்மையான சாதனம். இதன்மூலம் உற்பத்தி முறையின் பழைய, அமைதியான, மாறாத நிலைமைக்கு முடிவு கட்டப்பட்டது. உற்பத்தியின் இந்த ஒழுங்கமைப்பு எங்கெல்லாம் ஒரு தொழில்பிரிவில் புகுத்தப்பட்டதோ, [அங்கெல்லாம்] அது, தன்னருகில் வேறெந்த உற்பத்தி முறையையும் அனுமதிக்கவில்லை. உழைப்பின் களம் போர்க்களம் ஆகிவிட்டது. மாபெரும் புவியியல் கண்டுபிடிப்புகளும்[43], அவற்றைத் தொடர்ந்து நடைபெற்ற குடியேற்றமும் சந்தைகளை விரிவுபடுத்தின; கைவினைத் தொழில், பட்டறைத் தொழிலுக்கு மாறியதை விரைவுபடுத்தின. ஏதோ குறிப்பிட்ட வட்டாரங்களின் தனிமனித உற்பத்தியாளர்களுக்கு இடையில் மட்டும் போர் வெடிக்கவில்லை. வட்டார அளவிலான போராட்டங்கள், தொடர்ந்து, தேச அளவிலான மோதல்களை, அதாவது, 17-ஆம், 18-ஆம் நூற்றாண்டுகளின் வணிக யுத்தங்களைத் தோற்றுவித்தன[44].

முடிவாக, நவீனத் தொழில்துறை, உலகச் சந்தையின் தோற்றம் ஆகியவை இந்தப் போராட்டத்தை உலகளாவியதாய் ஆக்கின. அதேவேளையில், [இதுவரை] கேட்டிராத அளவுக்கு அப்போராட்டத்தை உக்கிரப்படுத்தின. உற்பத்தியில் நிலவும் இயற்கையான அல்லது செயற்கையான நிலைமைகளில் இருக்கும் அனுகூலங்கள் இப்போது ஒவ்வொரு தனிப்பட்ட முதலாளியின் இருப்பையும், மறைவையும் தீர்மானிக்கின்றன. அத்தோடு, ஒட்டுமொத்தத் தொழில்துறையின், நாடுகளின், இருப்பையும், மறைவையுமே தீர்மானிக்கின்றன. கீழே விழுபவர் ஈவிரக்கமின்றி மூலையில் தூக்கி வீசப்படுகிறார். நடப்பது என்னவெனில், தனி உயிரினம் ஒன்றின் வாழ்வுக்கான டார்வினியப் போராட்டம், தீவிரப்படுத்தப்பட்ட வன்முறையுடன், இயற்கையிலிருந்து சமுதாயத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. விலங்குக்கு இயல்பானதாக உள்ள வாழ்வுக்கான நிலைமைகள் மனித வளர்ச்சியின் இறுதிக் கட்டமாகத் தோன்றுகின்றன. சமூகமயமான உற்பத்திக்கும் முதலாளித்துவமுறைக் கையகப்படுத்தலுக்கும் இடையேயான முரண்பாடு இப்போது, தனியொரு தொழில்கூடத்தில் நிலவும் உற்பத்தியின் ஒழுங்கமைப்புக்கும், பொதுவாகச் சமுதாயத்தில் நிலவும் உற்பத்தியின் அராஜகத்துக்கும் இடையேயான பகைமையாய்த் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறை தான் தோன்றிய நாளிலிருந்தே அதில் உள்ளார்ந்து நிலவும் பகைமையின் இவ்விரு வடிவங்களில்தான் இயங்கி வருகிறது. ஃபூரியே ஏற்கெனவே கண்டுபிடித்துச் சொன்ன அந்த ”நச்சு வட்டத்திலிருந்து” அதனால் என்றுமே வெளிவர முடிந்ததில்லை. இந்தச் சுழல் படிப்படியாகக் குறுகிக் கொண்டிருக்கிறது என்பதையும், மென்மேலும் திருகுசுருளாகி வருகின்ற இந்த இயக்கமானது, கிரகங்களின் இயக்கத்தைப்போல மையத்துடன் மோதி, [ஒரு கட்டத்தில்] முடிவுக்கு வந்தாக வேண்டும் என்பதையும் உண்மையில் அந்தக் காலகட்டத்தில் ஃபூரியேயால் கண்டறிய முடியவில்லை. சமுதாயத்தின் உற்பத்தி முழுமையிலும் நிலவும் அராஜகத்தின் நிர்ப்பந்த சக்திதான் மிகப் பெரும்பான்மையான மனிதர்களை மென்மேலும் முழுமையாகப் பாட்டாளிகளாய் மாற்றி வருகிறது. உற்பத்தியில் நிலவும் அராஜகத்துக்கு இறுதியாக முடிவுகட்டப் போகிறவர்களும் அதே பாட்டாளி வர்க்கத்தின் சாதாரண மக்கள்தாம். சமுதாயத்தின் உற்பத்தி முழுமையிலும் நிலவும் அராஜகத்தின் நிர்ப்பந்த சக்திதான், நவீனத் தொழிலதுறையில் எந்திர சாதனங்கள் வரம்பின்றித் தொடர்ந்து செம்மைப்படுத்தலைக் கட்டாய விதியாக்குகிறது; அதன்மூலம், ஒவ்வொரு தனிப்பட்ட தொழில்துறை முதலாளியும் தன்னுடைய எந்திர சாதனங்களை மென்மேலும் செம்மையாக்க வேண்டும், இல்லையேல் அழிய நேரிடும் என்கிற நிலையை உருவாக்குகிறது.

ஆனால், எந்திர சாதனங்களைச் செம்மைப்படுத்தல், மனித உழைப்பைத் தேவையற்றதாக்கி வருகிறது. எந்திர சாதனங்களைப் புகுத்துவதும் மென்மேலும் அவற்றை அதிகரிப்பதும், இலட்சக்கணக்கான உடல் உழைப்பாளிகள் ஒருசில எந்திரத் தொழிலாளர்களால் வேலையிலிருந்து அகற்றப்படக் காரணமாகிறது. அதேவேளையில், எந்திர சாதனங்களை மேம்படுத்துவதோ, அதே எந்திரத் தொழிலாளர்களே மென்மேலும் அதிக அளவில் வேலையிலிருந்து அகற்றப்படக் காரணமாகிறது. முடிவாக இதன் விளைவு என்னவெனில், மூலதனத்தின் சராசரித் தேவைகளுக்கும் மிகுதியான எண்ணிக்கையில் வேலைக்குத் தயாராகவுள்ள கூலித் தொழிலாளர்களை உற்பத்தி செய்வதுதான். அதாவது, 1845-இல் நான் பெயரிட்டு அழைத்ததுபோன்ற, முழுமையான ஒரு தொழில்துறை ரிசர்வ் பட்டாளம் உருவாக்கப்படுவதுதான்[45]. இந்த ரிசர்வ் பட்டாளம், தொழில்துறை செழித்தோங்கி இயங்கும் காலங்களில் ஈர்த்துக் கொள்ளப்பட்டு, தவிர்க்க முடியாத நசிவு ஏற்படும்போது நடுத்தெருவில் வீசப்படுகிறது. இந்த ரிசர்வ் பட்டாளம், தொழிலாளி வர்க்கம் மூலதனத்துடன் தன் வாழ்வுக்காக நடத்தும் அதன் போராட்டத்தின்போது, அதன் கால்களில் மாட்டப்பட்ட நிலையானதொரு தண்டச் சுமையாக விளங்குகிறது. மூலதனத்தின் நலன்களுக்கு உகந்தவாறு, கீழ்மட்டத்தில் கூலியைக் குறைத்து வைக்திருக்கும் ஒழுங்குபடுத்தியாகவும் செயல்படுகிறது.

இவ்வாறாக, மார்க்ஸ் கூறியவாறு, மூலதனம் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக நடத்தும் போரில், எந்திர சாதனங்கள் அதன் சக்திவாய்ந்த ஆயுதம் ஆகின்றன; உழைப்புக் கருவிகள் தொடர்ந்து, தொழிலாளியின் கைகளிலிருந்து பிழைப்புச் சாதனங்களைப் பறித்துக் கொள்கின்றன; தொழிலாளி உற்பத்தி செய்யும் அதே பொருளே தொழிலாளியை அடிமைப்படுத்தும் கருவியாகவும் ஆகிறது.

இவ்வாறாக, உழைப்புக் கருவிகளைச் சிக்கனப்படுத்துவது, தொடக்கத்திலிருந்தே உழைப்புச் சக்தியின் கண்மூடித்தனமான விரயமாகவும், உழைப்பு செயல்படும் இயல்பு நிலைமைகளையே அடிப்படையாகக் கொண்ட கொள்ளையாகவும் ஆகிவிடுகிறது. எந்திர சாதனமாகிய, ”உழைப்பு நேரத்தைக் குறைப்பதற்கான மிகவும் சக்திவாய்ந்த கருவி, தொழிலாளியின் நேரத்திலும் தொழிலாளியினுடைய குடும்பத்தின் நேரத்திலும் ஒவ்வொரு நொடியையும், முதலாளி தம் மூலதனத்தின் மதிப்பைப் பெருக்கும் நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு, அவரிடத்தில் விட்டுவைக்க மிகவும் வெற்றிகரமான சாதனமாகி விடுகிறது” [மூலதனம், ஆங்கிலப் பதிப்பு, பக்கம் 406].

இவ்வாறாக, ஒருசிலரின் அளவுக்கதிக வேலை, மற்றவர்களின் சோம்பேறித்தனத்துக்கு முன்னோடி நிபந்தனையாகி விடுகிறது. உலகமெங்கும் புதிய நுகர்வோரைத் தேடி அலையும் நவீனத் தொழில்துறை, உள்நாட்டில் சாதாரண மக்களின் நுகர்வை அரைப்பட்டினி நிலைமைக்கு வலியத் தாழ்த்தி, இவ்வாறு செய்வதன்மூலம், தன் சொந்த உள்நாட்டுச் சந்தையை அழித்துவிடுகிறது.

”ஒப்பீட்டளவில் உபரியாக இருக்கும் மக்கள் திரளை, அதாவது தொழில்துறை ரிசர்வ் பட்டாளத்தை, மூலதனத் திரட்சியின் அளவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு எப்போதும் சமனப்படுத்தும் இந்த விதி, வல்கனின் (Vulcan) ஆப்புகள் புரோமித்தியசைப் (Prometheus) பாறையோடு பிணைத்து இறுக்கியதைவிடவும் உறுதியாக, தொழிலாளியை மூலதனத்தோடு பிணைத்து இறுக்குகிறது. மூலதனத் திரட்சிக்கு இணையாகத் துயரமும் திரண்டு பெருகுவதை இந்த விதி உறுதி செய்கிறது. எனவே, ஒருமுனையில் செல்வம் திரளும் அதேவேளை, எதிர்முனையில், அதாவது, மூலதனத்தின் வடிவில் தன் சொந்தப் பொருளை உற்பத்தி செய்யும் வர்க்கத்தின் முனையில், துயரமும், உழைப்பின் வேதனையும், அடிமைத்தனமும், அறியாமையும், கொடுமையும், மனச் சீரழிவும் திரண்டு பெருகுவதைக் குறிக்கிறது.” [மூலதனம், ஆங்கிலப் பதிப்பு, பக்கம் 661].

மேலும், முதலாளித்துவ உற்பத்தி முறையிலிருந்து பண்டங்களின் பிறவகையான பிரிவினை எதையும் எதிர்பார்ப்பது, ஒரு மின்கலத்தின் மின்வாய்கள், அமிலம் கலந்த நீரைச் சிதைக்காது எனவும், நேர்மின்வாயில் ஆக்சிஜனையும் எதிர்மின்வாயில் ஹைடிரஜனையும் வெளியிடாது எனவும் எதிர்பார்ப்பதைப் போன்றதே ஆகும்.

எப்போதும் அதிகரித்துச் செல்லும் நவீன எந்திர சாதனங்களின் செம்மைப்பாடு, சமுதாய உற்பத்தியின் அராஜகத்தால், தனிப்பட்ட தொழில்துறை முதலாளியை எப்போதும் தன் எந்திர சாதனங்களை மேம்படுத்தவும், எப்போதும் அவற்றின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் நிர்ப்பந்திக்கின்ற ஒரு கட்டாய விதியாக மாறிப் போகிறது என்பதை நாம் கண்டோம். உற்பத்தியின் களத்தை விரிவாக்குவதற்கான வெறும் சாத்தியப்பாடுகூட, இந்தத் தனிப்பட்ட முதலாளிக்கு இதேபோன்ற ஒரு கட்டாய விதியாக மாற்றப்பட்டு விடுகிறது. நவீனத் தொழில்துறையின் மாபெரும் விரிவாக்கச் சக்தியானது, வாயுக்களின் விரிவாக்கச் சக்தியுடன் ஒப்பிடுகையில், வெறும் குழந்தை விளையாட்டைப் போன்று எளிதில் கைவரக் கூடியதாகும். அவ்விரிவாக்கச் சக்தி, தடையனைத்தையும் தகர்த்தெறிந்து, தன்மையிலும் அளவிலும் விரிவாக்கம் காணும் ஓர் அவசியமாக இப்போது நமக்குத் தோன்றுகிறது. நுகர்வு, விற்பனை, நவீனத் தொழில்துறையின் உற்பத்திப் பொருள்களுக்கான சந்தை, இவற்றால் அத்தகைய தடை உருவாக்கப்படுகிறது. ஆனால், பரந்த, தீவிர விரிவாக்கம் காண சந்தைகளுக்கு இருக்கும் திறன், மிகவும் குறைந்த ஆற்றலுடன் செயல்படுகின்ற, முற்றிலும் வேறுபட்ட விதிகளால் பிரதானமாக ஆளப்படுகிறது. சந்தைகளின் விரிவாக்கம் உற்பத்தியின் விரிவாக்க வேகத்துடன் சேர்ந்து நடைபோட முடியாது. மோதல் தவிர்க்க முடியாததாய் ஆகிவிடுகிறது. இந்த மோதல், முதலாளித்துவ உற்பத்தி முறையைச் சுக்கு நூறாக உடைத்தெறியாத வரையில், அதனால் மெய்யான தீர்வை வழங்க முடியாது. எனவே, மோதல்கள் குறிப்பிட்ட கால அளவில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. முதலாளித்துவ உற்பத்தி மற்றுமொரு ”நச்சு வட்டத்தை” உண்டாக்கி விட்டது.

உண்மையைக் கூறுவதெனில், முதலாவது பொது நெருக்கடி வெடித்த, 1825-ஆம் ஆண்டுதொட்டு, ஒவ்வொரு பத்து ஆண்டிலும் ஒருமுறை, அனைத்து நாகரிக தேசங்களிலும், அவற்றைச் சார்ந்து வாழுகின்ற ஓரளவுக்கு நாகரிகமற்ற தேசங்களிலும், ஒட்டுமொத்தத் தொழில் வணிக உலகும், உற்பத்தியும், பரிவர்த்தனையும் நிலைகுலைந்து விடுகின்றன. வணிகம் நிலைகுத்தி நின்று விடுகிறது; சந்தைகள் தேவைக்கதிகமான வரத்தினால் திணறுகின்றன; எந்த அளவு விலை போகவில்லையோ, அந்த அளவுக்கு எண்ணிறந்த உற்பத்திப் பொருள்கள் குவிந்து கிடக்கின்றன; ரொக்கப் பணம் மறைந்து போகிறது; கடன் செலாவணி கரைந்து போகிறது; ஆலைகள் மூடப்படுகின்றன; பெருந்திரளான தொழிலாளர்களுக்குப் பிழைப்பாதாரப் பொருள்கள் கிடைக்கவில்லை; காரணம், அவர்கள் பிழைப்பாதாரப் பொருள்களை மிதமிஞ்சி உற்பத்தி செய்துவிட்டனர்; திவாலுக்கு அடுத்து திவாலும், ஜப்திக்கு அடுத்து ஜப்தியும் முடிவில்லாமல் தொடர்கின்றன. தேக்கநிலை பல ஆண்டுகளுக்கு நீடிக்கிறது; உற்பத்தி சக்திகளும் உற்பத்திப் பொருள்களும் விரயமாக்கப்படுகின்றன, ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுகின்றன; குவிந்து கிடக்கும் பண்டங்களின் திரள் சிறிது சிறிதாகக் கரைந்து, ஓரளவுக்கு மதிப்புக் குறையும்வரை, உற்பத்தியும் பரிவர்த்தனையும் படிப்படியாக மீட்சிபெற்று மீண்டும் நடக்கத் தொடங்கும்வரை உற்பத்திச் சக்திகள், பொருள்கள் இவற்றின் விரயமும் அழிவும் தொடரும். கொஞ்சம் கொஞ்சமாக நடை வேகம் பெறுகிறது; வேகம்பெற்றுப் பெருநடை ஆகிறது; தொழில்துறையின் பெருநடை விரைவுநடையாக மாறுகிறது; விரைவுநடை வேகம்பெற்று வளர்ந்து, தொழில்துறை, வணிகக் கடன் செலாவணி, ஊக வணிகம் ஆகியவை நான்குகால் பாய்ச்சலில் தலைதெறிக்க ஓடும் ஒரு துல்லியமான தடைதாண்டும் ஓட்டமாக மாறுகிறது. முடிவில், அந்த ஓட்டம், கழுத்தை முறிக்கும் தாவல்களுக்குப் பின், எங்கே தொடங்கியதோ அங்கேயே, அதாவது ஒரு நெருக்கடியின் குழியிலேயே வந்து முடிகிறது. திரும்பத் திரும்ப இதே கதைதான். 1825-ஆம் ஆண்டு முதலாக ஐந்து தடவை இந்த நெருக்கடியை நாம் கடந்து வந்துள்ளோம். தற்போதைய தருணத்தில் (1877) ஆறாவது தடவையாக அனுபவித்துக் கொண்டுள்ளோம். இந்த நெருக்கடிகளின் தன்மை மிகவும் தெளிவாகத் தெரிகின்றது; முதலாவது நெருக்கடியை "crise plethorique", அதாவது மிகைநிறைவால் ஏற்படும் நெருக்கடி என்று விளக்கி, ஃபூரியே இந்த நெருக்கடிகளின் தன்மையை அவ்வளவு தெளிவாக வரையறுத்துக் கூறியுள்ளார்.

இந்த நெருக்கடிகளில், சமூகமயமான உற்பத்திக்கும் முதலாளித்துவக் கையகப்படுத்தலுக்கும் இடையேயான முரண்பாடு ஒரு மூர்க்கமான எழுச்சியில் முடிகிறது. பண்டங்களின் புழக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. புழக்கத்துக்குரிய சாதனமாகிய பணம், புழக்கத்துக்கு இடையூறாய் ஆகிவிடுகிறது. உற்பத்தி, பண்டங்களின் புழக்கம் தொடர்பான அனைத்து விதிகளும் தலைகீழாய் மாறிவிடுகின்றன. பொருளாதார மோதல் அதன் உச்சநிலையை எட்டிவிட்டது. உற்பத்தி முறை, பரிவர்த்தனை முறைக்கு எதிராகக் கலகம் புரிகிறது.

ஆலையினுள்ளே நிலவும் சமூகமயமான உற்பத்தியின் ஒழுங்கமைப்பானது, அதனுடன் கூடவே நிலவி அதன்மீதே ஆதிக்கம் செலுத்தும், சமுதாய உற்பத்தியின் அராஜகத்துக்கு முரணாகிவிடும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. இந்த உண்மை, நெருக்கடிகளின்போது, பல பெரிய முதலாளிகள், அதைவிட அதிக எண்ணிக்கையிலான சிறிய முதலாளிகள் நொடித்து அழிவதன் வாயிலாக நிகழும் மூர்க்கமான மூலதனக் குவிப்பின் மூலம், அந்த முதலாளிகளுக்கே நேரடியாக உணர்த்தப்படுகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் செயலமைப்பு முழுமையும், அதனாலேயே தோற்றுவிக்கப்பட்ட உற்பத்தி சக்திகளின் அழுத்தத்தில் செயலற்று நின்றுவிடுகிறது. இந்த உற்பத்தி சாதனங்களின் திரள் அனைத்தையும் மூலதனமாக மாற்ற இனிமேலும் அதனால் இயலவில்லை. அவை பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. அதே காரணத்தால், தொழில்துறை ரிசர்வ் பட்டாளமும் வேலையின்றி முடங்கிக் கிடந்தாக வேண்டும். உற்பத்திச் சாதனங்கள், பிழைப்புச் சாதனங்கள், வேலைசெய்யத் தயாராயுள்ள தொழிலாளர்கள் ஆகிய உற்பத்தியின் அனைத்துக் கூறுகளும், அதாவது, பொதுச் செல்வத்தின் அனைத்துக் கூறுகளும் [தேவைக்கு அதிகமாக] மிகைநிறைவாய் இருக்கின்றன. ஆனால், ”மிகைநிறைவே கடுந்துன்பத்துக்கும் வறுமைக்கும் மூலகாரணமாய் ஆகிவிடுகிறது” (ஃபூரியே). ஏனெனில், உற்பத்திச் சாதனங்களும், பிழைப்புச் சாதனங்களும் மூலதனமாக மாற்றப்படுவதைத் தடுப்பது இதே மிகைநிறைவுதான். காரணம், முதலாளித்துவச் சமுதாயத்தில் உற்பத்திச் சாதனங்கள் முதலில் மூலதனமாக, அதாவது, மனிதனின் உழைப்புச் சக்தியைச் சுரண்டும் சாதனமாக மாற்றப்பட்ட பிறகே அதனால் செயல்பட முடியும். உற்பத்திச் சாதனங்களும் பிழைப்புச் சாதனங்களும் இவ்வாறு மூலதனமாக மாற்றப்பட வேண்டிய அவசியம், இச்சாதனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பேயாக உருவெடுத்து நிற்கிறது. உற்பத்தியின் பொருளாதய ரீதியான உந்துசக்தியும் மனித ரீதியான உந்துசக்தியும் ஒன்றிணைய முடியாதவாறு இதுதான் தடுக்கிறது. உற்பத்திச் சாதனங்களைச் செயல்பட விடாமலும், தொழிலாளர்களை வேலை செய்யவும் வாழவும் விடாமலும் இதுதான் தடைசெய்கிறது. எனவே, ஒருபுறம், முதலாளித்துவ உற்பத்தி முறை, இந்த உற்பத்தி சக்திகளைத் தொடர்ந்து வழிநடத்த இயலாத அதன்சொந்தத் தகுதியின்மைக்காகக் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், இந்த உற்பத்தி சக்திகள், தற்போதுள்ள முரண்பாட்டை நீக்கிடவும், மூலதனம் என்பதான தம் இயல்பை ஒழித்திடவும், சமுதாய உற்பத்தி சக்திகள் என்கிற அவற்றின் தன்மை நடைமுறையில் அங்கீகரிக்கப்படவும், அதிகரித்துச் செல்லும் ஆற்றலுடன் தாமே தொடர்ந்து முன்னேறிச் செல்கின்றன.

உற்பத்தி சக்திகள், மென்மேலும் சக்தி மிக்கவையாக வளர்ந்து, மூலதனம் என்பதான தமக்குள்ள இயல்பை எதிர்த்துப் புரியும் இந்தக் கலகம், அவற்றின் சமுதாயத் தன்மை அங்கீகரிக்கப்பட வேண்டுமென மென்மேலும் வலுவாக அவை இடும் இந்தக் கட்டளை, முதலாளித்துவ நிலைமைகளின்கீழ் சாத்தியப்படும் அளவுக்கு, இச்சக்திகளை மென்மேலும் சமுதாய உற்பத்தி சக்திகளாக நடத்தும்படி முதலாளித்துவ வர்க்கத்தையே நிர்ப்பந்திக்கின்றன. தொழில்துறையின் பரபரப்பான காலம், அந்தப் பரபரப்பால் செலவாணியில் ஏற்படும் எல்லையற்ற பெருக்கம், இவற்றுக்குக் குறையாத அளவில், மாபெரும் முதலாளித்துவத் தொழில் நிறுவனங்களின் நிலைகுலைவால் ஏற்படும் தகர்வு - இவையனைத்தும், [இன்று] நாம் காண்கிறோமே, வெவ்வேறு வகையான கூட்டுப் பங்குக் குழுமங்கள் (joint-stock companies), பெருந்திரளான உற்பத்திச் சாதனங்களைச் சமுதாயமயமாக்கலில் அத்தகைய வடிவங்களைக் கொண்டுவரத் தூண்டுகின்றன. இந்த உற்பத்திச் சாதனங்கள், வினியோகச் சாதனங்கள் இவற்றுள் பலவும் தொடக்கத்திலிருந்தே, இரயில்வேக்களைப் போல, முதலாளித்துவ விரிவாக்கத்தின் பிற வடிவங்கள் அனைத்துக்கும் இடமளிக்காத அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமானவையாக இருத்தன. பரிணாம வளர்ச்சியில், அடுத்துவரும் ஒரு கட்டத்தில், இந்த வடிவமும் போதுமானதாக இல்லை. குறிப்பிட்டவொரு நாட்டில், ஒரு தொழில்துறையின் குறிப்பிட்டவொரு கிளையில், பெரிய அளவில் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், உற்பத்தியை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கத்துக்காக அமைந்தவொரு சங்கமான, ”பொறுப்பாண்மை” (Trust) என்னும் அமைப்பில் ஒன்றுபடுகிறார்கள். உற்பத்தி செய்ய வேண்டிய மொத்த அளவை அவர்கள் தீர்மானித்து, [அதில் ஒவ்வொருவரும் உற்பத்தி செய்ய வேண்டிய அளவை] தங்களுக்குள்ளே பிரித்துக் கொள்கிறார்கள். இதன்மூலம், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலையை அவர்கள் வலிந்து நடைமுறைப்படுத்தி விடுகின்றனர். ஆனால், இந்தவகைப் பொறுப்பாண்மை அமைப்புகள், தொழில் மோசமானவுடன், பொதுவாக கலைந்துபோகக் கூடியவை ஆகும். அதன் காரணமாகவே, அவை அதைவிட அதிகம் மையப்படுத்தப்பட்ட கூட்டமைப்பைக் கட்டாயப்படுத்துகின்றன. குறிப்பிட்ட ஒரு தொழில்துறை முழுமையுமே ஒரு பிரம்மாண்டக் கூட்டுப் பங்குக் குழுமமாக மாற்றப்படுகிறது. குழுமத்துக்குள் நடைபெறும் போட்டி, இந்த ஒரு குழுமத்தின் அகநிலையான ஏகபோகத்துக்கு வழி வகுக்கிறது. 1890-இல் ஆங்கில ஆல்கலி (alkali) உற்பத்தியில் இது நடந்தது. 48 பெரும் தொழில் நிறுவனங்களின் ஒன்றிணைவுக்குப் பின், இப்போது அது ஒருநிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. 60,00,000 பவுண்டுகள் மூலதனத்துடன், ஒரே திட்ட வரைவுப்படி இயக்கப்படுகிறது.

பொறுப்பாண்மை அமைப்புகளில் சுதந்திரமான போட்டி என்பது அதற்கு நேரெதிரானதாக அதாவது ஏகபோகமாக மாறிவிடுகிறது. முதலாளித்துவச் சமுதாயத்தின் வரையறுத்த திட்டம் எதுவும் இல்லாத உற்பத்தி, படையெடுத்துவரும் சோஷலிசச் சமுதாயத்தின் வரையறுத்த திட்டப்படியான உற்பத்தியிடம் சரணடைகிறது. இந்த ஏகபோகம் இதுவரையில், இன்னமும்கூட, நிச்சயமாக முதலாளிகளின் ஆதாயத்துக்கும் அனுகூலத்துக்கும் உகந்ததே. ஆனால், இந்த ஏகபோகத்தில், சுரண்டல் அந்த அளவுக்கு அப்பட்டமானது, அது தகர்ந்தாக வேண்டும். பங்காதாய வெறியர்களின் (dividend-mongers) ஒரு சிறு கும்பல் நடத்தும் வெட்கங்கெட்ட சமூகச் சுரண்டலுக்கு வழிவகுக்கின்ற, பொறுப்பாண்மை அமைப்புகள் செயல்படுத்தும் உற்பத்தியை எந்தத் தேசமும் சகித்துக் கொள்ளாது.

எப்படி ஆயினும், பொறுப்பாண்மை அமைப்புகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், முதலாளித்துவச் சமுதாயத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதியாகிய அரசு, இறுதியில் உற்பத்தியின் நெறியாண்மையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்[46]. அரசின் உடைமையாக மாற்றப்பட வேண்டிய இந்த அவசியம், தகவல்தொடர்பு, போக்குவரத்துத் துறைகளின் மாபெரும் நிறுவனங்களாகிய அஞ்சல் நிலையம், தந்தி, இரயில்வே ஆகியவற்றில் முதலாவதாக உணரப்படுகிறது.

நவீன உற்பத்தி சக்திகளை இனிமேலும் நிர்வகிக்க முடியாத முதலாளித்துவ வர்க்கத்தின் தகுதியின்மையை நெருக்கடிகள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன. அதேபோல, உற்பத்திக்கும் வினியோகத்துக்குமான மாபெரும் நிறுவன அமைப்புகள், கூட்டுப் பங்குக் குழுமங்களாகவும், பொறுப்பாண்மை அமைப்புகளாகவும், அரசின் உடைமையாகவும் மாற்றப்படுவது, முதலாளித்துவ வர்க்கத்தினர் இந்தப் பணிகளுக்கு எவ்வாறு தேவையற்றவர்கள் ஆகிவிட்டனர் என்பதைக் காட்டுகிறது. [இதுநாள்வரை] முதலாளி செய்துவந்த அனைத்து சமூகப் பணிகளையும் [இன்று] சம்பளம் பெறும் அலுவலர்கள் செய்துவிடுகின்றனர். பங்காதாயங்களைச் சுருட்டிக் கொள்வதையும், [கடன், வட்டி வசூலுக்கான] ரசீதுகளைக் கிழிப்பதையும், முதலாளிகள் தங்களுக்குள் ஒருவர் முதலை மற்றவர் கொள்ளையடிக்கும் இடமான பங்குச் சந்தையில் (Stock Exchange) சூதாடுவதையும் தவிர, முதலாளிக்கு இனி எந்தச் சமூகப் பணியும் கிடையாது. முதலாளித்துவ உற்பத்தி முறை முதலாவதாகத் தொழிலாளர்களை வெளியே தள்ளுகிறது. இப்போது அது முதலாளிகளையும் வெளியே தள்ளுகிறது. தொழிலாளர்களைத் தரம் தாழ்த்தியதுபோல இவர்களையும் தரம் தாழ்த்துகிறது. [தொழிலாளர்களைப் போன்று] இவர்களை உடனடியாகத் தொழில்துறை ரிசர்வ் பட்டாளத்து அணிகளின் நிலைக்குத் தாழ்த்தாவிட்டாலும், [உற்பத்திக்குத் தேவையில்லாத] உபரி மக்கள் கூட்டத்து அணிகளின் நிலைக்குத் தாழ்த்துகிறது.

ஆனால், கூட்டுப் பங்குக் குழுமங்களாகவோ, பொறுப்பாண்மை அமைப்புகளாகவோ, அல்லது அரசின் உடைமையாகவோ மாற்றுவதானது, உற்பத்தி சக்திகளின் முதலாளித்துவத் தன்மையை நீக்கிவிடாது. கூட்டுப் பங்குக் குழுமங்கள், பொறுப்பாண்மை அமைப்புகளைப் பொறுத்தவரை இது வெளிப்படையானது. மேலும், நவீன அரசுங்கூட, தொழிலாளர்களின் ஆக்கிரமிப்புகளுக்கும், தனிப்பட்ட முதலாளிகளின் ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராக, முதலாளித்துவ உற்பத்தி முறையின் புற நிலைமைகளைக் காப்பாற்றும் பொருட்டு, முதலாளித்துவச் சமுதாயம் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரே நிறுவன அமைப்பாகும். நவீன அரசின் வடிவம் எதுவாயினும், அது சாராம்சத்தில் முதலாளித்துவ [நிர்வாக] எந்திரம் ஆகும். அது முதலாளிகளின் அரசு ஆகும். மொத்த தேசிய மூலதனத்தின் இலட்சிய உருவாக்கம் ஆகும். நவீன அரசு எந்த அளவு அதிகமான உற்பத்தி சக்திகளை அரசுடைமை ஆக்குகிறதோ, அந்த அளவு அது நடைமுறையில் தேசிய முதலாளியாகிறது. அந்த அளவு அதிகமான குடிமக்களைச் சுரண்டுகிறது. தொழிலாளர்கள் மாற்றமின்றிக் கூலித் தொழிலாளர்களாகவே, அதாவது பாட்டாளிகளாகவே இருக்கின்றனர். முதலாளித்துவ உறவு அகற்றப்படவில்லை. மாறாக, அது ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. ஆனால், நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகையில் அது தலைகுப்புற விழுகிறது. உற்பத்தி சக்திகளின் அரசுடைமை, மோதலுக்கான தீர்வு ஆகிவிடாது. ஆனால், அந்தத் தீர்வின் கூறுகளாக அமையும் வினைநுட்ப நிலைமைகள் அதனுள்ளே மறைந்து கிடக்கின்றன.

மோதலுக்கான இத்தீர்வு, நவீன உற்பத்தி சக்திகளுடைய சமூகத் தன்மையை நடைமுறையில் அங்கீகரிப்பதிலும், எனவே, உற்பத்தி, கையகப்படுத்தல், பரிவர்த்தனை முறைகளை உற்பத்திச் சாதனங்களின் சமூகமயமான தன்மைக்கு இசைவிப்பதிலும்தான் அடங்கியிருக்க முடியும். மேலும், ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் கட்டுப்பாட்டைத் தவிர வேறெந்தக் கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் வளர்ந்துவிட்ட உற்பத்தி சக்திகளை, வெளிப்படையாகவும் நேரடியாகவும் சமுதாயமே உடைமையாக்கிக் கொள்வதால் மட்டுமே இந்த இசைவு ஏற்பட முடியும். உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திப் பொருள்கள் ஆகியவற்றின் சமூகத் தன்மை இன்றைக்கு உற்பத்தியாளர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது; குறிப்பிட்ட கால இடைவெளியில் உற்பத்தி, பரிவர்த்தனை அனைத்தையும் குலைக்கிறது; கண்மூடித்தனமாக, பலவந்தமாக, அழிவுபூர்வமாகச் செயல்படும் ஓர் இயற்கை விதியைப் போன்றே செயல்படுகிறது. ஆனால், உற்பத்தி சக்திகளைச் சமுதாயம் தானே எடுத்துக் கொண்டதும், உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திப் பொருள்கள் ஆகியவற்றின் சமூகத் தன்மையை, உற்பத்தியாளர்கள் அதன் இயல்பு பற்றிய மிகச்சரியான புரிதலுடன் பயன்படுத்திக் கொள்வர். இச்சமூகத் தன்மை, கொந்தளிப்புக்கும், குறிப்பிட்ட கால இடைவெளியிலான சீர்குலைவுக்கும் மூலகாரணமாக இருப்பதற்குப் பதில், உற்பத்திக்கே ஆற்றல் மிக்க உந்துசக்தி ஆகிவிடும்.

முனைப்புமிக்க சமூக சக்திகள், நாம் அவற்றைப் புரிந்து கொள்ளாமலும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் இருக்கும்வரையில், துல்லியமாய் இயற்கை சக்திகளைப் போன்றே கண்மூடித்தனமாக, பலவந்தமாக, அழிவுபூர்வமாகச் செயல்படுகின்றன. ஆனால், நாம் அவற்றைப் புரிந்துகொண்டதுமே, அவற்றின் செயல்பாடு, அவற்றின் திசைவழி, அவற்றின் விளைவுகள் ஆகியவற்றை நாம் உள்வாங்கிக் கொண்டதுமே, அவற்றை மென்மேலும் நம் விருப்பத்துக்குக் கீழ்ப்படியச் செய்வதும், அவற்றைப் பயன்படுத்தி நம்சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதும் முற்றிலும் நம்மை மட்டுமே சார்ந்ததாகும். மேலும், முக்கியமாக, பேராற்றல் கொண்ட இன்றைய உற்பத்தி சக்திகளுக்கு இது மிகவும் பொருந்தும். செயல்பாட்டுக்கான சமூகச் சாதனங்களின் இயல்பையும் தன்மையையும் புரிந்துகொள்வது, முதலாளித்துவ உற்பத்தி முறையின் பண்பியல்புக்கும், அதன் பாதுகாவலர்களின் பண்பியல்புக்கும் எதிரானது ஆகும். அவற்றைப் புரிந்துகொள்ள நாம் பிடிவாதமாக மறுக்கும்வரையில் இந்தச் சக்திகள் நம்மையும் மீறி நமக்கே எதிராகச் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும். மேலே நாம் விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளதுபோல, நம்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான் இருக்கும்.

ஆனால், அவற்றின் இயல்பைப் புரிந்து கொண்டதும், நம்மீது ஆதிக்கம் செலுத்தும் பூதங்களாக இருக்கும் அவற்றை, ஒன்றுபட்டு உழைக்கும் கைகளில், மனமுவந்து பணிபுரியும் பணியாட்களாக மாற்றிவிடலாம். இந்த வேறுபாடு, புயலின்போது இடி- மின்னலில் அழிவுச் சக்தியாகச் செயல்படும் மின்சாரத்துக்கும், தந்தியிலும், வோல்ட்டா மின்வில்லிலும் நம் கட்டளைப்படி செயல்படும் மின்சாரத்துக்கும் இடையேயான வேறுபாடு போன்றதாகும். காட்டுத் தீயுக்கும், மனிதனுக்குச் சேவை புரியும் நெருப்புக்கும் இடையேயான வேறுபாடு போன்றதாகும். முடிவாக, இன்றைய உற்பத்தி சக்திகளின் உண்மையான இயல்பை இவ்வாறு புரிந்து கொண்டதும், உற்பத்தியின் சமூக ரீதியான அராஜகம், சமுதாயத்தின் தேவைகளுக்கும், ஒவ்வொரு தனிமனிதனின் தேவைகளுக்கும் ஏற்றவாறு வரையறுக்கப்பட்ட ஒரு திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் உற்பத்தியின் சமூக ரீதியான கட்டுப்பாட்டுக்கு வழிவிட்டு ஒதுங்கும். அதன்பிறகு, உற்பத்திப் பொருள் முதலில் உற்பத்தியாளரையும், பிறகு கையகப்படுத்துவோரையும் அடிமையாக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறை மாற்றப்பட்டு அதனிடத்தில், நவீன உற்பத்திச் சாதனங்களுடைய இயல்பின் அடிப்படையில் உற்பத்திப் பொருள்களைக் கையகப்படுத்தும் முறை நடைமுறைக்கு வரும். அதன்படி, ஒருபுறம், உற்பத்தியின் பராமரிப்புக்கும் விரிவாக்கத்துக்குமான சாதனங்களாக நேரடியான சமூகக் கையகப்படுத்தலும், மறுபுறம், பிழைப்புக்கும் இன்ப நுகர்வுக்குமான சாதனங்களாக நேரடியான தனிமனிதக் கையகப்படுத்தலும் நிகழும்.

முதலாளித்துவ உற்பத்தி முறை, மக்கள் தொகையில் மென்மேலும் மிகப் பெரும்பான்மையினரைப் பாட்டாளிகளாக முழுமையாய் மாற்றுகின்ற அதேவேளையில், தன் சொந்த அழிவு பற்றிய அச்சுறுத்தலால், இந்தப் புரட்சியை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும் ஒரு சக்தியையும் அது தோற்றுவிக்கிறது. ஏற்கெனவே சமூகமயமாகிவிட்ட பரந்த உற்பத்திச் சாதனங்களை மென்மேலும் அரசின் உடைமையாக மாற்றும்படி அது நிர்ப்பந்திக்கும் அதேவேளையில், இந்தப் புரட்சியை நிறைவேற்றுதற்கான வழியையும் அதுவே சுட்டிக் காட்டுகிறது. பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு, உற்பத்திச் சாதனங்களை அரசின் உடைமையாக மாற்றுகிறது.

ஆனால், இதைச் செய்வதன்மூலம், அது பாட்டாளி வர்க்கம் என்ற தன் வர்க்க நிலைக்கே முடிவுகட்டுகிறது; அனைத்து வர்க்க வேறுபாடுகளுக்கும் வர்க்கப் பகைமைகளுக்கும் முடிவுகட்டுகிறது; அரசு அரசாக இருக்கும் நிலைக்கும் முடிவுகட்டுகிறது. இதுநாள்வரை வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில் அமைந்த சமுதாயம் என்பதால் அதற்கு அரசு தேவைப்பட்டது. அதாவது, அந்தந்தக் காலகட்டத்தில் சுரண்டும் வர்க்கமாக இருக்கும் குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தின் நிறுவன அமைப்பு ஒன்று தேவைப்பட்டது. தற்போது நிலவிவரும் உற்பத்தி நிலைமைகளில் [பாதிப்பு ஏற்படுத்தும்படி] வெளியிலிருந்து வரக்கூடிய எந்தவொரு தலையீட்டையும் தடுக்கும் நோக்கத்துக்காகவும், எனவே, இன்னும் முக்கியமாக, சுரண்டப்படும் வர்க்கங்களை அந்தந்த உற்பத்தி முறைக்கு (அடிமை முறை, பண்ணையடிமை முறை, கூலியுழைப்பு முறை) பொருத்தமான ஒடுக்குமுறை நிலையில் பலவந்தமாக இருத்திவைக்கும் நோக்கத்துக்காகவும் ஒரு நிறுவன அமைப்பு தேவைப்பட்டது. அரசு என்பது ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக, சமுதாயத்தின் ஒருங்கிணைந்த கண்கூடான உருவகத் திரட்சியாக விளங்கியது. ஆனால், எந்த வர்க்கம் அதன் காலத்தில் அதுவே ஒட்டுமொத்தச் சமுதாயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோ, அந்த வர்க்கத்தின் அரசாக இருந்தவரை மட்டுமே, அரசு அவ்வாறு விளங்கியது. அதாவது, பண்டைய காலத்தில் அடிமைகளை உடைமையாகக் கொண்ட குடிமக்களின் அரசாகவும், மத்திய காலத்தில் நிலப்பிரபுக்களின் அரசாகவும், நாம் வாழும் இக்காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாகவும் இருந்தவரை மட்டுமே அரசு அவ்வாறு விளங்கியது. இறுதியில் அரசு, சமுதாயம் முழுமைக்கும் உண்மையான பிரதிநிதியாக ஆகும்போது, அது தன்னைத் தேவையற்றதாக ஆக்கிக் கொள்கிறது. இனிமேலும் எந்தவொரு சமூக வர்க்கத்தையும் கீழ்ப்படுத்தி வைக்க வேண்டிய தேவையின்றிப் போனவுடனே, வர்க்க ஆதிக்கம், உற்பத்தியில் தற்போதுள்ள அராஜகத்தின் காரணமாக நடைபெறும் தனிநபரின் பிழைப்புக்கான போராட்டம், அந்தப் போராட்டம் காரணமாக எழும் மோதல்கள், அத்துமீறல்கள் இவையனைத்தும் நீக்கப்பட்டவுடனே, அடக்கியாள எதுவும் மிச்சமில்லை என்பதால், தனிச்சிறப்பான ஓர் அடக்குமுறை சக்தியாகிய அரசுக்கு இனி அவசியமில்லை. ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் பிரதிநிதியாக உண்மையாகவே தன்னை வரித்துக் கொண்டதை வெளிப்படுத்தும் அரசின் முதலாவது நடவடிக்கை, உற்பத்திச் சாதனங்களைச் சமுதாயத்தின் பெயரில் உடைமையாக்கிக் கொள்வதாகும். அதேவேளையில், இந்த நடவடிக்கைதான், அரசு என்ற முறையில் அது சுயேச்சையாக மேற்கொள்ளும் இறுதி நடவடிக்கையும் ஆகும். சமூக உறவுகளில் அரசின் தலையீடு, அடுத்தடுத்து ஒவ்வொரு துறையாகத் தேவையற்றதாகி, பிறகு தானாகவே மறைந்துவிடுகிறது. மனிதர்களை ஆளும் அரசாங்கம் மாற்றப்பட்டு, அதனிடத்தில் பொருள்களின் நிர்வாகம், உற்பத்திச் செயல்முறைகளின் நிறைவேற்றம் இடம்பெறுகிறது. அரசு ”ஒழிக்கப்படுவதில்லை”. அது உலர்ந்து உதிர்ந்துவிடுகிறது. ”சுதந்திர அரசு”[47] என்னும் சொல்தொடர் எந்த அளவு மதிக்கத் தக்கது என்பதை இது புலப்படுத்துகிறது. அதாவது, இச்சொல்தொடரைச் சில நேரங்களில் கிளர்ச்சிக்காரர்கள் பயன்படுத்தியது எந்த அளவு நியாயமானது என்பதையும், முடிவாக விஞ்ஞான ரீதியாக எந்த அளவு அது குறைபாடுடையது என்பதையும் இது புலப்படுத்துகிறது. மேலும், ஒரே நொடியில் அரசு ஒழிக்கப்படுவதற்கு, அராஜகவாதிகள் என்று அழைக்கப்படுவோர் முன்வைக்கும் கோரிக்கைகள் எந்த அளவு மதிக்கத்தக்கன என்பதையும் மேற்கூறியது புலப்படுத்துகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோற்றம் முதற்கொண்டே, உற்பத்திச் சாதனங்கள் அனைத்தையும் சமுதாயமே கையகப்படுத்த வேண்டும் என்பது, தனிமனிதர்களும், குறுங்குழுக்களும் வருங்காலத்துக்குரிய இலட்சியம் என, அனேகமாகத் தெளிவான புரிதலின்றி, அடிக்கடி கண்டுவந்த கனவாக இருந்து வந்துள்ளது. ஆனால், அதன் நிறைவேற்றத்துக்கான எதார்த்த நிலைமைகள் இருக்கும்போது மட்டுமே அது சாத்தியம் ஆகமுடியும்; வரலாற்றுக் கட்டாயமாகவும் ஆகமுடியும். ஏனைய சமூக முன்னேற்றம் ஒவ்வொன்றையும் போன்றே, இதுவும் வர்க்கங்கள் நிலவுவது நீதிக்கும் சமத்துவத்துக்கும் இன்ன பிறவற்றுக்கும் முரணாகுமென மனிதர்கள் புரிந்து கொள்வதாலோ, இந்த வர்க்கங்களை ஒழிக்க வேண்டுமென வெறுமனே விரும்புவதாலோ நடைமுறை சாத்தியம் ஆகிவிடாது. குறிப்பிட்ட புதிய பொருளாதார நிலைமைகள் ஏற்படுவதால் மட்டுமே நடைமுறை சாத்தியம் ஆக முடியும். சமுதாயம், சுரண்டும் வர்க்கம் சுரண்டப்படும் வர்க்கம் எனவும், ஆளும் வர்க்கம் ஒடுக்கப்படும் வர்க்கம் எனவும் பிளவுபட்டதானது, முந்தைய காலகட்டங்களில் நிலவிய பற்றாக்குறையான, கட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தி வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவாகும். மொத்த சமூக உழைப்பும் ஈட்டுகின்ற உற்பத்திப் பொருள்கள், அனைவருடைய வாழ்வுக்கும் வேண்டிய அத்தியாவசிய அளவைக் காட்டிலும் சற்றே கூடுதலாக மட்டுமே இருக்கும் வரையில், அதன் காரணமாகச் சமுதாய உறுப்பினர்களில் மிகப் பெரும்பான்மையினர் அவர்களின் முழு நேரத்தையும் அல்லது ஏறத்தாழ முழு நேரத்தையும் உழைப்பில் செலுத்த வேண்டியிருக்கும் காலம் வரையில், இந்தச் சமுதாயம் தவிர்க்க முடியாதவாறு வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும். பிரத்தியேகமாய் உழைப்புக்குக் கொத்தடிமைகளாக விளங்கும் மிகப் பெரும்பான்மையின் அருகருகிலேயே, நேரடியான உற்பத்தி சார்ந்த உழைப்பிலிருந்து விடுபட்ட ஒரு வர்க்கம் உதித்தெழுந்துள்ளது. இவ்வர்க்கம், உழைப்பை நெறிப்படுத்தல், அரசு நிர்வாகம், சட்டம், விஞ்ஞானம், கலை, இதுபோன்ற இன்னபிற சமுதாயப் பொது விவகாரங்களைக் கவனித்துக் கொள்கிறது. எனவே, உழைப்புப் பிரிவினை விதிதான், வர்க்கப் பாகுபாட்டுக்கு அடிப்படையாக அமைகிறது. ஆனால் இவ்வாறு கூறுவது, இந்த வர்க்கப் பாகுபாடு, வன்முறையாலும் வழிப்பறியாலும், தந்திரத்தாலும் மோசடியாலும் நிலைநாட்டப்பட்டது என்று கூறுவதைத் தடுக்கவில்லை. ஆதிக்க நிலை பெற்றவுடன் ஆளும் வர்க்கம், உழைக்கும் வர்க்கத்தின் செலவில், தன் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டது என்றோ, அதன் சமூகத் தலைமைப் பதவியைச் சாதாரண மக்களைக் கொடூரமாகச் சுரண்டுவதற்குப் பயன்படுத்திக் கொண்டது என்றோ கூறுவதைத் தடுக்கவில்லை.

ஆனால், வர்க்கப் பாகுபாட்டுக்கு, மேலே காட்டியவாறு, ஓரளவு வரலாற்று நியாயம் உண்டு என்றபோதிலும், அதுகூடக் குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும்தான், குறிப்பிட்ட சமூக நிலைமைகளில் மட்டும்தான். உற்பத்திப் பற்றாக்குறையே இதன் அடிப்படையாக இருந்தது. நவீன உற்பத்தி சக்திகளின் முழுமையான வளர்ச்சியால் வர்க்கப் பாகுபாடு துடைத்தெறியப்படும். உண்மையில் சமுதாயத்தில் வர்க்கங்கள் ஒழிக்கப்படுவதற்கு, வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சி குறிப்பிட்ட கட்டத்தை எட்டியிருப்பது முன்நிபந்தனை ஆகும். பரிணாம வளர்ச்சியின் அந்தக் கட்டத்தில், குறிப்பிட்ட ஏதோவோர் ஆளும் வர்க்கம் அல்ல, ஆளும் வர்க்கம் என்பதாக ஏதேனும் ஒரு வர்க்கம் நிலவுவதும், அதன் காரணமாக, வர்க்கப் பாகுபாடேகூட நிலவுவதும், காலாவதி ஆகிப்போன, காலத்துக்கு ஒவ்வாத ஒன்றாகிவிடும். எனவே, உற்பத்திச் சாதனங்களையும், உற்பத்திப் பொருள்களையும், அதன்மூலம் அரசியல் ஆதிக்கம், கலாச்சார ஏகபோகம், அறிவுத்துறைத் தலைமை ஆகியவற்றையும், சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு வர்க்கம் கையகப்படுத்திக் கொள்வது தேவைப்படாததாய் ஆவது மட்டுமின்றி, அது பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, அறிவுத்துறை ரீதியாக, வளர்ச்சிக்கு இடையூறாகவும் ஆகிவிடும் அளவுக்கு, உற்பத்தியின் வளர்ச்சியைக் கொண்டு செல்வது, வர்க்கங்கள் ஒழிக்கப்படுவதற்கான முன்நிபந்தனை ஆகும்.

இந்த வளர்ச்சிநிலை தற்போது எட்டப்பட்டுவிட்டது. அரசியல் துறையிலும் அறிவுத்துறையிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் கையாலாகாத்தனம் அவர்களுக்கே இனிமேலும் ஓர் இரகசியமாக இருக்க முடியாது. முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதாரத் திவால்நிலை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்பத் திரும்ப தவறாமல் வெளிப்படுகிறது. ஒவ்வொரு நெருக்கடியிலும், சமுதாயம் தன்சொந்த உற்பத்தி சக்திகள், உற்பத்திப் பொருள்களைப் பயன்படுத்த முடியாமல் அவற்றின் சுமையின்கீழ் சிக்கி மூச்சுத் திணறுகிறது. போதுமான நுகர்வோர் இல்லாத காரணத்தால், உற்பத்தியாளர்கள் நுகர்வதற்கு ஏதுமில்லை என்னும் இந்த அபத்தமான முரண்பாட்டைச் சமுதாயம் நேருக்குநேர் எதிர்கொண்டு, செய்வதறியாது நிற்கிறது. உற்பத்திச் சாதனங்களின் விரிவாக்கச் சக்தி, அவற்றின்மீது முதலாளித்துவ உற்பத்தி முறை சுமத்தியுள்ள கட்டுகளை உடைத்தெறிகிறது. உற்பத்திச் சாதனங்கள் இந்தக் கட்டுகளிலிருந்து விடுதலை பெறுவது, உற்பத்தி சக்திகள் இடையறாது தொடர்ந்து முடுக்கிவிடப்பட்ட வேகத்தில் வளர்ச்சி பெறவும், அதன் விளைவாக, நடைமுறையில் உற்பத்தி, வரம்பின்றி அதிகரிக்கவும் ஒரேயொரு முன்நிபந்தனையாகும். இது மட்டுமல்ல. உற்பத்திச் சாதனங்களைச் சமுதாயம் முழுமையும் கையகப்படுத்திக் கொள்வதானது, உற்பத்தி மீதான தற்போதைய செயற்கைக் கட்டுப்பாடுகளை ஒழித்துக் கட்டுகிறது. அதோடு மட்டுமின்றி, இன்றைய காலகட்டத்தில் உற்பத்தியின் தவிர்க்க முடியாத உடன்நிகழ்வுகளாகத் தோன்றி, நெருக்கடிகளின்போது அவற்றின் உச்சத்தை எட்டுகின்ற, உற்பத்தி சக்திகள், உற்பத்திப் பொருள்கள் ஆகியவற்றின் நேரடியான விரயத்தையும், நாசத்தையும் ஒழித்துக்கட்டும். மேலும், இன்றைய ஆளும் வர்க்கங்கள், அவற்றின் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரின் முட்டாள்தனமான ஊதாரிச் செலவுகளுக்கு முடிவு கட்டுவதன் மூலம், சமுதாயம் முழுமைக்குமாகத் திரளான உற்பத்திச் சாதனங்களையும் உற்பத்திப் பொருள்களையும் விடுவித்துக் கொடுக்கும். [உற்பத்திச் சாதனங்களின் சமுதாய உடைமை] சமூகமயமான உற்பத்தியைப் பயன்படுத்தி, சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினருக்கும், பொருளாயத ரீதியில் முற்றிலும் போதுமான, நாளுக்குநாள் மேலும் நிறைவானதாகிவரும் வாழ்க்கையை மட்டுமின்றி, அனைவருக்கும், அவர்களின் உடல் ஆற்றல்களையும், உள்ளத்து ஆற்றல்களையும் தங்குதடையின்றி மேம்படுத்தவும் செயல்படுத்தவும் உத்தரவாதம் அளிக்கின்ற வாழ்க்கையையும் பெற்றுத் தருவதற்கான சாத்தியப்பாடு இப்போது முதன்முதலாக இங்கே இருக்கிறது. ஆம், அது இங்கே இருக்கிறது[48].

உற்பத்திச் சாதனங்களைச் சமுதாயம் கைப்பற்றிக் கொண்டதுமே, பண்ட உற்பத்திக்கு முடிவு கட்டப்படுகிறது. கூடவே, உற்பத்திப் பொருள் உற்பத்தியாளர் மீது ஆதிக்கம் செலுத்துவதும் ஒழிக்கப்படுகிறது. சமூக உற்பத்தியில் அராஜகம் அகற்றப்பட்டு, அதனிடத்தில், முறைப்படுத்தப்பட்ட, திட்டவட்டமான, ஒழுங்கமைப்பு உண்டாக்கப்படுகிறது. தனிமனிதனின் பிழைப்புக்கான போராட்டம் மறைகிறது. அதன்பின், மனிதன், குறிப்பிட்ட பொருளில், [வரலாற்றில்] முதன்முதலாக விலங்கின உலகிலிருந்து துண்டிக்கப்படுகிறான். வெறும் விலங்கின வாழ்க்கை நிலைமைகளிலிருந்து வெளியே வந்து, உண்மையாகவே மனித வாழ்க்கை நிலைமைகளினுள் பிரவேசிக்கிறான். மனிதனின் சுற்றுச்சார்பாக அமைந்து இதுநாள்வரை மனிதனை ஆட்சி புரிந்துவந்த வாழ்க்கை நிலைமைகளின் ஒட்டுமொத்தக் கூறுகளும், இப்போது மனிதனின் ஆதிக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் கீழ் வந்துள்ளது. முதன்முதலாக மனிதன், இயற்கையின் உண்மையான, உணர்வுபூர்வமான தலைவனாய் ஆகிறான். காரணம், இப்போது அவன் தன்சொந்த சமூக நிறுவன அமைப்பின் எஜமானன் ஆகிவிடுகிறான். இதுநாள்வரை, மனிதனுடைய சொந்தச் சமூகச் செயல்பாடுகளின் விதிகள், இயற்கையின் விதிகளைப் போன்று, அவனுக்கு நேருக்குநேர் எதிராக நின்று, அவனுக்கு அந்நியமாக இருந்து, அவனை ஆதிக்கம் செலுத்தி வந்தன. இனிமேல் அவ்விதிகளை அவன் முழுமையான புரிதலுடன் பயன்படுத்திக் கொள்வான். எனவே, மனிதன் அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விடுவான். இதுநாள்வரை, இயற்கையாலும் வரலாற்றாலும் சுமத்தப்பட்ட கட்டாயமாக, மனிதனுக்கு நேருக்குநேர் சவாலாக இருந்துவந்த அவன்சொந்தச் சமூக நிறுவன அமைப்பு, இப்போது அவனுடைய சுதந்திரமான சொந்தச் செயல்பாட்டின் விளைவாய் ஆகிப்போனது. இதுநாள்வரை வரலாற்றை வெளியிலிருந்து ஆட்சிபுரிந்த புறநிலைச் சக்திகள் மனிதனுடைய நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வருகின்றன. அந்த நேரம் முதற்கொண்டுதான் மனிதன் மென்மேலும் உணர்வுபூர்வமாகத் தன்சொந்த வரலாற்றைத் தானே படைத்திடுவான். அந்த நேரம் முதற்கொண்டுதான், அவன் தொடங்கிவைக்கும் சமூக இயக்கங்கள் முழுமையாகவும், தொடர்ந்து பெருகிச் செல்லும் அளவிலும், அவன் கருதிய பலன்களை அளித்திடும். நிர்ப்பந்தத்தின் ஆட்சியிலிருந்து சுதந்திரத்தின் ஆட்சிக்கு மனிதன் முன்னேறிச் செல்வதை இது குறிக்கிறது.

வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சி குறித்து நாம் வரைந்து காட்டியதைச் சுருக்கமாகத் தொகுத்தளிப்போம்.

I. மத்திய காலச் சமுதாயம் – தனிநபர்களின் சிறிய அளவிலான உற்பத்தி [நடைபெறுகிறது]. உற்பத்திச் சாதனங்கள் தனிநபரின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு தகவமைக்கப்பட்டுள்ளன. எனவே, முதிர்ச்சியற்ற, செப்பமற்ற, சின்னஞ்சிறிய, செயலில் திறன்குன்றிய சாதனங்களாக இருக்கின்றன. உற்பத்தியானது, உற்பத்தியாளரின் அல்லது அவருடைய நிலவுடைமைப் பிரபுவின் உடனடி நுகர்வுக்காக நடைபெறுகிறது. இந்த நுகர்வுக்கும் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும்போது மட்டுமே, அத்தகைய உபரியானது விற்பனைக்கு வைக்கப்பட்டு, பரிவர்த்தனைக்கு வருகிறது. எனவே, பண்ட உற்பத்தி என்பது, மழலைப் பருவத்திலேதான் இருக்கிறது. ஆனால் சமுதாயம் முழுமைக்குமான உற்பத்தியில் அராஜகத்தை, ஏற்கெனவே அது தன்னுள்ளே கருவடிவில் கொண்டுள்ளது.

II. முதலாளித்துவப் புரட்சி – தொழில்துறை முதலில் எளிய கூட்டுறவு அமைப்பாகவும், பட்டறைத் தொழிலாகவும் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுநாள்வரை சிதறிக் கிடந்த உற்பத்திச் சாதனங்கள் பெரிய தொழிற்கூடங்களாக ஒன்றுகுவிக்கப்படுகின்றன. அதன் விளைவாக, தனிநபரின் உற்பத்திச் சாதனங்களாக இருந்தவை, சமூக உற்பத்திச் சாதனங்களாக மாற்றப்படுகின்றன. ஆனால், இந்த மாற்றம், மொத்தத்தில் பரிவர்த்தனையின் வடிவத்தைப் பாதிக்கவில்லை. கையகப்படுத்தலின் பழைய வடிவங்கள், மாற்றமின்றி அப்படியே நடைமுறையில் உள்ளன. முதலாளி தோன்றுகிறார். உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர் என்ற தகுதியில், உற்பத்திப் பொருள்களையும் தாமே கையகப்படுத்திக் கொண்டு அவற்றைப் பண்டங்களாக மாற்றுகிறார். உற்பத்தி, சமூகச் செயலாய் ஆகிவிட்டது. பரிவர்த்தனையும் கையகப்படுத்தலும் தனிப்பட்ட செயல்களாக, தனிநபர்களின் செயல்களாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன. சமூக உற்பத்திப் பொருள் தனிப்பட்ட முதலாளியால் கையகப்படுத்தப்படுகிறது. இந்த அடிப்படை முரண்பாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டுதான், நம்முடைய இன்றைய சமுதாயம் உழல்கின்ற, நவீனத் தொழில்துறை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்ற, அனைத்து முரண்பாடுகளும் உதித்தெழுகின்றன.

(அ) உற்பத்தியாளர் உற்பத்திச் சாதனங்களிலிருந்து துண்டிக்கப்படுதல். தொழிலாளி வாழ்நாள் முழுவதும் கூலியுழைப்பில் உளையச் சபிக்கப்படுதல். பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான பகைமை.

(ஆ) பண்ட உற்பத்தியை ஆட்சி புரியும் விதிகளின் மேலாதிக்கமும் பயனுறுதியும் அதிகரித்தல். கட்டுப்பாடற்ற போட்டி. தனிப்பட்ட ஆலையில் [உற்பத்தியின்] சமூகமயமான ஒழுங்கமைப்புக்கும், ஒட்டுமொத்த உற்பத்தியில் சமூக அராஜகத்துக்கும் இடையேயான முரண்பாடு.

(இ) ஒருபுறம், போட்டியானது, ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தியாளரும் எந்திர சாதனங்களைச் செம்மைப்படுத்துவதைக் கட்டாயமாக்குகிறது. அதன் உடன்விளைவாக, தொழிலாளர்கள் வேலையிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. [விளைவு?] தொழில்துறை ரிசர்வ் பட்டாளம். மறுபுறம், போட்டியின் விளைவாக, உற்பத்தியின் வரம்பில்லா விரிவாக்கம், ஒவ்வொரு உற்பத்தியாளருக்கும் கட்டாயமாகிறது. இவ்வாறு, இருபுறமும், இதற்குமுன் கேட்டிராத அளவுக்கு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, தேவைக்கு மிஞ்சிய வரத்து, மிகை உற்பத்தி, சந்தைகளில் [தேவைக்கதிகப் பண்டங்களின்] தேக்கநிலை, ஒவ்வொரு பத்தாண்டிலும் நிகழும் நெருக்கடிகள், நச்சு வட்டம்; இங்கே உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திப் பொருள்களின் மிகை – அங்கே வேலைவாய்ப்பின்றி, பிழைப்புச் சாதனங்களின்றித் தவிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகை. ஆனால், உற்பத்திக்கும் சமூக நல்வாழ்வுக்குமான இவ்விரு உந்துசக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. காரணம், முதலாளித்துவ உற்பத்தி முறை உற்பத்தி சக்திகளை, முதலில் அவை மூலதனமாக மாற்றப்படாவிட்டால், அவற்றைச் செயல்படவிடாமல் தடுக்கிறது; உற்பத்திப் பொருள்களைப் புழங்கவிடாமல் தடுக்கிறது. [ஆனால்] அதே உற்பத்தி சக்திகளின் மிகைநிறைவுதான் அவை மூலதனமாக மாற முடியாதபடி தடுக்கின்றது. இந்த முரண்பாடு ஓர் அபத்தமாக வளர்ந்துவிட்டது. உற்பத்தி முறை பரிவர்த்தனை முறைக்கு எதிராகக் கலகம் புரிகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தினர் அவர்களின் சொந்தச் சமூக உற்பத்தி சக்திகளையே தொடர்ந்து நிர்வகிக்க இயலாத தகுதியின்மைக்காகக் குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.

(ஈ) உற்பத்தி சக்திகளின் சமூகத் தன்மையை, பகுதி அளவுக்கு அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் முதலாளிகளுக்கே ஏற்படுகிறது. உற்பத்திக்கும் தகவல்தொடர்புக்குமான மாபெரும் நிறுவனங்களை முதலில் கூட்டுப் பங்குக் குழுமங்களும், பிறகு பொறுப்பாண்மை அமைப்புகளும், அதன்பின் அரசும் உடைமையாக்கிக் கொள்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் தான் தேவையற்ற ஒரு வர்க்கம் எனத் தெளிவுபடுத்திக் காட்டிவிட்டது. அதனுடைய சமூகப் பணிகள் அனைத்தையும் தற்போது சம்பள அலுவலர்களே செய்து முடிக்கின்றனர்.

III. பட்டாளி வர்க்கப் புரட்சி – முரண்பாடுகளுக்கான தீர்வு [காணப்படுகின்றது]. பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. இதைப் பயன்படுத்தி, முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்திச் சாதனங்களைப் பொதுச் சொத்தாக மாற்றுகிறது. இச்செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம், உற்பத்திச் சாதனங்களை அவை இதுவரை சுமந்திருந்த மூலதனம் என்னும் தன்மையிலிருந்து விடுவிக்கிறது. அவற்றின் சமூகத் தன்மை தானே தீர்வு கண்டுகொள்ள முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது. இதுமுதற்கொண்டு, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒரு திட்டத்தின் அடிப்படையில் அமைந்த சமூகமயமான உற்பத்தி சாத்தியம் ஆகிறது. அதுமுதற்கொண்டு, உற்பத்தியின் வளர்ச்சி, சமுதாயத்தில் வேறுபட்ட வர்க்கங்கள் நிலவுவதை காலத்துக்கு ஒவ்வாததாய் ஆக்குகிறது. சமூக உற்பத்தியில் அராஜகம் எந்த அளவு மறைகிறதோ, அந்த அளவு அரசியல் ஆட்சியதிகாரம் மறைந்து போகிறது. முடிவில், தனக்கே உரிய சமூக நிறுவன வடிவத்தின் எஜமானனாகத் திகழும் மனிதன், அதேவேளையில், இயற்கையின் தலைவன் ஆகிறான். தனக்குத் தானே எஜமானன் ஆகிறான். அதாவது, சுதந்திரமடைகிறான்.

இந்த உலகளாவிய விடுதலைச் செயலை நிறைவேற்றுவது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். [இச்செயலுக்கான] வரலாற்று நிலைமைகளையும், அதன்மூலம் இச்செயலின் தன்மையையும்கூடத் தீர்க்கமாகப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு, இந்த நிலைமைகளைப் பற்றியும், அது நிறைவேற்றப் பணிக்கப்பட்டுள்ள மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயலின் நோக்கத்தைப் பற்றியும் முழுமையான அறிவை ஊட்ட வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விஞ்ஞான சோஷலிசத்தின் பணியாகும்.

(அத்தியாயம்-3 முற்றும்)
(நூல் முற்றும்)


அடிக்குறிப்புகள்

[அடிக்குறிப்பைப் படித்து முடித்தபின், அடிக்குறிப்பு எண்மீது சொடுக்கி, நூலின் உரைப்பகுதியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம்.]

[42] கையகப்படுத்தும் முறை அப்படியே இருந்தாலும்கூட, மேலே விவரிக்கப்பட்ட மாறுதல்களால், உற்பத்தியில் ஏற்படும் அதே அளவுக்குக் கையகப்படுத்தலின் தன்மையிலும் புரட்சிகர மாற்றம் ஏற்படுகிறது என்பதை இது தொடர்பாகச் சுட்டிக் காட்ட வேண்டிய தேவையில்லை. ஆனால் நான் என்சொந்த உற்பத்திப் பொருளைக் என்னுடையதாகக் கையகப்படுத்திக் கொள்கிறேனா அல்லது பிறர் ஒருவரின் உற்பத்திப் பொருளை என்னுடையதாகக் கையகப்படுத்திக் கொள்கிறேனா என்பது முற்றிலும் வேறான விஷயம். இடையில் இதையும் கவனிக்கவும்: ஒட்டுமொத்த முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கருவடிவில் கொண்டுள்ள கூலியுழைப்பு மிகவும் பழமையானது. அடிமை உழைப்பின் கூடவே, பல நூற்றாண்டு காலமாக, விட்டுவிட்டும், ஆங்காங்கேயும் இது இருந்து வந்துள்ளது. ஆனால், தேவையான வரலாற்று முன்னிபந்தனைகள் நிறைவேறும்போது மட்டுமே, இந்தக் கரு தக்கவாறு முதலாளித்துவ உற்பத்தி முறையாக வளர முடிந்தது. [ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

[43] மாபெரும் புவியியல் கண்டுபிடிப்புகள்: 1492-இல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததும், 1498-இல் வாஸ்கோ-டா-காமா இந்தியாவுக்குக் கடல்வழியைக் கண்டுபிடித்ததும் இவற்றில் மிகவும் முக்கியமானவை.

[44] வணிக யுத்தங்கள்: இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் வணிகத்தில் ஆதிக்கம் பெறவும், காலனிச் சந்தைகளைப் பிடிக்கவும், பிரதான ஐரோப்பிய நாடுகளிடையே 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற யுத்தங்களைக் குறிக்கிறது. தொடக்கத்தில் இங்கிலாந்தும் ஹாலந்தும் பிரதான போட்டி நாடுகளாக இருந்தன. 1652-54, 1664-67, 1672-74 ஆண்டுகளில் இந்த நாடுகளிடையே முக்கிய வணிக யுத்தங்கள் நடந்தன. பிறகு இங்கிலாந்துக்கும் ஃபிரான்சுக்கும் கடும் போராட்டம் நடைபெற்றது. இந்த யுத்தங்கள் அனைத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்று, 18-ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் அனேகமாக உலக வணிகம் அனைத்தையும் தன் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டது.

[45] ரிசர்வ் பட்டாளம்: இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை, சொனென்ஸ்சின் அண்ட் கோ, பக்கம்.64. [ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

[46] "வேண்டியிருக்கும்” என்று நான் கூறுகிறேன். ஏனெனில், உற்பத்தி சாதனங்களும், வினியோக சாதனங்களும் கூட்டுப் பங்குக் குழுமங்களால் மேற்கொள்ளப்படும் மேலாண்மையின் வடிவத்தை நடைமுறையில் விஞ்சி வளர்ந்துவிடும் போதுதான், அதன் காரணமாக, அச்சாதனங்களை அரசு தானே எடுத்துக் கொள்வது பொருளாதார ரீதியாகத் தவிர்க்க முடியாததாக ஆகும்போதுதான், அப்போது மட்டும்தான் – இதை நிறைவேற்றுவது இன்றைய அரசாகவே இருந்தாலும்கூட – அது ஒரு பொருளாதார முன்னேற்றமாக இருக்கும், உற்பத்தி சக்திகள் அனைத்தையும் சமுதாயம் தானே எடுத்துக் கொள்வதற்கு முன்னோட்டமாக அமையும் இன்னொரு படிநிலையை எட்டியதாகவும் இருக்கும். ஆனால், அண்மைக் காலமாகவே, பிஸ்மார்க் தொழில்துறை நிறுவனங்களை அரசுடைமை ஆக்க முனைந்தது முதலாகவே, ஒருவகையான போலி சோஷலிசம் முளைத்திருக்கிறது. அது அடிக்கடி, அதிக ஆரவாரமின்றி, அனைத்து அரசுடைமையுமே, பிஸ்மார்க்கிய வகையானதுகூட, சோஷலிச வகைப்பட்டது என்று அறிவிக்கும் அளவுக்கு ஒருவித அற்பவாதமாக இழிந்து போகிறது. புகையிலைத் தொழிலை அரசு எடுத்துக் கொள்வது சோஷலிசத் தன்மை வாய்ந்தது எனில், நெப்போலியனையும் மெட்டர்நிக்கையும் நிசாயமாக சோஷலிசத்தின் நிறுவனர்கள் வரிசையில் சேர்த்தாக வேண்டும். பெல்ஜிய அரசோ, மிகச் சாதாரண அரசியல் நிதியியல் காரணங்களுக்காக, தன்னுடைய பிரதான இரயில் பாதைகளைத் தானே கட்டியமைத்தது. பிஸ்மார்க்கோ பிரதான பிரஷ்ய இரயில் பாதைகளை, எவ்விதப் பொருளாதார நிர்ப்பந்தமும் இன்றி, அரசுடைமை ஆக்கினார். இரயில் பாதைகளை அரசின் கையில் வைத்துக் கொண்டால் போர் ஏற்படும் காலத்தில், நல்லதுதானே என்பதற்காகவும், இரயில்வே ஊழியர்களை அரசாங்கத்து ஆதரவாக வாக்களிக்கும் மந்தைகளாய் வளர்த்தெடுப்பதற்காகவும், முக்கியமாக, நாடாளுமன்றத்துக்கு வாக்குகளுக்கு உட்படாத, ஒரு புதிய வருவாய் ஆதாரத்தைத் தனக்காக உருவாக்கிக் கொள்வதற்காவும் பிஸ்மார்க் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். எனவே, இது எந்தப் பொருளிலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ, உணர்வு பூர்வமாகவோ, ஏதேச்சையாகவோ, ஒரு சோஷலிச நடவடிக்கை ஆகிவிடாது. அப்படிப் பார்த்தால், [மன்னருக்குச் சொந்தமான] இராயல் கடல்சார் நிறுவனமும், இராயல் பீங்கான் தொழிற்சாலையும், படைகளின் பட்டாளத்துத் தையல் துறையும்கூட சோஷலிச நிறுவனங்கள் ஆகிவிடும். ஏன், மூன்றாம் ஃபிரெடெரிக் வில்லியம் ஆட்சியின்போது, விபச்சார விடுதிகளை அரசு எடுத்துக் கொள்ள ஒரு கபட வேடதாரி அக்கறையுடன் பரிந்துரைத்த நடவடிக்கையும்கூட [சோஷலிச நடவடிக்கை ஆகிவிடாதா]! [ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு]

[47] சுதந்திர அரசு என்பது 1870-ஆம் ஆண்டுகளில் ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளின் வேலைத் திட்டத்தில் இடம்பெற்ற கோரிக்கை முழக்கம் ஆகும்.

[48] முதலாளித்துவ நெருக்கடிக்கு இடையேயும், நவீன உற்பத்திச் சாதனங்களின் பிரம்மாண்ட விரிவாக்கச் சக்தியைப் பற்றிக் குத்துமதிப்பாகத் தெரிந்து கொள்ள ஒருசில புள்ளி விவரங்கள் உதவலாம். திரு.கிஃபன் குறிப்பிட்டுள்ளபடி, இங்கிலாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மொத்தச் செல்வவளம், முழுமையாக்கப்பட்ட தொகையில்,

1814-இல் 220,00,00,000 பவுண்டுகள்
1865-இல் 610,00,00,000 பவுண்டுகள்
1875-இல் 850,00,00,000 பவுண்டுகள்

ஒரு நெருக்கடியின்போது, உற்பத்திச் சாதனங்களும் உற்பத்திப் பொருள்களும் விரயமாக்கப்படுவதற்கு ஓர் எடுத்துக்காட்டு: 1875-78 ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடியின்போது ஜெர்மன் இரும்புத் தொழிலில் மட்டும் ஏற்பட்ட மொத்த இழப்பு, இரண்டாவது தொழில்துறை காங்கிரசில் (பெர்லின், பிப்ரவரி 21, 1878) தரப்பட்ட கணக்குப்படி, 22,750,000 பவுண்டுகளாகும். [ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

(அத்தியாயம்-3 அடிக்குறிப்புகள் முற்றும்)
(நூல் முற்றும்)


இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
பதிப்புரிமை © 2009 மார்க்ஸியச் சிந்தனை மையம்