|
||||||||||
|
மானுடம் மதத்தால் மடியலாமோ? [அயோத்திப் பிரச்சினைமீது அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை. இதிலுள்ள கருத்துகள் எந்தவொரு தனிநபரையும், எந்தவொரு மதத்தினரையும், எந்தவொரு மத இயக்கத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. கட்டுரையின் கருத்துகளுக்கு கட்டுரை ஆசிரியரே முழுப் பொறுப்பாவார்.] எனக்கு ஒருமுறை புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நார்த்தாமலைக்குச் சென்று அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிடும் சந்தர்ப்பம் கிட்டியது. நார்த்தாமலை என்றழைக்கப்படும் நகரத்தார் மலையில் ஒன்பது குன்றுகள் உள்ளன. அவற்றுள் ஒரு குன்றில் சாத்தன் பழியீலி என்பவரால் குடையப்பட்ட குடைவறையின் நடுவில் சமண தீர்த்தங்கரர் சிலை காணப்படுகிறது. அதன் அர்த்த மண்டபத்தில் 12 திருமால் (விஷ்ணு) சிலைகள் உள்ளன. அதற்கு முன்பாக விஜயாலய சோழனால் கட்டப்பெற்ற விஜயாலய சோழீச்சுரம் என்ற சிவன் கோவில் உள்ளது. அதைச்சுற்றி ஆறு உபகோவில்கள் உள்ளன. இவையெல்லாம் தற்போது வழிபாடற்ற கோவில்களாக உள்ளன. அதற்குச் சற்றுத் தள்ளி அம்மலையிலேயே இஸ்லாமியரின் தர்கா ஒன்று உள்ளது. அந்தத் தர்காவில் வருடத்துக்கு ஒருமுறை சந்தனக் கூடு விழா நடைபெறுகிறது. இவற்றைக் கண்ணுற்ற வரலாற்றாசிரியர் எவருக்கும் இந்திய வரலாற்றைப் பொருத்திப் பார்க்கும் எண்ணம் வருவது இயல்பானதேயாகும். இந்திய வரலாற்றில் வேள்வி வேத மதம், புத்த, சமண இயக்கம், சைவ, வைணவ மதங்கள், இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம் என படிப்படியாக இந்திய மக்கள் மத்தியில் இடம்பெற்றுள்ள வரலாற்றின் சுருக்கத்தை இங்குக் காணும்போது வியப்பினை ஏற்படுத்தியது. ஆரியர் வருகைக்கு முன்பு சிந்துவெளி மக்கள் இயற்கையை வழிபட்டுப் பண்பட்ட நாகரிக வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஆரியர் வருகைக்குப் பின்பு வேள்வியை அடிப்படையாகக் கொண்ட வழிபாடும், பிறப்பு அடிப்படையில் நால்வருண அடிப்படையில் ஏற்றத் தாழ்வுள்ள சமுதாயம் கொண்ட அமைப்புமுறை முன்னுக்கு வந்தது. வேள்விகளில் பசு, குதிரைகளைப் பலியிட்டு அவற்றையே உணவாக உண்டனர். நான்கு வருண முறைகளில் பிராமணர் பிறப்பால் உயர்வானவராகவும் சூத்திரர் அடிமைகளாகவும் ஆக்கப்பட்டனர். உயிர்ப்பலியை எதிர்த்தும், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வை எதிர்த்தும் உதயமான புத்த, சமண இயக்கங்கள் மக்கள் மத்தியில் ஒரு புதிய தத்துவப் போரினை துவக்கின. இந்தியா முழுவதிலும் புத்த, சமண இயக்கங்கள் நீக்கமற நிறைந்து வளர்ந்தமையால் புத்த விகாரைகளும் சமணப் பள்ளிகளும் கட்டப்பட்டன. அசோகர் போன்ற மன்னர்களின் உதவியால் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, பர்மா, மலேசியா, சீனா போன்ற நாடுகளிலும் அவ்வியக்கங்கள் வேரூன்றின. தமிழகத்தில் காஞ்சிபுரம், திருச்சி, பல்லாவரம், பூம்புகார், மதுரை, நெல்லை, திருக்கழுக்குன்றம், திருப்பரங்குன்றம், அய்யர்மலை, ஆறுநாட்டார் மலை, நார்த்தாமலை, ஆனைமலை, அழகர்மலை எனத் தமிழகம் முழுவதும் மக்களின் மத்தியில் வேரூன்றி நிலைத்திருந்தன. அதேபோன்று வட மாநிலங்களிலும் அனைத்து தேசங்களிலும் அவ்வியக்கங்கள் நீக்கமற நிறைந்திருந்தன. புத்த, சமண இயக்கங்களின் எழுச்சியினைக் கண்ட வேத மதத்தினர் வேள்விகளில் உயிர்ப்பலி இடுவதை நிறுத்திவிட்டு நெய், பழங்கள், குச்சிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி வேள்விகள் செய்தனர். மாமிச உணவை விலக்கி சைவ உணவையே உண்டனர். சோம பானம், சுரா பானங்கள் தவிர்க்கப்பட்டன. இந்திரன், வாயு, வருணன், ருத்ரன், விஷ்ணு ஆகிய கடவுள்களுடன் பற்பல இனக்குழு தெய்வங்களும் சேர்க்கப்பட்டன. இதற்கான புராணங்கள் எழுதப்பட்டன. அவற்றைப் போதிப்பதற்கும், கற்பதற்கும் உரிய இடங்களாகக் கோவில்கள் எழுப்பப்பட்டன. எனினும் சைவம், வைணவம், கௌமாரம், காணபத்தியம், சாக்தம், சௌரம் என ஆறு மதங்களாகிப் பின்னர் சைவமும், வைணவமும் அவற்றை உள்வாங்கிக் கொண்டன. இவற்றைத் தனித்தனியாக அழைப்பதில் ஏற்பட்ட சிரமங்களை உணர்ந்து “இந்து மதம்” என அழைத்தனர். புத்த, சமண இயக்கங்களைத் தழுவிய மன்னர்கள் அவ்வியக்கங்களைப் பரப்ப முயற்சி எடுத்ததைப் போன்று, இந்து மதத்தைச் சார்ந்த மன்னர்கள் பிராமணர்களுக்குக் கல்விச்சாலைகள், அக்ரஹாரம்கள், பொன், பொருள், நிலங்கள், ஊர்கள் ஆகியவற்றைத் தானமாகக் கொடுத்ததுடன் கோவில்களையும் அமைத்துத் தந்தனர். ஆனால் மதச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மன்னர்களின் தலையாய கடமைகளுள் ஒன்றாக ஆக்கப்பட்டதால், எதிர் மதங்களுக்கு எதிராக அரசு, வன்முறைகளையும் கையாள நேர்ந்துவிட்டது. இந்திய வரலாற்றில் அரசுரிமைப் போரானாலும், நாடு பிடிக்கும் போரானாலும், எதிரான மதங்களின் வழிபாட்டிடங்கள் அழிக்கப்படுவதும், அவ்வழிபாட்டிடங்களில் உள்ள செல்வங்களைக் கொள்ளையடிப்பதும், துறவிகள், அர்ச்சகர்கள், பிக்குகள், போதகர்கள் ஆகியோரைக் கொலை செய்வதும் போன்ற சம்பவங்களும் இந்திய வரலாற்றுத் தடங்களில் காணப்படுகின்றன. புஷ்ய மித்திர சுங்கன் (கி.மு. 184-151) தம் ஆட்சிக் காலத்தில் வடதிசையில் ஜலந்தர் வரை சென்று புத்த மடாலயங்களை அழித்துள்ளார். மேலும் ஒவ்வொரு புத்த துறவியின் தலைக்கு விலையாக 100 பொற்காசுகள் வீதம் தருவதாக அறிவித்தார். அதேபோன்று ஹுன அரசன் மிகர குலன் (கி.பி. 528-இல்) தனது தலைநகரான ஷாகாலாவிலிருந்த பௌத்த ஸ்தூபிகள், மடங்களின் செல்வங்களைக் கொள்ளையிட்டு அவற்றைத் தரைமட்டமாக்கினார். கௌட மன்னன் சசாங்கன் (கி.பி. 610-இல்) புத்த கயாவிலிருந்த போதி மரத்தைத் தோண்டி எடுத்துக் கொளுத்தினார். பாடலி புத்திரத்திலிருந்த புத்தரின் பாதச்சுவடு பொறித்திருந்த கற்பலகையை உடைத்தார்கள். பௌத்த விகாரைகள் இடிக்கப்பட்டன. பௌத்த துறவிகள் நேபாளம் வரை துரத்திச் செல்லப்பட்டனர். முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 581-590) தென்னாற்காடு மாவட்டத்திலிலுள்ள பாடலி நகரில் சமணப் பள்ளியை இடித்துவிட்டு, அங்கேயே சிவன் கோவிலைக் கட்டினார். பல்லவன் மகேந்திரவர்மன் (கிபி 610-630 இல்) சமண மதத்தைத் தழுவியபோது, அவர் காலத்தில் வாழ்ந்த, சைவ மதத்துக்கு மாறியிருந்த திருநாவுக்கரசரைப் (அப்பர்) பல இன்னல்களுக்கு ஆளாக்கினார். அதே மன்னர் சைவ சமயத்தைத் தழுவியபோது, தென்னாற்காடு மாவட்டம் திருவதிகையிலிருந்த சமணப் பள்ளியை இடித்துவிட்டு, அதே இடத்தில் சிவன் கோயிலைக் கட்டினார். ஹர்சர் (கி.பி. 643-இல்) கன்னோசியில் கூட்டிய சமணர் மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைக்கப்பட்டது. தமிழகப் பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் (கி.பி. 641-670) மதுரையில் 8000 சமணர்களைக் கழுவிலேற்றினான். குகையிடிக் கலகம் என்ற பெயரால் பௌத்த விகாரைகளும் சமணர் பள்ளிகளும் இடிக்கப்பட்டன. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டத்தில் சமணர் குகைகளெல்லாம் சிவன் கோவில்களாக மாற்றப்பட்டன. இன்றைக்குத் தமிழகத்தின் புகழ்பெற்ற இந்துக் கோவில்கள் இருந்த இடங்களில் எல்லாம் ஒரு காலத்தில் பௌத்த, சமண மடங்கள் இருந்தன என்பது வரலாறு காட்டும் உண்மைகளாகும். பௌத்த, சமண இயக்கங்களை அழித்தவர்கள் இந்து மதத்தினர் மட்டுமல்ல. இஸ்லாமியரும் பிற மதத்தினர் மீது தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். இந்தியாவின் மீது படையெடுத்த இஸ்லாமியர் இபிம் காசிம் முகமது (கி.பி. 711-இல்) காலத்தில் இந்துக் கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். மாலிக்காபூரின் தென்னகப் படையெடுப்பின் போதும் (கி.பி. 1310) இந்துக் கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஒரு இஸ்லாமியத் தளபதி (கி.பி. 1107-இல்) பீகாரின் மீது படையெடுத்தபோது, பல பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டனர். ஜஹாங்கீர் (கி.பி. 1605-1627) காலத்தில் மதுரா கேசவராம் கோவில் இடிக்கப்பட்டுப் பள்ளிவாசல் கட்டப்பட்டது. குத்புதீன் அய்பக் (கி.பி. 1192-இல்) டில்லியைக் கைப்பற்றியவுடன் இந்து, சமண வழிப்பாட்டிடங்களை அழித்தார். கி.பி. 1192-இல் இவர் வாங்களத்தைக் கைப்பற்றிப் பௌத்த விகாரகைகளை நாசப்படுத்தினார். கி.பி. 1200-இல் அம்மேரில் கட்டப்பட்ட சமணப் பள்ளி இடிக்கப்பட்டு அதன்மேல் பள்ளிவாசல் கட்டப்பட்டது. இவையன்றியும் இந்து மன்னர்களே இந்துக் கோவில்களை கொள்ளையடித்த சம்பவங்களும், சிலைகளை அப்புறப்படுத்திய சம்பவங்களும் வரலாற்றில் நடந்தேறியுள்ளன. முதலாம் விக்ரமாதித்தன் (கி.பி. 655-681) என்ற சாளுக்கிய மன்னர், காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கொள்ளையிட்டார். கி.பி. 1133-இல் சைவ-வைணவப் பகை காரணமாக, தில்லைக் கோவிந்தர் சிலையை இரண்டாம் குலோத்துங்கன் கடலில் எறிந்தார். கி.பி. 1579-இல் கோல்கொண்டா அரசனின் படைத்தலைவன் முரஹரிராவ் என்ற மராத்தியப் பிராமணர், அகோபில நரசிங்கர் கோவிலைக் கொள்ளையிட்டார். கி.பி. 1783-இல் மராட்டியப் படைத்தலைவர் பரசுராம் தலைமையில் சென்ற குதிரைப் படையினர் சிருங்கேரி சாரதா பீடத்தைக் கொள்ளையடித்துப் பிராமணர்களைக் கொன்றனர். சராதா தேவி சிலை தாக்கப்பட்டது. கி.பி. 1791 அக்டோபரில் மராட்டியர் நாணா சாகிப் சிருங்கேரி மடத்தைத் தாக்கினார். கி.பி. 1798-இல் இந்தூரின் ஹோல்கராகிய முதலாம் ஜஸ்வந்த் ராவ் என்பவர் நாத்துவாடா கோவிலைக் கொள்ளையடித்தார். மீண்டும் 4.1.1804 அன்று புஷ்கரம் கோவில் கொள்ளையடிக்கப்பட்டது. அலாவுதீன் பாமினி சுல்தான் (கி.பி. 1435-57) முஸ்லிம்களையே கொன்றார். 1515-இல் கோவாவைக் கைப்பற்றிய போர்த்துகீசியர் அல்பூபெக் என்பவர் அங்கிருந்த முஸ்லிம் ஆண்களைக் கொன்றார், அல்லது ஊரைவிட்டு வெளியேற்றினார். இந்துப் பெண்கள் உட்படப் பல பெண்களை அவரது படைவீரர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். இவையெல்லாம் இந்திய வரலாற்று வழித்தடங்களில் சில பகுதிகள்தாம். இந்தியாவில் மன்னர்கள் காலத்தில் எல்லா மதத்தினரும் தமக்குள்ளேயும், பிற மதத்தினரோடும் முரண்பாடுகளும், மோதல்களும் கொண்டிருந்தனர். அழிப்புகளையும் நடந்தேற்றியுள்ளனர். அவற்றில் முக்கியமாக வழிபாட்டிடங்களின் மீதே தாக்குதலகள் தொடுத்துள்ளனர். அதே சமயம் இந்திய வரலாற்றில் இதற்கு நேர்மறையான சில நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. முஸ்லிம் மன்னர்கள் இந்துப் பெண்களை மணந்து கொண்டுள்ளனர். பல மன்னர்கள் இந்து-முஸ்லிம் இணைப்பில் பிறந்துள்ளனர். மேலும் இந்து மன்னர்களிடம் பல முஸ்லிம் தளபதிகளும், வீரர்களும் முஸ்லிம் மன்னர்களிடம் இந்து தளபதிகளும்,வீரர்களும் பணியாற்றிய காட்சிகளும் நடக்கத்தான் செய்துள்ளன. மேலும், சில மன்னர்கள் தவிர ஏனைய இந்து, இஸ்லாமிய மன்னர்கள் மத நல்லிணக்கத்துடன் ஆட்சி புரிந்துள்ளனர். வழிபாட்டிடம் தருதல், கட்டுதல், அவற்றைப் பராமரித்தல் போன்ற பணிகளை மத வேறுபாடின்றிச் செய்துள்ள காட்சிகளும் நடைபெற்றுள்ளன. மேலும், மத வேறுபாடின்றி உயர் பதவிகள் தரப்பட்டுள்ளன என்பதையும் பார்க்கிறோம். கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் பல்லவன் இராஜசிம்மனும், முதலாம் ராஜராஜ சோழனும், நாகப்பட்டினத்தில் சீனரின் வேண்டுகோளின்படி புத்தர் கோவில் கட்ட அனுமதி அளித்து உதவி செய்துள்ளனர். 1397-இல் பிரோஸ்ஷா பாமினி சுல்தான் அரசியல் துறைகளில் இந்துக்களை உயர்நிலைப் பதவிகளில் அலுவலர்களாக நியமித்தார். 1397-இல் அபுல்ஹசன், பத்ராசலம் கோவிலுக்கும் பிரம்மார மல்லேஸ்வர சுவாமி கோவிலுக்கும் ஏராளமான நிலங்களை வழங்கினார். 1435-இல் மாளவத்தில் துவங்கிய துருக்கி கில்ஜி வம்ச ஆட்சியில் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். 1484-இல் பீரார் அரசை நிறுவிய பதஸீல்லா இமாத்துல் முல்க் என்பவர் கன்னட இந்துவாக இருந்து பின்னர் மதம் மாறியவர். 1490-இல் அகமது நகரை அமைத்த நிஜாம் ஷாபக்கிரி என்பவர் விஜயநகரப் பேரரசில் பணிபுரிந்த பிராமண அமைச்சரின் மகனாகப் பிறந்து மதம் மாறியவர். மேற்காணும் வரலாற்று நிகழ்சிகள் யாவும் மன்னராட்சி காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளாகும். அரசியல் ஆட்சிக்காக மதங்களைப் பயன்படுத்துவதும், மத உணர்வுகளுக்காக அரசியலைப் பயன்படுத்துவதும் உயர் ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய நாடகங்களாகும். ஆனால் உழைக்கும் மக்களில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். மன்னர்கள் காலத்தில் படிப்பறிவில்லை, அறிவியல் முன்னேற்றமில்லை. ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று மக்கள் நினைத்தாலும் மன்னர்கள் விட்டதாக இல்லை. “மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி” என்ற கொள்கையும்கூட நடைமுறையில் இருந்தது. எனவே அன்றைய வரலாறுகளின் அடிப்படையில் இன்றைய பிரச்சனைகளைத் தீர்ப்பது என்பது இயலாத ஒன்றாகும். இடிக்கப்பட்ட சமணப் பள்ளிகளையும் பௌத்த விகாரைகளையும் மீண்டும் தர வேண்டும் என்று அவர்கள் கோரினால் ஏற்க முடியுமா? எழுதப்பட்ட எல்லா வரலாறுகளும் அவை நிகழ்ந்தபிறகு பின்னொரு காலத்தில் எழுதப்பட்டவையாகும். எனவே, நடந்து முடிந்த வரலாற்றை முழுமையாகப் பார்த்து தீர்வு சொல்வது என்பதும் இயலாததாகும். கடந்த காலத்தில் இந்திய மக்களின் முன்னேற்றத்துக்குத் தடையாயிருந்தது எது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் வரலாற்றைத் தொகுத்துப் படிக்கிறோம். எதிர்காலத்தில் அவ்விதமான தடைகள் ஏற்படக் கூடாது, ஏற்படுத்த விடவும் கூடாது என்ற அடிப்படையில் எதிர்கால வரலாற்றைப் படைக்க வேண்டும். இந்து - முஸ்லிம் கலவரங்கள் காசி (1809-இல்) பம்பாய் (1851, 1893-1923, 1930-1939), சேலம் (1852), மலபார் (1921), டில்லி (1926), கல்காத்தா (1926) முதலான நகரங்களிலும், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது (1947) இந்தியா முழுவதிலும் நடைபெற்றன. அக்காலங்களில் எண்ணற்ற உயிர்களைப் பறிகொடுத்தோம். இக்கலவரங்களால் உயிர்ப்பலிகளால் ஏற்பட்ட பலன்கள் என்ன? தொலைக்கப்பட்டது மனித நேயமே. பாபர் அவையில் இருந்த அறிஞரான மீர்பாகி என்பவரால் பாபர் மசூதி கட்டப்பட்டது. 1885-இல் நடந்த அயோத்திக் கலவரம் இராமர் கோவில் பற்றியதல்ல. அது அனுமன் கோவில் விவகாரமாகும். அங்குள்ள மேடைகளும், வேலிகளால் தனித் தனியாக பிரிக்கப்பட்டிருந்தன. 1949 டிசம்பர் 23 அன்று பாபர் மசூதிக்குள் இராமர், சீதை சிலைகள் ரகசியமாக வைக்கப்பட்டன. அந்நாளிலிருந்து அயோத்திப் பிரச்சனை சூடு பிடித்தது. 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டு கலகங்களும், நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய வரலாற்றில் எல்லாப் பிரிவினரின் வழிபாட்டுத் தலங்களும் இடிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஆதிக்க சக்திகளின் அதிரடி செயல்களினால் ஏற்பட்ட அவமான வரலாறாகும். அன்பையே அடிப்படையாகக் கொண்டவை மதங்கள் என்று கதையளந்துவிட்டு, ஆயுதங்களால் அழிவை ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் ஆன்மிகம் என்ற பெயரால் கடவுள்களை இழுக்கிறார்கள். உண்மையில் கடவுள்களுக்கும் ஆன்மிகத்துக்கும் எதிராக இவர்கள் செயல்படுகின்றார்கள். இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை எனச் சிலர் சொல்கிறார்கள். அப்படியானால் அல்லாவும் இராமரும் கடவுள்கள் என்றால் இந்த இழிசெயலை ஏன் தடுக்கவில்லை? மனிதனைக் கடவுள் படைத்தாரா? கடவுளை மனிதன் படைத்தானா? மனிதன் பெரியவனா? கடவுள் பெரியவரா? மனிதர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கடவுள் தலையிடா விட்டாலும், கடவுளை வைத்து நடைபெறும் பிரச்சனைகளிலாவது கடவுள் தலையிட வேண்டாமா? இந்துமத வருணாசிரமக் கொடுமையால் தாக்குண்டவர்கள் புத்த, சமண, கிறித்துவ, இஸ்லாமிய மதங்களுக்குச் சென்றனர். தற்போது மதங்களுக்கிடையே நடைபெறும் கலவரங்களால் தாக்குண்டவர்கள் எங்கே போவார்கள்? இந்திய மண்ணில் காலடி வைத்த அந்நியர்கள் எல்லோருமே வென்றார்கள், நின்றார்கள். 14 பேரே கொண்ட போர்ச்சுகீசியப் படைகூட மேற்குக் கடற்கரையில் நம்மை வென்றுள்ளனர். அதற்குக் காரணம் நான்கு வருணத்தார்களில் சத்திரியர் மட்டுமே ஆயுதம் தாங்க உரிமை படைத்தவர். சிற்சிலபோது பிராமண மன்னர்கள் ஆயுதம் தாங்கியுள்ளனர். எனவே, சமுதாயத்தின் பெரும் பகுதியாகவும், இழப்பதற்கு ஏதும் இல்லாதவராகவும் இருந்த, போர்க்குணம் படைத்த சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் ஆயுதம் வழங்கப்படவில்லை. அவர்களுக்குப் போர்ப் பயிற்சியும் கொடுக்கப்படவில்லை. வைசியர் என்போர் வணிகர்கள் என்பதால் அவர்களும் ஆயுதம் ஏந்தவில்லை. மேலும், சத்திரியர்கள் 56 தேசங்களாக முரண்பட்டும், மோதிக்கொண்டும் இருந்ததால் படையெடுப்பாளர்கள் அனைவருமே வெற்றி கொள்ள முடிந்தது. எனவே, ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றதன் காரணம் நான்கு வருண அமைப்புமுறையே ஆகும். மேலும், வருணாசிரம முறையின் கீழ், சூத்திரர்களும், பஞ்சமர்களும் அடிமைப்பட்டதாலும், கொடுமைப்படுத்தப்பட்டதாலும்தான் அவர்களுள் பெரும்பாலோர் கிறிஸ்துவ, முஸ்லிம், புத்த மதங்களுக்கு மதம்மாறிச் சென்றார்கள். 19, 20-ஆம் நூற்றாண்டுகளில்கூட ஈழவப் பெண்கள் தோள்சீலை அணிய அனுமதிக்கப்படவில்லை. பஞ்சமர்கள் செருப்பு அணியவிடவில்லை. குளத்தில் குளிக்கவிடவில்லை. இன்னும்கூடக் கிராமப்புறங்களில் இந்நிலைமை நீடிக்கத்தான் செய்கிறது. எனவே, மதமாற்றம் என்பதுவும், இந்துமத வர்ணாசிரம, சாதியக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்வதற்கான ஒருவகை வடிகாலாக மாறிப்போனது. இறைவன் நீக்கமற நிறைந்தவன் என்றால் இந்த ஒரு இடத்துக்கு மட்டும் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும். ஏத்தனையோ வழிபாட்டு இடங்கள் வழிபாடற்றுக் கிடக்கின்றன. தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்படும் கோட்டைகளுக்குள் இருக்கும் கோவில்கள், மசூதிகள் வழிபாடற்று, வரலாற்றுச் சின்னங்களாக உள்ளன. அணைகள் கட்டும்போதும், ஆலைகள் எழுப்பும்போதும் வழிபாட்டிடங்கள் மாற்றப்படுகின்றன. கடந்த காலங்களில் சிறிய கோவில்களாக இருந்த இடங்களை மாற்றிப் பெரிய கோவில்களாக கட்டியுள்ளனர். தற்போதும்கூடப் போக்குவரத்து சாலைகள் அமைப்பதற்குத் தடையாக உள்ள வழிப்பாட்டிடங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு வழிபாட்டிடங்கள் வழிபடாதவைகளாக ஆக்கப்படும்போதும், வழிபாட்டிடங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படும்போதும் எந்தக் கடவுள்களும், பக்தர்களும் எதிர்ப்பதுவுமில்லை, அதற்காகக் கவலைப்படுவதுமில்லை, கலவரங்கள் நடத்துவதுமில்லை. எனவே, இந்திய மக்களின் எதிர்கால ஒற்றுமைக்காகவும், இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும் தடையாகவுள்ள பாபர் மசூதி – இராமர் கோவிலைத் தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைத்து, இந்து – முஸ்லிம் ஒற்றுமைச் சின்னமாக வரலாற்றில் பதிவு செய்வதனால் மட்டுமே இந்திய மக்கள் பண்பாட்டை உயர்த்த முடியும். அவரவர்கள் வழிபடும் கடவுளுக்காக வேறு புதிய வசதியான, இடங்களில் வழிபாடு நடத்தி, ஆன்மீக அமைதி வழியைப் பின்பற்றலாம். மேலும், இந்திய மதச்சார்பின்மை அரசுக்குரிய இலக்கணமாகவும் அமையும். சட்டத்தின்படி ஆட்சி என்பதும், சட்டப்படி நீதி என்பதும் உண்மையானால், பெரும்பான்மையான மக்களின் அமைதியை நிலைநாட்டுவது உண்மையானால் அரசும், நீதிமன்றமும் அதனை நிலைநாட்ட வேண்டும். “இருநூறு மில்லியன் கடவுள்கள் ஒருவன் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன என்று குருட்டுத்தனமாக நம்புவதைவிட, மனிதகுலம் நாத்திகத்தைத் தழுவுவதே மேல்” என மொழிந்த விவேகானந்தரின் கூற்றை எண்ணிப் பார்ப்போம்.
இரா.ஆறுமுகம்,
*****
|
|
||||||||
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
பதிப்புரிமை © 2009 மார்க்ஸியச் சிந்தனை மையம்
|