மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்
மார்க்ஸியச் சிந்தனை மையம்

அண்மைய பதிவுகள்

அயோத்தி: தீர்ப்புகளும், தீர்வுகளும்
(கரூர் இரா.ஆறுமுகம்)

[அயோத்திப் பிரச்சினைமீது அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபின் எழுதப்பட்ட கட்டுரை. இதிலுள்ள கருத்துகள் எந்தவொரு தனிநபரையும், எந்தவொரு மதத்தினரையும், எந்தவொரு மத இயக்கத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. கட்டுரையின் கருத்துகளுக்கு கட்டுரை ஆசிரியரே முழுப் பொறுப்பாவார்.]

கடந்த 117 (1883-2010) ஆண்டுகால இராமர் கோவில் பாபர் மசூதி பிரச்சனையின் மீது அலகாபாத் உயர் நீதிமன்றம் லக்னௌ கிளை 30.09.2010 அன்று தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில் மூன்று மாத காலத்துக்கு இப்போதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டும் என்றும், தேவைப்படின் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளதால், சாராம்சத்தில் இப்பிரச்சனை, தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்தடைந்துள்ளது எனக் கருதத் தோன்றுகிறது. எனினும், ஆரம்ப நிலையைவிடச் சற்று உயர்ந்த நிலையையும் எட்டியுள்ளது.

30.09.2010 தீர்ப்பில் பாபர் மசூதி பாபராலோ அல்லது அவரது ஆணைப்படியோ கட்டப்பட்டது என்றும், ஆனால் அந்த மசூதி கட்டப்பட்ட இடம் பாபருக்கு சொந்தமானது என்பதற்கு நேரடியான ஆதாரம் இல்லை என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் மசூதி கட்டப்படுவதற்காக எந்த ஒரு கோவிலும் இடிக்கப்படவில்லை என்றும், நீண்ட காலத்துக்கு முன்பாகவே சேதமுற்ற, இடிபாடுள்ள கோவிலின் மீதே மசூதி கட்டப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கும் செய்தியின்படி மங்கோலியத் தாயாருக்கும், துருக்கியத் தந்தைக்கும் 1873-இல் மகனாகப் பிறந்த, காபூல் மன்னராகிய பாபர், இந்திய மேவார் அரசின் இந்து மன்னர் ராணா சங்கரின் அழைப்பின்பேரில் இந்தியாவின் மீது படையெடுத்து, 1526-இல் டில்லியைக் கைப்பற்றினார். பின்பு 1530-இல் நோய்வாய்ப்பட்டு இறந்தார். அவரது ஆட்சிக் காலத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் எந்தவொரு பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை. நோய்வாய்ப்படும்வரைப் போர்களில் ஈடுபட்டுப் பல பகுதிகளை வென்றார். அவரது அமைச்சரவையில் முக்கியமானவராகக் கருதப்பட்ட மேதினி ராவ் என்பவரின் இரு மகள்களையும் பாபர் தம் இரண்டு புதல்வர்களுக்கு (லநிமாயூன், கம்ரான்) மணம் முடித்தார். அதேசமயம் மத நடவடிக்கை என்ற நோக்கில் பார்த்தால் ஒரே ஒரு சம்பவம் மட்டும் தென்படுகிறது. குவாலியருக்கு அருகாமையில் ஊர்வலா பள்ளத்தாக்கில் இருந்த சமணர் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுள்ளன. அதுவும் அவை “நிர்வாணமாக” இருந்ததால்தான் உடைக்கப்பட்டனவே தவிர, வேற்று மத விக்கிரகங்கள் என்பதற்காக அல்ல.

கி.மு. 3-4 ஆம் நு}ற்றாண்டுகளிலிருந்தே அயோத்தியில் சமண இயக்கம் இருந்தது அகழ்வாராய்சியில் நிரூப்பிக்கப்பட்டுள்ளது. முதலாம் மற்றும் நான்காம் சமண தீர்த்தங்கரர்கள் பிறந்த இடம் அயோத்தியாகும். எனவே அயாத்தியில் சமண இயக்கமும் சிறப்பான இடத்தில் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.

பாபர் அவையில் இருந்த அறிஞரான மீர்பாகி என்பவர், பாபரின் ஆணைப்படி இந்த மசூதியைக் கட்டியுள்ளார். (“பாபர் நாமா”, ஏ.எஃப். பெவரிட்ஜ் மொழிபெயர்ப்பு, 1992, II pp Lxxvijtt). இம்மசூதி 1528-இல் கட்டப்பட்டுள்ளது.

எனவே, 1528-இல் பாபரின் ஆணைப்படி மீர்பாகி என்ற அறிஞரால் இடிபாடுள்ள கோவில்மீது கட்டப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. வரலாற்றில் மதக் காழ்ப்புணர்ச்சி காரணமாக எந்த ஒரு மன்னரும் ஒரு கோவிலை மட்டுமே இடித்ததாகக் காணப்படவில்லை. பாபரின் மதக் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுக்கப்பட்ட செயல்பாடுகள் இருந்திருக்குமேயானால் அவை பல இடங்களிலும் பல விதமான செயல்களிலும் நான்கு வருடங்களிலும் காணப்பட்டிருக்க வேண்டும். அப்படியே ஏதாவது ஒரு மதத்தின் கோவில் இடிக்கப்பட்டது என்று பிடிவாதமாகவும், வரலாற்றை அடிப்படையாகக் கொள்ளாமலும் கருதப்பட வேண்டுமானால், இடிபாடுள்ள பழமையான கோவில் என்பது ஏன் சமணக் கோவிலாக இருக்கக் கூடாது? புத்த, சமணக் கோவில்கள் இந்து மன்னர்களாலும்; இஸ்லாமிய மன்னர்களாலும் காலங்காலமாக இடிக்கப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. இடிக்கப்பட்ட சமணக் கோவில்களின் மீது இந்துக் கோவில்கள் கட்டப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. எனவே, இந்து மதத்தினர் மீது எவ்வித எதிர் நடவடிக்கையும் எடுக்காத பாபர், இந்துக் கோவிலை இடித்திருக்க முடியாது. வேண்டுமானால், சந்தேகத்தின் அடிப்படையில், இடிபாடுள்ள பழைய கோவில் சமணக் கோவிலாக இருக்கலாம் எனக் கருதிக் கொள்ளலாம்.

மேலும் 30.09.2010 தேதியிட்ட தீர்ப்பில், “பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் பிரச்சனைக்குரிய மிகப்பெரிய பகுதிகளுக்குள் ஒரு சிறிய பகுதியில் இராமர் பிறந்தார் என இந்துக்களால் நம்பப்பட்டது. ஆனால் எந்த இடத்தில் பிறந்தார் என்பதைக் குறிப்பிட இயலாது” எனவும், ”மசூதி கட்டப்பட்ட பின்பு மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் இராமர் பிறந்தார் என இந்துக்கள் நம்புகின்றனர்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேத காலம் முடிந்தபின் இதிகாச காலத்தில் எழுதப்பட்ட வால்மீகி இராமயணத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, 1000 மனைவியரைக் கொண்ட தசரதனின் மூன்று பட்டத்தரசிகளுக்கும் தனித்தனி மாளிகைகள், அரசவை, அந்தப்புரங்கள், அசோகவனம் என்ற நந்தவனம், ஆயுதச்சாலை இவை அடங்கிய மிகப்பெரிய அரண்மனை இருந்திருக்க வேண்டும். அதனைச் சுற்றி மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் இருந்திருக்க வேண்டும். வேத காலதத்துக்கு முன்பிருந்த சிந்துவெளிப் பகுதியை அகழ்வாராய்ச்சி செய்ததுபோல் இங்கும் செய்திருந்தால் அரண்மணை தெரிந்திருக்கும். அதன்மூலம் மட்டுமல்லாது இத்தீர்ப்பும் இலக்கியம், கல்வெட்டு என வரலாற்று அடிப்படையில் அமைந்திருக்கும். நீதிமன்றத் தீர்ப்பாகக் கருதுவதற்கு வாய்ப்பளித்திருக்கும். ஆனால் “நம்பிக்கை அடிப்படையில்” அளித்த இந்த தீர்ப்பையே அடிப்படையாகவும், ஆதாரமாகவும் கொண்டு எதிர்காலத்தில் நீதிமன்றங்கள் “நம்பிக்கையின் அடிப்படையில்” தீர்ப்புச் சொல்ல ஆரம்பித்தால் அது எங்கே கொண்டுபோய் முடியும்?

மேலும், இந்துக்களால் ”இராமர் பிறந்த இடம்‟ என்று நம்புவதை நாம் ஏற்றுக்கொண்டால், “அங்கே இராமர் பிறக்கவில்லை” என்பதில் நம்பிக்கையுடையவர்களும் இருக்கின்றார்களே அவர்களின் நம்பிக்கையை ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?

மேலும், இந்த இடத்தில் இராமர் பிறந்தார் என்பதைக் குறிப்பிட இயலாத நிலையில், அதனை அடிப்படையாகக் கொள்ள இயலாத நிலைதான் ஏற்படுகின்றது.

30.09.2010 தீர்ப்பு மேலும் கூறுவதாவது:

1855-க்கு முன்பிருந்தே “ராம் சபுத்திரா” (யாக வேதிகை) “சீதா ரசாய்” (சமையல் கூடம்) ஆகிய இடங்களில் இந்துக்கள் வழிபட்டு வந்தனர். இதில் குறிப்பிடத்தக்க விசயமும், முன்னெப்போதும் நடைபெறாத விசயமும் என்னவென்றால் மசூதி வளாகத்தினுள் இந்து வழிபாட்டுத் தலங்கள் இருந்தன என்பதே. அதே வளாகத்தினுள் முஸ்லிம்களும் தொழுகை நடத்தினர். அதன் அடிப்படையில்தான் பிரச்சனைக்குரிய இடம் இந்து, முஸ்லிம் இருவருக்குமே சொந்தமானது என்ற கருத்து நிலவுகிறது எனவும் தீர்ப்புக் கூறுகிறது.

இந்திய வரலாற்றுத் தடங்களில் இந்து-முஸ்லிம் இரு மத மக்களும் இணைந்தே வாழ்ந்தனர். 1857 முதல் விடுதலைப் போரில் இருவருமே இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினர்.

முஸ்லிம் நவாப்புகளின் ராணுவத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருந்தனர். நவாப்புகளின் ராணுவத்தில் சைவ நாகர்கள் அதிகமாக இருந்ததால் இந்துக் கோவில்களுக்கு ஆதரவு கொடுப்பது நவாப்புகளின் கடமையாக இருந்தது. அவர்களின் ஆட்சியில் அயோத்தியில் இந்துக் கோவில்கள் கட்டப்பட்டன. ஏற்கெனவே இருந்த கோவில்கள் அவ்வப்போது சீர் செய்யப்பட்டன. நிலங்களும் மற்றும் பிற தானங்களும் வழங்கப்பட்டன.

1855-இல் அயோத்தியில் அனுமன் கோவில் சர்ச்சையில் சன்னி முஸ்லிம்களுக்கும், நாக சாதுக்களுக்குமிடையில் கலவரம் நடந்தது. சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததால், சுமார் 400 பேர்கள் கொல்லப்பட்டனர். எனவே இந்தக் கலவரத்துக்கும், இராமர் கோவில் - பாபர் மசூதி பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை எனக் கருதலாம்.

30.09.2010 அன்றைய நீதிமன்றத் தீர்ப்பு மேலும் தொடர்கிறது:

“பிரச்சினைக்கு உரிய இடம் தமக்கே சொந்தமானது என இந்து-முஸ்லிம் இருவருமே சொந்தம் கொண்டாடினாலும், குறிப்பிட்ட பகுதிகள் எவருக்குச் சொந்தமானது என்று பிரிக்க இயலாது”.

“எனவே சாட்சிகள் சட்டம் பிரிவு 110-இன்படி எவருமே தனக்குத்தான் சொந்தம் என நிரூபிக்கத் தவறியதால், அந்த இடம் இருவருக்குமே சொந்தமானது என முடிவு செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சொத்து யாருக்குச் சொந்தமானது என யார் நிரூபிக்கின்றாரோ அவருக்குதான் அச்சொத்து சொந்தமானது. எவரும் நிரூபிக்கவில்லை எனில் அச்சொத்தை அரசு எடுத்துக்கொள்வதுதான் கடந்தகால ஆட்சிமுறை வரலாறு காட்டும் நியாயம் ஆகும். எதிர்காலத்தில் யாருமே தமக்குச் சொந்தமென நிரூபிக்கத் தவறிய சொத்துகளை, ஆதாரம் சமர்ப்பிக்காமல் சொந்தம் கொண்டாடியவர்களுக்கே பிரித்து வழங்குவதற்கு இத்தீர்ப்பு முன்னுதாரணம் ஆகிவிடும்.

இந்திய வரலாறு என்பது எப்போதோ நடந்த நிகழ்ச்சிகளை வரலாற்று ஆதாரங்களுடன் பின்னொரு காலத்தில் எழுதப்பட்டது ஆகும். ஆராய்ச்சிகள் தொடரத் தொடர முன் எழுதப்பட்ட வரலாறு மாற்றம் பெறுகிறது. அதன்படி இந்தப் பிரச்சனைக்குரிய சொந்தக்காரர் இவர்தான் என வரலாற்றில், பின்னொரு காலத்தில் நிரூபிக்கப்படுமேயானால் அப்போது அந்த நீதியை வழங்குவதற்கு இடமில்லாமல் போய்விடும். எனவே, இன்னாருக்குத்தான் சொந்தம் எனச் சட்டப்படி நிரூபிக்காதவரை, பிரச்சினைக்குரிய நிலத்தை ஏனைய 67 ஏக்கர் நிலத்தைப்போல அரசு கையகப்படுத்தித் தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைத்து, அதனை “வரலாற்று நினைவுச் சின்னமாக” பராமரிப்பதே சிறந்ததாகும்.

நீதிமன்றத்தின் 30.09.2010 தீர்ப்பு தொடர்கிறது:

”1949-க்கு முன்பு சில பத்தாண்டுகளில்தான் மசூதியின் மைய டூமுக்குக் கீழுள்ள பகுதியில்தான் இராமர் பிறந்தார் என இந்துக்களால் நம்பப்பட்டது” எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1885 ஜனவரியில் நிர்மோகி அகாடா என்ற அமைப்பின் சார்பில் இதன் தலைவர் மகந்த் பாஸ்கரதாஸ் என்பவர் பாபர் மசூதிக்கு அருகில் உள்ள ”ராம் சபுத்ரா‟ (யாக வேதிகை) என்று அழைக்கப்படும் இடத்தில் இராமர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று பைசாபாத் சார்பு நீதிபதியிடம் வழக்குத் தாக்கல் செய்தார். நிர்மோகி அகாடா என்பது “அகில பாரத அகாடா பரிஷத்” என்ற அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட வைணவ அமைப்பாகும். இவ்வமைப்பு, மசூதியை இடித்துவிட்டு இராமர் கோவில் கட்டவேண்டும் என்று கோரவில்லை என்பதும், மாறாக அதற்குப் பக்கத்தில் இராமர் கோவில் கட்ட அனுமதி வேண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது. (தற்போது அக்கோரிக்கை இத்தீர்ப்பில் ஏற்கப்பட்டுள்ளது).

1934-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் மசூதியின் ஒரு டூம் சேதப்படுத்தப்பட்டது. அக்கோபுரம் (டூம்) பிரிட்டிஷ் அரசால் சீர் செய்யப்பட்டது.

1947-ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, இந்து-முஸ்லிம் கலவரம் ஏற்பட்டதில் எண்ணற்ற மக்களின் உயிர்கள் பலி கொடுக்கப்பட்டன. 1948 ஜனவரி 30-ஆம் தேதியன்று காந்தியும், கோட்சே என்ற இந்து வெறியினால் கொலை செய்யப்பட்டார். கோட்சே தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு, சுன்னத் செய்திருந்ததால் காந்தியைக் கொன்றவன் ஒரு முஸ்லிம் என வதந்தி பரவியது. எண்ணற்ற முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு மசூதிகள் இடிக்கப்பட்டன. காந்தியைச் சுட்டவன் இந்துமத வெறியன் என்று பிரச்சாரம் செய்த பின்னரே முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நின்றது.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பும் கிடைத்த பின்பும் இந்து, முஸ்லிம் மத ஆர்வலர்கள், மதத்தை அடிப்படையாக வைத்து நடத்தும் அரசியல் இயக்கங்களின் கைக்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, R.S.S., V.H.P., B.J.P., பஜ்ரங் தல், இந்து மகாசபை போன்றவை இந்துக்களின் அமைப்புகள் என்றும், முஸ்லிம் லீக் முஸ்லிம்களின் அரசியல் அமைப்பு என்றும் கருத இடமாயிற்று. ஆக, அரசியலுக்கு இராமர் கோவில் - பாபர் மசூதிப் பிரச்சனை உதவியது என்பதைவிட, முன்னெப்போதையும்விட மத உணர்ச்சிகளைத் தூண்டிவிட உதவியது எனலாம். மதம் வளர்ச்சியடைய மன்னர்கள் உதவி செய்த அதே நேரத்தில், மாற்று மதங்கள் துன்புறுத்தப்பட்டன என்ற வரலாறும் காணப்படுவது போல், மத நன்மைக்காக அரசியல்வாதிகளின் கைக்கு சென்ற மதப் பிரச்சினை, மாற்று மதங்களுக்கு இடையூறு செய்வதற்கும் கருவியாக மாறியது.

அலகாபாத் உயர் நீதிமன்றம், லக்னௌ கிளையின் 30.09.2010 நாளிட்ட தீர்ப்பு இவ்வாறு தொடர்கிறது:

“23.12.1949 நடு இரவில் பாபர் மசூதியின் மையத்திலிருக்கும் டூமுக்குக் கீழுள்ள பகுதியில் இராமர் மற்றும் சீதை சிலைகளை வைத்தனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற வார்த்தைகளில் சொல்வதென்றால், இதுவரை பாபர் மசூதி - இராமர் கோவில் பிரச்சனை சிவில் வழக்காக இருந்தது. மசூதிக்குள் ரகசியமாகவும், அநீதியாகவும், இராமர்-சீதை சிலைகளை வைத்தது கிரிமினல் வழக்காக மாற்றுவதற்காக வைக்கப்பட்டதோ எனச் சந்தேகம் எழுகிறது. முஸ்லிம்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படும் மசூதிக்குள் காவலர்களுக்கும் தெரியாமல் நுழைந்து சிலைகளை வைத்தது மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றமாகும். நீதிமன்றம் இச்செயலை, மிகவும் சாதாரணமாகப் போகிற போக்கில் சொன்னது மிகவும் வேதனைக்குரிய விசயமாகும்.

“பாரதீய இராமாயண மகாசபா” என்ற அமைப்பின் சார்பில், மசூதியின் வாயிலில் ஒன்பது நாட்கள் இராமாயணச் சொற்பொழிவு நடத்தப்பட்டது. ஒன்பதாவது நாளின் நள்ளிரவில் அதாவது 22.12.1949 பின்னிரவிலும் 23.12.1949 அதிகாலையிலும் சிலைகள் வைக்கப்பட்டன. சிலைகள் வைக்கப்பட்ட செய்தி பரவிக் காலையில் 500 பேர் சிலைகள் வைக்கப்பட்ட மசூதியின் வாயிலில் கூடி நின்று பஜனை பாடினர். அவர்கள் உள்ளே நுழையாதபடி போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இந்நிகழ்ச்சி குறித்து பைசாபாத் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் கே.கே.நாயர், உ.பி. முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் “மசூதியில் ஒருவரும் இல்லாத நேரத்தில் சில இந்துக்கள் அங்கு புகுந்து சிலைகளை வைத்துவிட்டனர். இரவு காவல் துறையினர் 15 பேர் அங்கு இருந்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை” என எழுதியுள்ளார்.

இந்நிகழ்ச்சி குறித்து அன்றைய பிரதமர் நேருவிலிருந்து உ.பி. தலைமைச் செயலர் உள்பட, “சிலைகளை மசூதியிலிருந்து அகற்றிவிட வேண்டும்” எனக் கருத்து தெரிவித்திருந்தும், “அப்படிச் செய்தால் அயோத்தியில் கலவரம் ஏற்பட்டு பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும்” என்ற வாதத்தின் அடிப்படையில் சிலைகளை அகற்ற நாயர் உத்திரவிடவில்லை.

1949 டிசம்பர் அன்று இப்பிரச்சனையை ஒட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில் மசூதிக்குள் வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தாமல், அங்கு பூஜை தொடர்ந்து நடக்க வழி செய்தது. இத்தீர்ப்பு முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

1950 ஜனவரி 16-இல் சிலைகளுக்குப் பூஜை செய்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்கக் கோரி (இந்துக்கள்) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. சிலைகளை அப்புறப்படுத்திடக் கோரிய (முஸ்லிம்கள்) மனுவையும் நீதிபதி ஏற்கவில்லை.

“மனுத் தாக்கல் செய்த அன்று சிலைகள் அங்கு இருந்தன என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட உண்மை” என்று நீதிபதி விளக்கம் அளித்தார்.

மேற்சொன்ன வழக்கின்போது உ.பி. மாநில அரசின் சார்பாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையைக் கண்டுகொள்ளாமல் நீதிபதி விட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது. அந்த அறிக்கை கூறியதாவது:

“வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கும் இடமான பாபர் மசூதி என்பது நீண்ட காலமாக முஸ்லிம்கள் தொழுகை செய்துவரும் மசூதியாகும். இராமரின் கோவிலாக இது பயன்படுத்தப்படவில்லை. 1949 டிசம்பர் 22 அன்று இராமரின் சிலைகள் அங்கு மறைமுகமாகவும், தவறாகவும் வைக்கப்பட்டன” என்று உ.பி. அரசு தெரிவித்துள்ளது.

இவ்வளவு தெளிவான சாட்சியத்தைக்கூட ஏற்க மறுத்த நீதிபதியின் தீர்ப்பை என்ன சொல்வது?

மசூதி வளாகம் திறக்கப்படவேண்டும் என்று 1986 ஜனவரி 31-இல் கோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கில் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் பாண்டே விசாரனையைத் தொடங்கி 40 நிமிடங்களுக்குள் தீர்ப்பளித்து விட்டார்.

தீர்ப்பின்போது அவர் கூறியதாவது:

“சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், சிலைகளின் பாதுகாப்புக்கும், மசூதியின் கதவைப் பூட்டி வைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. பூட்டி வைப்பது என்பது மனுதாரருக்கும் அவருடைய சமூகத்தினருக்கும் (இந்துக்கள்) தேவையற்ற எரிச்சலை மூட்டும் ஒரு விஷயமாகும்” மேலும், “கடந்த 35 ஆண்டுகளாக இந்துக்கள் இங்கு சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வழிபட்டு வருகிறார்கள். ஆகவே, இம்மசூதியின் கதவு திறக்கப்பட்டதால் ஆகாயம் கீழே விழுந்து விடாது. சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு செய்யவோ அவ்விடத்துக்குப் போகவோ அனுமதிக்கப்படுவதில்லை என்றும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் என் முன் கூறியுள்ளார்” என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

ஆக, பாபர் மசூதியில் இராமர், சீதை சிலைகளை வைத்தது ஏதோ, தற்செயலாக நடந்தது போலவும், அந்நிகழ்ச்சி அவ்வளவு முக்கிய மல்லாதது போலவும் நீதிபதிகள் கருதியதற்குக் காரணம் என்ன? நமது வீட்டில் திருடுபோன ஒரு பொருள் திருடனின் வீட்டில் இருந்தால், புகார் கொடுத்தபோது அப்பொருள் யாரிடம் இருந்ததோ அதே நிலை தொடருமா? இவ்வழக்கின் தீர்ப்புகளை வைத்து எதிர்காலத்தில் ஒரு திருடன் ஏன் இவ்வாறு வாதாடும் நிலை ஏற்படாது? எனவே, காலங்காலமாக ”சிலை வைத்ததை‟ ஏற்றுக் கொண்டாலும், அது ஒரு கிரிமினல் குற்றம் என்றோ, அதற்குத் தீர்வு காணவோ நீதிமன்றங்களும், அரசியல்வாதிகளும் முயற்சி செய்யவில்லை என்பதுதான் உண்மையாகும்.

மசூதிக்குள் சிலை வைத்ததைக் கிரிமினல் குற்றமாகப் பார்க்காத காரணத்தால்தான், அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் கண்களை மூடிக் கொண்டதால்தான், 1992 டிசம்பர் 6-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 1885-இல் பாபர் மசூதி இடப்பிரச்சனை என்பது சிவில் வழக்காக இருந்தது, 1949-இல் சிலைகளை வைத்தபின் கிரிமினல் குற்றமாக மாறியதைக் கண்டு கொள்ளாமல் இருக்கவே, 1992-இல் அழுத்தமான கிரிமினல் குற்றத்தைச் செய்வதற்கு உந்தித் தள்ளியுள்ளது. மசூதியும் இடிக்கப்பட்டது. சட்டம், நீதி, மனித நேயம், மதச் சார்பற்ற பார்வை அத்தனையும் இடிக்கப்பட்டன.

30.09.2010 நீதிமன்றத் தீர்ப்பு மேலும் தொடர்கிறது:

”பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகச் சமமாகப் பிரித்து வழங்க வேண்டும். மசூதியின் மத்தியில் நடு டூமுக்குக் கீழே சிலைகள் இருக்குமிடத்தை இந்துக்களுக்கு வழங்க வேண்டும். ராம் சபுத்ரா (யாக வேதிகை), சீதா ரசாய் (சமையல் கூடம்) இருக்குமிடத்தை நிர்மோகி அகாடாவிற்கு வழங்க வேண்டும். எஞ்சிய இடத்தை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும்” எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

1885-இல் இராமர் கோவில் கட்ட நிலம் ஒதுக்குமாறு நிர்மோகி அகாடா அமைப்பினர் விண்ணப்பித்ததால்தான் இந்த சிவில் வழக்கு ஆரம்பமானது என்பதால் அவ்வமைப்பினருக்கு மூன்றில் ஒருபங்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கி.பி. 1885-க்கு முன்பு பாபர் மசூதியின் பெரும் வளாகத்திலிருந்த ராம் சபுத்ரா (யாக வேதிகை) சீதா ரசாய் (சமையல் கூடம்) பகுதிகளில் இந்துக்கள் வழிபட்டனர். முஸ்லிம்கள், மசூதியில் வழிபட்டனர். இருமதத்தினரும், வேறு, வேறு வழிபாட்டுத் தலங்களில் வழிப்பட்டாலும் ஒரே பெரும் வளாகத்தில் வழிபட்டார்கள் என்பது நடந்த வரலாறாகும்.

கி.பி. 1883-இல் இந்து மதத்தின் ஒரு பிரிவினர் (Nazi Sections) “ராம் சபுத்ரா” (யாக வேதிகை) பகுதியில் ஒரு இராமர் கோவில் கட்டிக் கொள்ள வழக்குத் தொடுத்தபோது, 1885 ஜனவரி 19-இல் அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் ரகுபீர்தாஸ் என்பவர் (மகந்த்) “ராம் சபுத்ரா” (யாக வேதிகை) பகுதியில் 17’×21’ அளவில் ஒரு கோவில் கட்ட பரிசாபாத் கீழமை நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்தபோது நீதிபதி கலோனில் J.E.A. சேம்பியர் என்பவர் பிரச்சனைக்குரிய இடத்தை ஆய்வு செய்து, 1886 மார்ச் 17 அன்று அம்மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார். 1886 மே 25 அன்று நீதிமன்ற ஆணையர் ஒளத் டபிள்யூ.யங் என்பவரிடம் அளித்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. காரணம், ஏற்கெனவே ஒருவருக்குச் சொந்தமான இடத்தில், வேறொருவர் உரிமை கொள்ள வேண்டுமெனில் அவ்வுரிமைக்குப் போதிய ஆதாரமும் சாட்சியமும் வேண்டும் என்ற நீதிமன்ற கோட்பாடுகள்தாம்.

எனவே 1883-லிருந்து மசூதி இருக்கும் பகுதியைப் பற்றிப் பிரச்சினையை கிளப்பாமல், அதனருகே ராம் சபுத்ரா (யாக வேதிகை) பகுதியில் 17’×21’ அளவில் ஒரு கோவில் கட்ட விரும்பியதால், அப்பகுதியுடன் “சீதா ரசாய்” (சமையல் கூடம்) பகுதியும் நிர்மோகி அகாடாவுக்கு 30.09.2010 தீர்ப்பில் நீதிமன்றம் வழங்கியது எனக் கருதப்படுகிறது.

1528-இல் பாபர் மசூதி கட்டப்பட்டு முஸ்லிம்கள் வழிபட்டு வந்தனர். ஒரே வளாகத்தில் அதற்கு அருகில் இந்துக்களும் வழிபட்டனர். இந்த நிலையில்,

1. இடிக்கப்பட்டது இராமர் கோவில்தான் என்று நிரூபிக்கப்படாத நிலையில், ஏற்கெனவே நடைமுறையில் முஸ்லிம்கள் வழிபட்டுவந்த மசூதியை எப்படி இந்துக்களுக்குத் தர முடியும்?

2. நம்பிக்கையின் அடிப்படையில் இந்துக்களுக்கு மசூதி இடத்தை வழங்கலாம் என்றால், தொழுகை நடைபெற்ற நடைமுறையை ஏன் சாட்சியாகக் கொள்ளவில்லை?

3. இடிபாடடைந்த பழமையான கோவில் என்பது ஏன் சமணர் கோவிலாக இருக்கக் கூடாது?

4. இந்துக் கோவில்களினுடைய ஆகம விதிகளின்படி, கும்பாபிசேகம் செய்து, பிராமணர்கள் மந்திரம் மூலம் சிலைகளுக்குத் தெய்வத் தன்மையைக் கொடுத்த பின்பே அச்சிலை இராமராக மாற முடியும். அப்படிச் செய்யாமல் வெறும் பஜனை மட்டுமே செய்யப்பட்டது. இந்து ஆகம விதிகளின்படி சிலைகளை இராமராகவும், சீதையாகவும், கடவுள்களாகவும், அச்சிலை இருந்த இடமான மசூதியைக் கோவிலாகவும் ஏற்கலாமா?

5. பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தமக்குத்தான் சொந்தம் என யாருமே நிரூபிக்க இயலாதபோது, அந்நிலத்தை எதற்காக அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்? பின்னாளில் யாரேனும் உதாரணமாக சமணர் போன்றோர் அந்த நிலம் எங்களுக்குச் சொந்தமானது என நிரூபித்தால் அவர்களுக்கு எவ்வாறு நிலத்தை வழங்க இயலும்?

6. பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்களை இடித்துவிட்டு அந்த இடத்தில் மசூதியைக் கட்டக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாத்தின் சட்டங்களுக்கு விரோதமாக இந்த பாபர் மசூதியைக் கட்டியிருப்பதால் இது மசூதிக்குரிய இலக்கணங்களோடு இல்லை எனக் கூறிய நீதிபதிகள், “வேதாகம விதிகளின்படி குடமுழுக்கு செய்யப்படாத இடத்தில் மந்திர உச்சாடனம் செய்யப்படாத சிலைகளை வணங்குவது, இந்து மதச் சட்டங்களுக்கு விரோதமானது ஆகையால் அச்சிலைகள் தெய்வ இலக்கணங்களோடு இல்லையென ஏன் கருதக் கூடாது?

7. மத நம்பிக்கையின் அடிப்படையில், கலகம் வராமல் தடுக்கும் நோக்கத்துடன் சட்டங்களுக்கு விரோதமாகச் செயல்படுவதைவிட, 67 ஏக்கர் நிலத்தை அரசு கைபற்றியது போன்றே 2.77 ஏக்கர் நிலத்தை ஏன் கையகப்படுத்தக் கூடாது?

8. மசூதிக்குரிய இலக்கணம் இல்லாததாலும், கோவிலுக்குரிய இலக்கணமும் இல்லாததாலும் அந்நிலத்தில் “இந்து-முஸ்லிம்” ஒற்றுமைச் சின்னம் எழுப்பித் தொல்பொருள் துறையிடம் ஏன் ஒப்படைக்கக் கூடாது?

கடந்தகால இந்தியர் முன்னேற்றத்துக்குத் தடையாயிருந்த பிரச்சினை எதிர்கால இந்தியரின் உயர்வுக்கு வழிகாட்டும் அனுபவச் சின்னமாக இருக்கட்டும்.

இந்து, இஸ்லாமியரிடையே மோதல் என்பதும், சாதி மோதல்கள் என்பதும் அரசியல்வாதிகளுக்குத் தேவையான ஒன்றாகும். காரணம் இம்மாதிரியான உணர்ச்சிகரமான பிரச்சினைகள் முன்னுக்கு வராவிட்டால், மக்கள் பிரச்சினைகள் முன்னுக்கு வந்துவிடும். விலைவாசி ஏற்றம் வேலையில்லாத் திண்டாட்டம், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அளப்பரிய ஊழல்கள், போலிகளின் நடமாட்டம் போன்ற பிரச்சனைகளைப் பத்திரிகைகள் முன்னிலைப்படுத்தும். மக்களும் அதன்மேல் கவனம் வைத்து விழிப்புணர்வு பெறுவார்கள். எனவே இதுபோன்ற மதப் பிரச்சினைகள் தொடர வேண்டும் என அரசியல்வாதிகள் நினைக்கின்றனர். அதனால்தான் பெரும்பாலான அரசியல்வாதிகள் இத்தீர்ப்பை வரவேற்றுள்ளார்கள்.

இரா.ஆறுமுகம்,
கரூர், தமிழ்நாடு, இந்தியா.
13-10-2010.

*****

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
பதிப்புரிமை © 2009 மார்க்ஸியச் சிந்தனை மையம்