மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்
மார்க்ஸியச் சிந்தனை மையம்

அண்மைய பதிவுகள்

விரைவில்...

“கூலி, விலை, லாபம்”
– கார்ல் மார்க்ஸ்

கூலியுழைப்பும் மூலதனமும்
(கார்ல் மார்க்ஸ்)

தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

மூலதனம், கூலியுழைப்பு இவற்றின் நலன்கள் நேரெதிரானவை -
உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் வளர்ச்சி கூலியின்மீது ஏற்படுத்தும் விளைவுகள்

இவ்வாறாக, மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்குமுள்ள உறவின் வரம்புக்குள் வைத்துப் பார்த்தாலும், மூலதனத்தின் நலன்களும் கூலியுழைப்பின் நலன்களும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை என்பதை நாம் காண்கிறோம். மூலதனத்தின் விரைவான வளர்ச்சி என்பது, இலாபத்தின் விரைவான வளர்ச்சியையே குறிக்கிறது. உழைப்பின் விலை, அதாவது ஒப்பீட்டுக் கூலி விரைவாகக் குறையும்போதுதான் இலாபம் விரைவாக அதிகரிக்க முடியும். பெயரளவு கூலி, அதாவது உழைப்பின் பணமதிப்பு உயரும்போது, கூடவே உண்மைக் கூலியும் உயரும். என்றாலும், இலாபம் அதிகரிக்கும் அதே விகிதத்தில் உண்மைக் கூலி உயரவில்லையெனில், ஒப்பீட்டுக் கூலி குறைந்துபோகலாம். எடுத்துக்காட்டாக, தொழில் வணிகம் நல்ல நிலையில் நடக்கும் காலங்களில், இலாபம் 30 சதவீதம் அதிகரிக்கும்போது, கூலி 5 சதவீதம் உயர்கிறது எனில், ஒப்பீட்டுக் கூலி குறைந்துள்ளதே அல்லாது அதிகரித்துவிடவில்லை.

எனவே, மூலதனத்தின் விரைவான வளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளியின் வருமானம் அதிகரிக்கிறது. அதேவேளையில், முதலாளியையும் தொழிலாளியையும் பிரிக்கும் சமூக இடைவெளி விரிவடைகிறது. உழைப்பின்மீது மூலதனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. உழைப்பானது மூலதனத்தை முன்னைவிட அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

”மூலதனத்தின் விரைவான வளர்ச்சியில் தொழிலாளிக்கு அக்கறை இருக்கிறது” என்று சொல்வதன் பொருள் இதுதான்: தொழிலாளி முதலாளிகளின் செல்வத்தை எந்த அளவுக்கு விரைவாகப் பெருக்குகிறாரோ, அந்த அளவுக்குத் தொழிலாளிக்குக் கிடைக்கும் கவளங்கள் பெரிதாகும். ஏற்கெனவே இருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அந்த அளவுக்கு அதிகமாகும். மூலதனத்தை அண்டிப் பிழைக்கும் அடிமைகளின் திரளை அந்த அளவுக்கு அதிகரிக்க முடியும்.

இவ்வாறாக, நாம் தெரிந்து கொண்டது என்னவெனில், தொழிலாளி வர்க்கத்துக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையான, மூலதனத்தின் அதிவிரைவான வளர்ச்சியானது, எவ்வளவுதான் அதிகமாகத் தொழிலாளியின் பொருளாயத வாழ்க்கையை மேம்படுத்தினாலும், தொழிலாளியின் நலன்களுக்கும் முதலாளியின் நலன்களுக்கும் இடையேயான பகைமையை நீக்கிவிடவில்லை. இலாபமும் கூலியும் மாறாமல் அப்படியே முன்போலவே தலைகீழ் விகிதத்தில்தான் இருக்கின்றன.

மூலதனம் விரைவாக வளருமெனில், கூலி உயரலாம். ஆனால், மூலதனத்தின் இலாபமோ ஒப்பிட முடியாத அளவுக்கு விரைவாக உயர்கிறது. தொழிலாளியின் பொருளாயத நிலை மேம்பட்டுள்ளது. ஆனால், அதற்குத் தொழிலாளியின் சமூக நிலையை விலையாகக் கொடுக்க வேண்டியுள்ளது. தொழிலாளியையும் முதலாளியையும் பிரிக்கும் சமூக இடைவெளி விரிவடைந்துள்ளது.

முடிவாக, ”உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் சாத்தியமான அளவு வேகமான வளர்ச்சியே கூலியுழைப்புக்கு மிகவும் சாதகமான நிலைமை” என்று கூறுவதும், கீழ்க்காணுமாறு கூறுவதும் ஒன்றுதான்: தொழிலாளி வர்க்கம் தனக்குப் பகையான சக்தியை, அதாவது தன்மீது ஆதிக்கம் செலுத்தும் மாற்றாரின் செல்வத்தை எந்த அளவுக்கு விரைவாகப் பெருக்கி விரிவாக்குகிறதோ, அந்த அளவுக்குச் சாதகமான நிலைமைகள் உருவாகும். அந்தச் சாதகமான[?!] நிலைமைகளின்கீழ் தொழிலாளி வர்க்கம், முதலாளித்துவச் செல்வத்தைப் பெருக்கி, மூலதனத்தின் ஆதிக்கத்தை விரிவுபடுத்த மீண்டும் கடினமாய் உழைக்கவும், இவ்வாறு முதலாளித்துவ வர்க்கம் அதன்பின்னால் தன்னைக் கட்டி இழுத்துச்செல்லச் தங்கச் சங்கிலிகளைத் தனக்காகத் தயாரிப்பதோடு திருப்தி காணவும் அனுமதிக்கப்படும்.

முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்கள் சாதிப்பதுபோல, உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் வளர்ச்சியும் கூலி உயர்வும் அப்படிப் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றிணைக்கப்பட்டுள்ளதா? நாம் அவர்களின் வெறும் பேச்சை நம்பிவிடக் கூடாது. எந்த அளவுக்கு மூலதனம் கொழுக்கிறதோ அந்த அளவுக்கு அதன் அடிமைக்கு அதிகத் தீனி கிடைக்கும் என அவர்கள் சாதிக்கும்போதுகூட நாம் அவர்களை நம்பத் தயாரில்லை. தம் பரிவாரப் படாடோபங்களை ஆடம்பரமாய்க் காட்டிக் கொள்ளும் நிலப்பிரபுத்துவச் சீமானின் தப்பெண்ணங்கள் முதலாளித்துவ வர்க்கத்திடம் இல்லை. முதலாளித்துவ வர்க்கம் மிகமிக அறிவு சான்றது. மிகமிகக் கவனமாகத் தம் கணக்கு வழக்குகளை வைத்துக்கொள்கிறது. முதலாளித்துவ வர்க்கம் நிலவுவதற்கான நிபந்தனைகள் அதன் வரவு-செலவுக் கணக்கைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள அதனை நிர்ப்பந்திக்கின்றன. எனவே, கீழ்க்காணும் கேள்வியை நாம் மேலும் நெருங்கிச் சென்று பரிசீலிக்க வேண்டும்:

உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் வளர்ச்சி கூலியை எந்தவகையில் பாதிக்கிறது?

முதலாளித்துவச் சமுதாயத்தின் உற்பத்தித் திறனுள்ள மூலதனம் ஒட்டுமொத்த அளவில் வளருமெனில், அங்கே மிகுதியாக உழைப்பின் பன்முகக் குவிப்பு நிகழ்கிறது. தனிப்பட்ட மூலதனங்கள் எண்ணிக்கையிலும் பரிமாணத்திலும் அதிகரிக்கின்றன. தனிப்பட்ட மூலதனங்களின் பெருக்கம் முதலாளிகளிடையே போட்டியை அதிகரிக்கிறது. பெருகும் மூலதனங்களின் அதிகரிக்கும் பரிமாணம், ஏராளமான மாபெரும் போர்க்கருவிகளுடன் தொழிலாளர்களின் ஆற்றல்மிக்க படைகளைத் தொழில்துறைப் போர்க்களத்தினுள் நடத்திச் செல்வதற்கான வழிமுறைகளை வழங்குகிறது. மிகவும் மலிவான விலைக்கு விற்பதன் மூலம்தான் ஒரு முதலாளி இன்னொரு முதலாளியைத் [தொழில்] அரங்கிலிருந்து விரட்டியடித்து அவருடைய மூலதனத்தை எடுத்துக்கொள்ள முடியும். தான் நொடித்துப் போகாமல் மிகவும் மலிவான விலைக்கு விற்க வேண்டுமெனில், மிகவும் குறைந்த செலவில் உற்பத்தி செய்தாக வேண்டும். அதாவது உழைப்பின் உற்பத்திச் சக்திகளைச் சாத்தியமான அளவுக்கு அதிகரித்தாக வேண்டும்.

ஆனால், கூடுதலான உழைப்புப் பிரிவினை மூலமும், எந்திர சாதனங்களை விரிவாகப் புகுத்தி இடையறாது மேம்படுத்திச் செல்வதன் மூலமும்தான், அனைத்துக்கும் மேலாக உழைப்பின் உற்பத்திச் சக்திகள் அதிகரிக்கப்படுகின்றன. உழைப்புப் பிரிவினை செயல்படுத்தப்படும் தொழிலாளர்களின் படை எந்த அளவுக்குப் பெரியதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு மாபெரும் அளவில் எந்திர சாதனங்கள் புகுத்தப்படுகின்றன. அந்த அளவுக்கு உற்பத்திச் செலவும் குறைகின்றது. அந்த அளவுக்கு உழைப்பும் பலனுள்ளதாகின்றது. எனவேதான், உழைப்புப் பிரிவினையை அதிகரிக்கவும், எந்திர சாதனங்களை அதிகரிக்கவும், சாத்தியமானவரை மிகுதியான அளவில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் முதலாளிகளிடையே முழுதளாவிய போட்டி எழுகிறது.

இப்பொழுது, கூடுதலான உழைப்புப் பிரிவினைமூலமும், புதிய எந்திரங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து அவற்றை மேம்படுத்துவதன்மூலமும், இயற்கைச் சக்திகளை மேலும் அனுகூலமான முறையில் மிக விரிவான அளவில் பயன்படுத்திக் கொள்வதன்மூலமும், ஒரு முதலாளி அதே அளவு உழைப்பைக் கொண்டு (நேரடி உழைப்பு அல்லது திரட்டி வைக்கப்பட்ட உழைப்பாக இருக்கலாம்) தம் போட்டியாளர்களைக் காட்டிலும் அதிக அளவு பொருள்களை அதாவது பண்டங்களை உற்பத்தி செய்யும் வழிமுறைகளை அறிந்துகொள்கிறார். எடுத்துக்காட்டாக, இவருடைய போட்டியாளர்கள் அரை கஜம் துணி நெய்யும் அதே உழைப்பு-நேரத்தில் இவர் [மேற்கண்ட மேம்பட்ட வழிமுறைகள்மூலம்] ஒரு கஜம் துணி உற்பத்தி செய்ய முடிகிறது எனில், இந்த முதலாளி எவ்வாறு செயல்படுவார்?

அவர் அரை கஜம் துணியைப் பழைய சந்தை விலையில் தொடர்ந்து விற்றுக் கொண்டிருக்க முடியும். ஆனால், அப்படி விற்பது தன் போட்டியாளர்களை அரங்கிலிருந்து விரட்டியடிக்கவும், தன் சொந்த விற்பனையைப் பெருக்கிக்கொள்ளவும் அவருக்கு உதவாது. அவருடைய உற்பத்திச் சக்தி விரிவடைந்துள்ள அதே அளவுக்கு, அவருக்குச் சந்தைக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அவர் பயன்பாட்டில் கொண்டுவந்துள்ள ஆற்றல்மிக்க, விலையுயர்ந்த உற்பத்திச் சாதனங்கள், மிகவும் மலிவான விலைக்கு அவர்தம் பண்டங்களை விற்க அவருக்கு உதவியுள்ளன என்பது உண்மைதான். ஆனால், அதேவேளையில் அவர் முன்னிலும் அதிக அளவில் பண்டங்களை விற்கவும், அவருடைய பண்டங்களுக்காக முன்னிலும் பெரிய சந்தையை வென்றெடுக்கவும் அவரை நிர்ப்பந்திக்கின்றன. இதன் விளைவாக, இந்த முதலாளி தம் போட்டியாளர்களைவிட மலிவாக அவருடைய அரை கஜம் துணியை விற்பார்.

இம்முதலாளிக்கு ஒரு முழு கஜம் [துணியை] உற்பத்தி செய்ய ஆகும் செலவு, பிற முதலாளிகளுக்கு அரை கஜம் [துணியை] உற்பத்தி செய்ய ஆகும் செலவைவிட அதிகமில்லை. ஆனாலும், இவரது போட்டியாளர்கள் அரை கஜத்தை விற்கும் விலை அளவுக்கு அத்தனை மலிவாக ஒரு முழு கஜத்தை விற்றுவிட மாட்டார். அப்படி விற்றாரெனில் அவருக்குக் கூடுதல் இலாபம் ஏதுமில்லை. உற்பத்திச் செலவை மட்டுமே திரும்பப் பெறுவார். அவர் கூடுதலான மூலதனத்தை ஈடுபடுத்தி அதன்மூலம் அதிகப்படியான வருமானத்தைப் பெறலாமே தவிர, அவருடைய அதே மூலதனத்திலிருந்து பிறரைக் காட்டிலும் அதிகமான இலாபத்தைப் பெற முடியாது. தவிரவும், தன்னுடைய பண்டத்துக்கு அவருடைய போட்டியாளர்களைவிட ஒரு சிறு சதவீதம் மட்டும் குறைவாக விலை வைத்தாலே, அவர் குறிவைத்த இலக்கினை எட்டிவிடுகிறார். மலிவாக விற்பதன்மூலம், போட்டியாளர்களை அரங்கிலிருந்து விரட்டுகிறார். குறைந்தது அவர்களுடைய சந்தையின் ஒரு பகுதியையாவது கைப்பற்றுகிறார்.

முடிவாக, ஒரு பண்டத்தின் விற்பனை, தொழில்துறையின் சாதகமான அல்லது பாதகமான பருவத்தில் நிகழ்வதைப் பொறுத்து அதன் நடப்பு விலை எப்போதுமே உற்பத்திச் செலவுக்கு அதிகமாக அல்லது குறைவாக இருக்கும் என்பதை நினைவில் கொள்வோமாக. புதிய, அதிகப் பலன்தரும் உற்பத்திச் சாதனங்களைப் பயன்படுத்திக் கொண்ட முதலாளி, அவருடைய உண்மையான உற்பத்திச் செலவைவிட அதிகமான விலைக்கு விற்பார். எத்தனை சதவீதம் அதிகம் என்பது, ஒரு கஜம் துணியின் சந்தை விலை முந்தைய அதன் உற்பத்திச் செலவைவிட அதிகமா அல்லது குறைவா என்பதைப் பொறுத்து மாறுபடும்.

ஆனாலும், நம் முதலாளிக்குக் கிடைத்த இச்சலுகை நீண்ட காலம் நீடிப்பதன்று. போட்டியிடும் பிற முதலாளிகளும் அதே எந்திரங்களையும், அதே உழைப்புப் பிரிவினையையும் புகுத்துவர். அதே அளவிலோ அல்லது அதைவிட அதிக அளவிலோ அவற்றைப் புகுத்துவர். இவ்வாறு புகுத்துவது முடிவில் அனைவரும் பின்பற்றும் நடைமுறை ஆகிறது. துணியின் விலை அதன் பழைய உற்பத்திச் செலவுக்குக் குறைவாக மட்டுமன்றி, அதன் புதிய உற்பத்திச் செலவுக்குங்கூடக் குறைவாகத் தாழ்ந்துவிடும் அளவுக்கு இந்த நடைமுறை பரவுகிறது.

ஆகவே, இம்முதலாளிகள் தங்களின் பரஸ்பர உறவுகளில், புதிய உற்பத்திச் சாதனங்களைப் புகுத்துவதற்கு முன்பு அவர்கள் இருந்த அதே நிலைமையில் [தற்போது] இருப்பதைக் காண்கின்றனர். இந்தச் சாதனங்களைக் கொண்டு அவர்கள் பழைய விலைக்கு இருமடங்கு பொருள்களை அளிக்க முடிந்தது எனில், அவர்கள் இப்போது இருமடங்கு பொருள்களைப் பழைய விலைக்கும் குறைவான விலையில் விற்கும் கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். [போட்டியில்] இந்தப் புதிய கட்டத்துக்கு, புதிய உற்பத்திச் செலவுக்கு வந்து சேர்ந்தபின், சந்தையில் மேலாதிக்கத்துக்கான போரினை மறுபடியும் புதிதாக நடத்த வேண்டியுள்ளது. அதிக உழைப்புப் பிரிவினையை, அதிக எந்திர சாதனங்களைப் புகுத்துவதன் விளைவு, இன்னும் மிகப்பெரும் அளவில் உழைப்புப் பிரிவினையையும், எந்திர சாதனங்களையும் புகுத்துவதில் முடிகிறது. [இந்தப்] போட்டியானது, இந்த விளைவுக்கு எதிராக மீண்டும் அதே எதிர்வினையை உருவாக்குகிறது.


இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
பதிப்புரிமை © 2009 மார்க்ஸியச் சிந்தனை மையம்