மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்
மார்க்ஸியச் சிந்தனை மையம்

அண்மைய பதிவுகள்

விரைவில்...

“கூலி, விலை, லாபம்”
– கார்ல் மார்க்ஸ்

கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்
(ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)

தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

1892-ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பின்[1] சிறப்பு முன்னுரை

தற்போதைய இச்சிறு நூல், தொடக்கத்தில் முழுமையான ஒரு பெரிய நூலின் பகுதியாக இடம்பெற்றதாகும். 1875-ஆம் ஆண்டுவாக்கில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் [சம்பளத்துக்குப் பதிலாக, மாணவர்களிடம் நேரடியாகக் கட்டணம் பெற்றுக் கொண்டு] விரிவுரையாளராகப் பணிபுரிந்த டாக்டர் இ.டூரிங், தாம் சோஷலிசத்தைத் தழுவிய செய்தியைத் திடீரெனச் சற்று ஆரவாரத்தோடு அறிவித்தார். ஜெர்மன் மக்களுக்கு ஒரு விரிவான சோஷலிசக் கோட்பாட்டை மட்டுமின்றி, சமுதாயத்தின் மறுசீரமைப்புக்கு ஒரு முழுமையான செயல்முறைத் திட்டத்தையும் முன்வைத்தார். எதிர்பார்த்தவாறே, அவரின் முன்னோடிகளோடு முரண்பட்டார். அனைவரையும்விட மார்க்சின்மீது தம் கடுங்கோபம் முழுவதையும் கொட்டித் தீர்த்து, மார்க்சுக்குப் பெருமை சேர்த்தார்.

அப்போது ஜெர்மனியில் சோஷலிஸ்டுக் கட்சியின் இரு பிரிவுகளான எய்ஸெனாஹர்களும் லஸ்ஸாலியர்களும்[2] தமக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதன்மூலம் தம் பலத்தைப் பெருமளவு அதிகரித்துக் கொண்டனர். அதுமட்டுமின்றி, அதைவிட முக்கியமாக அந்தப் பலம் முழுவதையும் தங்களின் பொதுப் பகைவர்க்கு எதிராகப் பயன்படுத்தும் ஆற்றலையும் பெற்றனர். [மேலே சொன்ன] டூரிங்கின் பிரவேசம் ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான் நிகழ்ந்தது. ஜெர்மனியில் சோஷலிஸ்டுக் கட்சி வெகுவேகமாக ஒரு சக்தியாய்ப் பரிணமித்து வந்தது. ஆனால், புதிதாக வென்றெடுக்கப்பட்ட ஐக்கியத்தை ஆபத்துக்கு உள்ளாக்காமல் பாதுகாப்பது, சோஷலிஸ்டுக் கட்சியை ஒரு சக்தியாக ஆக்குவதற்கான முதலாவது நிபந்தனையாக இருந்தது. டாக்டர் டூரிங் தம்மைச் சுற்றி, வருங்காலத் தனிக்கட்சி ஒன்றின் கருவாக விளங்கக்கூடிய ஓர் உட்குழுவை அமைத்திடப் பகிரங்கமாகவே செயலாற்றினார். இதனால், நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், எங்களுக்கு விடுக்கப்பட்ட இந்தச் சவாலை ஏற்றுப் போராட்டக் களம் புகுவது அவசியமாகி விட்டது.

இது மிகவும் கடினமானதாக இல்லாமல் இருக்கலாம். என்றாலும் நீண்ட நெடிய பணி என்பது தெளிவு. ஜெர்மானியர்களாகிய நாங்கள் [எதிலும் எப்போதும் முழுநிறைவுத் தன்மையை விரும்பும்] மிகமிகக் கனத்த முழுநிறைவுவாதிகள் (Grundlichkeit) என்பது அனைவரும் அறிந்ததே. இதை நீங்கள் தீவிரமான ஆழ்ந்த சிந்தனை என்றோ, ஆழமான தீவிர சிந்தனை என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். எங்களில் எவரேனும் ஒருவர் புதிய கோட்பாடு எனத் தாம் கருதும் ஒன்றை எடுத்துரைக்க விரும்பினால், அவர் முதலில் அதை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தத்துவ அமைப்பாக விரித்துரைக்க வேண்டும். தர்க்கவியலின் மூலமுதல் கோட்பாடுகளும் பிரபஞ்சத்தின் அடிப்படை விதிகளும் ஊழிக்காலந்தொட்டு நிலவி வந்ததெல்லாம், இறுதியில், மணிமுடியாகத் திகழும், புதிதாய்க் கண்டறியப்பட்ட இந்தக் கொள்கையை நோக்கி இட்டுச் செல்வதற்கே அன்றி வேறெந்த நோக்கத்துக்காகவும் இல்லை என்பதை அவர் நிரூபித்தாக வேண்டும். இந்த வகையில் டாக்டர் டூரிங் தேசியத் தரத்துக்குக் குறைந்தவரில்லை. சிந்தனை, அறநெறி, இயற்கை, வரலாறு இவற்றின் வழிப்பட்ட சற்றும் குறைவில்லாத ஒரு முழுநிறைவான ”தத்துவக் கருத்தமைப்பு”, ஒரு முழுநிறைவான ”அரசியல் பொருளாதார, சோஷலிசக் கருத்தமைப்பு”, முடிவாக, ”அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சன ரீதியான ஒரு வரலாறு”; எட்டாக மடிக்கப்பட்ட தாள் அளவில், உருவிலும் உள்ளடக்கத்திலும் கனமான மூன்று பெரிய தொகுதிகள்; பொதுவாகத் தமக்கு முற்பட்ட அனைத்துத் தத்துவ ஞானிகளுக்கும், பொருளாதார அறிஞர்களுக்கும், குறிப்பாக மார்க்சுக்கும் எதிராக முப்பெரும் படையணிகளாய்த் திரட்டப்பட்ட வாதங்கள்; உண்மையில், ”விஞ்ஞானத்தில் ஒரு முழுமையான புரட்சியை” உண்டாக்கும் ஒரு முயற்சி. இவற்றையெல்லாம் நான் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருந்தது. காலம், விண்வெளிபற்றிய கருத்துருக்கள் தொடங்கி, இரட்டை உலோக நாணயமுறை[3] வரையில், பருப்பொருள், இயக்கம் ஆகியவற்றின் அழியாத் தன்மை தொடங்கி, அறநெறிக் கருத்துகளின் அழியும் தன்மை வரையில், டார்வினுடைய இயற்கைத் தேர்வுமுறை தொடங்கி, வருங்காலச் சமுதாயத்தில் இளைஞர்களின் கல்வி வரையில், ஒன்று விடாமல் சாத்தியமான அனைத்து விவாதப் பொருள்கள் குறித்தும் நான் விளக்கியுரைக்க வேண்டியிருந்தது. என்றாலும், என்னுடைய எதிராளியின் முறைப்படுத்தப்பட்ட முழுதளாவிய அணுகுமுறை, மிகப் பல்வகைப்பட்ட இந்த விவாதப் பொருள்கள் குறித்து மார்க்சும் நானும் கொண்டிருந்த கருத்தோட்டங்களை, இதற்குமுன் செய்யப்பட்டிருந்ததைக் காட்டிலும் அதிக ஒருங்கிணைந்த வடிவில், அவருக்கு எதிராக முன்வைக்கும் வாய்ப்பினை எனக்கு அளித்தது. அதுவே இப்பணியை நான் மேற்கொள்வதற்கு முதன்மையான காரணம். மற்றபடி இது பலனேதும் இல்லாத பணியே ஆகும்.

என்னுடைய பதில் முதலில் சோஷலிஸ்டுக் கட்சியின் தலைமை ஏடான லைப்சிக் வோர்வார்ட்ஸ் (Leipzig Vorwarts) இதழில் தொடர் கட்டுரைகளாகவும், பிறகு திரு. ஒய்கேன் டூரிங் விஞ்ஞானத்தில் நிகழ்த்திய புரட்சி (Herr Eugen Duhrings Umwalzung der Wissenchaft) என்னும் நூலாகவும் வெளிவந்தது. இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1886-இல் ஜூரிச்சில் வெளிவந்தது.

தற்போது ஃபிரெஞ்சுப் பிரதிநிதிகள் சபையில் லீல் (Lille) நகரின் பிரதிநிதியாக இருக்கும் என் நண்பர் பால் லஃபார்க்கின் (Paul Lafargue) வேண்டுகோளுக்கு இணங்க இந்நூலின் மூன்று அத்தியாயங்களை ஒரு [தனிப்] பிரசுரமாக நான் ஒழுங்கமைத்தேன். அதனை அவர் கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் (Socialisme utopique et Socialisme scientifique) என்ற பெயரில் 1880-இல் [ஃபிரெஞ்சு மொழியில்] மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்த ஃபிரெஞ்சுப் பதிப்பிலிருந்து ஒரு போலிஷ் பதிப்பும், ஒரு ஸ்பானியப் பதிப்பும் தயாரிக்கப்பட்டன. 1883-இல் நம்முடைய ஜெர்மன் நண்பர்கள் இந்தப் பிரசுரத்தை அதன் மூல மொழியில் [ஜெர்மனியில்] வெளிக்கொணர்ந்தனர். அதன்பிறகு ஜெர்மன் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, இத்தாலிய, ருஷ்ய, டேனிஷ், டச்சு, ருமேனிய மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டன. இவ்வாறு, இச்சிறு நூல் தற்போதைய இந்த ஆங்கிலப் பதிப்பையும் சேர்த்து 10 மொழிகளில் வினியோகமாகி வருகிறது. வேறு எந்த சோஷலிச நூலும், 1848-ஆம் ஆண்டின் எங்களுடைய கம்யூனிஸ்டு அறிக்கை அல்லது மார்க்சின் மூலதனம் நூலேகூட இவ்வளவு அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவா என்பது எனக்குத் தெரியவில்லை. இந்நூல் ஜெர்மனியில் ஏறத்தாழ மொத்தம் 20,000 பிரதிகள் கொண்ட நான்கு பதிப்புகளைக் கண்டுள்ளது.

பின்னிணைப்பான மார்க்[4] (The Mark) என்பது ஜெர்மனியில் நிலவுடைமையின் வரலாற்றையும் வளர்ச்சியையும் பற்றிய சிறிதளவு அடிப்படை அறிவை ஜெர்மன் சோஷலிஸ்டுக் கட்சியினரிடையே பரப்பும் நோக்கத்துடன் எழுதப்பட்டதாகும். நகரங்களின் உழைக்கும் மக்களை இக்கட்சி தனக்குள் ஈர்த்துக் கொள்வது ஏறத்தாழ முழுமைபெற்ற நிலையிலும், விவசாயத் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திரட்டும் பணி உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நிலையிலும் இருந்த ஒரு காலகட்டத்தில் இது அனைத்தையும்விட அவசியமானதாகத் தோன்றியது. இந்தப் பின்னிணைப்பும் இம்மொழிபெயர்ப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. காரணம், டியூட்டானிக் இனக்குழுக்கள் (Teutonic tribes) அனைத்துக்கும் பொதுவான நிலவுரிமையின் மூல வடிவங்கள் பற்றியும் அவை சிதைந்துபோன வரலாறு பற்றியும் ஜெர்மனியைவிட இங்கிலாந்தில் இன்னுங்கூட குறைவாகவே தெரிந்திருக்கிறது. மாக்சிம் கோவலேவ்ஸ்கி (Maxim Kovalevsky) அண்மையில் தொடங்கி வைத்திருக்கும் கருதுகோளைப் பற்றி குறிப்பிட்டுக் காட்டாமலே, மூலத்தில் உள்ளவாறு அப்படியே விட்டுவிட்டேன். கோவலேவ்ஸ்கியின் கருத்துப்படி, சாகுபடி நிலங்களும் மேய்ச்சல் நிலங்களும் மார்க்கின் உறுப்பினர்களிடையே பிரிவினை செய்யப்படுவதற்கு முன்பாகப் பல தலைமுறைகளை உள்ளடக்கிய ஒரு பெரிய தந்தைவழிக் குடும்பச் சமூகம் கூட்டுக் கணக்கில் அவற்றைச் சாகுபடி செய்துவந்தது. (இப்போதும் எடுத்துக்காட்டாக நிலவிவரும் தெற்கு ஸ்லாவிய ஸாட்ருகா இனத்தைப்போல). காலப்போக்கில் கூட்டுக் கணக்கு மூலம் நிர்வகிக்க முடியாத அளவுக்கு இச்சமூகம் வளர்ந்து பெருகியபோதுதான் மேற்சொன்ன பிரிவினை நடைபெற்றது. கோவலேவ்ஸ்கியின் கருதுகோள் முற்றிலும் சரியானதாகவே இருக்கலாம். ஆனால் இந்த விவகாரம் இன்னும் விசாரணையில் இருந்து வரும் வழக்காகும். [எனவே அதுபற்றிக் கருத்துக் கூறலாகாது].

இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரவியல் கலைச்சொற்கள், அவற்றுள் புதியனவற்றைப் பொறுத்தவரை, மார்க்சின் மூலதனம் நூலின் ஆங்கிலப் பதிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களோடு ஒத்துப் போகின்றன. பொருள்கள் அவற்றின் உற்பத்தியாளர்களுடைய பயன்பாட்டுக்கு மட்டுமின்றி பரிவர்த்தனை நோக்கத்துக்காகவும், அதாவது பயன்மதிப்புகளாக (use-values) இல்லாமல் [பரிவர்த்தனைப்] பண்டங்களாக (commodities) உற்பத்தி செய்யப்படுகின்ற பொருளாதாரக் கட்டத்தை நாங்கள் ”பண்டங்களின் உற்பத்தி” என அழைக்கிறோம். இந்தக் கட்டம் பரிவர்த்தனைக்கான உற்பத்தியின் ஆதித் தொடக்கம்தொட்டு நம்முடைய இன்றைய காலம்வரையில் தொடர்ந்து வருகின்றது. [எனினும்] முதலாளித்துவ உற்பத்தியின் கீழ்தான், அதாவது, உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளரான முதலாளி, தம் சொந்த உழைப்புச் சக்தியைத் தவிர பிற உற்பத்திச் சாதனங்கள் எதுவும் சொந்தமில்லாத தொழிலாளர்களைக் கூலிக்காக வேலைக்கு அமர்த்தி, [உற்பத்தி செய்த] பொருள்களின் விற்பனை விலையில் தன் செலவுகள் போக எஞ்சும் தொகையைத் தனதாக்கிக் கொள்ளும் நிலைமைகளில்தான் இக்கட்டம் தன் முழு வளர்ச்சியை எட்டுகிறது. மத்திய காலத்துக்குப் பிந்தைய தொழில்துறை உற்பத்தியின் வரலாற்றை நாங்கள் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கின்றோம்:

(1) கைவினைத் தொழில்: சிறு தலைமைக் கைவினைஞருடன் சில உதவியாளர்களையும் (journeymen) பயிற்சியாளர்களையும் (apprenticeses) கொண்டது. [இங்கே] ஒவ்வொரு தொழிலாளரும் முழுமையான ஒரு பண்டத்தை உற்பத்தி செய்கிறார்.

(2) பட்டறைத் தொழில்: அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் குழுவாகச் சேர்ந்து, உழைப்புப் பிரிவினைக் கோட்பாட்டு அடிப்படையில், ஒரு முழுமையான பொருளை உற்பத்தி செய்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளியும் பணியின் ஒருபகுதியை மட்டுமே செய்கிறார். அடுத்தடுத்து அனைவருடைய கைகளுக்கும் சென்ற பிறகுதான் அப்பண்டம் முழுமை பெறுகின்றது.

(3) நவீனத் தொழில்துறை: விசையாற்றலால் இயக்கப்படும் எந்திர சாதனங்கள் மூலம் பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. தொழிலாளரின் வேலை என்பது எந்திரங்களின் செயல்பாட்டை மேற்பார்வையிடுதல், சரிசெய்தல் என்கிற வரம்புக்குள் அடங்கிவிடுகிறது.

இந்நூலின் உள்ளடக்கம் இங்கிலாந்து மக்களின் கணிசமான பகுதியினருடைய ஆட்சேபத்தை எதிர்கொள்ளும் என்பதை நான் நன்றாகவே அறிவேன். ஆனால் [ஐரோப்பியக்] கண்டத்தவரான நாங்கள் இங்கிலாந்துக் ”கௌரவத்தின்” தப்பெண்ணங்களைச் சற்றே கவனத்தில் கொண்டிருந்தாலும், இப்போது இருப்பதைக் காட்டிலும் நாங்கள் இன்னும் மோசமான நிலையைத்தான் அடைந்திருப்போம். இந்த நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (Historical Materialism) என நாங்கள் கூறுவதை நிலைநாட்டுகிறது. பொருள்முதல்வாதம் என்னும் சொல் இங்கிலாந்து வாசகர்களில் மிகப் பெரும்பான்மையோரின் செவிகளில் நாராசமாய் ஒலிக்கும். இவர்களுக்கு அறியொணாவாதம்[5] (Agnosticism) வேண்டுமானால் பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம், ஆனால் பொருள்முதல்வாதம் முற்றிலும் ஏற்புடையதன்று.

இருந்தபோதிலும், இங்கிலாந்துதான் 17-வது நூற்றாண்டு முதற்கொண்டே நவீன பொருள்முதல்வாதம் அனைத்தின் மூலத் தாயகமாகும்.

”பொருள்முதல்வாதம் என்பது இங்கிலாந்து வயிற்றில் பிறந்த பிள்ளையாகும். இங்கிலாந்தின் மதச் சித்தாந்தி டன்ஸ் ஸ்காட்டஸ் (Duns Scotus) ஏற்கெனவே ’பருப்பொருளால் சிந்தனை செய்ய முடியாதா, என்ன?’ என்று வினவினார்.

”இந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டும் பொருட்டு அவர் கடவுளின் சர்வ வல்லமையில் புகலிடம் தேடிக் கொண்டார் – அதாவது, அவர் இறையியல், பொருள்முதல்வாதத்தைப் போதிக்கும்படி செய்தார். தவிரவும் அவர் ஒரு பெயர்ப்போலிமைவாதி[6]. பொருள்முதல்வாதத்தின் தொடக்க வடிவமான பெயர்ப்போலிமைவாதம் பெருமளவு ஆங்கில மதச் சித்தாந்திகளிடையே காணப்படுகிறது.

”பேக்கன்தான் (Francis Bacon) ஆங்கிலப் பொருள்முதல்வாதத்தின் உண்மையான முன்னோடி ஆவார். அவருக்கு இயற்கைத் தத்துவம் மட்டுமே மெய்யான தத்துவம் ஆகும். அவருக்குப் புலன்களின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்பியல்தான் இயற்கைத் தத்துவத்தின் அதிமுதன்மையான பகுதியாகும். அனக்சாகோரசையும் (Anaxagoras) அவருடைய ஹோமியோமெரியாக்களையும்[7] (homoiomeriae), டெமாக்கிரீடசையும் (Democritus) அவருடைய அணுக்களையும் பேக்கன் அடிக்கடி தன்னுடைய ஆதராமாகக் குறிப்பிடுகிறார். பேக்கன் கருத்துப்படி, புலன்கள் பிழைபடாதவை, அனைத்து அறிவுக்கும் மூலமாக விளங்குபவை. விஞ்ஞானம் அனைத்தும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை. புலன்கள் அளிக்கும் விவரங்களைப் பகுத்தறிவு முறையிலான ஆய்வுக்கு உட்படுத்துவதில்தான் விஞ்ஞானம் அடங்கியுள்ளது. தொகுத்தாய்வு, பகுத்தாய்வு, ஒப்பீடு, கூர்ந்த கவனிப்பு, பரிசோதனை ஆகியவைதாம் இந்தப் பகுத்தறிவு முறையின் பிரதான வடிவங்கள் ஆகும். பருப்பொருளின் உள்ளார்ந்த பண்புகளுள் இயக்கம்தான் முதலாவதும் முதன்மையானதும் ஆகும். இந்த இயக்கம் எந்திரவியல், கணிதவியல் இயக்க வடிவத்தில் மட்டுமன்றி, பிரதானமாகப் பருப்பொருளின் உந்துசக்தி, உயிர்நாடியான ஆன்மா, இழுவிசை அல்லது ஜேக்கப் போமேயின் (Jakob Bohme) சொற்களில் கூறுவதெனில் ‘வதை’[8] ('qual') வடிவிலும் அப்பண்பினைக் காணலாம்.

”பொருள்முதல்வாதமானது, அதன் முதலாவது படைப்பாளியான பேக்கனின் கருத்துகளில், பன்முக வளர்ச்சிக்கான வித்துகளை இப்போதும் தனக்குள்ளே நிரப்பி வைத்துள்ளது. ஒருபுறம், பருப்பொருளானது ஓர் உணர்வுபூர்வமான கவித்துவ வசீகரத்தால் சூழப்பெற்று, வெற்றி கொள்ளும் புன்னகையால் மனிதனை முழுமையாக ஆட்கொண்டு கவர்ந்திழுப்பதாகத் தோன்றுகிறது. மறுபுறம், இரத்தினச் சுருக்கமாக வகுக்கப்பட்டுள்ள இந்தப் போதனையில் இறையியலிருந்து தருவிக்கப்பட்ட ஒவ்வாத கூறுகள் அரும்பிக் கிடக்கின்றன.

”அதன் அடுத்தகட்டப் பரிணாம வளர்ச்சியில் பொருள்முதல்வாதம் ஒருபக்கச் சார்புடையதாக ஆனது. பேக்கனியப் பொருள்முதல்வாதத்தை முறைப்படுத்திய மனிதர் ஹாப்ஸ் (Hobbes) ஆவார் . புலன்களை அடிப்படையாகக் கொண்ட அறிவு அதன் கவித்துவ மலர்ச்சியை இழந்து, கணிதவியலாளரின் கருத்தியல் அனுபவமாக மாறுகிறது. வடிவ கணிதம் விஞ்ஞானங்களின் அரசியாகப் பிரகடனம் செய்யப்படுகிறது. பொருள்முதல்வாதம் மனிதகுல விரோதப் பாதையிலே பயணிக்கிறது. பொருள்முதல்வாதம் அதன் எதிராளியான மனிதகுல–விரோத, சதையில்லா ஆன்மீகவாதத்தை வெற்றி கொள்ள, அதுவும் ஆன்மீகவாதத்தின் கோட்டையிலேயே அதை வெற்றி கொள்ள, தன் உடலைத் தானே தண்டித்துக் கொண்டு, துறவியாக மாற வேண்டியதாகிறது. இவ்வாறாக, புலனுணர்வு சார்ந்த கருத்துருவாக இருந்த பொருள்முதல்வாதம் அறிவாற்றல் சார்ந்த கருத்துருவாக மாற்றம் காண்கிறது. ஆனால் அதிலும் பின்விளைவுகளைப் பொருட்படுத்தாமல் அறிவாற்றலின் தன்மையாகிய முழு அளவிலான ஒத்திசைவினை வளர்த்தெடுக்கிறது.

”பேக்கனின் வழிவந்தவராக நின்று ஹாப்ஸ் இவ்வாறு வாதாடுகிறார்: மனித அறிவு அனைத்தும் புலன்களால் தருவிக்கப்படுகிறது எனில், பிறகு நமது கருத்துருக்களும் கருத்துகளும் (concepts and ideas), அவற்றின் புலனுணர்வு வடிவங்கள் நீங்கப் பெற்ற, எதார்த்த உலகின் பொய்த் தோற்றங்களே அன்றி வேறல்ல. தத்துவத்தால் இந்தப் பொய்த் தோற்றங்களுக்குப் பெயர்கள் சூட்ட மட்டுமே முடியும். [வேறு ஒன்றும் செய்ய முடியாது]. ஒரே பெயரை ஒன்றுக்கு மேற்பட்ட பொய்த் தோற்றங்களுக்குச் சூட்டலாம். பெயர்களுக்குங்கூட பெயர்கள் இருக்கலாம். ஒருபுறம் அனைத்துக் கருத்துகளும் புலனுணர்வின் உலகிலிருந்து பிறப்பவை என்று கூறிக்கொண்டு. மறுபுறம் ஒரு சொல் சொல்லைவிடக் கூடுதலானது என்றும், நம் புலன்கள் நமக்குத் தெரியப்படுத்துகின்ற, ஒன்றாகவும் தனித்தனியாகவும் நிலவும் உயிர்ஜீவிகளையன்றி, தனிப்பட்ட தன்மை கொண்டிராத, பொதுத் தன்மை கொண்ட உயிர்ஜீவிகளும் இருக்கின்றன என்றும் கூறுவோம் எனில் அது ஒரு முரண்பாட்டையே குறிக்கும். உருவமில்லா உருவம் என்பது எவ்வளவு அபத்தமோ, அதே அளவுக்கு உருவமில்லாப் பொருள் என்பதும் அபத்தமானதே. உருவம், இருத்தல், பொருள் இவையனைத்தும் ஒரே எதார்த்தத்தைச் சுட்டும் வெவ்வேறு சொற்களே அன்றி வேறல்ல. சிந்திக்கும் பருப்பொருளிலிருந்து சிந்தனையைத் தனியே பிரிக்க முடியாது. இந்தப் பருப்பொருள்தான் உலகில் நடைபெற்றுவரும் அனைத்து மாற்றங்களுக்கும் அடிநிலைக் கூறு. வரம்பிலி (infinite) என்னும் சொல், நம் மனம் [கணிதத்தில்] முடிவின்றித் தொடர்ந்து கூட்டிச் செல்லும் திறன்கொண்டது என்பதைக் குறிக்க வேண்டும். இல்லையேல் அச்சொல் பொருளற்றது ஆகும். பருப்பொருளான தன்மை கொண்டவற்றை மட்டுமே நம்மால் கண்டுணர முடிவதால், கடவுள் இருக்கிறாரா என்பதுபற்றி நாம் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. நான் இருக்கிறேன் என்பது மட்டுமே நிச்சயம். மனித உணர்ச்சி ஒவ்வொன்றும் ஓர் எந்திரவியல் இயக்கம் ஆகும். அது தொடக்கமும் முடிவும் கொண்டது. உந்துசக்திக்கான புறப்பொருள்களை நாம் நல்லவை என்கிறோம். இயற்கையைப் போன்று மனிதனும் அதே விதிகளுக்குத்தான் உட்பட்டுள்ளான். ஆற்றலும் சுதந்திரமும் வேறுபாடில்லாத ஒத்த கூறுகளே.

”பேக்கனின் கோட்பாடுகளை ஹாப்ஸ் முறைப்படுத்தினார். என்றாலும், அனைத்து மனித அறிவுக்கும் புலனுணர்வின் உலகே மூலம் என்கிற பேக்கனின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு ஹாப்ஸ் நிரூபணம் அளிக்கவில்லை. லோக் (Loke) என்பார் தாம் எழுதிய மனிதப் புரிதல் பற்றிய கட்டுரை (Essay on the Human Understanding) என்ற நூலில் இந்த நிரூபணத்தை அளித்தார்.

”பேக்கனியப் பொருள்முதல்வாதத்தின் ஆத்திகத் தப்பெண்ணங்களை ஹாப்ஸ் தகர்த்தெறிந்தார். அதுபோல, காலின்ஸ் (Collins), டாட்வெல் (Dodwell), கோவார்டு (Coward), ஹார்ட்லி (Hartley), பிரிஸ்ட்லி (Priestley) ஆகியோர் லோக் முன்வைத்த புலனுணர்வுவாதத்தின் விளிம்பில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் கடைசி இறையியல் தடைவரம்புகளைத் தகர்த்தெறிந்தனர். எப்படியும் நடைமுறைப் பொருள்முதல்வாதிகளுக்கு, [இயற்கைமத] இறையுண்மைக் கோட்பாடு[9] மதத்திலிருந்து விடுபட ஓர் எளிய வழிமுறை ஆகும்.”

(கார்ல் மார்க்ஸ், “புனிதக் குடும்பம்”, பக்கம் 201-204)

இங்கிலாந்தில் நவீனப் பொருள்முதல்வாதத்தின் தோற்றம்பற்றி கார்ல் மார்க்ஸ் மேற்கண்டவாறு எழுதினார். ஆங்கிலேயர்கள், அவர்தம் முன்னோர்களுக்குக் கார்ல் மார்க்ஸ் வழங்கிய பாராட்டுரைகளை இப்போதெல்லாம் அப்படியொன்றும் விரும்பவில்லை எனில், அது பரிதாபத்துக்கு உரியதே. ஆனாலும் பேக்கன், ஹாப்ஸ், லோக் ஆகியோரே உயர்சிறப்புக்குரிய ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதத் தத்துவ மரபுக்கு முன்னோடிகள் என்பது சற்றும் மறுக்க முடியாத உண்மையாகும். தரையிலும் கடலிலும் நடைபெற்ற அனைத்துப் போர்களிலும் ஜெர்மானியரும் ஆங்கிலேயரும் ஃபிரெஞ்சுக்காரர்களை வெற்றிகொண்ட போதிலும், ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதத் தத்துவ மரபுதான், 18-ஆம் நூற்றாண்டை ஒப்புயர்வற்ற ஃபிரெஞ்சு நூற்றாண்டாக ஆக்கியது. அதுவும் அந்நூற்றாண்டின் மணிமகுடமாகத் திகழும் ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பே அவ்வாறு செய்தது. இந்த ஃபிரெஞ்சுப் புரட்சியின் விளைவுகளுக்குப் பழக்கப்படுத்திக் கொள்ள இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் வாழும் வெளியாட்களான நாம் இன்னும்கூட முயன்று வருகிறோம்.

இதை மறுப்பதற்கு இயலாது. இந்த [19-ஆம்] நூற்றாண்டின் நடுப்பகுதிவாக்கில், இங்கிலாந்தில் வசிப்பிடம் அமைத்துக் கொண்ட ஒவ்வொரு பண்பட்ட வெளிநாட்டவரையும் துணுக்குறச் செய்தது எதுவெனில், அன்றைய நிலையில், ஆங்கிலக் கவுரவ நடுத்தர வர்க்கத்தின் மதவெறியையும் மூடத்தனத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்ததே ஆகும். அக்காலத்தில் நாங்கள் அனைவருமே பொருள்முதல்வாதிகளாக இருந்தோம். அல்லது குறைந்தது மத நம்பிக்கைகளுக்கு ஆட்படாத முன்னேறிய சிந்தனையாளராக இருந்தோம். இங்கிலாந்திலுள்ள படித்த மக்களில் அனேகமாக அனைவருமே அனைத்து வகைப்பட்ட சாத்தியமில்லா அதிசயங்களில் நம்பிக்கை கொண்டிருந்தனர். பக்லாண்டு (Buckland), மான்டெல் (Mantell) போன்ற புவியியல் அறிஞர்களுங்கூட, விவிலிய நூலில் காணப்படும் கட்டுக்கதைகளுக்கு அளவுக்கு அதிகமாக முரண்பட்டுவிடாமல் இருக்கும்பொருட்டு தங்களின் விஞ்ஞான உண்மைகளைத் திரித்துக் கூற வேண்டியிருந்தது. இவையெல்லாம் எங்களுக்கு எண்ணிப்பார்க்க முடியாதனவாகத் தோன்றின. மத விவகாரங்களைப் பொறுத்தமட்டில் தம் சொந்த அறிவாற்றலைப் பயன்படுத்தத் துணிந்த மக்களைக் காண வேண்டுமெனில், படிப்பறிவில்லாத மக்களிடையே, ”பாமரர் கூட்டம்” என்று அன்றைக்கு அழைக்கப்பட்ட உழைக்கும் மக்களிடையே, குறிப்பாக ஓவனிய சோஷலிஸ்டுகளிடையே செல்ல வேண்டியிருந்தது.

ஆனால் அதன்பிறகு இங்கிலாந்து “நாகரிகம்” அடைந்திருக்கிறது. 1851-ஆம் ஆண்டுக் கண்காட்சி [1851 மே முதல் அக்டோபர் வரை இலண்டனில் நடைபெற்ற உலக தொழில், வணிகத் துறை கண்காட்சி] , தனித்து ஒதுங்கி நின்ற ஆங்கிலக் குறுகிய மனப்பான்மைக்குச் சாவுமணி அடித்தது. உணவுமுறையிலும், நடையுடை பாவனைகளிலும், கருத்துகளிலும், இங்கிலாந்து படிப்படியாகச் சர்வதேச மயமானது. [ஐரோப்பியக்] கண்டத்தின் பழக்க வழக்கங்கள் இங்கே எந்த அளவுக்குப் பரவியுள்ளனவோ அந்த அளவுக்குச் சில ஆங்கில நடையுடை பாவனைகளும், மரபுகளும் [ஐரோப்பியக்] கண்டத்தில் பரவியிருந்தால் நன்றாயிருக்குமே என்று இப்போதெல்லாம் நான் ஆசைப்படுவதுண்டு. என்றபோதிலும், சாலடு எண்ணெய் (salad-oil) இங்கு அறிமுகம் ஆகி (1851-க்கு முன்பு இது பிரபுக் குலத்தோருக்கு மட்டுமே தெரிந்திருந்தது), [அதன் பயன்பாடு] பரவியதைத் தொடர்ந்து, கூடவே மத விவகாரங்களில் [ஐரோப்பியக்] கண்டத்தவருக்கு உரித்தான ஐயுறவுவாதமும் (scepticism) தவிர்க்க முடியாதபடி பரவியது. தற்போது எந்த அளவுக்கு வந்துள்ளது என்றால், கண்ணியவான் மனப்பாங்கைப் பொறுத்தவரை, அறியொணாவாதம் (agnosticism) இங்கிலாந்து திருச்சபையைப்போல (Church of England) அந்த அளவுக்குச் ”சமூக அளவில் ஏற்புடையதாக” இன்னமும் கருதப்படவில்லை. என்றாலும், இப்போதும் கவுரவத்தில் பாப்டிசத்துக்கு (Baptism) ஏறத்தாழ நிகரானதாகவும், நிச்சயமாக இரட்சண்ய சேனைக்கு[10] (Salvation Army) மேம்பட்டதாகவும் கருதப்படுகிறது. மதத்தின் மீதான அவநம்பிக்கை இவ்வாறு வளர்ந்து வருவது கண்டு பலரும் உண்மையிலேயே மனம்வருந்தி இந்தப் போக்கினைக் கண்டிக்கின்றனர். ஆனால் இவர்கள், இந்தப் ”புதுப்பாணி எண்ணப் போக்குகள்”, வெளிநாட்டுச் சரக்குகள் அல்ல, “ஜெர்மனித் தயாரிப்புகளும்” அல்ல. அன்றாடப் பயன்பாட்டில் இருந்துவரும் எத்தனையோ பிற பண்டங்களைப் போல அவை ஐயத்துக்கு இடமின்றிப் பண்டைய ஆங்கில (Old English) மூலம் கொண்டவை; அவற்றின் இங்கிலாந்து மூலவர்கள், 200 ஆண்டுகளுக்கு முன்பேயே இன்று அவர்களின் சந்ததியர் செல்லத் துணிவதைக் காட்டிலும் இன்னும் நெடுஞ்தொலைவு சென்றனர் என்கிற உண்மைகளை அறிந்து கொள்வார்கள் எனில், அது மேற்கூறிய நிலைமைகளில் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்குமென நான் நம்புகிறேன்.

அறியொணாவாதம் என்பது, பொருள்பொதிந்த லங்காஷயர் (Lancashire) வழக்கில் சொல்வதெனில், உண்மையிலேயே ”இலைமறை காயான” பொருள்முதல்வாதமே அன்றி வேறென்ன? இயற்கை பற்றிய அறியொணாவாதியின் கருத்தோட்டம் முழுக்கவும் பொருள்முதல்வாதத் தன்மை கொண்டதாகவே உள்ளது. இயற்கை உலகம் ஒட்டுமொத்தமும் [அகநிலை] விதிகளால் ஆளப்படுகிறது. வெளியிலிருந்து வரும் செயலின் தலையீட்டுக்குச் சிறிதும் இடமில்லை. ஆனால் அறியொணாவாதியோ இதோடு நில்லாமல், நமக்குத் தெரிந்த இப்பிரபஞ்சத்துக்கு அப்பால் கடவுள் ஒருவர் இருக்கிறார் என உறுதிப்படுத்தவோ, இல்லை என நிரூபிக்கவோ நம்மிடம் வழிமுறை ஏதுமில்லை எனச் சேர்த்துக் கொள்கிறார். இப்படிப்பட்ட ஒரு கருத்து, முன்பு மாபெரும் வானியல் வல்லுநர் லாப்லாஸ் (Laplace) அவர்களிடம், அவர் எழுதிய வான்மண்டல எந்திரவியல் பற்றிய ஆய்வறிக்கை (Treatise on Celestial Mechanics) என்னும் நூலில், உலகைப் படைத்தவரைக் குறிப்பிடக்கூட இல்லையே, ஏன் என நெப்போலியன் எழுப்பிய கேள்விக்கு, “இப்படியொரு கருதுகோள் எனக்குத் தேவைப்படவில்லை” என்று லாப்லாஸ் பெருமிதத்தோடு பதிலளித்தாரே, அந்தக் காலத்துக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில், பிரபஞ்சம் பற்றிய நம்முடைய பரிணாம வளர்ச்சிக் கருத்தோட்டத்தில் பிரபஞ்சத்தைப் படைத்தவருக்கோ, ஆள்பவர்க்கோ அறவே இடமில்லை. இப்போது நிலவிவரும் மொத்த உலகிலிருந்து விலகி ஒதுங்கியிருக்கும் கடவுள் பற்றிப் பேசுவது ஒரு முரண்பாட்டையே குறிக்கிறது. இது, மத நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வை வலியச் சென்று அவமதிக்கும் செயலாகவே எனக்குத் தோன்றுகிறது.

மேலும், நம் அறியொணாவாதி நம்முடைய அறிவு அனைத்தும் நம் புலன்கள் நமக்குத் தெரிவிக்கும் தகவலை அடிப்படையாகக் கொண்டது என்பதை ஒத்துக் கொள்கிறார். ஆனால், நம் புலன்கள் அவற்றின் மூலம் நாம் கண்டுணரும் புறப்பொருள்கள் (Objects) பற்றிய சரியான உருவகங்களைத் தருகின்றன என்று நாம் தெரிந்து கொள்வது எப்படி என்கிற கேள்வியையும் சேர்த்துக் கொள்கிறார். மேலும் அவர் நமக்குத் தெரிவிக்க முற்படுவது என்னவெனில், புறப்பொருள்களைப் பற்றி அல்லது அவற்றின் தன்மைகளைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம், அப்பொருள்கள் பற்றி உறுதியாக எதுவும் தெரிந்துகொள்ள முடியாத அவர், அப்பொருள்கள் அவருடைய புலன்களில் ஏற்படுத்திய எண்ணப் பதிவுகளையே பேசுகிறார். இந்த முறையிலான தர்க்க நியாயத்தை வெறும் வாக்குவாதத்தால் மட்டும் வீழ்த்துவது ஐயமின்றிக் கடினம் என்றே தோன்றுகிறது. ஆனால் வாக்குவாதத்துக்கு முன்னதாகச் செயல் இருந்தது. Im Anfang war die That [”ஆதியில் இருந்தது செயல்” - கதேயின் ஃபாஸ்ட் (Goethe's Faust) நாடகத்திலிருந்து]. மனிதக் கூர்மதி, சிக்கலைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் முன்பாகவே, மனிதச் செயல் அதற்குத் தீர்வு கண்டுவிட்டது. உணவைப் பற்றிய நிரூபணம் அதை உண்பதில் இருக்கிறது. புறப்பொருள்களில் நாம் கண்டுணரும் தன்மைகளுக்கு ஏற்ப அவற்றை நாம் நம் சொந்தப் பயன்பாட்டில் கையாளும் தருணம் முதற்கொண்டே, நம்முடைய புலனுணர்வு சரிதானா இல்லையா என்பதை ஐயந்திரிபற்ற சோதனைக்கு உட்படுத்துகிறோம். இந்தப் புலனுணர்வுகள் தவறாக இருந்திருக்கும் எனில், அப்பொருளை எதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது பற்றிய நம் மதிப்பீடும் தவறாகவே இருந்தாக வேண்டும். எனவே, நம் முயற்சி தோல்வியுறவே செய்யும். நம் நோக்கத்தை நிறைவேற்றுவதில் நாம் வெற்றி பெறுவோம் எனில், அதாவது, அப்பொருளைப் பற்றிய நம் கருத்தோடு அப்பொருள் ஒத்துப் போகிறது, மேலும் எந்த நோக்கத்துக்காக அப்பொருளைப் பயன்படுத்த எண்ணினோமோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்பது நமக்குத் தெரிய வருமாயின், அதுவே அப்பொருளைப் பற்றியும் அதன் தன்மைகள் பற்றியுமான நம் புலனுணர்வு எந்த அளவுக்கு நமக்குப் புறத்தே நிலவும் எதார்த்தத்துடன் ஒத்துப் போகின்றன என்பதற்கு முடிவான நிரூபணம் ஆகும். மேலும், நாம் ஒரு தோல்வியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போதெல்லாம் நம்மைத் தோல்வியுறச் செய்த காரணத்தை அறிந்து கொள்ளப் பொதுவாக அதிக காலம் ஆவதில்லை. நாம் எந்தப் புலனுணர்வை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டோமோ, அது முழுமையற்றதாகவும் மேலோட்டமானதாகவும் இருந்தது என்றோ, தேவையற்ற முறையில் பிற புலனுணர்வுகளின் விளைவுகளுடன் இணைத்துப் புரிந்து கொள்ளப்பட்டது என்றோ தெரிந்து கொள்கிறோம். இதனைப் பிழையான தர்க்க நியாயம் என்கிறோம். நம் புலன்களை முறையாகப் பயிற்றுவிக்கவும், முறையாக உணரப்பட்டு முறையாகப் பயன்படுத்தப்பட்ட புலனுணர்வுகளால் வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்குள் நம் செயல்பாட்டினை வைத்துக் கொள்ளவும் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும்வரை, நம் புலன்களால் உணரப்பட்ட பொருள்களின் புறநிலை இயல்புடன் நம் புலனுணர்வுகள் ஒத்துப் போதலை, நம் செயல்பாட்டின் விளைவு நிரூபிப்பதை நாம் நிச்சயம் காண்போம். விஞ்ஞான ரீதியில் நெறிப்படுத்தப்பட்ட நம் புலனுணர்வுகள் அவைதம் இயல்பான தன்மையாலேயே புற உலகு குறித்து எதார்த்தத்துக்குப் புறம்பான கருத்துகளை நம் மனதில் தோற்றுவிக்கின்றன, அல்லது, புற உலகுக்கும் அதைப் பற்றிய நம் புலனுணர்வுகளுக்கும் இடையே உள்ளார்ந்த ஒத்திசைவின்மை இருக்கிறது என்று இதுவரையில் ஒரே ஒருமுறைகூட நாம் முடிவுக்கு வர நேர்ந்ததில்லை.

ஆனால், நவீன-கான்டிய (Neo-Kantian) அறியொணாவாதிகள் நம்முன் வந்து கூறுகின்றனர்: ஒரு பொருளின் தன்மைகளை நாம் சரியாகக் கண்டுணரலாம். ஆனால், எந்தவொரு புலன்வழி அல்லது சிந்தனைவழிச் செயல்முறை மூலம் ”தன்னிலைப் பொருளை” (thing-in-itself) புரிந்து கொள்ள முடியாது. இந்தத் ”தன்னிலைப் பொருள்” நம் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டது. நெடுங்காலம் முன்பே ஹெகல் இதற்குப் பதிலுரைத்துள்ளார்: ஒரு பொருளின் அனைத்து தன்மைகளையும் நீங்கள் அறிந்திருப்பின், அப்பொருளையே நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். அப்பொருள் நாம் இல்லாமலே [புறத்தே] நிலவுகிறது என்கிற உண்மையைத் தவிர எதுவும் இருக்கவில்லை. உங்கள் புலன்கள் அவ்வுண்மையை உங்களுக்கு உணர்த்தும்போது, கான்டின் பிரசித்தி பெற்ற அறிந்துகொள்ள முடியாத Ding an sich என்னும் ”தன்னிலைப் பொருளின்” கடைசி மிச்சத்தையும் புரிந்துகொண்டு விடுகிறீர்கள். இதோடு இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். கான்டின் காலத்தில் இயற்கைப் பொருள்களைப் பற்றிய நம் அறிவு உண்மையில் முழுமையற்றதாகவே இருந்தது. எனவே, அப்பொருள்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நமக்கிருந்த சொற்ப அறிவின் பின்னால், புதிரான ”தன்னிலைப் பொருள்” ஒன்று இருக்கலாமென நியாயமாகவே அவர் சந்தேகப்பட்டிருக்கக் கூடும். புரிந்து கொள்ள முடியாத இப்பொருள்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் புரிந்து கொள்ளப்பட்டன, பகுத்தாயப்பட்டன. அதற்கும் மேலாக மாபெரும் விஞ்ஞான முன்னேற்றத்தின் பலனாக அப்பொருள்கள் மறுஉற்பத்தி செய்யப்பட்டுள்ளன. நாமே உற்பத்தி செய்ய முடிகிற ஒரு பொருளை அறிய முடியாததாக நிச்சயம் கருத முடியாது. இந்த [18-ஆம்] நூற்றாண்டின் முற்பாதியில் இருந்த இரசாயனவியலுக்கு அங்ககப் பொருள்கள் (organic substances) இத்தகைய புதிரான பொருள்களாகவே இருந்தன. இப்போது நாம் இப்பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக அவற்றின் இரசாயனத் தனிமங்களிலிருந்து அங்ககச் செயல்முறைகளின் உதவியின்றியே உருவாக்கக் கற்றுள்ளோம். எந்தப் பொருளாயினும் அதன் இரசாயனக் கட்டமைப்பைத் தெரிந்து கொண்டதுமே அதன் தனிமங்களிலிருந்து அப்பொருளை உருவாக்கிட முடியும் என நவீன இரசாயனவியல் அறிஞர்கள் அறிவிக்கின்றனர். உயர்நிலை அங்ககப் பொருள்களின் அதாவது அல்புமின் சேர்மங்களுடைய கட்டமைப்பை அறிந்து கொள்வதில் இன்னும் நாம் மிகவும் பின்தங்கியே உள்ளோம். ஆனால் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னருங்கூட நாம் இந்த அறிவைப் பெற்று, அந்த அறிவையே ஆயுதமாகக் கொண்டு, செயற்கை அல்புமினை உற்பத்தி செய்ய மாட்டோம் என்று கூற இது காரணமாக முடியாது. ஆனால், அல்புமினை நாம் உற்பத்தி செய்யும் நிலையை அடையும்போது, அதே வேளையில், அங்கக உயிரை உற்பத்தி செய்தவராகி விடுவோம். ஏனெனில், உயிரானது அதன் மிகவும் அதிகீழ்மட்ட வடிவங்களிலிருந்து அதியுச்சிமட்ட வடிவங்கள் வரையில் அல்புமின் சேர்மங்கள் நிலவுவதற்கான இயல்பான முறையே அன்றி வேறல்ல.

என்றாலும், நம் அறியொணாவாதி முறையான மன அளவிலான வரம்புகளை இட்டுக் கொண்டவுடனே அவர் அப்பட்டமான உயர்தரப் பொருள்முதல்வாதியைப் போன்றே பேசுகிறார், செயல்படுகிறார். பருப்பொருளும் இயக்கமும் (matter and motion), அல்லது இப்போது அழைக்கப்படுவது போல ஆற்றலும், நாம் அறிந்தவரை படைக்கவோ, அழிக்கவோ முடியாதவை என்றாலும், எப்போதோ ஒரு காலத்தில் அவை படைக்கப்படவில்லை என்பதற்கான நிரூபணம் நம்மிடம் இல்லை என அவர் கூறலாம். ஆனால், குறிப்பிட்ட எந்தவொரு சூழ்நிலையிலாவது, அவருடைய இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு எதிராகப் பயன்படுத்த நீங்கள் முயல்வீர்கள் எனில், உடனே அவர் உங்கள் வாதத்தைப் புறந்தள்ளுவார். ஆன்மீகவாதத்தின் சாத்தியப்பாட்டைக் கருத்தளவில் (in abstracto) ஏற்றுக்கொள்ளும் அவர் நடைமுறையில் (in concreto) புறக்கணித்து விடுகிறார். நாம் அறிந்த வரையிலும் அறிய முடிகிற வரையிலும் பிரபஞ்சத்தைப் படைத்தவனும் இல்லை, ஆள்பவனும் இல்லை என்று கூறுவார்; நம்மைப் பொறுத்தமட்டில் பருப்பொருளும் ஆற்றலும் படைக்கவோ அழிக்கவோ முடியாதவை; நமக்குச் சிந்தனை என்பது ஆற்றலின் ஒரு வடிவமாகும், மூளையின் செயல்பாடாகும்; நாம் அறிந்ததெல்லாம், பருப்பொருள் உலகம் மாற்ற முடியாத விதிகளால் ஆளப்படுகிறது; இன்னும் இதுபோல என்னவெல்லாமோ கூறுவார். இவ்வாறு, அவர் விஞ்ஞானம் வழிப்பட்ட மனிதராக இருக்கும்வரையில், அவர் ஏதோ ஒன்றை அறிந்தவராக இருக்கும்வரையில், அவர் ஒரு பொருள்முதல்வாதி ஆவார். அவருடைய விஞ்ஞானத்துக்கு வெளியே, அவர் எதுவும் அறிந்திடாத துறைகளில், அவர் தம் அறியாமையைக் கிரேக்க மொழியில் மொழிபெயர்த்து அறியொணாவாதம் (agnosticism) என்று கூறிக் கொள்கிறார்.

எது எப்படி இருந்தாலும், ஒன்று மட்டும் தெளிவானது: நான் ஓர் அறியொணாவாதியாக இருந்திருந்தாலும்கூட, இச்சிறு நூலில் சுருக்கமாக வரைந்து காட்டப்பட்டுள்ள, வரலாறு பற்றிய கருத்தோட்டத்தை, ”வரலாற்று அறியொணாவாதம்” (Historical Agnosticism) என்று நான் குறிப்பிட்டிருக்க முடியாது என்பது வெளிப்படை. மத நம்பிக்கை கொண்டோர் என்னைப் பார்த்துச் சிரித்திருப்பார்கள். அறியொணவாதிகள், எங்களை வைத்து நையாண்டி செய்கிறீர்களா என்று சீற்றத்துடன் கேட்டிருப்பார்கள். வரலாற்றின் வளர்ச்சிப் போக்கு குறித்த கருத்தோட்டத்தை, ஆங்கிலத்திலும் அதோடு ஏனைய பிற மொழிகள் பலவற்றிலும், ”வரலாற்றுப் பொருள்முதல்வாதம்” (Historical Materialism) என்னும் சொல்தொடரை நான் பயன்படுத்தினால், இங்கிலாந்துக் கவுரவ மனப்பான்மையர்கூட அளவுமீறி அதிர்ச்சி அடையமாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். வரலாற்றுப் பொருள்முதல்வாதம், முக்கியமான அனைத்து வரலாற்று நிகழ்வுகளுக்கும் முடிவான காரணத்தையும், அந்நிகழ்வுகளின் மாபெரும் உந்து சக்தியையும், சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி முறைகளிலும் பரிவர்த்தனை முறைகளிலும் ஏற்படும் மாறுதல்கள், அவற்றின் விளைவாக, வேறுபட்ட வர்க்கங்களை உருவாக்கும் சமுதாயப் பிரிவினை, அவ்வர்க்கங்கள் ஒன்றையொன்று எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் ஆகியவற்றில் கண்டறிய முனைகிறது.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் இங்கிலாந்துக் கவுரவ மனப்பான்மைக்கும்கூட அனுகூலமாக இருக்கலாம் என்பதை நான் எடுத்துக் காட்டினால், ஒருவேளை எனக்கு இந்தச் சிறப்புரிமை வெகுவிரைவிலேயே அளிக்கப்படலாம். சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தில் குடியமர்ந்த பண்பட்ட வெளிநாட்டினர் எவரையும், அவர் அன்றைய நிலையில் ஆங்கிலக் கவுரவ நடுத்தர வர்க்கத்தின் மதவெறியையும் மூடத்தனத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம், துணுக்குறச் செய்தது என்கிற உண்மையை நான் மேலே குறிப்பிட்டேன். அக்காலத்திய கவுரவமான ஆங்கில நடுத்தர வர்க்கம் அறிவார்ந்த வெளிநாட்டவர் கண்ணுக்குத் தெரிந்ததுபோல் அப்படியொன்றும் முட்டாள்தனமாக இருக்கவில்லை என்பதை நான் இப்போது நிரூபித்துக் காட்டப் போகிறேன். அவ்வர்க்கத்தின் மதப்பற்று புரிந்துகொள்ளக் கூடியதே.

மத்திய காலத்திலிருந்து ஐரோப்பா வெளித்தோன்றியபோது, நகரங்களில் உதித்தெழுந்து கொண்டிருந்த நடுத்தர வர்க்கம்தான் ஐரோப்பாவின் புரட்சிகரக் கூறாக உருவானது. மத்திய காலப் பிரபுத்துவ அமைப்பினுள்ளே அது அங்கீகாரத்துக்குரிய ஒரு நிலையை வென்றெடுத்தது. ஆனால், இந்த நிலையும்கூட அதன் விரிந்து பரவிய ஆற்றலுக்கு [ஏற்றவாறின்றி] மிகவும் குறுகியதாகவே ஆகிப் போனது. முதலாளித்துவ வர்க்கமான இந்த நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி, [அன்று நிலவிய] நிலப்பிரபுத்துவ அமைப்பு தொடர்வதற்கு முட்டுக்கட்டை ஆகியது. எனவே, நிலப்புரத்துவ அமைப்பு வீழ்ந்துபோக நேரிட்டது.

ஆனால், நிலப்பிரபுத்துவத்தின் மாபெரும் சர்வதேச மையமாய் இருந்தது ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையாகும். அது, நிலப்பிரபுத்துவ மேற்கு ஐரோப்பா முழுவதையும், உள்ளே நிகழ்ந்துவந்த அனைத்துப் போர்களையும் மீறி, இஸ்லாமிய நாடுகளுக்கும், அதே அளவுக்கு பிரிந்து போன கிரேக்கர்களுக்கும் எதிரான மாபெரும் அரசியல் அமைப்பாக ஒன்றுபடுத்தியது. அது, நிலப்பிரபுத்துவ நிறுவனங்களை புனித தீட்சையின் ஒளிவட்டத்தால் சூழ்ந்து கொண்டது. நிலப்பிரபுத்துவ அமைப்பை மாதிரியாகக் கொண்டு, தன் சொந்தப் படிநிலை அமைப்பை ஒழுங்கமைத்துக் கொண்டது. முடிவில், அது கத்தோலிக்க உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதியை முழுமையாகக் கைப்பற்றி வைத்துக் கொண்டு, தானே மிகமிகச் சக்திவாய்ந்த ஒரு நிலப்பிரபுவாகச் செயல்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும், விரிவான அளவில், மதச்சார்பற்ற நிலப்பிரபுத்துவத்தின் மீது வெற்றிகரமாகத் தாக்குதல் தொடுப்பதற்கு முன்பாக, அதன் புனித மைய நிறுவனமாகிய இந்தத் திருச்சபையை ஒழித்தாக வேண்டியிருந்தது.

அதோடு, நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து விஞ்ஞானம் மாபெரும் புத்தெழுச்சி பெற்று வளர்ந்தது. வானியல், எந்திரவியல், பௌதிகவியல், உடல் கூற்றியல், உடலியல் ஆகியவை மீண்டும் பேணி வளர்க்கப்பட்டன. மேலும், முதலாளித்துவ வர்க்கத்துக்கு, அதன் தொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சிக்காக, இயற்கைப் பொருள்களின் பௌதிகப் பண்புகளையும், இயற்கைச் சக்திகளின் செயல்பாட்டு முறைகளையும் ஆய்ந்தறியும் விஞ்ஞானம் தேவைப்பட்டது. இதுநாள்வரையில் விஞ்ஞானம் திருச்சபையின் பணிவுமிக்க பணிப்பெண்ணாகவே இருந்து வந்தது. மதநெறியால் விதிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டி வளர விஞ்ஞானம் அனுமதிக்கப்படவில்லை. அந்தக் காரணத்தால் அது விஞ்ஞானமாகவே இருக்க முடியவில்லை. விஞ்ஞானம் திருச்சபையை எதிர்த்துக் கலகம் புரிந்தது. முதலாளித்துவ வர்க்கத்தால் விஞ்ஞானம் இன்றிச் செயலாற்ற முடியவில்லை. எனவே, அதுவும் திருச்சபைக்கு எதிரான கலகத்தில் சேர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று.

வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கம் நிலைபெற்று நின்ற மதத்துடன் மோத வேண்டியிருந்த களங்களில் மேலே குறிப்பிட்ட இரண்டு மட்டுமே பின்வரும் உண்மைகளை எடுத்துக் காட்டப் போதுமானவை. முதலாவதாக, ரோமன் திருச்சபையின் ஏமாற்று வேடங்களுக்கு எதிரான போராட்டத்தில் மிக நேரடியாக அக்கறை கொண்டிருந்த வர்க்கம் முதலாளித்துவ வர்க்கம்தான். இரண்டாவதாக, நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான ஒவ்வொரு போராட்டமும் அக்காலத்தில் மத வேடம் பூண வேண்டியிருந்தது. அனைத்துக்கும் முதலாக திருச்சபைக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. நகரங்களிலுள்ள பல்கலைக் கழகங்களும் வணிகர்களும் குரல் எழுப்பத் தொடங்கினால், நாட்டுப்புற மக்கள் திரள்களிலும், தாங்கள் வெறுமனே பிழைப்பு நடத்த, மதம்சார்ந்த, மதம்சாராத தங்களின் நிலவுடைமைப் பிரபுக்களோடு எங்கெங்கும் போராட வேண்டியிருந்த விவசாயிகளிடத்திலும் நிச்சயம் வலுவான எதிரொலியை எழுப்ப வேண்டியிருந்தது. அவ்வாறே எழுப்பவும் செய்தது.

நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக நடந்த முதலாளித்துவ வர்க்கத்தின் நெடிய போராட்டம் தீர்மானகரமான மூன்று பெரும் போர்களில் உச்சத்தைத் தொட்டது.

அவற்றுள் முதலாவது போர், ஜெர்மனியில் நடைபெற்ற, புராட்டெஸ்டன்ட் சீர்திருத்தம் (Protestant Reformation) என்றழைக்கப்பட்ட ஒன்றாகும். திருச்சபைக்கு எதிராக லூதர் (Luther) எழுப்பிய போர்க்குரலுக்குச் செவிசாய்த்து, அரசியல் தன்மை வாய்ந்த இரு எழுச்சிகள் தோன்றின. முதலாவது, ஃபிரான்ஸ் வான் ஸிக்கின்கென் (Franz von Sickingen) தலைமையின் கீழ் கீழ்நிலைப் பிரபுக்கள் நடத்தியது (1523). அடுத்தது, 1525-இல் நடைபெற்ற மாபெரும் விவசாயிகள் போர் (Peasants' War). இரண்டும் தோற்கடிக்கப்பட்டன. இத்தோல்வி பிரதானமாக, போரில் மிகவும் அக்கறை கொண்ட தரப்பினர்களான நகரங்களைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களின் (burghers) உறுதியின்மையால் நேர்ந்ததாகும் – இங்கே நாம் இந்த உறுதியின்மைக்கான காரணங்களுக்குள் நுழைய இயலாது. அன்றுதொட்டு, இந்தப் போராட்டம் வட்டாரச் சிற்றரசர்களுக்கும் மைய அதிகாரத்துக்கும் இடையேயான சண்டையாகச் சீரழிந்து போனது. ஐரோப்பாவின் அரசியல் முனைப்புள்ள தேசங்களின் அணியிலிருந்து ஜெர்மனியை 200 ஆண்டுகளுக்கு விலக்கி வைப்பதில் முடிந்தது. லூதரனியச் சீர்திருத்தமோ உண்மையில் ஒரு புதிய மதநெறியை, எதேச்சாதிகார முடியாட்சிக்கு ஏற்புடைய ஒரு மதத்தைத் தோற்றுவித்தது. வடகிழக்கு ஜெர்மனியின் விவசாயிகள் லூதரனியத்துக்கு மதம் மாறிய கணமே, அவர்கள் சுதந்திர மனிதர்கள் நிலையிலிருந்து பண்ணையடிமைகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

ஆனால், எங்கு லூதர் தோற்றாரோ அங்குக் கால்வின் (Calvin) வெற்றி சூடினார். கால்வினுடைய மதநெறி, அவர் காலத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் துணிவு மிக்க பகுதியினருக்கு ஏற்ற ஒன்றாக இருந்தது. போட்டி மிகுந்த வணிக உலகில் வெற்றி அல்லது தோல்வி, ஒரு மனிதனின் செயல்பாடு அல்லது சாமர்த்தியத்தைச் சார்ந்தது இல்லை. அவனால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைமைகளைப் பொறுத்தே அமைகின்றன. கால்வினுடைய ஊழ்வினைக் கோட்பாடு இந்த உண்மையின் மதநெறிப்பட்ட வெளிப்பாடே ஆகும். இங்கு நடப்பதெல்லாம் ஒரு மனிதனின் எண்ணத்தையோ, அவனுடைய செயலையோ சார்ந்ததல்ல, யாருக்கும் தெரியாத அனைத்துக்கும் மேலான பொருளாதாரச் சக்திகளின் கருணையையே சார்ந்ததாகும். குறிப்பாகப் பொருளாதாரப் புரட்சி நிகழும் ஒரு காலகட்டத்தில் இது நிச்சயமான உண்மையாகும். அப்படியொரு காலகட்டத்தில், பழைய வணிகத் திசைவழிகளும் வணிக மையங்களும் மறைந்து அவற்றுக்குப் பதிலாகப் புதியவை தோன்றின. இந்தியாவும் அமெரிக்காவும் உலகுக்குத் திறந்து விடப்பட்டன. மிகவும் புனிதமான பொருளாதார நம்பிக்கையாதாரப் பொருள்களான தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மதிப்புங்கூட நிலைகுலைந்து சரியத் தொடங்கியது. கால்வினுடைய திருச்சபை சாசனம் முற்ற முழுக்க ஜனநாயகத் தன்மையும், குடியரசுத் தன்மையும் கொண்டதாக இருந்தது. கடவுளின் பேரரசு குடியரசுமயமாக்கப்பட்ட பிறகு இவ்வுலகின் பேரரசுகள் முடிமன்னர்களுக்கும் பிஷப்புகளுக்கும் பிரபுக்களுக்கும் கீழ்ப்பட்டதாக இருக்க முடியுமா? ஜெர்மன் லூதரனியம் சிற்றரசர்களின் கைகளில் உவப்பான கருவியாக ஆகியபோது, கால்வினியம் ஹாலந்தில் ஒரு குடியரசையும், இங்கிலாந்திலும், அனைத்துக்கும் மேலாக ஸ்காட்லாந்திலும், முனைப்பான குடியரசுக் கட்சிகளையும் நிறுவியது.

இரண்டாவது மாபெரும் முதலாளித்துவ எழுச்சி தனக்கு வேண்டிய கோட்பாட்டு விளக்கம் கால்வினியத்தில் முற்றிலும் தயாரான நிலையில் இருக்கக் கண்டது. இந்த எழுச்சி இங்கிலாந்தில் நடைபெற்றது. நகரங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கம் இதை நடத்தியது. நாட்டுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த குறுநிலக் கிழார் இனம் (yeomanry) போராடி அதை வெற்றிபெறச் செய்தது. இதில் விந்தையூட்டுவது என்னவெனில், மூன்று மாபெரும் முதலாளித்துவ எழுச்சிகள் அனைத்திலும் [முன்னணியில் நின்று] போரிட வேண்டிய சேனையாக அமைவது விவசாயி இனமே. வெற்றி கிட்டியபின் அந்த வெற்றியின் பொருளாதார விளைவுகளால், சர்வ நிச்சயமாக நாசமாகும் வர்க்கமும் இதே விவசாயி இனம்தான். குரோம்வெல்லுக்கு (Cromwell) பிறகு நூறு ஆண்டுகளில், இங்கிலாந்தின் குறுநிலக் கிழார் இனம் அனேகமாக மறைந்தொழிந்து போனது. என்றாலும், இந்த குறுநிலக் கிழார் இனமும், நகரங்களில் வாழ்ந்த பிளெபியன் (plebian) பகுதியினரும் இல்லாமல் முதலாளித்துவ வர்க்கத்தினர் மட்டும் ஒருபோதும் இந்தப் போராட்டத்தை அதன் இறுதி முடிவுவரை நடத்தி வென்றிருக்க மாட்டார்கள். முதலாம் சார்லஸ் மன்னரை ஒருபோதும் சிரச்சேதத்துக்கு உள்ளாக்கியிருக்க மாட்டார்கள். அக்காலகட்டத்தில் கனிந்துவந்து கைகூடிய முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றிகளையாவது தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு, புரட்சியைக் கணிசமான அளவுக்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருந்தது – 1793-இல் ஃபிரான்சிலும், 1848-இல் இங்கிலந்திலும் நடந்ததைப் போன்று முற்றிலும் அதே மாதிரி. உண்மையில் இது முதலாளித்துவ சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி விதிகளில் ஒன்றாக இருக்குமெனத் தோன்றுகிறது.

நல்லது, இத்தகைய மிகைப்படியான புரட்சிகரச் செயல்பாட்டுக்குத் தவிர்க்கவியலாத எதிர்வினை கட்டாயமாகப் பின்தொடர்ந்தது. இந்த எதிர்வினையும் அதன் பங்குக்குத் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கான எல்லையையும் தாண்டிச் சென்றது. இப்படித் தொடர்ந்து நிகழ்ந்த பல ஏற்ற இறக்கங்களுக்குப் பின், முடிவாகப் புதிய ஈர்ப்பு மையம் உருவானது. அதுவே ஒரு புதிய தொடக்கப் புள்ளியாக ஆனது. [இங்கிலாந்து] கவுர மனப்பான்மையினரால் ”மாபெரும் கலவரம்” என்ற பெயரில் அறியப்பட்ட, ஆங்கிலேய வரலாற்றின் இந்த மகத்தான காலகட்டமும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த போராட்டங்களும், ஒப்பீட்டளவில் அற்பமானதொரு நிகழ்ச்சியால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. மிதவாத வரலாற்று அறிஞர்கள் அந்நிகழ்ச்சிக்குப் ”'புகழ் படைத்த புரட்சி”[11] (the Glorious Revolution) எனப் பெயர் சூட்டினர்,

இந்தப் புதிய தொடக்கப் புள்ளி, வளர்ந்து வந்த நடுத்தர வர்க்கத்துக்கும் முன்னாள் நிலப்பிரபுத்துவ நில உடைமையருக்கும் இடையேயான ஒரு சமரசமாக இருந்தது. இந்த நில உடைமையர், இப்போதுபோலப் பிரபுக்குலம் (aristocracy) என்று அழைக்கப்பட்ட போதிலும், இதற்கு மிகவும் பிந்தைய ஒரு காலகட்டத்தில் ஃபிரான்சில் லூயீ ஃபிலிப்பைப் போல ”பேரரசின் முதலாவது முதலாளி” ஆவதற்கு அவர்களை இட்டுச் செல்லும் பாதையில் நீண்ட நாட்களுக்கு முன்பே அடியெடுத்து வைத்து விட்டார்கள். நல்ல வேளையாக, இங்கிலாந்தில் அதன் பழைய நிலப்பிரபுத்துவச் சீமான்கள் ரோஜாப் போரின்போது[12] ஒருவரையொருவர் கொன்று அழிந்தனர். அவர்களின் சந்ததியர், பெரும்பாலும் பழைய குடும்பங்களின் வழித்தோன்றல்களாக இருந்த போதிலும், நேரடி வாரிசு வழியிலிருந்து பெருமளவு விலகியவர்களாக இருந்தனர். நிலப்பிரபுத்துவத் தன்மையைவிட மிகுதியும் முதலாளித்துவத் தன்மையிலான பழக்க வழக்கங்களையும் போக்குகளையும் கொண்ட, முற்றிலும் ஒரு புதிய குழுவினராக அமைந்தனர். அவர்கள் பணத்தின் மதிப்பை நன்கு புரிந்து கொண்டிருந்தனர். உடனடியாக, நூற்றுக்கணக்கான சிறு விவசாயிகளை வெளியேற்றிவிட்டு, [தங்கள் நிலங்களில்] அவர்களுக்குப் பதிலாக ஆடுகளை [கிடைகளில்] நிரப்பி, அவர்களின் [நிலத்துக்கான] வாடகையை உயர்த்த முற்பட்டனர். எட்டாம் ஹென்ரி திருச்சபையின் நிலங்களை ஊதாரித் தனமாக வாரி வழங்கியபோது, புதிய முதலாளித்துவ நிலப்பிரபுக்களை கூட்டம் கூட்டமாக உருவாக்கினார். எண்ணற்ற பண்ணைகளைக் கைப்பற்றி, முற்றிலுமாக அல்லது ஓப்பீட்டளவில் புதிய முதலாளிகளுக்கு மறுவழங்கீடு செய்யப்பட்டன. 17-ஆம் நூற்றாண்டு முழுவதும் இது தொடர்ந்தது. இதன் காரணமாகவும் புதிய முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் ஏராளமாக உருவாயினர். இதன் விளைவாக, ஏழாம் ஹென்ரியின் காலத்திலிருந்தே ஆங்கில ”'பிரபுக்குலத்தினர்” தொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சியை எதிர்த்துச் செயல்படுவதற்கு மாறாக, மறைமுகமாக அதன்மூலம் இலாபம் ஈட்டவே முயன்றனர். பொருளாதார அல்லது அரசியல் காரணங்களை முன்னிட்டு, நிதித்துறை, தொழில்துறை சார்ந்த முதலாளித்துவ வர்க்கத்தினரின் முன்னணி நபர்களுடன் ஒத்துழைக்க விருப்பம் கொண்ட, பெரும் நிலவுடைமையரின் ஒரு பிரிவு எப்போதுமே இருந்து வந்தது. எனவே, 1689-ஆம் ஆண்டின் சமரசம் எளிதாகவே நிறைவேறியது. நிதி, பட்டறைத் தொழில், வணிகம் சார்ந்த நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார நலன்கள் தக்கவாறு கவனிக்கப்பட்ட வரையில், அரசியல் கொள்ளைப் பொருள்களான ”முறைகேடான செல்வமும் நிலமும்” பெரிய நிலவுடைமைக் குடும்பங்களிடமே விட்டு வைக்கப்பட்டன. [நடுத்தர வர்க்கத்தின்] இந்தப் பொருளாதார நலன்கள் அக்காலகட்டத்தில் தேசத்தின் பொதுக் கொள்கையைத் தீர்மானிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவையாக இருந்தன. சிறு விவகாரங்களைப் பற்றிய சச்சரவுகள் இருந்திருக்கலாம். ஆனால், மொத்தத்தில் பிரபுக்குல ஆட்சிக் கும்பல், தன்னுடைய பொருளாதாரச் செழிப்பு, தொழில்துறை, வணிகத்துறை சார்ந்த நடுத்தர வர்க்கத்தின் பொருளாதாரச் செழிப்புடன் பிரிக்க முடியாதபடி கட்டுண்டுள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தது.

அந்தக் காலகட்டம் முதலே முதலாளித்துவ வர்க்கம், இங்கிலாந்தின் ஆளும் வர்க்கங்களின் பணிவான ஒரு பகுதியாக, இருப்பினும் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியாக விளங்கியது. தேசத்தின் மிகப் பெருந்திரளான உழைக்கும் மக்களைக் கீழ்ப்படுத்தி வைத்திருப்பதில் [ஆளும் வர்க்கங்களின்] ஏனைய பகுதிகளுடன் முதலாளித்துவ வர்க்கமும் பொது அக்கறை கொண்டிருந்தது. வணிகர் அல்லது ஆலை அதிபர் தம் எழுத்தர்கள், தம் பணியாளர்கள், தம் வீட்டு வேலையாட்கள் ஆகியோரைப் பொறுத்தவரை எஜமானர் அல்லது அண்மைக் காலம்வரை அழைக்கப்பட்டதுபோல, ”இயற்கையாகவே மேலானவர்” (natural superior) என்னும் நிலையை வகித்தார். இவரால் முடிந்த அளவுக்கு அவர்களிடம் அதிகமாகவும், தரமானதாகவும் வேலை வாங்குவது அவருடைய அக்கறையாக இருந்தது. இதன்பொருட்டு, அவர்கள் முறையாகக் கீழ்ப்படிந்து நடக்க, அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது. அவர் [வணிகர் அல்லது பட்டறை உடைமையாளர்] தன்னளவில் மத நம்பிக்கை கொண்டவர். அவர் அரசரையும் பிரபுக்களையும் எதிர்த்துப் போரிட்டபோது அவருடைய மதமே அவருக்குப் போர்ப் பதாகையை வழங்கியது. இயற்கையாகவே அவருக்குக் கீழானவர்களின் மனங்களைத் தன் விருப்பத்துக்கு ஏற்ப வயப்படுத்தவும், கடவுளே விரும்பி, அவர்களுக்கு மேலான நிலையில் வைத்துள்ள எஜமானர்களின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர்கள் நடக்கும்படி செய்யவும், இதே மதம் அளித்துள்ள வாய்ப்புகளைக் கண்டுகொள்ள அவருக்கு அதிக நாள் ஆகவில்லை. சுருங்கக் கூறின், உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, தேசத்தின் மாபெரும் மக்கள் திரளான “கீழ்த்தட்டினரை”, தாழ்ந்த நிலையிலேயே இருந்தி வைத்திருக்கும் பணியில், இப்போது ஆங்கில முதலாளித்துவ வர்க்கத்தினர் பங்கெடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. மதத்தின் செல்வாக்கு, இந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட சாதனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது.

முதலாளித்துவ வர்க்கத்தினரின் மதச் சார்புகளை வலுப்படுத்த இன்னொரு காரணியும் இருந்தது. அது இங்கிலாந்தில் உதித்தெழுந்த பொருள்முதல்வாதமாகும். இந்தப் புதிய கோட்பாடு நடுத்தர வர்க்கத்தின் பக்தி உணர்வுகளை அதிர்ச்சியுறச் செய்தது; அதுமட்டுமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தினர் உட்பட படிப்பறிவில்லாத சாதாரண மக்களுக்குப் போதுமானதாக இருந்த மதத்தின் நிலைக்கு மாறாக, பொருள்முதல்வாதம், கற்றறிந்தவர்க்கும் பண்பட்ட மனிதருக்கும் மட்டுமே ஏற்றதொரு தத்துவமாகத் தன்னை அறிவித்துக் கொண்டது. ஹாப்ஸின் வருகையுடன் பொருள்முதல்வாதம் அரச குடும்பத்தின் தனிச்சிறப்புரிமை, வரம்பற்ற அதிகாரம் ஆகியவற்றின் பாதுகாவலனாக அரங்கில் நுழைந்தது. puer robustus sed malitiosus [பையன் துடிப்பானவன்தான், ஆனாலும் விசமத்தனமானவன் – ஹாப்ஸ் எழுதிய குடிமகன் என்னும் நூலின் முன்னுரையில் வரும் தொடர்] என்பார்களே, அத்தகைய மக்களை அடக்கி வைக்குமாறு அது எதேச்சாதிகார முடியரசுக்கு அழைப்பு விடுத்தது. இதுபோல, ஹாப்சுக்குப் பின்வந்த போலிங்பிராக் (Bolingbroke), ஷாஃப்ட்ஸ்பரி (Shaftesbury) முதலானோர் வழங்கிய புதிய இறையுண்மைவாத வடிவிலான பொருள்முதல்வாதம், பிரபுக்குலத் தன்மை வாய்ந்த, மேதாவிகளுக்கு மட்டுமே புரியக்கூடிய கோட்பாடாகவே இருந்தது. எனவே, அதனுடைய மத நம்பிக்கைக்கு எதிரான தன்மை, முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான அரசியல் தொடர்புகள், இந்த இரண்டின் காரணமாகவும் அது நடுத்தர வர்க்கத்தின் வெறுப்புக்கு ஆளானது. எனவே, பிரபுக்குலத்தின் பொருள்முதல்வாதத்துக்கும் இறையுண்மைவாதத்துக்கும் எதிராக, முன்பு ஸ்டூவர்ட்டுகளுக்கு (Stuarts) எதிராகப் போர்க்கொடியையும், போரிடும் படையணிகளையும் வழங்கிய அதே புராட்டெஸ்டன்ட் மதக் குழுக்கள்தாம், முற்போக்கான நடுத்தர வர்க்கத்துக்கு முக்கியமான வலிமையைத் தொடர்ந்து வழங்கி வந்தன. இன்றுங்கூட அக்குழுக்கள்தாம் ”மாபெரும் மிதவாதக் கட்சியின்” (the Great Liberal Party) முதுகெலும்பாக அமைந்துள்ளன.

இதற்கிடையில், பொருள்முதல்வாதம் இங்கிலாந்திலிருந்து ஃபிரான்சுக்குச் சென்றது. அங்கே அது மற்றொரு பொருள்முதல்வாதத் தத்துவவியல் மரபான கார்ட்டீசியனியத்தின்[13] (Cartesianism) ஒரு பிரிவோடு கலந்து சங்கமித்தது. ஃபிரான்சிலுங்கூட, தொடக்கத்தில் அது முற்றிலும் பிரபுக்குலத் தன்மை கொண்ட கோட்பாடாகவே விளங்கியது. ஆனால், விரைவிலேயே அதன் புரட்சிகரப் பண்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகள் தம் விமர்சனத்தை, மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் எதிர்கொண்ட விஞ்ஞான மரபு, அரசியல் நிறுவனம் எதுவாயினும், அவற்றுக்கும் அவர்களின் விமர்சனத்தை விரிவுபடுத்தினர். தங்களின் கோட்பாடு உலகளாவிய பயன்பாடு கொண்டது என்று கூறிக் கொள்வதை நிறுவும் பொருட்டு அவர்கள் குறுக்குவழியைக் கடைப்பிடித்தனர். அறிவுத்துறையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் தங்களின் கோட்பாட்டினைத் துணிச்சலுடன் பிரயோகித்து, . கலைக்களஞ்சியம் என்ற ஒரு பிரும்மாண்ட நூலில் தொகுத்து வைத்தனர். அதன் காரணமாக, அவர்கள் கலைக்களஞ்சியத்தார்[14] என்று அழைக்கப்பட்டனர். இவ்வாறாக, பகிரங்கப் பொருள்முதல்வாதம், இறையுண்மைவாதம் ஆகிய அதன் இரு வடிவங்களில் ஏதேனும் ஒரு வடிவில் அது ஃபிரான்சின் ஒட்டுமொத்த படித்த, பண்பாடுடைய இளைஞர்களின் வழிகாட்டும் நெறியாக ஆனது. அதுமட்டுமின்றி, ஆங்கில முடியரசுவாதிகள் வரைந்து கொடுத்த இந்தக் கோட்பாடு இவ்வாறு, மாபெரும் புரட்சி (Great Revolution) வெடித்தபோது, ஃபிரெஞ்சுக் குடியரசுவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் தத்துவார்த்தப் பதாகையைத் தந்தது. மனித உரிமைப் பிரகடனத்தின்[15] (Declaration of the Rights of Man) வாசகத்தை வழங்கியது. மாபெரும் ஃபிரெஞ்சுப் புரட்சி (The Great French Revolution) முதலாளித்துவ வர்க்கத்தின் மூன்றாவது எழுச்சியாகும். ஆனால், அதுதான் முற்றிலும் மத முகமூடியை கழற்றி எறிந்துவிட்டுப் போராடிய முதல் எழுச்சியாகும். அவ்வெழுச்சிப் போராட்டம் ஒளிவு மறைவற்ற அரசியல் வழிகளில் நடைபெற்றது. [போராட்டத்தில் மோதிக்கொண்ட] ஒருதரப்பு [முழுமையாக] அழிக்கப்பட்டு, மறுதரப்பு முழுமையான வெற்றியை ஈட்டும் வரையில் உண்மையாகவே இறுதிவரை நடத்திச் செல்லப்பட்ட முதல் எழுச்சியாகவும் அது விளங்கியது. அதில், ஒருதரப்பான பிரபுக்குலம் அழிக்கப்பட்டு, மறுதரப்பான முதலாளித்துவ வர்க்கம் வெற்றியை ஈட்டியது. இங்கிலாந்தில் புரட்சிக்கு முந்திய நிறுவனங்கள், புரட்சிக்குப் பிந்தைய நிறுவனங்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியும், நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான சமரசமும், நீதிமன்ற முன்மாதிரித் தீர்ப்புகளின் தொடர்ச்சியிலும், நிலப்பிரபுத்துவ கால வடிவிலான சட்டங்கள் பயபக்தியுடன் பாதுகாக்கப்பட்டதிலும் வெளிப்பட்டன. ஃபிரான்சில் புரட்சியானது பழங்கால மரபுகளிலிருந்து முற்றிலும் முறித்துக் கொண்டதாக இருந்தது. அது நிலப்பிரபுத்துவத்தின் இறுதிச் சுவடுகளையும் துடைத்தழித்தது. முதலாளித்துவ நிலைமைகளுக்கு உகந்தவாறு, பழைய ரோமானியச் சட்டத்தின் தேர்ந்த தழுவலாக விளங்கிய, உரிமையியல் சட்டத் தொகுப்பினை[16] (Code Civil) அது உருவாக்கியது. பண்டங்களின் உற்பத்தி [கட்டம்] என்று மார்க்ஸ் அழைத்த அந்தப் பொருளாதாரக் கட்டத்துக்குரிய, நீதிமுறை உறவுகளின், ஏறத்தாழ முழுநிறைவான வெளிப்பாடாக அது விளங்கியது. ஃபிரெஞ்சு நாட்டின் இந்தப் புரட்சிகரச் சட்டத் தொகுப்பு, விதிவிலக்கின்றி இங்கிலாந்து உட்பட, ஏனைய எல்லா நாடுகளிலும் சொத்துடைமைச் சட்டச் சீர்திருத்தங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இன்றும்கூடப் பயன்பட்டு வருகின்ற அளவுக்குத் திறம்பட உருவாக்கப்பட்டிருந்தது. இலண்டன் என்று எழுது, கான்ஸ்டாண்டிநோபிள் என்று வாசி (vous ecrivez Londres et vous prononcez Constantinople) என்று ஒரு ஃபிரெஞ்சுக்காரர் கூறியதுபோல, ஆங்கிலச் சொல்லின் எழுத்துகளுக்கும் ஆங்கில உச்சரிப்புக்கும் இசைவு கிடையாது. அதுபோல, விளக்கும் மொழிக்கும் விளக்கவரும் பொருளுக்கும் இசைவு இல்லாத அந்த அநாகரிக நிலப்பிரபுத்துவ மொழியில்தான் ஆங்கிலச் சட்டம் முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார உறவுகளைக் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. என்றாலும், இதே ஆங்கிலச் சட்டம்தான், இந்த ஆங்கிலச் சட்டம் ஒன்று மட்டும்தான், பழைய ஜெர்மானியத் தனிநபர் சுதந்திரம், வட்டார சுய-ஆட்சி, அனைத்துத் தலையீடுகளிலிருந்தும் (நீதிமன்றங்களின் தலையீடுகள் தவிர்த்து) விடுபட்ட சுயேச்சைநிலை ஆகியவற்றின் சிறந்த கூறுகளைக் காலங்காலமாகப் பேணிக்காத்து அவற்றை அமெரிக்காவுக்கும் காலனிகளுக்கும் வழங்கி இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இத்தகைய சிறந்த கூறுகள்தாம், [ஐரோப்பா] கண்டத்தில் எதேச்சாதிகார முடியாட்சிக் காலத்தில் இழக்கப்பட்டன. இன்னமும் அவை எங்குமே முழு அளவுக்கு மீட்கப்படவில்லை [என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்].

[இனி] நம் இங்கிலாந்து முதலாளியின் பக்கம் திரும்புவோம். [ஐரோப்பா] கண்டத்து முடியரசுகளின் உதவியுடன் ஃபிரெஞ்சுக் கடல்வழி வணிகத்தை அழிக்கவும், ஃபிரெஞ்சுக் காலனிகளைக் கைப்பற்றவும், கடல் ஆதிக்கப் போட்டிக்கு ஃபிரான்சிடம் எஞ்சியிருந்த கடைசி உரிமைத் தகுதிகளை நசுக்கவும், இங்கிலாந்து முதலாளிக்கு ஃபிரெஞ்சுப் புரட்சி அற்புதமான ஒரு வாய்ப்பை அளித்தது. இங்கிலாந்து முதலாளி ஃபிரெஞ்சுப் புரட்சியை எதிர்த்துப் போராடியதற்கு இது ஒரு காரணமாகும். இந்தப் புரட்சியின் வழிமுறைகள் அவருடைய மனப்பாங்குக்கு முற்றிலும் எதிராகச் சென்றன என்பது இன்னொரு காரணமாக அமைந்தது. ”அருவருக்கத்தக்க” அதன் தீவிரவாதம் மட்டுமின்றி, முதலாளித்துவ ஆட்சியை வரம்பு கடந்து, கடைக்கோடி எல்லைகளுக்கு எடுத்துச்செல்லும் அந்த முயற்சியேகூட [அவருக்கு ஏற்புடையதாயில்லை]. இங்கிலாந்து முதலாளி தம்முடைய பிரபுக்குலம் இல்லாமல் என்னதான் செய்ய முடியும்? அந்தப் பிரபுக்குலம்தானே, அவருக்கே உரித்தான நடையுடை பாவனைகளை அவருக்குக் கற்றுத் தந்தது; அவருக்கெனப் புதிய பாணிகளை உருவாக்கிக் கொடுத்தது; உள்நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டிய தரைப்படைக்கும், வெளிநாடுகளில் காலனிய நிலப்பரப்புகள், புதிய சந்தைகள் இவற்றை வென்று தந்த கடற்படைக்கும் அதிகாரிகளை அளித்தது. உண்மையிலேயே, முதலாளித்துவ வர்க்கத்தினரில் முற்போக்கான ஒரு சிறுபான்மையும் இருந்தது. சமரச ஏற்பாட்டின் கீழ் இந்தச் சிறுபான்மையின் நலன்கள் அவ்வளவு நன்றாகக் கவனிக்கப்படவில்லை. இந்தச் சிறுபான்மைக் குழு, பெரும்பாலும் குறைந்த செல்வச் செழிப்புள்ள நடுத்தர வர்க்கத்தினரைக் கொண்டிருந்தது. ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால், இக்குழு நாடாளுமன்றத்தில் அதிகாரம் இன்றி இருந்தது.

இவ்வாறு, பொருள்முதல்வாதம் ஃபிரெஞ்சுப் புரட்சியின் வழிகாட்டும் நெறியாக ஆனதெனில், கடவுள் பக்தி மிகுந்த ஆங்கில முதலாளியோ தம் மதத்தை மேலும் இறுகப் பற்றிக் கொண்டார். சாதாரண மக்களின் மத உள்ளுணர்வுகள் இழக்கப்படுமெனில், எத்தகு மோசமான விளைவு நேரும் என்பதைப் பாரிசில் நடைபெற்ற பயங்கர ஆட்சி நிரூபித்துக் காட்டவில்லையா? பொருள்முதல்வாதம் ஃபிரான்சிலிருந்து அண்டை நாடுகளுக்குப் பரவி, இதையொத்த கொள்கைநெறிப் போக்குகளால், குறிப்பாக ஜெர்மன் தத்துவவியலால், மேலும் வலுவூட்டப் பெற்றது; உண்மையில் பொருள்முதல்வாதமும் சுதந்திரச் சிந்தனையும் பொதுவாக [ஐரோப்பா] கண்டத்தில் பண்பட்ட மனிதர்களுக்கான அவசியத் தகுதிகளாக ஆகின. எந்த அளவுக்கு அதிகமாக இந்தப் போக்குகளைக் காண முடிந்ததோ, அந்த அளவுக்கு அதிகப் பிடிவாதத்துடன் ஆங்கில நடுத்தர வர்க்கம் பன்முகப்பட்ட தன் மத நெறிகளோடு இறுக்கப் பிணைத்துக் கொண்டது. இந்தக் கொள்கைநெறிகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருக்கலாம். என்றாலும், அவை அனைத்தும் தெளிவான மத அடிப்படை கொண்ட கிறிஸ்துவக் கொள்கை நெறிகளாகவே இருந்தன.

புரட்சியானது ஃபிரான்சில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் வெற்றியை உறுதிசெய்த அதேவேளை, இங்கிலாந்தில் வாட் (Watt), ஆர்க்ரைட் (Arkwright), கார்ட்ரைட் (Cartwright), ஆகியோரும் இன்ன பிறரும், ஒரு தொழில்புரட்சியைத் தொடங்கி வைத்தனர். அப்புரட்சி, பொருளாதாரச் சக்தியின் ஈர்ப்பு மையத்தை அடியோடு இடம்பெயரச் செய்தது. முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வவளம், நிலவுடைமைப் பிரபுக்குலத்தின் செல்வவளத்தைக் காட்டிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி, வேகமாகப் பெருகியது. முதலாளித்துவ வர்க்கத்துக்கு உள்ளேயே நிதித்துறை சார்ந்த பிரபுக்குலத்தினரான வங்கி அதிபர்கள் போன்றோர், மென்மேலும் அதிகமாக ஆலை அதிபர்களால் பின்னிலைக்குத் தள்ளப்பட்டனர். 1689-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சமரசம், முதலாளித்துவ வர்க்கத்துக்குச் சாதகமாக, படிப்படியான மாறுதல்களுக்கு உள்ளான பிறகுங்கூட, அச்சமரசத் தரப்புகளின் ஒப்பீட்டுப் பலத்துக்கு இசைவானதாக இப்போது இல்லை. இந்தத் தரப்புகளின் பண்பியல்புங்கூட மாறிவிட்டது. 1830-ஆம் ஆண்டின் முதலாளித்துவ வர்க்கம் முந்தைய நூற்றாண்டின் முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாக விளங்கியது. அரசியல் அதிகாரம் இன்னமும் பிரபுக்குலத்திடமே விட்டுவைக்கப்பட்டு இருந்தது. பிரபுக்குலம் அவ்வதிகாரத்தைப் புதிய தொழில்துறை முதலாளித்துவத்தின் உரிமைத் தகுதிகளை எதிர்த்து நிற்கப் பயன்படுத்தியது. [நாளடைவில்] அவ்வரசியல் அதிகாரம் புதிய பொருளாதார நலன்களுடன் முரண்பட்டுப் போனது. பிரபுக்குலத்துடன் ஒரு புதிய போராட்டம் தேவையாக இருந்தது. அத்தகு போராட்டம் புதிய பொருளாதார சக்தியின் வெற்றியில்தான் முடிவதாக இருக்கும். முதலாவதாக, 1830-ஆம் ஆண்டில் நடந்த ஃபிரெஞ்சுப் புரட்சியின் உத்வேகத்தில் சீர்திருத்தச் சட்டம்[17] (Reform Act) அனைத்து எதிர்ப்பையும் மீறி உடனே நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் முதலாளித்துவ வர்க்கத்துக்குக் குறிப்பிடத்தக்க, சக்திவாய்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது. அதன்பின் தானியச் சட்டங்கள்[18] (Corn Laws) இரத்து செய்யப்பட்டதானது [கட்டுப்பாடற்ற வணிகத்துக்கான ஒரு நடவடிக்கை], நிலவுடைமைப் பிரபுக்குலத்தின் மீது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்தை, அதிலும் முக்கியமாக அதன் முனைப்பு மிக்க பகுதியான ஆலை அதிபர்களின் ஆதிக்கத்தை இறுதியாகவும் உறுதியாகவும் நிலைநிறுத்தியது. இது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆகப்பெரும் வெற்றியாகும். என்றபோதிலும், அதுவே அவ்வர்க்கம் தன் சொந்தத் தனிப்பட்ட நலனுக்காகப் பெற்ற கடைசி வெற்றியாகவும் அமைந்தது. அதன்பிறகு இவ்வர்க்கம் பெற்ற வெற்றி எதுவாயினும், அதன் கூட்டாளியாக முதலில் இருந்து, ஆனால் விரைவிலேயே அதன் எதிராளியாக மாறிப்போன, ஒரு புதிய சமூக சக்தியுடன் அவ்வெற்றியைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது.

தொழில்புரட்சி பெரிய ஆலை முதலாளிகளின் வர்க்கம் ஒன்றைத் தோற்றுவித்தது. அதைவிட எண்ணிக்கையில் அதிகமான ஆலைத் தொழிலாளிகளின் வர்க்கத்தையும் கூடவே தோற்றுவித்தது. தொழில்புரட்சியானது தொழில் உற்பத்தியில் ஒரு துறைக்குப்பின் இன்னொன்று என ஒவ்வொன்றாகப் பற்றிப் படர்ந்த அதே விகிதத்தில், இந்த ஆலைத் தொழிலாளி வர்க்கமும் படிப்படியாக எண்ணிக்கையில் அதிகரித்தது. அதே விகிதத்தில் இவ்வர்க்கம் அதன் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டது. தொழிலாளர்களின் கூட்டமைப்புகளுக்குத் தடை விதித்த சட்டங்களை நீக்கத் தயக்கம் காட்டிய நாடாளுமன்றத்தைக் கட்டாயப்படுத்தியதன் மூலம், 1824-ஆம் ஆண்டு வாக்கிலேயே இவ்வர்க்கம் இந்த ஆற்றலை நிரூபித்துக் காட்டியது. சீர்திருத்தக் கிளர்ச்சியின்போது தொழிலாளர்கள், சீர்திருத்தக் கட்சியின் தீவிரக்கொள்கைப் பிரிவாக அமைந்து செயல்பட்டனர். 1832-ஆம் ஆண்டுச் சட்டம் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்காமல் ஒதுக்கியதும், அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மக்கள் உரிமைச் சாசனத்தில் (People's Charter) வகுத்தமைத்தனர். மாபெரும் முதலாளித்துவத் தானியச் சட்ட எதிர்ப்புக் கட்சிக்கு[19] (Anti-Corn Law Party) எதிராகத் தங்களை ஒரு சுயேச்சையான கட்சியாக அமைத்துக் கொண்டனர். அதுதான் நவீன காலத்தின் முதலாவது தொழிலாளர் கட்சியான சாசனவாத (Chartists) இயக்கமாகும்.

அதன்பிறகு, [ஐரோப்பா] கண்டத்தின் 1848 பிப்ரவரி, மார்ச் புரட்சிகள் நடைபெற்றன. அவற்றில் உழைக்கும் மக்கள் மிகவும் முக்கியமானதொரு பங்கு வகித்தனர். குறைந்தது பாரிஸ் எழுச்சியிலேனும், முதலாளித்துவச் சமுதாயத்தின் கண்ணோட்டப்படி நிச்சம் அனுமதிக்க முடியாத கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்குப்பின் பொதுவான பிற்போக்கு வந்து சேர்ந்தது. முதலாவதாக, 1848 ஏப்ரல் 10-இல் சாசனவாதிகளின் தோல்வி30; அடுத்து, அதே ஆண்டு ஜூனில், பாரிஸ் தொழிலாளர்களின் எழுச்சி நசுக்கப்படுதல்;. பிறகு, இத்தாலி, ஹங்கேரி, தெற்கு ஜெர்மனியில் 1849-இன் பேரழிவு; முடிவாக, 1851 டிசம்பர் 2-இல் பாரிஸ்மீது லூயீ போனப்பார்ட்டின் வெற்றி31. தற்காலிகமாவது, தொழிலாளி வர்க்க உரிமைத் தகுதிகளின் [நிலைநாட்டப்படும்] அபாயம் அடக்கி ஒடுக்கப்பட்டது. ஆனால் என்ன விலைகொடுத்து [இது சாதிக்கப்பட்டது]! இங்கிலாந்து முதலாளி, சாதாரண மக்களை மத மனநிலையில் வைத்திருப்பதன் அவசியத்தை முன்பே உணர்ந்திருந்தார் என்றாலும், இந்த அனுபவங்கள் அனைத்துக்கும் பின்பு, அந்த அவசியத்தை இன்னும் எவ்வளவு அதிகமாக உணர்ந்திருப்பார்? [ஐரோப்பா] கண்டத்தைச் சேர்ந்த தன் கூட்டாளிகளின் ஏளனப் பேச்சுகளைப் பொருட்படுத்தாமல், அடித்தட்டு மக்களைக் கிறித்துவ மதநெறிப்படுத்த, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கிலும் பத்தாயிரக்கணக்கிலும் தொடர்ந்து செலவிட்டு வந்தார். இப்பணிக்குத் தன் சொந்த நாட்டு மதப் பணிக்குழுக்களுடன் திருப்தியடையாமல், மத நிகழ்ச்சிகளை வணிக முறையில் ஏற்பாடு செய்யும் உலகின் மிகப்பெரும் அமைப்பாளர், சகோதரர் ஜொனாதனுக்கு[20] (Brother Jonathan) வேண்டுகோள் விடுத்தார். மதப் புத்துயர்ப்புவாதத்தையும்[21] (Revivalism), [மதப் பிரச்சாரர்களான] மூடி, சாங்கி, இன்ன பிறரையும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தார். முடிவாக, இந்த இங்கிலாந்து முதலாளி, இரட்சண்யச் சேனை (Salvation Army) அமைப்பின் ஆபத்தான உதவியையும் ஏற்றுக் கொண்டார். இந்த அமைப்பு, பண்டைய கிறித்துவ மதத்தின் பிரசாரத்துக்குப் புத்துயிர்ப்பு அளிக்கிறது. ஏழைகளே [தேவனால்] தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. மத வழியில் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போரிடுகிறது. இவ்வாறாக அது பண்டைய கிறித்துவ வர்க்கப் பகைமையின் ஒரு கூறைப் பேணி வளர்க்கிறது. இன்று தங்கள் கைப்பணத்தை வாரி வழங்கும் செல்வந்தர்களுக்கு இதே கூறு ஒருநாள் தொல்லையாக முடியலாம்.

மத்திய காலத்தின்போது நிலப்பிரபுத்துவப் பிரபுக்குலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருந்தது போல, முற்றிலும் அதே பிரத்தியேகத் தன்மையுடன், முதலாளித்துவ வர்க்கம், எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும் அரசியல் அதிகாரத்தைச் சிறிது காலத்துக்கேனும் வைத்துக்கொள்ள முடியவில்லை என்பது, வரலாற்று வளர்ச்சிப்போக்கின் ஒரு விதியாகவே தோன்றுகிறது. நிலப்பிரபுத்துவம் முற்றிலும் துடைத்தழிக்கப்பட்ட ஃபிரான்சில்கூட ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கம் மிகக் குறுகிய காலங்களுக்கு மட்டுமே அரசாங்கத்தை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. லூயீ ஃபிலிப்பின் ஆட்சிக் காலத்தில், 1830 – 1848 ஆண்டுகளில், முதலாளித்துவ வர்க்கத்தின் மிகச்சிறிய ஒரு பகுதிதான் அரசை ஆட்சி புரிந்தது. மிகப்பெரிய பகுதி, உயர்ந்த தகுதி வரம்பு காரணமாக வாக்குரிமையின்றி விலக்கப்பட்டிருந்தது. இரண்டாவது குடியரசின்கீழ், 1848 – 1851 ஆண்டுகளில் ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தினர் ஆட்சி நடத்தினர். ஆனால், அவ்வாட்சி மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அவர்களின் திறமையின்மை இரண்டாவது பேரரசைக் கொண்டு வந்தது. இந்த முறைதான், அதாவது மூன்றாவது குடியரசில்தான், ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கம் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியதிகாரத்தைத் தன்பிடியில் வைத்துள்ளது. அதற்குள்ளாக, ஏற்கெனவே வீழ்ச்சிக்குரிய உயிர்த்துடிப்பான அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகின்றனர். நிலப்பிரபுத்துவத்தை அறிந்திடாத, சமுதாயம் தொடக்கநிலையிலேயே முதலாளித்துவ அடித்தளத்திலிருந்து தொடங்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே முதலாளித்துவ வர்க்கத்தின் நீடித்து நிலைபெற்ற ஆட்சி சாத்தியமாக இருந்துள்ளது. மேலும் ஃபிரான்சிலும் அமெரிக்காவிலும்கூட முதலாளித்துவ வர்க்கத்தாரின் வாரிசுகளாகிய உழைக்கும் மக்கள் ஏற்கெனவே கதவைத் தட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

இங்கிலாந்தில் முதலாளித்துவ வர்க்கம் யாருடனும் பகிர்ந்துகொள்ளாத தனி ஆட்சியதிகாரத்தை என்றுமே வகித்ததில்லை. 1832-ஆம் ஆண்டு வெற்றிகூட அனேகமாக முதன்மையான அனைத்து அரசாங்க அலுவலகங்களையும் நிலவுடைமைப் பிரபுக்குலத்தின் கட்டுப்பாட்டிலேயே விட்டு வைத்தது. நடுத்தர வர்க்கம் பணிவுடன் இவ்வாட்சிக்குக் கீழ்ப்படிந்தது. மிகப்பெரிய மிதவாத ஆலை முதலாளி திரு.டபிள்யூ.ஏ.ஃபோர்ஸ்டர் (W.A.Forster) நிகழ்த்திய ஒரு பொதுக்கூட்டச் சொற்பொழிவுக்கு முன்புவரை இது எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது. ஃபிரெஞ்சு மொழியைக் கற்றுக் கொள்ளும்படி பிராட்ஃபோர்டு (Bradford) நகரின் இளைஞர்களை அச்சொற்பொழிவில் ஃபோர்ஸ்டர் மன்றாடிக் கேட்டுக் கொண்டார். உலகில் அவர்கள் முன்னேறிச் செல்ல அதுவொரு வழியாகும் என்றார். அவர்தம் சொந்த அனுபவத்தை எடுத்துக்காட்டிப் பேசினார். ஆங்கிலம் போன்று, குறைந்தது அதே அளவுக்கு ஃபிரெஞ்சு மொழியும் அவசியமாயிருந்த உயர்குடி வட்டாரத்தில், ஓர் அமைச்சராகப் பழக நேர்ந்தபோது எவ்வளவு அசடாகத் தம்மைப் பார்த்தனர் என்பதைச் சுட்டிக் காட்டினார். உண்மை என்னவெனில், அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் கல்வியறிவில்லாத புதுப் பணக்காரர்களாகவே இருந்தனர். தொழில் சாமர்த்தியத்தால்[22] தாளிக்கப்பட்ட, [பிறரோடு கலக்காமல்] ஒதுங்கியிருக்கும் குறுகிய மனப்பான்மையையும், ஒதுங்கியிருக்கும் இறுமாப்பையும்விடப் பிற தகுதிகள் தேவைப்படுகின்ற அதிகாரம் மிக்க அரசாங்கப் பதவிகளைப் பிரபுக்குலத்தினரிடமே விட்டுவிடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இப்போதுங்கூட, நடுத்தர வர்க்கத்தின் கல்வி குறித்துப் பத்திரிக்கைகளில் நடைபெறும் முடிவில்லாத வாக்குவாதங்கள், ஆங்கில நடுத்தர வர்க்கம், சிறந்த கல்விபெறும் அளவுக்கான தகுதி தனக்கு உண்டென இன்னமும் கருதவில்லை என்பதுடன், மிகவும் மிதமான கல்வியையே நாடுகிறது என்பதையே காட்டுகின்றன. தானியச் சட்டங்கள் இரத்து செய்யப்பட்ட பிறகுங்கூட, அன்றைய முன்னணி மனிதர்களான காப்டென்களும், பிரைட்டுகளும், ஃபோர்ஸ்டர்களும், இன்ன பிறரும், நாட்டின் அதிகாரபூர்வமான அரசாங்கத்தில் ஒரு பங்கினைப் பெறமுடியாதவாறு இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருந்தது, முற்றிலும் இயல்பானதாகவே தோன்றுகிறது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதிய சீர்திருத்தச் சட்டம் (Reform Act) நிறைவேறிய பிறகே, அமைச்சரவையின் கதவு இவர்களுக்குத் திறக்கப்பட்டது. ஆங்கில முதலாளித்துவ வர்க்கத்தினர் இன்றைய நாள்வரைக்கும் அவர்களுடைய சமூக ரீதியான தாழ்வு மனப்பான்மையால் மிக ஆழமாகப் பீடிக்கப்பட்டுள்ளனர். எந்த அளவுக்கு எனில், அரசு விழாக்கள் அனைத்திலும் தேசத்தை மதிப்பான முறையில் பிரதிநிதித்துவப்படுத்த, இவர்கள் தங்களின் சொந்தச் செலவிலும், தேசத்தின் செலவிலும், சோம்பேறிகளின் அலங்காரக் கும்பல் ஒன்றைத் தீனிபோட்டுக் காப்பாற்றி வருகின்றனர். தனிமதிப்பும் தனிச்சலுகையும் பெற்ற இந்தக் குழு இவர்களால் உற்பத்தி செய்யப்பட்டதுதான். என்றாலுங்கூட, தங்களில் ஒருவர் இந்தக் குழுவில் இடப்பெறும் தகுதியுடையவராகக் காணப்படும் போதெல்லாம், தாங்களே பெரிதும் கவுரவிக்கப்பட்டதாக ஆங்கில முதலாளித்துவ வர்க்கத்தினர் கருதுகின்றனர்.

ஆக, தொழில்துறை, வணிகத்துறை சார்ந்த நடுத்தர வர்க்கம், நிலவுடைமைப் பிரபுக்குலத்தை அரசியல் அதிகாரத்திலிருந்து முழுமையாக விரட்டியடிப்பதில் இன்னமும் வெற்றி காணவில்லை. இந்த நிலையில் மற்றொரு போட்டியாளராகிய தொழிலாளர் வர்க்கம் களத்திலே தோன்றிவிட்டது. சாசனவாத இயக்கத்துக்கும் [ஐரோப்பா] கண்டத்தின் புரட்சிகளுக்கும் பிறகு எழுந்த பிற்போக்கும், 1848-66 ஆண்டுகளில் ஆங்கில வணிகத்தின் தன்னிகரில்லா விரிவாக்கமும் (கொச்சையாக, கட்டுப்பாடற்ற வணிகம் மட்டுமே இதற்குக் காரணமாகக் காட்டப்படுகிறது. ஆனால் இரயில் பாதைகள், மாகடல் நீராவிக் கப்பல்கள், பொதுவாகப் போக்குவரத்துச் சாதனங்கள் ஆகியவற்றின் பிரம்மாண்ட வளர்ச்சியே இதற்குப் பெருமளவு காரணமாகும்), மிதவாதக் கட்சியைச் சார்ந்திருக்கும் நிலைக்கு தொழிலாளி வர்க்கத்தை மீண்டும் விரட்டியடித்தன. சாசனவாதிகளுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததுபோல தொழிலாளி வர்க்கம் இக்கட்சியின் தீவிரக்கொள்கைப் பிரிவாக அமைந்தது. என்றாலும், தொழிலாளி வர்க்கத்தின் வாக்குரிமைக்கான கோரிக்கைகள், படிப்படியாக, தடுக்க முடியாதவையாக ஆகின. மிதவாதிகளின் விக் (Whig) பிரிவின் தலைவர்கள் ”அஞ்சிப் பின்வாங்கிய” போது, டிஸ்ரேலி (Disraeli), சாதகமான வாய்ப்பை டோரிகள்[23] (Tories) கைப்பற்றச் செய்ததன்மூலம் தம்முடைய மேன்மை நிலையை வெளிக்காட்டினார். நகர்ப்புறங்களில் தொகுதிகளை மாற்றியமைத்ததுடன், குடியிருப்போர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இரகசிய வாக்கெடுப்பு முறை வந்தது [1772-இல்]. பிறகு 1884-இல், குடியிருப்போர் வாக்குரிமை, மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுத் தொகுதிகள் மீண்டும் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டன. இதன்மூலம் தேர்தல் தொகுதிகள் ஓரளவுக்கு சம்மாக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளி வர்க்கத்தின் தேர்தல் வலிமையைக் கணிசமாக அதிகரித்தன. இதன் காரணமாக, இப்போது குறைந்தது 150 முதல் 200 வரையிலான தொகுதிகளில், வாக்காளர்களில் தொழிலாளி வர்க்கம் பெரும்பான்மை வகிக்கிறது. ஆனால், நாடாளுமன்ற அரசாங்கம், மரபுக்கு மதிப்பளிக்கப் போதிப்பதற்கான தலைசிறந்த பள்ளியாகும். ஜான் மானர்ஸ் பிரபு (Lord John Manners) வேடிக்கையாக, ”நமது பழம்பெரும் பிரபுக்கள்” என்று குறிப்பிட்டோரை, நடுத்தர வர்க்கம் அச்சத்துடனும் பயபக்தியுடனும் நோக்குகிறது எனில், பெருந்திரளான உழைக்கும் மக்களோ, ”அவர்களின் மேலோர்” என்று வழக்கமாகக் குறிக்கப்படும் நடுத்தர வர்க்கத்தினரை மதிப்புடனும் மரியாதையுடனும் நோக்கினர். ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்துத் தொழிலாளி உண்மையாகவே முன்மாதிரியான தொழிலாளியாக இருந்தார். தன் எஜமானரின் அந்தஸ்துக்கு அவர் காட்டிய மரியாதைமிக்க அபிமானமும், தனக்கென உரிமைகளைக் கோருவதில் அவருக்கிருந்த தன்னடக்கமான பணிவும், தம் சொந்த நாட்டுத் தொழிலாளர்களின் தீராத, கம்யூனிசம் சார்ந்த புரட்சிகரப் போக்குகளைக் கண்டு நொந்துபோன, கத்தேடெர்-சோஷலிஸ்ட்[24] (Katheder-Socialist) கருத்துமரபைச் சேர்ந்த எங்கள் ஜெர்மன் பொருளாதார அறிஞர்களுக்கு ஆறுதல் அளித்தன.

ஆனால், தம்மளவில் தொழிலில் தேர்ந்தவர்களான ஆங்கில நடுத்தர வர்க்கத்தினர், ஜெர்மன் பேராசிரியர்களைக் காட்டிலும் வெகுதொலைவுக்குப் பார்வையைச் செலுத்தினர். அவர்கள் தொழிலாளி வர்க்கத்துடன் தயக்கத்தோடுதான் தம் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டனர். சாசனவாத இயக்கம் நடைபெற்ற காலங்களில், puer robustus sed malitiosus [பையன் துடிப்பானவன்தான், ஆனாலும் விசமத்தனமானவன்] என்பார்களே, அத்தகைய மக்கள் என்னவெல்லாம் செய்ய வல்லவர்கள் என்பதை இவர்கள் அறிந்து கொண்டனர். அக்காலம் முதற்கொண்டே இங்கிலாந்து நாட்டின் சட்டங்களில் மக்கள் உரிமைச் சாசனத்தின் (People's Charter) பெரும்பகுதியைச் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாயினர். இனி எந்த நாளும் மக்களைத் தார்மீக வழிமுறைகளால் மட்டுமே ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படுத்தி வைக்க முடியும். சாதாரண மக்கள்மீது செயல்படக்கூடிய அனைத்துத் தார்மீக வழிமுறைகளில் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் இருப்பது, என்றும் இருந்து வருவது - மதம்தான். எனவேதான், பள்ளி நிர்வாகக் குழுக்களில் பாதிரிமார்களுக்குப் பெரும்பான்மை அந்தஸ்து. எனவேதான், மதச்சடங்குவாதம்[25] (ritualism) முதல் இரட்சண்ய சேனை வரையிலான அனைத்து வகைப்பட்ட மதப் புத்தெழுச்சிகளுக்கும் ஆதரவளிக்க, முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகரித்துவரும் சுய-வரிவிதிப்புகள்.

இப்போது [ஐரோப்பா] கண்டத்து முதலாளித்துவ வர்க்கத்தினரின் சுதந்திரச் சிந்தனை மீதும், மத அலட்சியத்தின் மீதும் இங்கிலாந்துக் கவுரவ மனப்பான்மையினரின் வெற்றி வந்து சேர்ந்தது. ஃபிரான்ஸ், ஜெர்மன் நாட்டுத் தொழிலாளர்கள் [ஆட்சியை எதிர்த்து] கலகம் செய்யத் தொடங்கினர். அவர்கள் சோஷலிசத்தால் முழுக்கவும் பீடிக்கப்பட்டனர். தங்களின் சொந்த மேம்பாட்டுக்காகக் கையாளும் வழிமுறைகளின் சட்டத் தன்மை குறித்து அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. அதற்கான மிகச்சிறந்த காரணங்கள் இருக்கவே செய்கின்றன. இங்கே, puer robustus [துடிப்பான பையன்] நாளுக்கு நாள் மென்மேலும் malitiosus [விசமத்தனமானவன்] -ஆக மாறிவிட்டான். கப்பலில் ஏறும்போது வீறாப்புடன் புகைத்துக்கொண்டு வந்த சுருட்டைக் கடல்பயண நோய்க்கு ஆளாகி [வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்ததும்] யாருக்கும் தெரியாமல் நழுவவிடும் ஓர் இளைஞனைப் போல, ஃபிரெஞ்சு, ஜெர்மன் நாட்டு முதலாளி வர்க்கத்தினர் வேறுவழி ஏதுமின்றி கடைசித் தந்திரமாகத் தங்களின் சுதந்திரச் சிந்தனையைச் சந்தடியின்றி விட்டொழிக்க வேண்டியதாயிற்று. இதுவரை ஏளனம் செய்து வந்தோர் ஒவ்வொருவராக வெளிப்படையான நடத்தையில் மதப் பற்றாளராக மாறினர். திருச்சபை, அதன் ஐதீகங்கள், சடங்குகள் குறித்து மரியாதையுடன் பேசினர். வேறு வழியில்லாதபோது ஐதீகங்களையும் சடங்குகளையும் கடைப்பிடிக்கவும் செய்தனர். ஃபிரெஞ்சு முதலாளிகள் வெள்ளிக்கிழமைகளில் maigre [ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினால் மாமிசம் அனுமதிக்கப்படாத விரத நாளில் உண்ணப்படும் ஒருவகை உணவு] உண்டனர். ஜெர்மன் முதலாளிகளோ ஞாயிற்றுக்கிழமைகளில் [திருச்சபைகளில் நிகழ்த்தப்படும்] நீண்ட புராட்டெஸ்டன்ட் பிரார்த்தனை உரைகளைத் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து இறுதிவரை கேட்டனர். பொருள்முதல்வாதத்தை நம்பி இவர்கள் துயரத்துக்கு ஆளாக நேர்ந்தது. "Die Religion muss dem Volk erhalten werden" – மக்களுக்காக மதத்தை உயிருடன் வைத்திருக்க வேண்டும் – அறவே அழிந்துபோய்விடாமல் சமுதாயத்தைப் பாதுகாக்க அதுதான் ஒரே வழியும், இறுதி வழியும் ஆகும். இவர்களின் துரதிர்ஷ்டம், மதத்தை நிரந்தரமாகத் தகர்த்தெறியத் தங்களால் இயன்றது அனைத்தையும் செய்து முடிக்கும்வரை இவர்கள் இதைக் கண்டுபிடிக்கவில்லை. இப்போது, இங்கிலாந்து முதலாளித்துவ வர்க்கத்தினரின் முறை, [தங்களை ஏளனம் செய்தோரை] ஏளனம் செய்திடவும், [அவர்களைப் பார்த்து], ”அட முட்டாள்களே! இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இதை நான் உங்களுக்குக் கூறியிருப்பேனே!” என்று கூறிடவும்.

எனினும், இங்கிலாந்து முதலாளியின் மத ரீதியான மந்தத்தனமோ, [ஐரோப்பா] கண்டத்து முதலாளியின் காலங்கடந்த இந்த மாற்றமோ, பொங்கியெழும் பாட்டாளி வர்க்க அலைக்கு அணைபோடும் என்று நான் கருதவில்லை. மரபு என்பது மிகப்பெரும் தடைச்சக்தி ஆகும். வரலாற்றின் [முன்னகரவிடாமல் தடுக்கும்] எதிர்மறை நிலைம சக்தியாகும் (vis inertiae). ஆனால், முனைப்பின்றி வாளா இருப்பது என்பதாலேயே அது நிச்சயம் தகர்த்தெறியப்பட்டுவிடும். எனவே, மதமானது முதலாளித்துவ சமுதாயத்துக்கு நீடித்து நிற்கக்கூடிய பாதுகாப்பாக ஆக முடியாது. சட்டம், தத்துவம், மதம் சார்ந்த நம்முடைய கருத்துகள் அனைத்தும், அந்தந்த சமுதாயத்தில் அப்போது நிலவும் பொருளாதார உறவுகளின் ஏறக்குறைய சேய்மையான உடன்விளைவுகளே ஆகும். எனவே, நீண்ட கால அளவில் பார்க்குமிடத்து, [சட்டம், தத்துவம், மதம் சார்ந்த] இத்தகைய கருத்துகள், பொருளாதார உறவுகளில் நிகழும் ஒரு முழுமையான மாற்றத்தின் விளைவுகளை எதிர்த்துநிற்க முடியாது. மேலும், இயற்கையை மீறிய தெய்வீக வெளிப்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தாலொழிய, தள்ளாடிக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தை மதச் சித்தாந்தங்கள் எவையும் முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்த முடியாது என்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.

உண்மையில், இங்கிலாந்திலுங்கூட உழைக்கும் மக்கள் மீண்டும் எழுந்து இயங்கத் தொடங்கிவிட்டனர். ஐயமின்றி, பல்வேறு வகைப்பட்ட மரபுகளாலும் அவர்கள் விலங்கிடப்பட்டுள்ளனர். பழமைவாதிகள், மிதவாதிகள் என்னும் இரு கட்சிகளே இருக்க முடியும்; தொழிலாளி வர்க்கம் மிகப்பெரும் மிதவாதக் கட்சி மூலமாகவும் அதன் வழியாகவும்தான் தன்னுடைய விமோசனத்தைத் திட்டமிட்டாக வேண்டும் என்கிற பரவலான நம்பிக்கையை ஒத்த முதலாளித்துவ மரபுகள் பல இருந்து வருகின்றன. பழம் தொழிற்சங்கங்கள் மிகப்பலவும் தம்மிடம் உறுப்பினராகச் சேர விண்ணப்பம் அளிப்போரில், முறையான பயிற்சிக் கட்டத்தைக் கடந்து வராதவர்களைச் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி வைக்கின்றன. இத்தகைய தொழிற்சங்கம் ஒவ்வொன்றும் தானே தன் சொந்தக் கருங்காலிகளை உற்பத்தி செய்வதையே இது குறிக்கிறது. தொழிற்சங்கங்களின் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளை எதிர்த்துத் தொழிலாளர்கள் முதன்முறையாக எடுத்த உத்தேச முயற்சிகளிலிருந்து மரபுரிமையாகப் பெற்ற தொழிலாளர்களின் மரபுகளும் இருந்து வருகின்றன. ஆனால், இவையெல்லாம் இருந்தபோதிலும், பேராசிரியர் பிரென்டானோ (Brentano) அவர்களேகூடத் தம் சகோதரக் கத்தேடெர்-சோஷலிஸ்டுகளுக்கு வருத்தத்துடன் அறிவிக்க வேண்டியிருந்ததுபோல, ஆங்கிலத் தொழிலாளி வர்க்கம் முன்னகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் போல, மெதுவாகவும் தீர்க்கமாகவும் அடி வைத்து, சில இடங்களில் தயக்கத்தோடும், சில இடங்களில் ஏறத்தாழ பலனற்ற, உத்தேச முயற்சிகளுடன் தொழிலாளி வர்க்கம் முன்னகர்ந்து செல்கிறது. அவ்வப்போது, அளவுக்கதிகமான முன்னெச்சரிக்கை காரணமாக ”சோஷலிசம்” என்னும் பெயரில் அவநம்பிக்கை கொண்டு, அதேவேளை சோஷலிசத்தின் சாரப்பொருளைப் படிப்படியாக கிரகித்துக் கொண்டு, அது முன்னகர்ந்து செல்கிறது. இந்த இயக்கம் பரவுகிறது; தொழிலாளர்களின் அடுக்குகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பற்றிக் கொள்கிறது. இந்த இயக்கம் இப்போது இலண்டனின் கிழக்கு முனை (East End) பகுதியைச் சேர்ந்த தேர்ச்சியற்ற பிரிவுத் தொழிலாளர்களைச் சோம்பலிலிருந்து தட்டியெழுப்பியுள்ளது. இந்தப் புதிய தொழிலாளர் படையணிகள் பதிலுக்கு எத்தகைய மகத்தான உந்துசக்தியை இவ்வியக்கத்துக்கு அளித்துள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இயக்கத்தின் வேகம், சிலபேருடைய பொறுமையின்மையின் அளவுக்கு ஏற்ப இருக்கவில்லைதான். ஆங்கில ஆளுமையின் மிகச் சிறந்த இயல்புகளை உயிர்ப்புடன் வைத்திருப்பது தொழிலாளி வர்க்கமே என்பதையும், இங்கிலாந்தில் ஒருதரம் ஓரடி முன்னோக்கி வைக்கப்படுமாயின் அதன்பிறகு பெரும்பாலும் அது ஒருபோதும் இழக்கப்படுவதே இல்லை என்பதையும் அந்தச் சிலபேர் மறக்கலாகாது. பழைய சாசனவாதிகளின் பிள்ளைகள் மேற்கூறிய காரணங்களால் போதுமான அளவுக்கு முன்னேற்றம் காணவில்லை என்றாலும், பேரப்பிள்ளைகள் அவர்தம் மூதாதையருக்கு ஏற்ற தகுதியுடையோர் என்றே தோன்றுகிறது.

ஆனால், ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றி இங்கிலாந்தை மட்டுமே சார்ந்தது அன்று. குறைந்தது இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பால் மட்டுமே இந்த வெற்றியைப் பெற முடியும்.40 ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளிலும் தொழிலாளி வர்க்க இயக்கம் இங்கிலாந்தைவிட மிகவும் முன்னேறிய நிலையில் இருக்கிறது. ஜெர்மனியில் அவ்வியக்கத்தின் வெற்றி கைக்கெட்டும் தொலைவில்தான் இருக்கிறது. அங்கே கடந்த 25 ஆண்டுகளில் அவ்வியக்கம் கண்டுள்ள முன்னேற்றம் நிகரற்றதாகும். மென்மேலும் அதிகரித்துச் செல்லும் வேகத்தில் அது முன்னேறிச் செல்கிறது. ஜெர்மன் நாட்டு நடுத்தர வர்க்கமானது, அரசியல் செயல்திறன், கட்டுப்பாடு, தைரியம், ஆற்றல், விடாமுயற்சி ஆகியவற்றில் வருந்தத்தக்கத் தன் குறைபாட்டைத் தானே வெளிக்காட்டியதெனில், ஜெர்மன் நாட்டுத் தொழிலாளி வர்க்கமோ மேற்கண்ட அனைத்துப் பண்புகளும் தன்னகத்தே உண்டு என்பதற்குப் போதுமான நிரூபணத்தை வழங்கியுள்ளது. நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பிய நடுத்தர வர்க்கத்தினுடைய முதலாவது எழுச்சியின் தொடக்கப் புள்ளியாக ஜெர்மனி விளங்கியது. தற்போதுள்ள நிலைமைகளில், ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் முதலாவது வெற்றிக்குக் களமாகவும் ஜெர்மனி விளங்கும் என்பது சாத்தியக்கூறின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டதா, என்ன?

ஃபிரெடெரிக். ஏங்கெல்ஸ்
இலண்டன், ஏப்ரல் 20, 1892.

(முன்னுரை முற்றும்)அடிக்குறிப்புகள்

[அடிக்குறிப்பைப் படித்து முடித்தபின், அடிக்குறிப்பு எண்மீது சொடுக்கி, நூலின் உரைப்பகுதியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம்.]

[1] முன்னுரை: எட்வர்டு எவிலிங் மொழிபெயர்த்து, கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் என்னும் தலைப்பில் இலண்டனில் வெளியிட்ட ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய முன்னுரை.

[2] எய்ஸனாஹர்களும் லஸ்ஸாலியர்களும்: 1869-இல் எய்ஸனாஹ் என்னும் இடத்தில் நடைபெற்ற தொடக்கக் காங்கிரசில் அமைக்கப்பட்ட ஜெர்மன் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர்கள் எய்ஸனாஹர்கள். ஜெர்மன் குட்டி பூர்ஷ்வா சோஷலிஸ்டு பெர்டினாண்ட் லஸ்ஸாலின் ஆதரவாளர்கள் லஸ்ஸாலியர்கள். இவர்கள் 1863-இல் ஜெர்மன் தொழிலாளர் பொதுச்சங்கத்தை நிறுவினர். இந்த இரு பிரிவுகளும் 1875-இல் இணைந்தன. இவர்களின் போக்கு சந்தர்ப்பவாதப் போக்கு என மார்க்ஸ், ஏங்கெல்ஸ் தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளனர்.

[3] இரட்டை நாணயம்: தங்கமும், வெள்ளியும் நிர்ணய மதிப்பாய் பயன்படுத்தப்படும் நாணயச் செலவாணி முறை.

[4] மார்க்: பண்டைய ஜெர்மானிய நாட்டுப்புற சமுதாயமாகிய மார்க் பற்றி ஏங்கெல்ஸ் எழுதிய விரிவான கட்டுரை, இந்நூலின் முதலாவது ஜெர்மன் பதிப்பில் பின்னிணைப்பாக வெளியிடப்பட்டது.

[5] அறியொணாவாதம்: கிரேக்க மொழியில் க்னாசிஸ் என்றால் அறிவு என்று பொருள். அக்னாசிஸ் என்பது அதன் எதிர்ச்சொல். உலகம் அறிய முடியாதது, மனித அறிவால் புலன் உணர்வுகளுக்கு அப்பால் சென்று எதையும் அறிந்து கொள்ள முடியாது என்று கூறும் கருத்துமுதல்வாதக் கொள்கை.

[6] பெயர்ப்போலிமைவாதி: உலகப் பொதுவான கருத்துருக்கள் (universal concepts) மெய்யாக நிலவும் தனிப்பட்ட பொருள்களைக் குறிக்கும் பெயர்களே, கருத்துருக்கள் பொருள்களின் மூலாதாரம் அல்ல, பொருள்களே முதன்மையானவை, அவை மட்டுமே உண்மையில் நிலவுபவை, கருத்துருக்கள் அதிலிருந்து உருவாக்கப்பட்டவை என்னும் கருத்துடையவர்கள். இதனை மத்திய காலப் பொருள்முதல்வாதத்தின் முதல் வெளியீடு எனலாம்.

[7] ஹோமியோமெரியாக்கள்: அனக்சாகோரசின் கருத்துப்படி ஹோமியோமெரியாக்கள் என்பவை மிகவும் நுண்ணிய, பண்பியல்பு ரீதியாகத் திட்டவட்டமான துகள்கள். இவற்றை வரையறையின்றிப் பிளக்க முடியும். இயற்கையில் நிலவுகிற அனைத்துக்குமான ஆதார அடிப்படை. இத்துகள்கள் இணைந்தே பல்வேறுபட்ட பொருள்களாயின.

[8] வதை: 'qual' என்பது சொற்களின் தத்துவம் சார்ந்த சிலேடையாகும். 'qual' என்ற சொல்லுக்கு சித்தரவதை, ஒருவரை ஏதேனும் செய்யத் தூண்டும் ஒருவகை வலி என்பது நேர் பொருளாகும். அதேவேளையில், மாயாவாதியான போமே இந்த ஜெர்மன் சொல்லுடன், [தன்மை என்பதாகப் பொருள்படும்] லத்தீன் மொழிச் சொல்லாகிய qualitas என்ற.சொல்லைக் கலக்கிறார். அவர் 'qual' என்று குறிப்பிடுவது வெளியிலிருந்து உண்டாக்கும் வலியை அல்ல, ஒரு பொருள் அல்லது ஓர் உறவு அல்லது ஒருநபரின் தன்னியல்பான வளர்ச்சியிலிருந்து தோன்றி, தன்னளவில் அந்த வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற செயலாக்கக் கோட்பாடு ஆகும். [ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு]

[9] இறையுண்மைக் கோட்பாடு: தெய்வத்தை பிரபஞ்சத்தின் அறிவுமயமான முதற்காரணமாக ஏற்றுக் கொண்டு, அதேவேளையில், இயற்கையிலும் சமுதாயத்திலும் அவருடைய தலையீட்டை மறுக்கும் மதத் தத்துவம்.

[10] இரட்சண்ய சேனை: கிறித்துவ மதவாதி வில்லியம் பூத் என்பவர் 1865-இல் இங்கிலாந்தில் மதப் பணிகளுக்கும், தர்ம சேவைகளுக்குமென உருவாக்கிய அமைப்பு. பிற நாடுகளுக்கும் பரவியது. 1880-இல் இராணுவப் படை அமைப்பில் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த அமைப்பை முதலாளித்துவ வர்க்கம் ஆதரித்தது. தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களைத் திசை திருப்புவதே இதன் பணிகளின் நோக்கமாக இருந்தது.

[11] புகழ் படைத்த புரட்சி: 1688-இல் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆங்கில முதலாளித்துவ வர்க்க வரலாற்று அறிஞர்கள் சூட்டிய பெயர். ஸ்டூவர்ட் வம்சத்தினர் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டு, நிலவுடைமைப் பிரபுக்களுக்கும் பெரு முதலாளிகளுக்கும் இடையேயான சமரசத்தின் அடிப்படையில், சட்டவழி முடியரசு வில்லியம் தலைமையில் நிறுவப்பட்டது.

[12] ரோஜாப் போர்: வெள்ளை ரோஜாவைச் சின்னமாகக் கொண்ட யார்க் வம்சத்துக்கும், சிவப்பு ரோஜாவைச் சின்னமாகக் கொண்ட லங்காஸ்டர் வம்சத்துக்கும் இடையே ஆட்சி அதிகாரத்துக்காக நடைபெற்ற போர்கள். இந்தப் போர்களின் விளைவாக இங்கிலாந்தின் பழைய பிரபுத்துவக் குடும்பங்கள் பூண்டோடு அழிந்தன. புதிதான டியூடர் வம்சத்தினர் அரசுரிமை பெற்று எதேச்சாதிகார முடியரசை நிறுவினர்.

[13] கார்ட்டீசியனியம்: டேக்கார்ட்டே என்ற பெயரின் இலத்தீன் வடிவமான கார்ட்டிசியஸ் என்ற சொல்லிலிருந்து வந்த பெயர். டேக்கார்ட்டேவின் கருத்துகளை வளர்த்து, 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் தத்துவவியலிலும் இயற்கை விஞ்ஞானத்திலும் உருவான ஒரு போக்கு.

[14] கலைக் களஞ்சியத்தார்: 18-ஆம் நூற்றாண்டின் ஃபிரெஞ்சு அறிவொளி இயக்கத்தைச் சேர்த்த ஒரு குழுவினர். இக்குழுவின் தலைவர் டெனீடிட்ரோ. இக்குழுவில் தலைமைப் பங்கு ஆற்றியவர்களில் பெரும்பாலோர் பொருள்முதல்வாதிகள். அரசியலில் வெவ்வேறு கருத்துடையோர் எனினும் பிரபுத்துவத்தையும், மதச் சபையின் ஆதிக்கத்தையும் எதிர்த்தனர். ஃபிரெஞ்சுப் புரட்சியின் சித்தாந்தத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தனர்.

[15] மனித உரிமைப் பிரகடனம்: 1789-இல் ஃபிரெஞ்சு அரசியலமைப்புச் சபையால் ஏற்கப்பட்டு, 1791-இல் அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. புதிய முதலாளித்துவ அமைப்பின் அரசியல் கோட்பாடுகளை இது எடுத்துரைத்தது.

[16] உரிமையியல் சட்டத் தொகுப்பு: 1804-இல் ஃபிரான்சில் முதலாம் நெப்போலியன் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஐந்து சட்டத் தொகுப்புகளில் ஒன்று. இந்தச் சொத்துரிமைச் சட்டம், முதலாளித்துவ சமுதாயத்துக்குரிய முன்மாதியான சட்டத் தொகுப்பாகும்.

[17] சீர்திருத்தச் சட்டம்: 1831-இல் காமன்ஸ் சபையால் நிறைவேற்றப்பட்டு, 1832 ஜூனில் பிரபுக்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட வாக்குரிமைச் சீர்திருத்தச் சட்டம். நிலவுடைமைப் பிரபுக்களின் அரசியல் ஏகபோகத்துக்கு எதிராக அமைந்தது. தொழில்துறை முதலாளித்துவ வர்க்கப் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்றத்தில் இடம் கிடைத்தது. ஆனால், இந்தச் சட்டத்தை நிறைவேற்றப் போராடிய பாட்டாளி வர்க்கத்தினரும், குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரும் ஏமாற்றப்பட்டனர். அவர்களுக்கு வாக்குரிமை கிடைக்கவில்லை.

[18] தானியச் சட்டங்கள்: நிலப்பிரபுக்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு, 1815-இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, தானிய இறக்குமதிகளுக்குக் கடுமையான சுங்க வரிகள் விதிக்கப்பட்டன ஏழை மக்கள் மட்டுமின்றி தொழில்துறை முதலாளிகளும் பாதிக்கப்பட்டனர். உற்பத்திச் செலவு அதிகரித்தது. உள்நாட்டுச் சந்தை குறுகியது. அயல்துறை வணிக வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தது. ஆங்கிலேய முதலாளிகள் தானிச் சட்ட எதிர்ப்புக் கழகத்தை நிறுவிக் கிளர்ச்சி செய்தனர். அதன் விளைவாக, 1846-இல் இச்சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

[19] தானியச் சட்ட எதிர்ப்புக் கட்சி: மான்செஸ்டர் ஆலை முதலாளிகளான கேப்டன், பிரைட் ஆகியோர் 1838-இல் தொழில்துறை முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு நிறுவிய தானியச் சட்ட எதிர்ப்புக் கழகத்தைக் குறிக்கிறது.

[20] சகோதரர் ஜொனாதன்: 1775-83 ஆண்டுகளில் ஆங்கிலேயரின் வட அமெரிக்க்க் காலனிகள் சுதந்திரத்துக்காகப் போராடிய போது வட அமெரிக்கர்களுக்கு ஆங்கிலேயர் சூட்டிய கேலியான புனைப்பெயர்.

[21] மதப் புத்துயர்ப்புவாதம்: 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிறித்துவ புராட்டெஸ்டன்ட் மதத்தில் தோன்றிய போக்கு. அக்காலத்தில் வட அமெரிக்காவில் வெகுவாகப் பரவியது.

[22] தொழில் சாமர்த்தியம்: தொழில் விவகாரங்களிலுங்கூட, தேசியவெறி சார்ந்த இறுமாப்பு, ஏமாற்றம் தரும் ஆலோசகனே ஆகும். வெகு அண்மைக்காலம்வரை, சராசரி ஆங்கில ஆலை முதலாளி, ஆங்கிலேயர் ஒருவர் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழி பேசுவதையும் மதிப்புக் குறைவாகவே கருதினார். இங்கிலாந்தில் குடியேறிய ”பாவப் பிறவிகளான” வெளிநாட்டினர், இவருடைய உற்பத்திப் பொருள்களை வெளிநாடுகளில் விற்பனை செய்யும் தொல்லையிலிருந்து இவரை விடுவித்தது குறித்து ஓரளவு பெருமையே பட்டுக் கொண்டார். பெருமளவு ஜெர்மானியர்களான இந்த வெளிநாட்டினர் ஏற்றுமதிகளையும் இறக்குமதிகளையும் உள்ளடக்கிய இங்கிலந்துடைய வெளிநாட்டு வணிகத்தின் மிகப் பெரும்பகுதியை இவ்விதம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை இந்த ஆங்கில முதலாளி ஒருபோதும் கவனிக்கவே இல்லை. ஆங்கிலேயரின் நேரடியான வெளிநாட்டு வணிகம் ஏறத்தாழ முழு அளவுக்கு, காலனிகள், சீனா, அமெரிக்க ஐக்கிய நாடு, தென்அமெரிக்கா ஆகிய வரம்புக்குள் அடங்கி விட்டதையும் கவனிக்கவே இல்லை. அதேபோல, இந்த ஜெர்மானியர்கள் வெளிநாடுகளில் பிற ஜெர்மானியர்களுடன்தான் வணிகம் புரிந்தனர் என்பதையும், படிப்படியாக இவர்கள் உலகம் முழுவதும் வணிகக் காலனிகளின் முழுமையான பிணைய அமைப்பை இவர்கள் படிபடியாக நிறுவிக் கொண்டனர் என்பதையும் இவர் கவனிக்கவே இல்லை. ஆனால், ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மனி ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்வதில் முனைப்போடு இறங்கியபோது, இந்தப் பிணைய அமைப்பு, ஒரு தானிய ஏற்றுமதி நாடு, மிகக் குறுகிய காலத்துக்குள் முதல்தரத் தொழில்துறை நாடாகப் பரிணமித்ததில் உதவி புரிந்தது. பிறகு, ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்து ஆலை முதலாளி பீதியுற்று, தன் வாடிக்கையாளர்களை ஏன் தன்னால் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை எனத் தன்னுடைய தூதர்களையும் கான்சல்களையும் வினவினார். அவருக்குக் கிடைத்த ஒருமனதான பதில்: (1) உங்கள் வாடிக்கையாளரின் மொழியை நீங்கள் கற்றுக் கொள்வதில்லை. ஆனால், உங்கள் மொழியில் அவர் பேச வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். (2) உங்கள் வாடிக்கையாளரின் தேவைகள், பழக்கவழக்கங்கள், விருப்புவெறுப்புகளுக்கு ஈடுகொடுக்க நீங்கள் முயல்வதுகூட இல்லை. ஆனால், உங்கள் ஆங்கிலத் தேவைகள், பிறவற்றுக்கும் அவர் ஒத்துப்போக வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். [ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

[23] டோரிகள்: விக் கட்சி, டோரிக் கட்சி ஆகியவை 1670-80 ஆண்டுகளில் இங்கிலாந்தில் உருவான இரு அரசியல் கட்சிகள். நிதி, வணிகத் துறை முதலாளிகள், முதலாளித்துவப் பிரபுக் குலத்தினர் ஆகியோரின் நலன்களை வெளியிட்ட விக் கட்சி, பின்னாளில் ஒரு புதிய மிதவாதக் கட்சியாக அமைந்தனர். பெரிய நிலப்பிரபுக்கள், மதச்சபையின் உயர் குருமார்கள் ஆகியோரின் கட்சியான டோரிக் கட்சி பின்னாளில் கன்செர்வேட்டிவ் கட்சியாக மாறியது.

[24] கத்தேடெர்-சோஷலிஸ்ட்: 1870-90 ஆண்டுகளில் ஜெர்மன் முதலாளித்துவ சித்தாந்தத்தில் நிலவிய ஒரு போக்கு. ஜெர்மன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இதன் தத்துவ ஆசிரியர்கள். கத்தேடெர் என்பது ஜெர்மன் மொழியில் பல்கலைக்கழகப் பேராசிரியப் பீடங்களைக் குறிக்கும். அரசு வர்க்கங்களுக்கு மேம்பட்டது என்றும், அதனால் பகைமை கொண்ட வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்க முடியும் என்றும், முதலாளித்துவ நலன்களைப் பாதிக்காமலே சோஷலிசத்தைப் படைக்க முடியும் என்றும் இவர்கள் கூறினர். பொதுவாக, தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டத்தைத் திசைதிருப்புவதே இவர்களின் வேலைத் திட்டமாகும்.

[25] மதச் சடங்குவாதம்: இங்கிலாந்தில் ஆங்கிலேய மதச்சபையில் 1830-களில் தோன்றிய போக்கு. கத்தோலிக்கச் சடங்குகளையும், கத்தோலிக்க ஐதீகங்கள் சிலவற்றையும் மீண்டும் புகுத்த வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.

(முன்னுரையின் அடிக்குறிப்புகள் முற்றும்)


இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
பதிப்புரிமை © 2009 மார்க்ஸியச் சிந்தனை மையம்